செவ்வாய், 12 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து...2

10-3-99
புதன், பேட்டை

'வடமொழியும் தென்தமிழும் ஆனான்காண்'
'தமிழ்சொலும் வடசொலும் தாணிழற்சேர'

என, சமயக்குரவர்கள் கூறியிருப்பதை அறிந்தும் தெளிந்தும் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனர் சில ஆதர்கள்.

சமற்கிருதத்தை எதிர்ப்பதன் மூலம் அல்லது அதை இல்லாது செய்துவிடுவதன் மூலம் தமிழ் வளரப்போவதில்லை.


இன்னுந் தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று அமைச்சர் பெருமக்கள் (தமிழக அமைச்சர்கள் தான்) செய்யும் கூத்துக்களையெல்லாம் நாடறியும்.

இதில், பேரூர் ஆதீனமும் சேர்ந்திருப்பது வேதனைக்குரியது. மேலும், அவர் சமற்கிருதத்தை இல்லாமல் செய்து விடுவதென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் போலும்.

ஒரு பொருளையோ அல்லது ஒரு மரபையோ அழிப்பதில் தீவிரம் ஏற்படும்பொழுது வார்த்தைகளிலும் தராதரம் பார்ப்பதில்லை போலும்.

அப்பர் சுவாமிகளின் 'போதொடு நீர் சுமந்தேத்தி புகுவார் அவர் பின் புகுவேன்' எனும் திருவாக்கிற்கு அவர் கொள்ளும் பொருள் மிகவும் கண்டிக்கத்தக்கதாம். அப்பரடிகளின் கருத்துக்கு மாறானதாம்.

இங்ஙனம் மெய்ச்சொற்றொடர்களுக்கு போலி பொருளை பரப்புவிப்பதன் மூலம் இவர்கள் என்ன கட்டி கொண்டுவிடப் போகிறார்கள்?

சமற்கிருதம் என்பது கற்றோர் மொழி. மொழி என்பதை விட, sound waves எனக் கூறுதல் பொருந்தும்.

டிசம்பர்,98, ஓம்சக்தி மாத இதழில், தலைகாட்டிய இந்த சர்ச்சைக்குரிய பிரச்னை, மீண்டும், வைதிக சைவர்களை மட்டம் தட்டும் நோக்கில், மார்ச் (இந்த மாதம்) மாத இதழில் வெளிவந்துள்ளது.

திருஞானசம்பந்தமையா மூலம் இதற்கு ஒரு பதில் அனுப்பலாம் எனும் எண்ணம் எனக்குத் தோன்றிற்று. அதனால், இன்று இந்த மாத வெளியீட்டையும் எடுத்துக் கொண்டு ஐயாவைச் சந்தித்து, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.

அவர்களும், அவரது ஆசிரியர் இரத்னவேலனைக் கலந்து கொண்டு, பேரூர் ஆதீனத்திற்கு ஒரு விளக்கக் கடிதம் எழுதுகிறேன் என ஒப்‌புக் கொண்டனர்.

அர்ச்சனையில் தமிழ் என்பதோ மட்டுமில்லாமல் கும்பாபிஷேகம் வரையிலும் சென்‌று விட்டதைப் பார்க்கும் போது, இன்றைக்கு சைவத் திருமுறைகளை ஓதுகிறவர்கள் யாரும் அதன் உண்மைப் பொருளை ஓரவில்லை என்பது ஸ்பஷ்டமாய்த் தெரிகிறது.

புறப்புறச் சமயங்களிலிருந்து எதிர்ப்புகள் வந்தபோது, ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசு, ஆளுடைய நம்பிகள், ஆளுடைய அடிகள் ஆகியோர் திருவவதாரம் செய்தருளி சைவமத ஸ்தாபனம் பண்ணியருளினர்.

இன்று சைவ மதத்திற்கு புறப்புறத்திலும், அகத்திலுமே களைகள் பெருகி வருகின்றன. ஞானசம்பந்தப் பிள்ளையார் மீண்டும் அவதரிக்க வேண்டும் போலும்.

'உண்மை' இதழில், அறிவரசன் எனும் மேதையொருவர் மிக மேதாவித்தனமாக, ஞானசம்பந்தப் பிள்ளையாருடைய செயல்களை எல்லாம் சாடியிருக்கிறார்.

இறையருள் பெற்று நின்றார்க்கு, எல்லாம் இறைமயமாகவே தோன்றும். அங்ஙனமே புல்லறிவு  கொண்டோர்க்கு இவ்வுலகத்தில் இறைவனருளால் நடக்கும் அதியற்புத செயல்களெல்லாம் வெறும் வேடிக்கைகளாகவே தோன்றும். நாளை அந்த மேதாவிக்கு ஒரு மறுப்பு எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate