(திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக நான் எழுதிய "தீர்த்த மகிமை' கட்டுரையின் முழுவடிவம், இன்று வீட்டில் தேடிய போது கிடைத்தது. அதில் முன்பாதியை மட்டும் இத்தலைப்பில் நான் இங்கு இட்டுள்ளேன்.)
பிறப்பென்னும் பேதைமை நீங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பல வழிமுறைகளில் ஒன்றே மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றையும் முறையாய் வழிபடுதல். இவை நமதருமை பாரத தேசம் எங்கணும் அநேகம் உள்ளன. அவற்றினும் அதிகமாய் நம் செந்தமிழ்த் திருநாட்டில் சிறந்து விளங்குகின்றன.
தீர்த்தம்:
"தீர்த்தம்' எனும் வடமொழி "பரிசுத்தம்' எனும் பொருளைத் தருவதாம். தன்னை அடைந்தார் வினை தீர்த்து உய்விப்பதாதலின் இப் பெயர் பெற்றது எனலாம். சங்க இலக்கியங்களில் "பெருநீர்' "பெருந்துறை' முதலிய சொற்கள் இப் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளன.
தீர்த்தமாடுவதன் நோக்கம்:
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் தீர்த்தம் ஆடுவராயின் வினை நீங்கப் பெறுவர் என்பது சாத்திரங்களில் பலவிடங்களில் கூறப்பட்டிருப்பினும் பக்குவம் உடையோர்க்கே அவை பெரும்பயன் அளிக்கும் என்பதுவே உண்மை.
தீவினை செய்தோர் தீர்த்தமாடியபின் மனந்திரும்பாமல் மீளவும் அத்தீவினையைச் செய்வராயின், அத்தீர்த்தமாடியதால் யாதொரு பயனும் இல்லை என்பதே இதனால் பெறப்படும் கருத்து. இதனை,
"எவனுடைய கைகளும் கால்களும் மனமும் கல்வியும் தவமும் கீர்த்தியும் நன்கு அடக்கப்பட்டிருக்கின்றனவோ, அவன் தீர்த்த பலனை அடைகிறான். தானம் வாங்காதவனும், கிடைத்ததைக் கொண்டு மகிழ்பவனும், நான் என்கிற அகம்பாவத்தினின்று விடுபட்டவனுமான மனிதன் தீர்த்த பலனை அடைகிறான்.
"டம்பம் முதலியவை இல்லாதவனும், (பயனை எதிர்பார்த்துக் காரியங்களைத்) தொடங்காதவனும், லகுவான ஆகாரம் உள்ளவனும், புலன்களை வென்றவனுமாய் இருப்பவன், எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டுத் தீர்த்த பலனை அடைகிறான்.
"கோபம் இல்லாதவனும், இயற்கையாகவே உண்மை பேசுகிறவனும், உறுதியான விரதம் உள்ளவனும், எல்லாப் பிராணிகளையும் தனக்கு ஒப்பாக நினைப்பவனுமாய் இருப்பவன் தீர்த்த பலனை அடைகிறான்' எனவரும் மகாபாரத (வனபர்வம் 80ம் அத்தியாயம் தீர்த்த யாத்ரா பர்வம்) வசனங்களால் உணர்ந்து தெளியலாம்.
மனம் துõய்மையாதலும், பின் அதனைக் கொண்டு முத்தியடைதலுமே உண்மையான குறிக்கோள் என்பதும், தீர்த்த யாத்திரை முதலிய சரியா, கிரியா பாதங்கள் அம்முத்தியை அடைவிக்கும் உபாயம் என்பதும் நமது சாத்திர நுõல்களின் முடிந்த முடிபு.
இஃது உண்மையன்று எனின், அவ்வத் தீர்த்தங்களில் பல்லாண்டுகளாக வாழும் உயிரினங்களும் முத்தியினை எளிதில் அடைந்து விடலாம் என்பதையும் இங்கு கருத வேண்டும்.
இதனை, "மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்' எனும் பொய்யா மொழியும், "துõய்மையான மனம் உடையவனுக்கு அவனது மனமே சகல மூர்த்தி தல தீர்த்தங்களுக்குச் சமானம்' எனவரும் தேவீ பாகவத (வியாசர் நாரதர் சம்வாதம்) வசனமும் நமக்கு உணர்த்துகின்றன.
இனி, மனம் துõய்மையாதற்கு அம்மனமானது நிலையற்றவற்றை விட்டு சிறப்பென்னும் செம்பொருளைச் சார்ந்து அப்பொருளைப் பற்றி வாழ்தல் வேண்டும். இதுவே அம்மனம் உடைய ஆன்மாவிற்கு உய்யுங்கதி என்பதனை,
"மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம் பற்றி வாழ்மின்கள்'
"எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே.. சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே'
"சிந்தையுள் சிவமுமாகி'
"மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்... அவை நல்ல நல்ல'
எனவரும் திருவாக்குகளால் நாம் அறியலாம்.
பரமாப்தனும், முத்தனும், முத்திதர வல்லவனுமாகிய சிவபிரானைச் சிந்தித்து வந்தித்து வழிபடுதலும், அவன் எவ்வுயிரிடத்தும் உறைகின்றான் என்பதை உணர்ந்து எவ்வுயிரிடத்தும் அன்பு செலுத்தி வாழ்தலும் ஆகிய இவையே முழுமையான சிவபூசையாம்.
அச்சிவபூசையின் ஓரங்கமே தீர்த்த யாத்திரை முதலியன. எனவே சிவபிரானிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்ய இயலாதவன் தீர்த்தமாடுதல் முதலியன செய்தும் பயன் இல்லையாம். இதனை,
கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடினாலும் அரனுக்கு அன்பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே
எனவரும் வேத வாக்கால் அறியலாம்.
மேலும்,
"விரதங்களைச் செய்யாதவனும், மனத்தை வசப்படுத்தாதவனும், சுத்தி இல்லாதவனும், திருடனும், வக்ரபுத்தியுள்ள மனிதனும் தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யார்' எனவும்,
"தீர்த்த யாத்திரையானது யாகங்களைக் காட்டிலும் சிறந்ததாகும். தீர்த்தங்களை அடையாமையாலும், (அடைந்தும்) மூன்று நாள் உபவாசம் இராமையாலும், பொன்னையும் பசுக்களையும் (தானம்) கொடாமையாலும், மனிதன் தரித்திரனாகப் பிறக்கிறான் அன்றோ' எனவும் வரும் மகாபாரத வசனங்களால் முழுமையான தீர்த்த யாத்திரை எல்லாராலும் செய்ய இயலுவதன்று என்பது விளங்கும்.
அவ்வித திவ்வியமான தீர்த்த யாத்திரை செய்பவர் பற்றி, "சாஸ்திர அர்த்தங்களைக் கண்டவர்களான பெரியவர்களால் சுத்தமான அந்தக்கரணங்களுடன் முந்தி இருக்கிற ஆஸ்திக்யத்தாலும், ஸ்ருதிகளின் தரிசனத்தாலும் அந்தத் தீர்த்தங்கள் அடையப்படுகின்றன. சாஸ்திர அர்த்தங்களின் உண்மையை அறிந்தவர்களும் பெரியோர்களுமான பிராமணர்களுடன் நீ தீர்த்தங்களை அடைவாயாக' எனவரும் மகாபாரத வசனத்தால் அறியலாம்.
"தீர்த்தம்' என்பது தன்னை அடைந்தார் வினை தீர்த்து அவரைப் பரிசுத்தராக்கி நற்கதியில் உய்ப்பது என்பதும், ஒழுக்க விதிகளின் படி வாழ்க்கை நடத்துவோர்க்கே தீர்த்தமாடுதல் முதலிய புண்ணிய காரியங்கள் பெரும்பயனை அளிக்கின்றன என்பதும், முத்திய அடைவித்தலே தீர்த்தமாடுதல் முதலியவற்றின் நோக்கம் என்பதும், அந்நெறிகளில் ஒழுகுவதற்கு மனந்துõய்மை அவசியம் ஆதலின் அதுபற்றி உயிர்களிடத்து அன்பு செய்தலாகிய சிவபூசை வேண்டப்படும் என்பதும், சிவனாரிடத்து அன்பிலார் செய்யும் காரியங்கள் வீணாய்க் கழியும் என்பதும், தீவினையாளர்க்கு தீர்த்தமாடுதல் வாய்க்காது என்பதும், நல்வினையாளர்க்கு அதுவே பெரும் புண்ணியம் பயக்கும் என்பதும் தான் மேற்கூறியவற்றின் சாராம்சம்.
சங்க இலக்கியங்களில் தீர்த்தமாடுதல்:
தீர்த்தமாடுதல் என்பது நமது நாட்டில் தொன்று தொட்டு நிலவி வரும் முறை. இதனை,
"தீது நீங்கக் கடலாடியும், மாசுபோகப் புனலாடியும்' எனவரும் பட்டினப் பாலை அடிகளால் அறியலாம்.
இன்னும் சிலப்பதிகாரத்தில்,
"<உருகெழு மூதுõர் உவவுத் தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியன் மாக்களொடு' 61112
"ஆயிரத்து ஓரெட்டு அரசுதலைக் கொண்ட
தண்ணறுங் காவிரித் தாதுமலிப் பெருந்துறைப்
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணக மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீராட்டி'
"மாமுனி பொதியில் மலைவளம் கொண்டு
குமரியம் பெருந்துறை ஆடி மீள்வேன்'
என வருவதாலும்,
மதுரைக் காஞ்சியில்,
"கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி'
எனவரும் தொடராலும் தீர்த்தமாடுதல் குறித்து அறியலாம்.
திருமுறைகளில் தீர்த்தம்:
சமயாசாரியர்கள் நால்வரும் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் முறையால் வழிபட்டவர்கள்.
"சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே' "கங்கை ஏற்றுத் தீர்த்தமாய்ப் போதவிட்டார்' "திருத்தமாகி நின்றான் தான் காண்' "தீர்த்தங்கள் உறுவிப்பார்' எனவரும் அப்பரடிகள் திருவாக்காலும்,
"தீர்த்த நீர் வந்திழி புனற்பொன்னியில்' எனவரும் திருஞானசம்பந்த நாயனார் திருவாக்காலும் தீர்த்தக் குறிப்புகளை அறியலாம்.
தீர்த்தவாரி:
தலங்களில் இறைவன் விசேட நாட்களில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளுவதையும், குறிப்பிட்ட நாட்களில் தீர்த்தமாடுதல் சிறப்பாகக் கருதப்பட்டமையையும் திருமுறைகள் குறிப்பிடுகின்றன.
"தீர்த்தமாம் அட்டமிமுன் சீருடை ஏழுநாளும், கூத்தராய் வீதி போந்தார் குறுக்கை வீரட்டனாரே'
"பாரூர் பறிப்பத் தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்'
"ஒத்தமைந்த உத்திர நாள் தீர்த்தமாக ஒளிதிகழும் ஒற்றியூர்'
எனவரும் அப்பரடிகள் திருவாக்காலும்,
மகாமகம் குறித்து,
"கங்கையானவள் கன்னி எனப்படும்
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே'
'இயமுனை சேதா ஏறுடையான் அமர்ந்தவிடம்
கோதாவிரி உறையும் குடமூக்கிலே'
"தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரை புட்கரணித் தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க்கோட்டத்தெம் கூத்தனாரே'
எனும் அப்பரடிகள் திருவாக்காலும்,
தைப்பூசம் குறித்து,
"பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய
ஈசன் உறைகின்ற இடைமருதீதோ'
எனவரும் திருஞானசம்பந்தர் திருவாக்காலும் அறியலாம்.
தீர்த்தமாடுதலும், திருக்கோயில்களில் நிகழும் தீர்த்தவாரியும் பண்டை நாள் தொட்டு விளங்கி வருவன என்பதை இவற்றால் அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக