ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பண்டிதர் பேருரை - 3

(எல்லாச் சமயங்களையும் உருவாக்கியவன் சிவபிரான் எனில், சைவர்கள் பிற சமயங்களை ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்ற கேள்விக்கு இப்பகுதியில் பதில் தருகிறார் சுவாமி நாதர்.


அதோடு, "சைவம் பிற சமயங்களை ஏற்றுக் கொள்கிறது என்பதற்கு முரணாக, சமண பௌத்த மதங்களை திருஞானசம்பந்தர் வென்று ஒடுக்கியதாக பெரியபுராணம் கூறுகிறதே, இது முன்னுக்குப் பின் முரண் இல்லையா?' என்ற கேள்விக்கும் விடை தருகிறார்.

திருஞான சம்பந்தர் காலத்தில் தமிழகம் முழுவதும் சமண சமயம் செல்வாக்குடன் இருந்தது என்பது வரலாறு. அவரது காலத்திற்குப் பின்பும் அச்சமயம் பிழைத்து இருந்தது என்பதும் வரலாறு.

சம்பந்தப் பிள்ளையார், சமண சமயத்தை விரட்டி விரட்டி அழித்தார் என்று இப்போது "பேரறிஞர்கள்' சிலர் தங்கள் நாவன்மையால் நிலைநாட்டி வருகின்றனர். ஆனால் நடந்தது என்ன என்பதை சுவாமி நாதர் தெளிவாக காண்பிக்கிறார்.

அதன் அடிப்படையில் சம்பந்தப் பிள்ளையார் காலத்துக்குப் பின்பும் சமணம் பிழைத்துக் கிடந்ததற்கு காரணத்தையும் காட்டுகிறார்.

மேலும், ஒரு மதம் எப்போது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் என்பதையும், தன் மதத்துக்கு ஆபத்து வந்தபோது அதைப் பார்த்துக் கொண்டு ஒருவன் சும்மா இருப்பது பெரும் பாவம் என்று ஆகமங்கள் கூறுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.)

-------------------------------


புறச் சமயத் தெய்வங்களை இடமாகக் கொண்டு சிவபெருமான் அவர்களுக்குப் பலன் அளிப்பர் என்பதைச் சைவர்களாகிய யாம் எல்லோரும் அறிவோம். அன்னோர் அதனை அறியாது அவ்வத் தெய்வங்களே பயன் அளிப்பன என்னும் உறுதிப்பாடு உடையர்.

ஆகலான், அவர்கட்கு அவ்வழிபாட்டுக்கு இயைந்த பலனைச் சிவபிரான் தப்பாது அளிப்பர். அவ்வத் தெய்வங்களிடமாக நின்று சிவபிரானே பயன் அளிப்பர் என்ற உண்மை உணர்ந்த சைவ சமயிகளாகிய யாம் அவரை நேரே வழிபடல் வேண்டும்.

அவ்வாறு செய்தால் தான் எமக்குப் பலன் அளிப்பர், அவ்வாறு செய்யாது பிற தெய்வத்தை வழிபடின் பயன் அளிப்பான் அல்லன் பரமசிவன். அதனை,

காண்பவன் சிவனே ஆகில் அவனடிக்கு அன்பு செய்கை
மாண்பறம் அவன்தன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம்
வீண்செயல் இறைவன் சொன்ன விதியறம் விருப்பொன்று இல்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே

என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் அறிக. இவ்வுண்மை உணராமையே அறியாமை என்க. "காண்பவன் சிவனே ஆகில்' என்னும் பகுதியும் எல்லாத் தெய்வங்களையும் இடமாகக் கொண்டு சிவபிரானே பயன் அளிப்பன் என்பதை உணர்த்துமாறு நோக்கற்பாலது.

அப்பரும் இக்கருத்துப் பற்றியே,

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்
இருநிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்

என்று அருளிச் செய்தவாறும் காண்க.

இவை இவ்வாற்றான் ஒக்கும் அன்று ஆயினும், சம்பந்தப் பிள்ளையார் சமண சமயத்தை அழித்தார் எனக் கூறப்படுதல் மேற்கூறியதனோடு  மாறுகோளாம் பிற எனின், அன்று. என்னை?

பிள்ளையார்,

சமண சமயத்தையும் சிவபிரானே உண்டாக்கினபடியால், அதனை அழித்தல்  தம்மாலும் இயலாது என்பதனை நன்கு உணர்ந்து, மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும் சமணரை வெல்ல எழுந்தருளுக என வேண்டிய போது, திருக்கோயிலினுள் போந்து, சோமசுந்தரப் பெருமான் சந்நிதிபுக்கு,

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதிமாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

என வேண்டி அவர் அருள் பெற்றுச் சென்று வெற்றி கொண்டு, அப்பாண்டி மண்டலத்தில் அச்சமயம் இல்லையாகச் செய்தது அன்றி மற்றைய இடங்களில் இருந்தது என்பது திருவோத்தூரில் ஒரு அடியவர் சிவபிரானுக்கு உண்டாக்கிய பனைகள் யாவும் ஆண்பனைகளாய்க் காயாது ஒழியச், சமணர்கள் அவ்வடியாரைப் பரிகாசம் செய்தனர் என்பதாலும், திருமயிலாப்பூரில் சம்பந்தப் பிள்ளையார் என்பைப் பெண்ணாக்கிய காலத்து அநேக சமண புத்தர் வந்து பார்த்து ஆச்சரியம் அடைந்து ஏகினார் என்பதனாலும் நன்றாக அறியலாம்.

சிவாஞ்ஞை எதுவரை சமண சமயத்தை அழித்தற்கு உண்டோ அதுவரைதான் அது செய்தார் பிள்ளையார், ஆகலான், சிவாஞ்ஞையால் செய்தது சிவச் செயலேயாம். ஆதலின் மேற்கூறியதனோடு முரணாமை நன்கு உணர்க.

"சமணரை மதுரையில் வாதில் வென்றது மேற்காட்டிய காட்டுக்களால் சிவச் செயலே என்பது உணர்ந்து முன்னேடு பின் முரணாமை தேறினேன். திருத்தெளிச்சேரியில் புத்தரை வாதில் வென்ற காலத்துச் சிவாஞ்ஞையின்றியும் வெற்றி நிகழ்ந்தமையின், சிவபிரான் செய்த மதத்தைப் பசுக்கள் அழிக்க வல்லுனர் என்பது பெறப்படுதலால் அது முன்னொடு பின் முரணாம் போலும்' எனின், நன்றே வினாயினாய்; நன்றே விடை கூறுதும்:

சிவபிரான் உண்டாக்கிய மதங்களை, அம்மதத்தார் நம்முடன் வாதுக்கு வராமல் இருக்கும் போது நாம் வலிந்து சென்று அவருடன் வாது செய்து அழிக்கப் புகின் சிவாஞ்ஞையின்றி அழியாது.

மற்று அவர் வலிந்து நம்மிடம் வந்து வாது செய்யப் புகின் அப்போழ்து அவருடன் வாது செய்து அழிக்க வேண்டும் என்றும், அது செய்யவல்லவர் அது செய்யாவழி மகாபாதகர் ஆவர் என்றும் அவருடைய நட்பை வெறுத்து நீக்கிவிட வேண்டும் என்றும் சிவாகமத்தில் விதித்திருத்தலால், அது சிவாஞ்ஞையாம்.

ஆகலின், வீதியில் சென்ற பிள்ளையாரோடு வாதுக்கு வந்த புத்தரைச் சம்பந்த சரணாலயர், பிள்ளையார் ஆஞ்ஞைப்படி வாது செய்து வெற்றி கொண்டதும் முன்னொடு பின் முரணாது என்க. அதனை,

நிறுத்திட வல்லான் அமலன் நூல்நெறியை என்றும்
மறுத்திட வல்லான் அவல மார்க்க மயல் உற்றே
நிறுத்திலன் மறுத்திலன் எனில் கரிசல் நேசம்
அறுத்தவனை மாகை கரிசல்ல அறமாமே

என்னும் சிவதருமோத்தரத் திருவிருத்தத்தானும் அறிக.

(அருஞ்சொற்பொருள்: தெய்வங்கள் இடமாக - பிற சமயத்துத் தெய்வங்களான ஆன்மாக்களின் உள்ளிருந்து சிவபிரான் இயக்குவதை இவ்வார்த்தைகள் குறிக்கின்றன; ஒக்கும் அன்று -  பொருந்தாது; சிவாஞ்ஞை - சிவபிரானது ஆணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate