சனி, 30 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 4


7. சிவசன்மா வாயுவின் உலகமும் குபேரனுலகமும் கண்ட அத்தியாயம் (13வது  அத்தியாயம்)
(காசிபமுனி மகன் இறைவனை வழுத்தியது என, சிவசன்மாவிற்கு விஷ்ணு கணங்கள் உரைத்தது)

1. தண்ணங் கமலை கேள்வனுக்கும் தனிநான்முகற்கும் புரந்தரற்கும்
நண்ணற் கியைந்த பதங்கொடுக்கு நளிமாமதிச் செஞ்சடையினோய்
எண்ணற் கரிய மறைநான்கும் இதுவன்‌று இதுவன்று என்பதல்லாற்
கண்ணற் கரியாயென் போல்வார் எவ்வா றுன்னைக் கருதுவதே - 4


2. துதியும் துதிக்கப் படுவோனும் துதிக்கும் அவனும் உலகீன்ற
விதியும் விதியை அளிப்போனும் இவர்களறியா விழுப்பொருளாம்
பதியுமாகி எவ்வுயிர்க்கும் உயிராய் அவற்றில் பற்றில்லா
முதல்வ நின்னை உணர்ந்தெவ்வாறு எளியேன் ஏத்த முயல்வதுவே - 5

3. நீருஞ்  சுலவி எறிவளியும் நெருப்பும் புதைந்த நெடுவானும்
பாரும் விந்து நாதமுதல் எவையும் ஒருங்கு படைத்திடுமுன்
பேரும் வடிவுமில்லாத பெம்மான் நின்னைத் தனிதுறந்தோர்
யாரும் அறியாநின் சீர்த்தி யானோ நாவால் பழிச்சுவனே - 6

இந்த மூன்று பாடல்களும் துதிகள். முதல் பாடலில், வேதம் நேதிநேதி என, எல்லாவற்றையும் விலக்கி தேடும் பரம்பொருள் என, இறைவனை கவி சுட்டுகிறார்.

அடுத்த பாடலில், சைவ சித்தாந்தப்படி, இறைவன் உலகெல்லாம் கலந்திருந்தாலும், அதனால் பாதிக்கப்படாதவனாக இருப்பதை - வேறாகி நிற்பதை - பற்றில்லா முதல்வ என்ற சொல்லால் கவி குறிக்கின்றார்.

மூன்றாவது பாடலில், இறைவனின் சொரூப லட்சணத்தை விளக்குகிறார். பேரும் வடிவும் இல்லாத நிலையில் உள்ள இறை, பின் எப்படி பல பெயர்களை ஏற்று செயல்படுகிறது என்பதை அடுத்து வரும் இரு பாடல்களில் விளக்க உள்ளார்.

4. அருவமாகிச் சலமின்றி ஒன்றாய் உறையும் அமைதி  தனில்
மருவும் இச்சை, உயர்இச்சாசத்தி ஆக மறைப் பொருளாம்
ஒருவாநீரே சத்தி  சிவம் என்ன இரண்டாய் உறைந்தீர் நும்
பொருவில் உருவம் ஞானம் இச்சை சத்தி உருவிற் பொருந்தியதால் - 7

இந்த பாடலுக்கு, 1895ம் ஆண்டு வெளியான, ஈ.இரத்தினவேலு முதலியார் உரையை அப்படியே கீழே  தருகிறேன்:

தேவரீர், அருவமாகியும், அசைவற்றும் தனித்தம் பொருந்தியிருக்கும் சமயத்தில், இச்சா சத்தியானது பொருந்தும்.

உயர்ந்த அவ்விச்சா சத்தி சமேதராக வீற்றிருந்தருளும் வேதப் பொருளாகிய கடவுளே! தேவரீரே அச்சத்தி சிவம் என்றும் இரண்டுருவாக எழுந்தருளியிருந்தீர்.

ஆகவே, தேவரீரது ஒப்பற்ற திருவுருவமானது, ஞானமும் இச்சையுமாகிய திருவுருவத்தோடு பொருந்தியுள்ளது.

சிவபெருமானது ஐஞ்சத்திகளுள், ஈண்டு இச்சா சத்தியைக் கூறியதனால், `ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குறித்தே' என்றபடி, பரை, ஆதி, ஞானம், கிரியை என்னும் ஏனைய சத்திகளையும் கொள்க.

அவற்றுள் பரசிவத்தினைப் பிரியாத அருட்சத்தி, பரசிவத்து ஆயிரத்தொரு கூறான நிட்கள சிவத்துடன் கூடி, கிருத்தியத்தைத் திருவுளத்தில் அடைப்பது பராசத்தி.

அதில், ஆயிரத்தொரு கூறு வலியுற்றதாய்ப் பெத்த முத்திகளில் வியாபிப்பது ஆதிசத்தி. அதில், ஆயிரத்தொரு கூறு வலியுடைத்தாய் வடிவைப் பிரேரிப்பது இச்சா சத்தி.

அதில் ஆயிரத்தொரு கூறு வலியுள்ளதாய் அறிவை விளக்குவது ஞானசத்தி. அதில் ஆயிரத்தொரு கூறு கொண்டது கிரியாசத்தி.

ஆகவே, இச்சத்திகளைக் கொண்டு, நின்மலரான சிவம், ஆன்மாக்களிடத்துக் கொண்ட கருணை காரணமாகச் சகத்தை சிருட்டிக்கிறார். சிவன் இச்சத்திகளை விட்டு தனித்திரார்.

ஞானசத்தி கிரியாசத்திகள் இரண்டும் சிவனிடத்தில் சமவாயமாகச் சேர்ந்திருக்கும். ஞானசத்தியால் சகத்தை அறிகிறார். கிரியாசத்தியால் செய்கிறார். இச்சாசத்தியே ஆன்மாக்களுக்குப் பலத்தைக் கொடுப்பது.

இக்கிரியாசத்தி சுத்தாத்வவாசிகளான மந்திர-மந்திரேச்வர - விஞ்ஞானகலர் இவர்களுக்கு போகம் உண்டாக்கலால் மல மாயா கன்ம ரூபையாயிருக்கும்.

அந்தச் சிவசத்தி ஒன்றாயிருக்கினும் உபாதி பேதத்தினால் மூவிதமாய் லய போக அதிகாரங்களுக்குக் கருவியாகும்.

இச்சத்திபேதத்தால் தத்சத்திமானாகிய சிவனும் லய, போக, அதிகாரியாய், சிவன் -சதாசிவன் - மகேச்சுரன் எனப்படுவர்.

ஆகவே, இச்செய்யுளிடத்து சிவனது கிருத்திய  பேதத்தால் பேதமுற்ற ஐவகைச் சத்திகளையும் நின்மல சிவம் - சதாசிவம் - மகேச்சுரம் என்னும் மூவகைச் சிவபேதங்களையும் கூறப்பட்டது காண்க.

இது  இரத்தினவேலு முதலியார் உரை.

5. சத்தி சிவமாம் நுமதிடத்திற் கிரியா சத்தி உதித்ததற்பின்
மொய்த்த அலகில் புவனமெல்லாம் முறையின் உதித்த, ஞானசத்தி
பெத்தம் அறுநல் உருவம் நீர், கிரியா சத்தி உருப் பிறையை
வைத்த மெளலிப் பரை, கிரியா சத்தி  உருவாம் வளருலகம்

சத்தி, சிவம் என்ற இரண்டுருவாய் நின்ற உம்மிடம், கிரியா சத்தி முதற்கண் தோன்றுகிறது. பின், அந்த கிரியா சத்தி, எண்ணிக்கையில் அடங்காத உலகங்களை  உருவாக்குகிறது.

அதனால், நீர், பெத்தத்தை அறுக்கும் ஞான  வடிவம். பிறையை சடையில் வைத்த சத்தியின் வடிவம் கிரியா சத்தி. அந்த  கிரியா சத்தியின் மற்றொரு உருவம் தான், இந்த உலகம்.

இந்த இரு பாடல்களின் உள்பொருளை, சிவபேதங்களும் பதிபேதங்களும் என்ற கட்டுரையில் காணலாம்.

மேலும், திருவாசகத்தில் வரும் மின்னிடைச் செந்துவர் என்ற பாடலுக்கான உரையை  தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்ற இணைப்பில் காண்க.

6. ஆயவாற்றால் அனைத்தினுக்கும் ஐயநீயே காரணமாந்
துாயமலரோன்நின் வலப்பால் துளவ நெடுமால் இடப்புறனாம்
காயும்எரி செங்கதிர் மதியங்கண் மூன்றாகும் நினதுயிர்ப்பு
மேயமறையாந் திரை புரட்டும் விரிநீர்க் கடல்நின் வெயர்வாமால் - 9

இந்த பாடலில், இறைவன் விசுவ ரூபன் என்பதை கூற துவங்குகிறார். பிரமா வலப்புறமும், திருமால் இடப்புறமும், வெளிப்பட்டு தோன்றும், ஏகபாத மூர்த்தியான இறைவனே! நெருப்பு, சூரியன், நிலவு மூன்றும் உனது கண்கள்; வேதம் உனது சுவாசம்; உலகைச் சூழ்‌ந்துள்ள  கடல் உனது வியர்வை - என்கிறார் கவி.

7. இறைவனினது செவிவழியாந் திசையீரைந்து நினது கரம்
மறுவின் மறையோர் நினது முகம் மற்றுன்  தடந்தோள் வாள்வேந்தர்
செறியுந் திசைகள் விரித்தசைத்த குறங்கு வணிகர் தேவர்முடி
அறையுங் கழல்கள் சூழ்கிடந்த அம்பொற் சரணம் பின்னவரே - 10

செவிக்கு சுட்டும் உருவகம் விளங்கவில்லை. பத்து திசைகளும் இறைவனது கைகள். அந்தணர் இறைவனது முகம்; மன்னர் தோள்; வணிகர் தொடை; பாதங்கள் சூத்திரர்.

இந்த உருவகம், புருஷ சூக்தத்தில் இருந்து எடுத்தது என்பது தெளிவு.

8. பெண்ணும் ஆணும் என உறைந்திவ் உலகமுழுதும் பெற்றாய்நீ
தண்ணந் துளவத் தாரோனுந் தண்டாமரையின் உறைவோனும்
எண்ணவரிய பரம்பொருள்நீ என்னாஏத்தி எனக்கு வரம்
அண்ணல்நின் மேல் அன்பென்றும் அழியாதிருத்தல் எனத் தொழுதான் - 11

ஆணும், பெண்ணுமாய் இந்த உலகைப் படைத்த உன் மேல், மாறிலாத அன்பு எப்போதும் இருக்க எனக்கு வரம் தருவாய் என, காசிப முனி மகன், இறைவனைத் தொழுதான் என்கிறது இந்த பாடல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate