வெள்ளி, 29 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 3


6. சிவசன்மா தெய்வலோகங் கண்ட அத்தியாயம் (10வது அத்தியாயம்)

(பாடல் 45 முதல் 52 வரையிலானவை, விசுவாநரன், வீரேசுவரரைத் துதித்தது என, விஷ்ணுகணங்கள், சிவசன்மாவுக்கு உரைத்தது. இவை சிவாஷ்டகம் எனப்  பெயர் பெறும்)

அருவுருவாய் ஏகமாய் அக்குணங்குறிகள் எவையுமின்றி அசலமாகி
நிருமலமாய் எவ்வுயிர்‌க்கும் உயிராகிச் சுடரொளியாய் நித்தமாகிக்
கருதரிய ஆனந்தக் கடலாகிமெய்ஞ்ஞானக் கனியாய் நின்ற
வரதநின் அடிக்கமலம் மனத்திருத்தி கொழுமலர்துாய் வழுத்தல் செய்வாம் - 45


இலகுஒளிய கதிர்ஒன்று ஆயிரம் புனல்பெய் குடங்கள்தோறும் இயைந்துநாளும்
அலகில் பலவுருவாகித் தோன்றுதல்போல் சராசரங்கள் அனைத்துமாகி
உலகம்முழுவதற்கும் ஒரு தனிக்கடவுளாகி உலகளந்த மாலும்
மலரயனும் அறியாது நின்ற நின்சேவடி இணைகள் வணங்குவாமே - 46

கானலிடைத் தெண்ணீரும் கயிற்றினில் வாளரவும் அலைகடலிற்பட்ட
கூன்முதுகு இப்பியில் தோன்றும் வெள்ளியும் அம்முதல் உண்மை குறிக்கில் தீரும்
ஆனவை போல் நினை அறியில் தோன்றும் சகம் அனைத்தும் நில்லாது அழியும் ஆற்றால்
தேனவிழ்பூங் கடுக்கையணி செல்வ நினது அறைகழல் தாள் சென்னி சேர்ப்பாம் - 47

நீரினிடைத் தண்மையும் செந்நெருப்பினிடை வெம்மையும் வெண்ணிலவுத் திங்கள்
சேர்தரு தட்பமும் இலகு செஞ்ஞாயிற்று அழற்சியும் தீம்பாலின் நெய்யும்
ஈர்மலரின் நறுமணமும் என்னலாய் உலகெலாம் இருக்கும் எந்தை
வார்கழற் சேவடிக்கமல நறவொழுகுமலர் துாவி வணங்கல் செய்வாம்  - 48

நோக்கின்றிக் கண்டு நனிகையின்றிக் கொடுத்து மறைநுவல்வதாய
நாக்கின்றி  அறுசுவையும் இனிதுணர்ந்தும் காலின்றி நடத்தல் செய்தும்
மூக்கின்றி மணங்கவர்ந்தும் செவியின்றிக்கேட்டும் மறைமுதல்வர் யார்க்கும்
வாக்கின்றி மனத்தினுக்கும் எட்டாநின் தாமரைத் தாள் வணங்கல் செய்வாம் - 49

வண்துழாய்ப் பசுந்தெரியல் மாயவனும் நான்முகனும் வானுளோரும்
அண்டர்நாயகனும் மறைமுனிவர்களும் அறிவரிதாய் அன்பு முற்றும்
தொண்டர் ஆனவர்க்கு எளிதாய்த் தோன்று தனிச்சுடர்க் கொழுந்தே சுருதி என்னும்
பண்டைநுால் முடிவிலுறை பராபர நின்னடிக் கமலம் பணிதல் செய்வாம் -50

குலங்குடி கோத்திரமின்றிப் பிறப்பிறப்புப் பெயர் வண்ணங் குணமுமின்றி
இலங்கொளிய வெறுவெளியாய் இருந்து நெடுநீர் உலகம் யாவும் வேட்ட
நலங்கொள் பொருள் அனைத்தினையும் நல்குதலால் நளிமதிச் செஞ்சடையோய் மற்றுன்
பொலன்கழற் தாமரைமலர் என்புன்தலையின் மிசைசூட்டிப் போற்றுவேனால் -51

முதியவன்நீ காளையும்நீ முதுக்குறைவில் பாலனும்நீ முளரிவாட்டும்
மதிபுரையும் வாண்முகத்து மலைமடந்தை கொழுநனும்நீ வானோர்போற்றும்
கதழ்எரிகால் மூவிலைவேல் கங்காளநாதனும்நீ ஆதலால் உன்
பொதியவிழ் தாமரையனைய பூங்கழல்கள் எஞ்ஞான்றும் போற்றல் செய்வாம் - 52

இந்த எட்டுப் பாடல்களும், இறைவனின் இயல்பை, சொற்களுக்குள் அடக்க முயலும் அழகை எத்துணை நாட்களானாலும் நம்மால் உணர்ந்து தீர்க்க முடியாது.

முதல் பாடலில், எந்த ஒரு அடையாளமும் இல்லாத இறைவன், ஆனந்தமே வடிவமாகி நின்ற தன்மை குறிப்பிடப்படுகிறது.

அடுத்த பாடலில், பல குடங்களில் நீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நீரில், பல சூரியன்கள் காட்சியளிக்கின்றன. அது உண்மையா? அல்ல, வானில் உள்ள ஒரு சூரியனே, இப்படி பல சூரியன்களாக காட்சியளிப்பது போல, இறைவன், இவ்வுலகில் கலந்திருக்கிறான் என, கூறப்படுகிறது.

கானல்நீர், கயிற்றில் பாம்பு, அலைகடலில் மிதக்கும் சிப்பி, வெள்ளிபோல் தோற்றம் அளிப்பது என்ற உதாரணங்கள் அடுத்த பாடலில் குறிப்பிடப்படுகின்றன.

அவற்றின் அடிப்படையை உணர்ந்தால், அந்த மாயத் தோற்றம் விலகுவது போல், இறைவனை உணர்ந்தால், இந்த உலகம் எனும் மாயத் தோற்றம் விலகும் என, அந்த பாடல் கூறுகிறது.

நீரும் குளிர்ச்சியும், நெருப்பும் வெம்மையும், நிலவும்  அதன் கதிரும், ஞாயிறும்  அதன் அழற்சியும், பாலும் நெய்யும், மலரும் மணமும் போல, இந்த உலகில் பிரிப்பின்றி இறைவன் கலந்திருக்கிறான் என, 48 வது பாடல் கூறுகிறது.

வேதத்தில் கூறப்பட்டுள்ள கடவுளர்களின் வாக்கு மனத்திற்கு எட்டாத அந்த பரம்பொருளுக்கு உருவம் இல்லாவிடினும், அது அனைத்து செயல்களையும் செய்கிறது  என, 49வது பாடல் குறிப்பிடுகிறது.

மற்ற பாடல்கள், தோத்திரங்கள்.

இவற்றில், 46, 47 பாடல்களில், அத்வைதத் தத்துவக் கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன.

ஆனால், அடுத்து வர உள்ள 13வது அத்தியாய பாடல்களில், சைவ சித்தாந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதைப் பார்க்கும் போது, காசிகண்டம் என்ற வடமொழி நுாலில், அத்வைதத் தத்துவ பாடல்கள் அல்லது சைவ சித்தாந்த பாடல்கள் ஆகிய  இரண்டில் ஒன்று, இடைச்செருகலாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்க தோன்றுகிறது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate