சனி, 23 ஏப்ரல், 2011

தூத்துக்குடி விழாத் தலைமைப் பேருரை - 1 - சி.கே.சுப்பிரமணிய முதலியார் பி.ஏ., எப்.எம்.யு.,

(இக்கட்டுரை, சித்தாந்தம் இதழில், 1931, நவம்பர் மாதம் வெளிவந்தது. திருநெல்வேலி சிவஞான முனிவர் நூல் நிலையத்தில் இருந்து நான் பிரதி எடுத்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று.சிவக் கவிமணி என்று போற்றப் பெற்ற சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள், தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை ஆண்டு விழாவில் பேசியதன் சுருக்கம் தான் இது.

இதில், முதலில் உணவில் சைவக் கொள்கையைப் பின்பற்றுவது குறித்துப் பேசுகிறார். பின் திருநீறு அணியும் முறை நாளடைவில் தேய்ந்து இல்லாமல் போனதைப் பற்றியும் பேசுகிறார். அவர் காலத்திலும் கூட அந்நிலைமை தான் போலும். இக்காலத்தில் கேட்கவே வேண்டாம்.

சைவம் பற்றிய அடிப்படை உண்மைகள் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம். சைவத்தைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இக்கட்டுரை பெரும் பயன் அளிக்கும் என நம்புகிறேன்.

இது பகுதி பகுதியாக வெளிவரும்.)

---------------------------------------

(குறிப்பு: சென்ற இதழில் குறித்தபடி, தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையின் 47 வது ஆண்டு விழாவின் அவைத் தலைவர் சைவத் திரு. சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள் நிகழ்த்திய தலைமைப் பேருரையின் முக்கியப் பகுதிகளை ஈண்டு வெளியிடுகிறோம்.  - பத்திராசிரியர்)

சிவக் கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்
                              
அன்புடையீர்!

இந்தப் பேரவைக்குத் தலைமை பூணும் அறிவாற்றல் இல்லாத என்னை அவ்வாறு செய்யும்படி ஆணையிட்ட உங்கள் அன்புக்கு மிக நன்றி செலுத்துகின்றேன்.

சென்ற எட்டாண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறே இச்சபையின் ஆண்டு நிறைவு விழாவின் தலைவனாக நியமித்து உங்கள் அன்பு நுகர்ந்து இன்பம் அடையும் பேறு எனக்குத் தேடித் தந்தீர்கள்.                  
                                                                                                                                
மீட்டும் இவ்வாண்டும் அவ்வாறே பணித்துள்ளீர்கள். நுங்கள் சபையினையும், அடியேனையும் அது முதல் இதுவரை அன்பு காரணமாகப் பிணைத்து நிலவ வைத்த இறைவன் பெருங்கருணையை வழுத்துகின்றேன்.

சைவம், சைவர், சைவ நூல்கள், சைவ நூல் முடிபுகள் என்பவற்றைப் பற்றிச் சில வார்த்தைகள் மட்டும் பேசி என் முன்னுரையை முடித்துக் கொள்ள எண்ணியிருக்கின்றேன்.

                                               சைவம்

இதற்குச் சிவ சம்பந்தமானது அல்லது சிவனையே கடவுளாகக் கொண்டு ஒழுகும் கொள்கைகளின் கூட்டம் என்று பெரும்பான்மையாய்ப் பொருள் கொள்வர்.

ஆனால் உலகியல் வழக்கில் வைத்துப் பார்த்தால் சில பெரும்பொருள்கள் கிடைக்கின்றன. ராமராவ் நடத்தும் மராட்டிய மிலிட்டரி ஓட்டலிலாவது, நாராயண நாயக்கருடைய தஞ்சாவூர் மிலிடேரி ஓட்டலிலாவது வெளிப்பலகையின் கீழ் ஒவ்வோர் நாள் "இன்றைக்குச் சைவ சாப்பாடு' என்று எழுதிய பலகை தொங்குமானால் அங்கே நின்ற "சைவ' என்னும் அடைமொழி எத்தனை பொருள் தந்து நிற்கிறது காண்க.

"நாங்களும் இன்றைக்குச் சைவம்' என்றாவது அல்லது "வெகுநாளாய்ச் சைவம்' என்றாவது "பரம்பரையாய்ச் சைவம்' என்றாவது ஒருவன் சொன்னால் "சைவம்' என்ற சொல் புலால் உண்ணாத ஒழுக்கம் என்பதையும், அவ்வொழுக்கமே சைவத்திற்கு அடிப்படை என்பதையும், சைவத்திற்கேயன்றி ஏனைச் சார்புகளுக்கு இது கிடையாது என்பதையும் இவை காட்டவில்லையா?

புலால் உண்ணாத வைணவ அல்லது கிறித்துவ அல்லது மகம்மதிய நண்பர்கள் முறையே தங்களது புலால் உண்ணாத விரதத்தைக் காட்ட நான் வைணவன் - கிறித்தவன் - மகமதியன் என்று சொல்லக் காண்கின்றோமா?

"கழிக்கரை மீன் கவர்வாரும்' என்று ஞானசம்பந்த சுவாமிகள் கட்டளையிட்டபடி புத்த மதத்தினர் புலால் உண்பதை விலக்காமல் ஒழுகுவதை நான் இலங்கைத் தீவில் நேரே கண்டேன்.

ஆகவே "சைவம்' ஒன்று தவிர வேறு எந்தச் சமயக் கொள்கையும் கொலை புலை தவிர்த்தலை அடிப்படையாகக் கொள்ளவில்லை. சைவம் கொலையைத் தவிர்ப்பது, புலாலை விலக்குவது என்பதாம்.

ஆனால் புலாலைத் தவிர்ப்பது எல்லாம் சைவமாய் விடுமோ எனின் ஆகாது. இது தர்க்க நியாயப்படிக்கும் தவறாகும்.

புலாலைத் தவிர்ப்பது என்பது ஒரு பைசாவானால், சைவம் ஒரு ரூபா ஆகும். எனவே புலால் உண்ணாமை ஒரு பைசாச் சைவமாம் என்றால் பொருந்தும்.

இனிச் சைவத்திற்கு அடையாளம் ஏதாவது உண்டா? உண்டு. "சைவம் விட்டிட்ட சடைகளும்' என்றார் திருவிசைப்பா ஆசிரியர்.

தமக்கு அடங்காத அதிகன் என்ற பகைவனது மலை அரணைத் தம் சேனைகள் தகர்த்து வென்று திறையாகக் கொணர்ந்த தலைக்குவியலிலே ஒரு தலையில் ஒரு புன்சடை கண்டார் புகழ்ச் சோழ நாயனார். உடனே

தார்தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் திருமுடியார்
நீர்தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவர் ஆனார்

என்று அச்சடையினாலே அவர் அரன் அடியார் ஆதலைத் துணிந்து அத்தலையினை பொற்கலத்தில் ஏந்தித் தீப் புகுந்து சிவபெருமானை அடைந்தார்.

எனவே சடைமுடி சைவ அடையாளம் ஆயிற்று. திருநீறும் கண்டிகையும் வேணி முடியும் ஆகிய இவற்றையே தமது சைவ அரசாங்க அடையாளங்களாகக் கொண்டு அரசு செலுத்தியதால் மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனார் அப்பேர் பெற்றார் என்று தெரிகின்றோம்.

திருநீறு சைவர்கள் என்பவர் இடத்திலேயன்றிக் கிறித்தவர், மகமதியர், பௌத்தர் முதலியவர்களிடத்தும் ஓரோர் காலத்தில் ஏகதேசத்தில் கொண்டாடப் பெறுகின்றது.

சைவர்களிடத்தேயோ என்றால் ஆறு அங்குலம் நீளம் அணியப் பெறுவது முதலாகிய விதிகளில் இருந்து சங்கார முறையிலே படிப்படியாய்ச் சோபானக் கிரமத்தில் குறைந்து கொண்டே வந்து, "சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்' என்ற திருவாக்கின்படி மாறி மாறிக் கடைசியாய் "அரைமாத்திரையில் அடங்கும் அடி' என்றபடி ஓர் அங்குலம், அரை அங்குலம், ஒரு பொட்டு, பின்னர் அதையும் அழித்து விடுதல் என்று வந்து விட்டது.

பரிதாபம்! நீற்றினை நிறையப் பூசுதலால் வரும் பெருமையையும் ஊதியத்தையும் எத்தனை வகையிலே நமது பெரியார் சொல்லி வைத்து இருந்தும், அனுபவத்தில் நடந்து காட்டி இருந்தும் சைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இக்காலத்துச் சிறுவரும் பெரியவர்களும் கூட அதைப் பின்பற்றாது ஒழிந்து வருவது நமது தீவினையே ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate