ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பண்டிதர் பேருரை - 2

(இப்பகுதியில், இவ்வுலகில் பல்வேறு மதங்கள் ஏன் தோன்றின? அவை எல்லாம் சமமா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சுவாமிநாத பண்டிதர்.



அதோடு, எல்லா சமயங்களையும் சைவம் ஏற்றுக் கொள்கிறது என்றும், பிற மதங்களை அழித்து விட வேண்டும் என்று அது கருதுவதில்லை என்றும் கூறுகிறார்.

ஏன் பிற மதங்களை சைவம் ஏற்றுக் கொள்கிறது என்பதற்கு ஆதாரங்கள் காட்டும் பண்டிதர், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் சைவம், வேதம் மற்றும் ஆகமங்களை முதல் நூலாக முழுமனத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார்.

பண்டிதர் காலத்தில், மறைமலையடிகள், கா.சு.பிள்ளை போன்றோர், வடமொழிக்கு எதிரான கருத்துக்களையும், வேத ஆகமங்கள் பற்றிய விமர்சனங்களையும் முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

 மேலும், சம்ஸ்கிருதத்தில் இருந்த வேதங்கள், தமிழில் இருந்த வேதங்களைக் "காப்பி' அடித்து எழுதப்பட்டவை என்று "ஆய்வு' பூர்வமாக வேறு கூறிக் கொண்டிருந்தனர்.

அதனால் தான் இடையில் ஓரிடத்தில், "இங்கே கூறப்பட்ட வேத ஆகமங்கள் யாவை என அறிஞர் உற்று நோக்கி உண்மை கடைப்பிடிக்க. சங்க காலத்தையும் சகலாகம பண்டிதர் காலத்தையும் அளந்து அறிக' என்று சுட்டிக் காட்டுகிறார் சுவாமி நாதர்.

'வேதத்தில் கூறப்பட்ட புறச் சமயக் கொள்கைகளே  பிற்காலத்தில் பல்வேறு மதங்கள் தோன்றக் காரணம்; இக்கொள்கையை வேதத்தை ஏற்றுக் கொண்ட தென்னாட்டுச் சைவமும் வலியுறுத்துகிறது; அதனால் மறைமலையடிகள் போன்றோரின் கருத்துக்கள் கற்பனையே' என்பதுதான் அவர் முன்வைக்கும் வாதம்.)

---------------------------------

இனி, சைவ சமயிகளாகிய எம்மனோர்க்கு "எம்மதமும் சம்மதமேயாம்' என்னை?

எமது இறைவனாகிய சிவபெருமானே ஆன்மாக்கள் கன்மங்களுக்கு ஈடாகச் சோபான முறையினின்று அவற்றை அனுபவித்துத் தொலைத்துச் சைவத்தில் வந்த முத்தி அடைதற்கு எல்லாச் சமயங்களையும் உண்டாக்கிய கருத்தன் ஆகலான்.

நாமும் பல பிறப்புக்களிலே இச்சோபான மார்க்கங்களினின்று அவ் அவற்றை உறுதியாகக் கொண்டு அனுஷ்டித்து வந்த பலத்தினால் தான் சைவத்தில் வந்திருக்கின்றோம்.

ஆதலால், நாம் சைவத்தில் வந்து விட்டோம் என்று எண்ணி மற்ற மதங்களை அழிக்கப் புகுந்தால் அழிக்கப்படாமை மாத்திரையே அன்றி, அவற்றை உண்டாக்கிய எமது இறைவன் கருத்திற்கு மாறுபட்டவர்களாய் அவனால் தண்டனையும் அடைவோம் என்பது தப்பாது.

"தோல்வியும் வெற்றியும் தொன்மதங்கட்கு எலாம்
கால பேதத்தின் உண்டு உந்தீபற
கருத்தன் செயல் அது என்று உந்தீபற'

"வாதிகள் தங்களுக்கு அல்லால் வலியின்மை
ஓதார் மதங்களுக்கு உந்தீபற'

என்பன ஈண்டே நோக்கற்பாலன.

அங்ஙனமாயின் எல்லா மதங்களும் சமம் ஆவனவோ எனின், ஆகா. என்னை?

பலவேறு வகைப்பட்ட சமயங்களும் அவ்வச் சமயப் பொருள்களும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டுக் கிடத்தலின் எது சரி எது பிழை என்று ஆராயப் புகின், இது சரி அது பிழை என்று கூறி ஒன்றையேனும் தள்ளிவிடாமல், எல்லாவற்றையும் உடன்படுத்தித் தனக்கு அங்கமாகக் கொண்டு, தான் அங்கியாய் நிற்கும் சமயம் எதுவோ அதுவே முடிந்த பேறாகிய பிறந்து இறவாப் பெருவாழ்வாகிய பேரின்பம் தரும் சிறந்த மதமாகும். அது சைவ சமயமே என்று உணர்க.

மேலே போந்த கருத்துப் பற்றியன்றே,

"புறச்சமய நெறி நின்றும்"  "ஓது சமயங்கள்'  என்ற பாடல்கள் சிவஞான சித்தியில் கூறப்பட்டதூஉம் என்க.

கிறிஸ்துமதம் முதலிய பல மதங்கள் ஏசு கிறிஸ்து முதலியோரால் உண்டாக்கப்பட்டன என்று அவ்வம்மத நூல்களிலே கூறப்பட்டனவாக, அவற்றைச் சிவபிரானே உண்டாக்கினார் என்றல் சாலாதாம் பிற எனின் அற்றன்று.

அது சாலுமாறு கூறுதும்:

வேத ஆகமங்களே முதல் நூல்கள் எனவும், அவற்றிலே எல்லா மதங்களும் எல்லாப் பொருள்களும் சூக்கும தூலமாகக் கூறப்பட்டன என்றும், ஒவ்வொரு கால விசேடத்திலே ஒவ்வொரு கன்ம விசேடம் பற்றி ஒவ்வோர் ஆன்மா, சிவபிரான் அருளால் அவ்வேத ஆகமங்களிலே "சமுத்திர கலச நியாயம்' பற்றித் தாம் அறிந்த அளவில் ஒவ்வொரு பொருளை எடுத்துக் கொண்டு "தர்க்க உத்தரங்களினால்' ஒவ்வொரு மதம் செய்து, தான் தான் செய்த மதமே மெய்ச் சமயம் என்று சாதியா நிற்கும்.

ஆகலான், அவன் அருளினால் செய்த நூலும் அவன் செய்த நூலேயாம். அவன் அருள் இன்றேல் அவ்வான்மாக்கள் செய்ய வல்லுநர் ஆகார் என்க.

இக்கருத்துப் பற்றியன்றே,

அருமறை ஆகம முதல்நூல் அனைத்தும் உரைக்கையினால்
அளப்பரிதாம் அப்பொருளை அரன்அருளால் அணுக்கள்
தருவர்கள்பின் தனித்தனியே தாம்அறிந்த அளவில்
தர்க்கமொடு உத்தரங்களினால் சமயம் சாதித்து
மிருதி புராணம் கலைகள் மற்றும் எல்லாம்
மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம் வேதஅங்கம்
சுருதி சிவாகமம் ஒழியச் சொல்லுவது ஒன்று இல்லை
சொல்லுவார் தமக்கு அறையோ சொல் ஒணாதே

எனவும்,

வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள்
வேறு உரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள்

எனவும் போந்த பிரமாணங்கள் சிவஞான சித்தியுள் எழுந்ததூஉம் என்க.

இங்கே கூறப்பட்ட வேத ஆகமங்கள் யாவை என அறிஞர் உற்றுநோக்கி உண்மை கடைப்பிடிக்க. சங்க காலத்தையும் சகலாகம பண்டிதர் காலத்தையும் அளந்து அறிக.

இன்னும் அவாந்தர சிருட்டி ஆரம்ப காலத்திலே, ஆன்மாக்கள் மீது முகிழ்த்த பெரும் கருணையாலே, சிவபிரான் அருளிச் செய்த வேத ஆகமங்களிலே, சூக்குமமாகச் சொல்லப்பட்ட புறமதங்களையே பிற்காலத்து ஒவ்வோர் ஆன்மா வேறு பிரித்தெடுத்துக் கொண்டு சொன்னபடியால், முதற்கண் சொன்னவரே அதற்குக் கருத்தர் என்பதும் ஒரு பொருள்.

சமணக் கடவுள் புத்தக் கடவுள் செய்தது என்று அவ்வச் சமயத்தார் கூறும் சமண நூல் புத்த நூல்கள், வேத ஆகமத்தில் சுருக்கிக் கூறப்பட்டமை நோக்கியன்றே, சிவபிரான் அவற்றைச் செய்தனர் என்று திருஞானசம்பந்தப் பிள்ளையார்,

இணையில் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
அணைவில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே

எனவும், அப்பர் சுவாமிகள்,

பரிதியானைப் பல்வேறு சமயங்கள்
கருதியானை

எனவும்,

விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்

எனவும் ஓதி அருளியதூஉம் என்க.

தொன்னூல் பரசமயம் தோறும் அது அதுவே
நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து

என்று அருளிச் செய்த குமரகுருபர சுவாமிகள் கருத்தும் அதுவே. ஈண்டு தொன்னூல் பரசமயம் என்றது பண்டு தொட்டுப் பயின்று வரும் வேத ஆகமங்களில் கூறப்பட்ட புறச்சமயம்.

எல்லாச் சமயங்களையும் உண்டாக்கிய கருத்தாவுக்கு அவ்வச் சமயப் பற்று வைத்து, அவ்வச் சமய நூல் விதிப்படி ஒழுகுபவர்க்கு அது அதற்கேற்ற பயன் கொடுத்தலும் இன்றியமையாத கடப்பாடு ஆதலின் அன்றே,

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவர்

எனச் சித்தியுள் கூறப்பட்டதூஉம் என்க.

இக்கருத்துப் பற்றியே பிறரும்,

 எவ்வெவர் தம்மையேனும் யாவரே எனினும் போற்றின்
அவ்வர் இடமாக் கொண்டே அவர்க்கு அருள் தருவாய் போற்றி

எனக் கூறியதூஉம் என்க.

அங்ஙனமாயின், கிறிஸ்து முதலிய புறச்சமயத் தெய்வங்களைச் சைவராகிய யாமும் வணங்கிப் பலன் அடையலாம் தானே எனின், அறியாது கூறினாய்.

என்னைகொல் அறியாமை? எனின் கூறுதும்.

(அருஞ்சொற்பொருள்: சோபான முறை -  படிப்படியாக ஆன்மாக்களை முத்திக்கு இட்டுச் செல்லும் முறை; கருத்தன்- கர்த்தா என்ற சம்ஸ்கிருதத்தின் தமிழ்; செய்வோன் என்பது பொருள்; அனுஷ்டித்து- கடைப்பிடித்து; பலம் - பயன்; அங்கம் -உறுப்பு; அங்கி- உறுப்பை உடையவன்; சாலாதாம் - பொருந்தாதாம்; சூக்கும தூலம் - நுட்பம் மற்றும் பருப் பொருள்; கன்மம் - கர்மம் என்ற சம்ஸ்கிருதத்தின் தமிழ்; வினை அல்லது செயல் என்பது பொருள்; சமுத்திர கலச நியாயம் - கடலே ஆனாலும் கூட, ஒருவன் தான் கொண்டு போகும் பாத்திரத்தின் அளவுதான் நீரை மொண்டு கொள்ள முடியும் என்ற கருத்து; தர்க்க உத்தரம் - வாதப் பிரதிவாதங்கள், கேள்வி பதில்கள்; மதம் - கொள்கை; அணுக்கள் - ஆன்மாக்கள்; மிருதி - ஸ்மிருதி என்ற சம்ஸ்கிருதத்தின் தமிழ்; சட்டநூல்; சுருதி - ஸ்ருதி என்ற சம்ஸ்கிருதத்தின் தமிழ்; வேதம்; பிரமாணம் - கொள்கையை நிறுவக் காட்டும் ஆதாரம்; அவாந்தர சிருட்டி - ஒவ்வொரு பிரளயத்திற்குப் பின்பும் நடக்கும் படைப்பு; பிரளயங்கள் பலவகை என்பதால், இடையிடையே இந்த படைப்பு நடக்கும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate