சனி, 16 ஏப்ரல், 2011

சைவ மகிமை -1

(இந்த அரிய கட்டுரை, 1931, நவம்பர் மாதம் சித்தாந்தம் இதழில் வெளிவந்தது. பாம்பன் சுவாமிகளின் சொற்பொழிவுதான் இக்கட்டுரை. இதில் பல அரிய கருத்துக்களை சுவாமிகள் கூறியுள்ளார். சைவர் யார்? என்பதில் தொடங்கி, சைவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சில கடமைகள் வரை மிக அற்புதமாக விவரித்துக் கொண்டு போகிறார்.


ஒரு தெய்வக் கோட்பாட்டை வற்புறுத்துகிறார். உதாரணத்திற்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களை மேற்கோள் இடுகிறார். வியாசர் வாக்கை விட நால்வர் வாக்கு உயர்ந்ததே என்பதை வலியுறுத்துகிறார். அதற்கு காரணங்களையும் காட்டுகிறார்.

சிவபிரானை வழிபடுவதற்கு பக்தி மட்டுமின்றி, உறுதி வாய்ந்த உள்ளமும் வேண்டும் என்கிறார். அதற்கு உதாரணமாக தனது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை முன்வைக்கிறார்.

அரிதிலும் அரிதான இக்கட்டுரையை இங்குப் பதிவிடுகிறேன்.)

---------------------------------------------

(இது சென்னை, இராயப்பேட்டை ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்தஜன சபையின் "குகானந்த நிலையத்'தில் 17-02-1919 ல் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் செய்தருளியதொரு அரிய விரிவுரையின் சுருக்கம் ஆகும்.

அவ்விரிவுரை நிகழ்ந்தபோது யான் எழுதி வைத்த குறிப்புகளின் துணை கொண்டு இந்தக் கட்டுரையை இப்போது வரைந்துள்ளேன். பன்னீராண்டுகட்கு முன்னர் எடுத்த குறிப்பை விரித்தெழுதுங்கால், எழுதும் என் அறியாமையாலும் மறதியாலும் குறிப்பின் குறைபாட்டாலும் பல பிழைகள் நேருதல் கூடும்.

ஆயினும் இதில் என் கருத்து எதையும் சேர்த்திலேன். இதில் காணும் குறைகள் அனைத்தையும் சிறியேனுக்கும், நலங்கள் அனைத்தையும் அடியேன் ஆசிரியராகிய ஸ்ரீமத் சுவாமிகளுக்கும் உரிமையாக்குதல் அறிஞர் கடன்.

குறிப்பு நினைப்பூட்டும் அளவில், கருத்துக்கள் மட்டுமன்றிச் சொற்களும் சுவாமிகள் உடையனவாகவே இருக்க வேண்டும் என்னும், நோக்கத்துடன் இதை எழுதுகின்றேன்.
 -  ச. சச்சிதானந்தன்)ஆடும் பரிவேல் அணி சேவல்எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோ தரனே

இதயபங்கய குகரமே குகை என்பது ஆரிய பாடையில்
அதனுள்ஆய சிதம்பரத் துள் அமலஞான விண் மெய்யனாச்
சததமும் சுக நடனமேபுரி தம்பிரானையொர் குகன் எனாக்
கதறுமா மறையவனை அன்றொரு கடவுள் நாம்அறியோம்அரோ

பத்தியும் ஞானமும் பரவிடு மார்க்கம்
எத்தனை யோவகை இருக்கினும் இகத்தில்
முத்திதந்து அனுதின முழுப்பலன் நல்கச்
சத்தியம் ஆவது சரவண பவவேஇவ் உபந்நியாச அறிக்கைத் தாளின் தலைப்பில் உள்ள "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்.... வருவாய் அருள்வாய் குகனே' என்னும் பாடல் அருணகிரியார் வாக்கன்று.

புஷ்பரத செட்டியார் முதன் முதல் அச்சிட்ட கந்தரனுபூதிப் பதிப்பினின்றும்,"தூசா மணியும்... பேசா அனுபூதி பிறந்ததுவே' என்னும் பாட்டோடு முடியும் 43 பாடலை மட்டும் கொண்டது அந்நூல் என்று உணரல் ஆகும்.

அக்கரங்கள் 51 ஆதல் பற்றிப் போலும் எட்டுப் பாடல்கள் பின்னர்ச் சேர்க்கப்பட்டன.

மேற்சொன்ன 43ம் செய்யுளோடு கந்தரனுபூதி முடிகின்றது என்பதே என் கொள்கையும்.

ஆன்மாக்கள் சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையன. யான் இன்று கூறுவது மஹாத்மத் தன்மையை அடைந்த பேர்கள் நீங்கிய ஏனையோரைக் குறித்ததாகும். அதைக் கேட்டு அதன் பொருளைச் சார்ந்து பயன் உறுவீர்கள் என்பது என் கருத்து.

இன்று யான் எடுத்துக் கொண்ட விஷயம் சைவ மகிமை என்பது. சிவசம்பந்தம் சைவம். இச்சம்பந்தம் எதனால் ஏற்படுவது? தீட்சையினாலா? அதீட்சிதர் காணாது உண்ணலினாலா? புலால் உண்ணாமையினாலா? அல்லது பரம்பரையாய் ஒரு குலத்தில் பிறந்த தன்மையினாலா என்று கவனிக்க வேண்டும்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் எல்லோருக்கும் தீட்சை செய்யப்படவில்லை. ஆகையால் தீட்சையே சைவம் என்று சாதித்தல் கூடாது. இப்படிச் சொல்லுவதால் தீட்சை செய்து கொள்ள வேண்டாம் என்று யான் சொல்லியவன் ஆகேன்.அறுபத்து மூவருள் பலர் அதீட்சிதர். அதீட்சிதர் காணாமல் உண்பதால் பெறும் ஞானம் என்னோ? அதீட்சிதரோடு விவாக சம்பந்தம் கூடாது என்னும் கட்டுப்பாடு அவரவர் குடும்ப லட்சணத்தை ஒட்டி எழுந்ததொரு வரம்பு என்க.

தீட்சை பெற்றார் உள்ளும் பெறாதார் உள்ளும் நல்லவரும் தீயவரும் இருக்கக் காண்கின்றோம். ஆதலால் தீட்சை பெற்றுக் கொள்ளல் மாத்திரையாலேயே இச்சிவ சம்பந்த உணர்ச்சி ஏற்பட்டு விடும் என்று சாதிக்க இயலாது.

இனிப் புலால் உண்ணாமையைப் பார்ப்போம். புலால் உண்ணல் அநாசாரம். ஆனால் புலால் மறுக்கும் ஆசாரம் ஒன்றால் மாத்திரமே ஒருவற்குச் சைவம் சொந்தமாய் விடாது. ஆகும் என்றால் ஆடு, மாடு, யானை, ஒட்டை முதலிய சாக பட்சிணிகளுக்குச் சிறப்புச் சொல்ல நேரிடும்.

ஆகையால் புலால் உண்ணாமையை நல்ல ஆசாரம் என்ற அளவில் போற்ற வேண்டுமே அன்றி, அதுவே சைவம் என்னல் அடாது.

இவை போன்றே, வேறு சில அருமைகள் தாமும் சைவம் ஆகிவிடமாட்டா. "பூமிக் குழிக்குள் யான் இருப்பவன். ஆதலால் யான் சைவன்' என்னல் ஆகாது. என்னை? குழிக்குள் இருக்கும் தவளையும் சைவம் ஆகும் ஆதலின்.

ஒருவன், "யான் தலையில் காலைமாட்டித் தலைகீழாய்த் தொங்கவல்லேன், இது சிவ தத்துவம் அல்லவா' எனின், வெளவாலும் அவ்வாறு தொங்குகிறதே என்க.

"யான் ஊர்களில் வசிப்பதில்லை, மலை வனங்களிலேயே சஞ்சரிக்கின்றேன். ஆதலின் யான் சைவன்' எனின் பிராணிகள் பல அப்படி வசிக்கின்றனவே என்க.

"யான் தண்ணீரில் செபிக்கின்றேன். ஆதலால் சைவன்' என்று கூறில், அவர் செபிப்பது யாது? சிவமந்திரம் தானோ அன்றோ என்று சோதிக்க வேண்டும். அஃதாயின் மீனைக் காட்டிலும் விசேடம் உண்டு என்று கூறலாம்.

"புண்ணிய தீர்த்தத்தில் மூழ்குவதால் யான் சைவன்' எனில், மீன்கள் ஏகதேசமாக அன்றி எப்போதும் அப்படி மூழ்கி உள்ளனவே என்க.

"நல்ல பாடல் பாடுகின்றேன். அதனால் யான் சைவன்' என்னில், வானம்பாடியும் குயிலும் இனிமையாய்ப் பாடுகின்றனவே என்க.

"சைவத் திருமுறை வைத்துக் கொண்டு பாராயணம் பண்ணுகின்றேன்' என்னில் அது மிக நல்லதே ஆயினும், அஃது ஒன்றினால் மட்டும் ஒருவன் சைவன் ஆய்விடுமாறு இல்லை என்க.

இவ்வாறே உள்ளானைப் போலும் மாடப் புறாவைப் போலும் நிற்றலாலும் சைவம் வாய்த்து விடாது. பாம்பு போல் சின்னாள் வாயு பட்சணம் பண்ணுதலாலும் பட்டினியாய் இருத்தலாலும், காட்டுக் கழுகு போல் சருகு உண்பதாலும் பறவை போல் ஆகாயத்தில் பறத்தலாலும், பூ சஞ்சாரம் செய்வதாலும் அது சித்திப்பதில்லை.

இப்படியே மூச்சு அடக்குவதனாலும் தனிச் சிறப்பில்லை, முத்துச் சலாபம் குளிப்பார்க்கும் அது கைவரும் ஆதலின்.

"யோகிகள் பிராணாயாமம் பற்றி எழுதியுள்ளார்களே' என்னில், சிவயோகிகள் எழுதியிருந்தால் அதுபற்றி யோசிப்பாம் என்க.தேக அப்பியாசத்தால் தேகம் வலுப்படுவது போலப் பிராணாயாமத்தால் வாத பித்த சிலேத்தும சமத்துவம் உண்டாகலாம். ஆனால் ஆபத்தும் விளையலாம்.

துருத்தியைக் கும்பித்து யானும் இளமையில் பிராணாயாமம் சில காலம் செய்தேன்; அது வேண்டாம் என்று உணர்த்தப்பட்ட பின்பு அதை நிறுத்தினேன்.

எரி பெருக்குவர் அவ்எரி ஈசனது
உரு வருக்கம் ஆவது உணர்கிலார்
அரி அயற்கு அரியானை அயர்த்துப் போய்
நரி விருத்தமது ஆகுவர் நாடரே

கான நாடு கலந்து திரியில் என்
ஈனம் இன்றி இருந்தவம் செய்யில் என்
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்
ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே

வேதம் ஓதில் என் சாத்திரம் கேட்கில் என்
நீதி நூல்ப நித்தல் பயிற்றில் என்
ஓதி அங்கம் ஓர்ஆறும் உணரில் என்
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே

கூட வேடத்தராகிக் குழுவில் என்
வாடி ஊனை வருத்தித் திரியில் என்
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப்
பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே

கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடினாலும் அரனுக்கு அன்பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே

என்னும் அப்பர் திருவாக்குகளை ஊன்றிப் பார்க்க. யான் மேலே கூறியவை தவத்திற்கு உரியவை எனினும், அவை சிவத்தை முன்னிட்டுச் செய்யப்படாவிடின் சைவத்திற்கு உரியனவாகா.அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்றில்லை
அவன் அன்றி ஊர்புகும் ஆறு அறியேனே

என்ற திருமந்திரத் திருவாக்கை உன்னுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate