புதன், 27 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 1


(2001ல், அதிவீர ராமபாண்டியர் இயற்றிய காசி கண்டம் படித்தேன். முழுமையாக படிக்க முடியவில்லை. எனினும், படித்த வரையிலும், என் மனதில் பதிந்த சில பாடல்களை குறிப்பெடுத்தேன்.

அந்த பாடல்களில், ஆன்மிகமும், உலகியலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.



அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களோடு, இன்று, டிவிக்களிலும், சொற்பொழிவுகளிலும் பேசப்படும் ஆன்மிகத்தை ஒப்பிட்டு பார்த்தால், எது உண்மை என்பது தெரியவரும்.

இந்த பாடல்கள் எளிமையான நடையில் அமைந்தவை. அதனால், விளக்க உரை வேண்டியிருக்காது என, நினைக்கிறேன்.

பாடலின் அருகில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்கள், அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் என, கொள்ள வேண்டும்.

இனி, பாடல்கள்....)

-------------------------------

1. தேவர்கள் பிரமலோகம் அடைந்த அத்தியாயம்: (இரண்டாவது அத்தியாயம்)
பிரமன் மொழிந்தது:

ஒலிமுதற் புலன்களைந்தும் ஒடுக்கிஉட் கரணம் செற்றோர்
அலகில்நான் மறையும் தெள்ளி அறநெறித் துறையுள் நின்றோர்
பலன் விழையாது நோற்போர் பத்தினிப் பெண்டிர்  ஆவின்
குலம்இனிது அருந்தப் பைம்புற் கொடுப்பவர் தவத்தின் மிக்கோர் - 20

பிறர்மனை விழைதல் செய்யார் பெற்றதாய் தந்தை தாளின்
நறுமலர் துாவித் தாழ்வோர் நான்மறைக் கிழவர் பாதத்து
உறுபுனல் நுகர்வோர் கங்கைக் கரையினில் உடலநீத்தோர்
மறைபுகழ் பிரயாகை தன்னின் மாகநீர் படிந்த துாயோர் -21

ஒளிமதி அயனம் சார்ந்தோர் உபைய கோமுகியை ஈந்தோர்
அளியுடன் இறந்தோர்க் கெல்லாம் கயையினில் அன்னம் ஈந்தோர்
தெளிவுடன் புனிதராகித் திங்களொன்று இடையிட்டு உண்போர்
களிதரு  காமமாதி கழிமலங் கழுவுநீரார் -22

ஈங்கிவர் யாரும் எம்பால் இனிது வீற்றிருந்து பின்னர்
நீங்கருங்  காசி தன்னிற் பிறந்து வெண்ணீற்று மேனிக்
கோங்குறழ் முலையாள் பங்கன் குரைகழற் கமலம் போற்றி
ஆங்கவன் அருளால் மீளாப் பேரின்பம் அடைவர் மாதோ -23

மேற்கண்ட பாடல்களில், யார் யார் எல்லாம் காசியில் பிறப்பார் என, பிரமன் பட்டியிலிடுகிறார்.

புலனடக்கம் உள்ளோர், நான்மறைகளைக் கற்று, அறநெறியில் நிற்போர் என பட்டியல் நீள்கிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, பெற்றோரை பாதுகாத்து பூசிப்பவர்களையும் பிரமன் குறிப்பிடுவதைத் தான்.

இந்த காலத்தில் இதை முக்கியமாக குறிப்பிட வேண்டியிருக்கிறது.

2. அந்தணர் தன்மையை கூறும் பாடல்:

ஏதமில் மறைகள் தேரார் இருபிறப்பாளர் அல்லர்
ஆதியில் தோன்றி நின்ற வேதமும் அங்கமாறும்
ஓதிய புராண நுாலும் கண்களோடு உள்ளமாகும்
மேதகும் அவையிலாதார் விழியொடு  மனமிலாதார் -31

இந்த பாடலில், யார் பிராமணன் என, தெளிவாக கூறப்படுகிறது. நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும், புராண நுால்களும் ஆகிய இவை, ஒருவனுக்கு கண்களும், மனமும் போல.

அதனால், இவற்றைக் கற்க வேண்டிய தகுதி இருந்தும் கல்லாத பிராமணன், த்விஜன் அதாவது இருபிறப்பாளன் எனக் கூறிக் கொள்ள தகுதி இல்லாதவன் என்கிறது இந்த பாடல்.

2. அ. சிவசன்மா சூரிய  உலகம் கண்ட அத்தியாயம் (ஒன்பதாவது அத்தியாயம்)

தெரிவருந்தவத்துக் கோசிகன் காயத்திரிதனைச் செபித்ததால் அன்றோ
அருமறைப் பிரமவிருடியாய் படைக்கும் அருந்தொழிற்கு ஒருவனாய் அமர்ந்தான்
பரவுநான்மறையும் அறுவகை நுாலும் பயின்றுளான்  அந்தணன்  அல்லான்
பொருவில்சீர்க் காயத்திரிதனை விதியில் புகன்றுளான் அந்தணன் ஆவான் - 21

இந்த பாடலில், கெளசிக மகரிஷி, காயத்ரி மந்திரத்தை ஜெபித்ததால்தான், பிரம பதவி அவருக்கு கிடைத்தது என்றும், நால்வேதம், ஆறு  அங்கம் ஆகியவற்றை  ஓதுவதோடு மட்டுமல்லாமல், ஒப்புவமை இல்லாத காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பவனே பிராமணன் ஆவான் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

3. தேவர்கள் அகஸ்தியர் ஆசிரமத்தில் வந்த அத்தியாயம் (மூன்றாவது
அத்தியாயம்) (நுால் கூற்று)

எறிநீர்க் கங்கைசூழ் கிடந்த இன்னகரின் எஞ்ஞான்றும்
பறவையினமும் விலங்குகளும் இறக்கும் காலைப் படர் சடையெம்
இறைவன்  புகல் தாரகப் பிரம உபதேசத்தால் ஈறில் கதி
பெறுப என்னில் ஈங்குறைவார் பெறுபேறு யாமோ பேசுவதே   -4

இதில், காசியில் இறப்போர் காதில், இறைவன் ஓம் எனும் தாரக மந்திரத்தை ஓதி, வீடுபேறு அளிக்கிறான் என, கூறப்படுகிறது.

4. கற்பிலக்கணம் கூறிய அத்தியாயம் (4வது அத்தியாயம்)
(தேவர்கள் கூற்று)

திருந்தும் ஆயுள் சிதையும் என்றெண்ணித் தம்
பொருந்து காதலர் நாமம் புகன்றிடார்
இருந்தபோதன்றித் தாம்முன் இருந்திடார்
அருந்து மிச்சில் அமிழ்தின் நுகர்வரால் - 14

அழிகின் வீக்கம் சிறிதிலராயினும்
ஒழிவில்நோய் நிரப்புற்றனர் ஆயினும்
கிழவுத்  தன்மையர் ஆயினும் கேள்வரைப்
பழுது சொல்கலர் பண்பின் முயங்குவார்  - 19

அன்பர் துஞ்சிடில் துஞ்சுதல் ஆங்கவர்
துன்பம் எய்திடில் தாமும் அத் துன்புறல்
இன்பம் உற்றிடில் இன்புற்றிருத்தலே
மன்பெருந்தவங் கற்புடை மாதர்க்கே -20

உரலில் அம்மியில் ஓங்கும் உலக்கையில்
பரவும்  வாயில் படியில் முறத்தினில்
திரு அகன்றிடுமால் எனச் சேர்ந்திரார்
பொருவில் கற்புடைப் புண்ணிய மாதரே  -26

21ம் நுாற்றாண்டில் இந்த பாடல்கள், நகைப்பை உண்டு பண்ணுவன என, சிலர் நினைக்கலாம்.

ஆனால், இன்றைய குடும்பப் பிரச்னைகளின் ஆழத்தை நோக்குவோர்க்கு, ஒன்று புலப்படும்.

பரஸ்பரம் அன்பில்லாததால், அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு, தானும் கெட்டு, குடும்பத்தையும் கெடுக்கும் அவலம் நடப்பது தான் அது.

முதல்பாடலில், பெயர் சொன்னால், கணவரின் ஆயுள் குறையும் என்பதால், அவரது பெயர் சொல்ல மாட்டார்கள்; அவர் உட்கார்ந்திருக்கும் போது, மரியாதை கருதி உட்கார மாட்டார்கள்; கணவர் உண்டு மீதியிருப்பதை அமுதமாக கருதி உண்பர் என, கூறப்படுகிறது.

அடுத்த பாடலில், தீரா நோய் இருந்தாலும், கிழவர் போல காட்சியளித்தாலும், கணவரை எந்த ஒரு குறையும் சொல்ல மாட்டார்கள் என, கூறப்படுகிறது.

மூன்றாம் பாடலில், கணவர் துாங்கிய பின் துாங்குவது, அவர் துன்பப்பட்டால் தாமும் துன்பப்படுவது, அவர் இன்புற்றால் தாமும் இன்புறுவது இவை, கற்புடைப் பெண்டிருக்கு தவம் என, கூறப்படுகிறது.

இன்றும் கிராமத்தில், உரல், அம்மி, உலக்கை, வாசல் படி, சுளவு எனப்படும் முறம் ஆகியவற்றின் மீது பெண்கள் உட்கார்ந்தால், லட்சுமிகடாட்சம் போய், தரித்திரம் வரும் என நம்பிக்கை இருக்கிறது.

அதற்கான, எழுத்து ஆதாரமாக கடைசிப் பாடலைக் காட்டலாம்.

1 கருத்து:

  1. காசிகாண்டம் நூல் எங்கு கிடைக்கும் என்று குறிப்பிட முடியுமா?

    பதிலளிநீக்கு

Translate