திங்கள், 25 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 3

(இறுதிப் பகுதி)

                                                   சைவன்

இனிச் சைவன் என்பவன் சைவ ஒழுக்கம் பூண்டு நடப்பவன் என்பது யாவரும் ஒப்புவர். இதனைச் சாதியோடு பொருத்தியதனால் வரும் சண்டைகள் யாவும் சிறிது ஊன்றிப் பார்க்க ஒழிந்து போம். இவற்றின் விவரம் மேலே சைவத்தைப் பற்றிய பேச்சில் சொல்லியுள்ளேன்.


எப்படி ஆயினும் சாதிச் சைவனுக்குச் சமயச் சைவ ஒழுக்கம் இன்றியமையாதது என்று யாவரும் மறுக்க முடியாது.

                                             சைவ நூல்கள்

இனிச் சைவ நூல்களும் அவற்றின் முடிவுகளும் பற்றிச் சில பேசுதல் வேண்டும். "வேத நூல் சைவ நூல் என்று இரண்டே நூல்கள்' "அருமறை ஆகம முதல் நூல்கள்' "வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்' எனச் சந்தான குரவர்களும், "வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல், ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உன்னுக' எனத் திருமூலரும், "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க' எனத் திருவாதவூரரும், "தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன்' எனத் திருஞான சம்பந்தரும், "எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனை' எனச் சேக்கிழார் பெருமானும் எடுத்துக் கூறியவாற்றானும், பிறவாற்றானும் வேதமும் ஆகமமும் சைவத்திற்குப் பொதுவும் சிறப்பும் ஆகிய முதல் நூல்களாய், இறைவன் வாக்காய் நமது முதல் பிரமாண நூல்களாம்.

இப்போது காணும்படியிலே இவை வடமொழியில் இருத்தல் பற்றியாவது, இப்போது காணும்படியிலே நமது புதிய எண்ணங்களுக்கு மறுதலையாகச் சில இவற்றில் காண்பது கொண்டாவது இவற்றை நமது முதல் நூல்கள் என்று உடன்படாது ஒதுக்குதல் எனக்கு உடன்பாடில்லை.

"அவை தமிழிலே ஒரு காலத்தில் இருந்து கடல் கொள்ளப்பட்டு ஒழிந்தன. இப்போது உள்ளவை ஆரியர் புகுத்தியன' என்பனவாதி கொள்கைகள் நான் மேலே காட்டிய சைவத்தின் உலகம் பரந்த நிலைக் கொள்கைக்கு மாறுபடுவன. இவையும் எனக்கு உடன்பாடில்லை.

இப்படிக் கொண்டால் சைவத்திற்குத் தமிழின் அன்றித் தாயகம் இல்லை எனவும், தமிழைக் கடந்து நிற்கும் ஆற்றல் சைவத்திற்கு இல்லை எனவும் முடியும்.

இந்நிலையினை நாம் கொள்வோம் ஆயின் இப்போது சைவ சாத்திரங்களாகவும் திருமுறைகளாகவும் சைவம் போற்றும் நூல்களுக்கு உள்ளேயும் பல முரண்பாடுகள் நிகழும்.

நமது சைவப் பெரியார் பலரையும் சமயாசாரியர் சந்தான ஆசாரியர்களையும் கூட நாம் புறகிடுதல் வேண்டி வரும். இவ்வாறு எழும் ஆரியப் பார்ப்பன விரோதம், வடமொழி விரோதம் பற்றியே நமது பரமாசாரிய மூர்த்திகளாகிய திருஞான சம்பந்த சுவாமிகளையும் புறங்கூறப் பலர் சைவர் என்பார் புறப்பட்டனர்.

"சேக்கிழார் சுவாமிகள் உண்மையல்லாத கூற்றுக்கள் சொன்னார்கள். மயங்கிக் கூறினார்கள்' என்று எவனாவது சொல்வானாயின் அவனைக் காண்பதற்கும் கூசும் எனது கண்கள்.

"அற்றன்று. நான் ஆராய்ச்சி முறையில் கூறுகின்றேன். எதிலும் குருட்டுத் தனமாக நம்பிக்கை வைக்கல் ஆகாது. அது நெடுந்தூரம் நம்மைக் கைகொடுத்துச் செல்லாது' என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் அது உண்மையே.

"நமது உண்மை நாயன்மார்களையும், அவர் சொல் செய்கைகளையும், சாத்திரம் திருமுறைகளையும் இன்னும் சைவ உலகம் தெளியவில்லை. இவை இன்னும் நமது குடுக்கை மூளை ஆராய்ச்சி செய்து தெளிவுபடுத்த வேண்டி நிற்கின்றன' என்று சொல்வது உண்மையாயின் அது சைவ உலகத்திற்கு மிகக் கேடான நிலையேயாம்.

தெள்ளத் தெளிய வடித்தெடுத்த பொருளை ஒருவன் இன்னும் தெளியவில்லை என்றால் அது அவன் குற்றமேயாகும்.


பொருள்களிலே ஆராய்ச்சி செல்லும் பொருள்கள் எனவும் ஆராய்ச்சி செல்லாப் பொருள்கள் எனவும் இருபிரிவு உண்டு.

நமது சைவ முதல் நூல்களாகிய பொதுநூலாம் வேதமும் சிறப்பு நூலாம் ஆகமங்களும் (இவை திருமூலரால் வகுக்கப் பெற்றபடி) திருமுறைகள் பன்னிரண்டும், சாத்திரம் பதினான்கும் சைவத்துத் தெள்ளிய வடித்த பிரமாண நூல்களாம்.

இவற்றை ஆராய்ச்சி செய்து தப்போ ஒப்போ காண்பது சைவனுக்கன்றி ஏனைச் சமயிகளுக்கே உரிய தொழில். சைவன் என்று தன்னைச் சொல்பவன் அவ்வாறு சென்றால் அவனை ஏனையவன் கணக்கில் வைத்து ஒழுகுதலே நமக்கு முறையாம்.

"ஆட்பால் அவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும், கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா' "ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா' என சைவ சமயப் பரமாசாரியர் அருளினர்.

இதற்கு நமது சேக்கிழார் சுவாமிகள், "ஓதும் எல்லை உலப்பில ஆதலின், யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம்' என்று உரையும் விதந்து ஓதினார்கள்.

தனது ஆசாரியனையும், அருள்நூலையும் ஆராய்பவன் தனது தாய் தந்தையரை ஆராய்பவனே ஆவன்.

ஆராய்ச்சி வேண்டாம் என்று நான் கூறவரவில்லை. நமது மேற்காட்டிய பிரமாண நூல்களும் கூடப் பொய்யும் பிறழ்வும் கூறும் என்ற உணர்ச்சி வருவதானால் அவ்வாராய்ச்சி நமக்கு வேண்டாம் என்பதே எனது கருத்து.

கிறித்தவர்க்கு விவிலிய நூலும், மகமதியர்க்குக் குரானும், அருகர்க்குப் பிடகமும் பிரமாண நூல்கள் ஆகும்.

அதுபோலச் சைவத்திற்கு இவை பிரமாணம் என்று நாம் வகுத்து உட்கொள்ளாவிடின், "மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரியும்' பட்டியே ஆவோம்.

பிரமாண நூல்களின் தார தம்மியமும் தமக்குத் தாமே பிரமாணமாக உள்ளவற்றையும் நாம் தெரிந்து முறைப்பட வகுத்துக் கொள்ளாவிடின் வீண் கலகத்துக்கும் பாவத்துக்குமே ஆளாவோம்.

நமது சமயநூல்களைச் சுட்டெரிக்க ஒருவன் கூறினால், அவனுக்கு அதன்படியே சுட்டெரிப்போம். பெரியபுராணமாதி சமய நூல்கள் பொய்க்கதைகள் என்றும், இவற்றின் செய்யுளினும் ஒப்பாரிப் பாட்டிலே இன்பம் உளது என்று ஒரு புலவன் சொல்வானானால் அவனுக்கும் அவன் எண்ணியபடி ஒப்பாரி பாடுவோம்.

சுமார்த்தப் பிராமணர் என்ற காரணத்தால் திருஞான சம்பந்தப் பெருவாழ்வும், அவர் சரிதத்திலே சமணர் கழுவேறியதாகக் கூறும் பகுதியைச் சொல்லிய அளவிலே நம்பியாண்டார் நம்பிகளும், சேக்கிழாரும், வடமொழி தென்மொழி வகுத்து ஆகமம் கூற வந்த காரணத்தினாலே திருமூலரும் ஆராய்ச்சியிலே ஒதுக்கப் பெறுவார்களாயின் நாம் பின்பற்றி ஒழுக ஆசாரியர்களும் நூல்களும் இல்லாமலே போய்விடும் என்று நான் உங்களுக்கு எச்சரிக்க வேண்டியவனாய்  இருக்கிறேன்.

                                                       முடிபு

சைவம் யாது? சைவர் யார்? சைவநூல் யாவை? அவற்றின் முடிபுகள் யாவை? என்பன பற்றி எனது எண்ணத்தில் பட்ட சில மொழிகள் மேலே பேசினேன்.

சைவர்களாகிய நமது கடமை ஒன்றே உளது. மேலே சொல்லியவாறு சைவ நூல்களையும் அவற்றில் சொல்லும் பொருள்களையும் போற்றுதல் வேண்டும்.

சைவநூல் முடிபுகளாகிய சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களிலே போதிக்கப் பெற்ற பதியுண்மை, உயிர்களின் இருப்பு, பாசக் கட்டு இவற்றை அறிந்து பாச நீக்கத்திற்குரிய சாதனங்களாகிய குருமொழி, திருவைந்தெழுத்து ஆதியவைகளை நல்லாசிரியர் பால் நன்குணர்ந்து, அந்த நல்வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகி, நாம் பாசத்தினின்றும் விடுதலை பெற்றுச் சிவத்தை அடைந்துய்வோம்.

இதற்கு இறைவன் அருளும், நல்லடியார் கூட்டமும் துணை செய்வதாக.

இந்த முடிபுகள் வேறு எந்தச் சமயம், எந்த நூல்களாலும் இதுகாறும் மறுக்கப் பெறவில்லை; இனி மறுக்கப் பெறப் போவதுமில்லை. இவையே எல்லா நூல்களுக்கும் முடிந்த முடிபுகளாம். அன்பர்களே! உங்கள் அன்புக்கு மிக நன்றியுடையேன். நலம். நலம். நலம்.

1 கருத்து:

  1. தம் தாய்மொழியான தமிழில் உள்ள நால்வராதியோர்களின் ஒப்பற்ற நூல்களில் தோய்ந்தமை தோன்ற,கல்லும்
    இரும்பும் உருகி நீராகும் படி உள்ளம் கசிந்து இயற்றியுள்ள சிவானந்தலஹரியின் ஆசிரியர் பிரான் சங்கராச்சாரியார், ஏகான்ம வாதியாய் இருந்தார் என்பதை நம்புவது மிகக்கடினம். உண்மை வரலாற்றை வெளியிட்டுள்ள சைவப்பழம் முதலியார் அவர்களுக்குச் சைவர்கள் பெரிதும் கடமைப்பட்டவர்.

    பதிலளிநீக்கு

Translate