சனி, 23 நவம்பர், 2013

கம்பனைக் காட்டிய அ.ச.ஞா


நுால்: கம்பன்- புதிய பார்வை
ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன்
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
பக்கம்: 408
விலை: ரூ.100

தமிழை நேசிப்போர் ஒவ்வொருவரும், வாசிக்க வேண்டிய நுால்களுள், கம்ப ராமாயணமும் ஒன்று.

2000ங்களில், ஊரில் இருந்த போது, கம்பனை வாசிக்க வேண்டும் என்ற நினைப்பு எழுந்தது.என் நண்பர் மணியின், வக்கீல் நண்பரின் அப்பாவிடம், கம்பராமாயணம், கம்பன் கழகப் பதிப்பு இருப்பதாக கேள்விப்பட்டு, அதைக் கொண்டு வரச் செய்தேன்.

அந்த புத்தகம் வரும் முன்பே என்னிடம், வெள்ளகால் சுப்பிரமணிய முதலியாரின்  கம்ப ராமாயண சாரம் நுால் உண்டு.

அதன்பின், டி.கே.சி.யின் கம்ப ராமாயணப்  பதிப்பும் என்னிடம் இருக்கிறது. என்றாலும் இவற்றில் எதையும் நான் எடுத்து வாசிக்கவில்லை.

ஆனால், தோன்றிய போது, பக்கங்களைப் புரட்டி நான் வாசிப்பதுண்டு.

அப்படி நான் வாசித்த பாடல்களில் ஒன்று, வாலிவதைப் படலத்தில் வரும், `தக்க இன்ன தகாதன இன்ன' என்ற பாடல். என் மனதை விட்டு  அகலாமல் நின்று விட்டது.

தொடர்ந்து, தமிழ் எம்.ஏ., படிக்கத் துவங்கினேன். அதில், சுந்தரகாண்டம் ஒரு பாடம். வை.மு.கோ உரை புத்தகம், டில்லி ஆறுமுகம்பிள்ளை ஐயாவிடம் கிடைத்தது.

ஆறு மாதங்களாக அதை வாசித்தேன். ஆனால், பாடத்திற்கு என்று படித்ததாலோ என்னவோ அதில்  ஒன்று  கூட இப்போது நினைவில் இல்லை.

ஆறுமுக நாவலரின் மருகர், பொன்னம்பலம் பிள்ளை, கம்ப ராமாயணத்தை ரசித்து, ருசித்து படித்தவர் என, படித்திருக்கிறேன்.

அவர் தான், கம்ப ராமாயணமே அழிந்தாலும் பரவாயில்லை, இரணியன் வதைபடலம் ஒன்று மட்டும் போதும், தமிழின் இனிமையை உணர்த்துவதற்கு என, கூறினார்.

திருநெல்வேலி, மேலரதவீதியில், தளவாய் அரண்மனைக்குப் பின்னால், தளவாய் ராமசாமி முதலியார் வீட்டில், வாரந்தோறும் பொருநை இலக்கிய வட்டம் நிகழ்ச்சி நடக்கும்.

அதற்கு ஓரிரு முறை நான் சென்றிருக்கிறேன். அப்படி ஒருநாள் போயிருந்தபோது, பாளையங்கோட்டையில் இருந்து வந்த ஒருவர், கம்ப ராமாயணத்தில் இருந்து சில பாடல்களை, அவற்றிற்கே உரிய, ராகங்களுடன் பாடியும், விளக்கியும், பேசினார்.

கைகேயியைப் பற்றிய ஒருபாடலை அவர், ராகத்துடன் பாடி விளக்கவும், என் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

சில ஆண்டுகளுக்குப்  பின், எனது பாட்டியை பக்கவாதத்திற்காக, பாளை சித்த மருத்துவக் கல்லுாரியில் சேர்த்திருந்த போது, அவரைப் பார்த்து விட்டு, பொழுதைக் கழிப்பதற்காக, அருகில், ராமசாமி கோவில் எதிரில் உள்ள அரங்கத்திற்கு சென்றேன்.

அங்கும் அதேபெரியவர், கம்ப ராமாயணத்தைப் பற்றிப் பேசினார். கேட்டேன்.

2000ல் நான், சென்னையில் வேலைபார்க்க விரும்பாமல், என் தங்கை  திருமணத்தை காரணம் காட்டி, திருநெல்வேலிக்கு மீண்டேன்.

அப்போது தான், முதன்முதலாக, ரத்னவேலன் ஐயாவுடன் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்.

காந்திமதி அம்மன்கோவில், ஊஞ்சல் மண்டபத்தில், அந்த சனிக்கிழமையன்று, நான் சென்ற போது, ஐயா, கம்ப ராமாயண முதற்செய்யுட் சங்கோத்தர  விருத்தி நுாலைப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

இருந்தாலும், இன்று வரையிலும், நான் கம்பனை முழுமையாக வாசிக்கவில்லை. அந்த குறை என் மனதை வாட்டிக் கொண்டு  தான் இருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன், அது பெரிய அளவில் எழுந்து என் மனதை ஆக்கிரமித்தது.

சில  நுால்களை நான் உடனடியாக எடுத்து வாசிப்பதில்லை. அவை  எப்போதுமே என்னை பயமுறுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றின் பிரம்மாண்டமும், ஆழ்ந்த சொல்,பொருள்நயங்களும், நமக்கு இது புரியுமா என்று என்னை மலைக்க வைத்திருக்கின்றன.

கம்ப ராமாயணம், கந்த புராணம், தணிகைப் புராணம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் அவற்றுள் சில.

கம்பனைப் பற்றி யாராவது, அறிமுகம் செய்திருந்தால் அந்த நுாலைப் படித்து விட்டு, மனவெழுச்சியுடன், கம்பனை முழுமையாகப் படிக்கலாம் என யோசித்து,  திருவான்மியூர் நுாலகத்திற்கு சென்று தேடினேன்.

அங்கு தான், கம்பன் - புதிய பார்வை என்ற பேரா.அ.ச.ஞா.வின் நுால் கிடைத்தது.பழைய கல்கி தீபாவளி மலர் என,  நினைக்கிறேன், அதில், அவரது நந்தனார் பற்றிய கட்டுரை ஒன்றே  நான் இதுவரை படித்திருந்தது. அவரது பெரியபுராணம் வாசித்திருந்தேன் என்றாலும், அது மனதில் பதியவில்லை.

கம்பன் -புதிய பார்வை என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது. ஆம். கம்பனை இவ்வளவு சிறப்பாக வேறு யாரும் காட்டியிருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

  • ராமன், திருமாலின் அவதாரம் என்பது சங்க காலத்திலேயே தமிழகத்தில் ஊறிவிட்ட எண்ணம் என்பதை ஆதாரத்துடன் முதலில் காட்டுகிறார்.
  •  கம்பனுக்கு முன் தமிழகம், பரத்தமை, போரிடுதலில் அளவுக்கு மீறிய  ஆர்வம்,  உணர்ச்சிக்கு அதிகளவில் இடம் கொடுத்தது, அதனால், துறவை பெரிதாக மதியாதது என சீரழிந்து  கிடந்ததாக கூறுகிறார்.
  • அதனால், குறள்வழி  புலனடக்கத்தை முன்னிறுத்தி, அன்பின்  சிறப்பை காட்டும் வகையில், ராமாயணத்தை கம்பன் தேர்வு செய்தார் என்கிறார்.
  • குறளின் பாயிரங்கள் அடிப்படையிலேயே தனது கடவுள் வாழ்த்துக்களையும் கம்பன் அமைத்தார் என்கிறார்.
  • புலனடக்கத்தை வேண்டிய இடங்களில் கம்பன் வைத்துக் காட்டிய திறத்தை விரிவாக எடுத்துரைக்கிறார்.
  • ராமனின் உயரிய பண்புகளையும், அவன் செய்யும் தவறுகளையும் கம்பன் சுட்டிக் காட்டுவதை பேராசிரியர் நயத்துடன் காட்டியுள்ளார்.
  • கம்பன் கண்ட பரம்பொருள் என்ற  தலைப்பில் உள்ள கட்டுரை, இந்த நுாலின் உயிர்நாடி எனலாம்.
  • அனுமன்,  வாலி இவர்களை கம்பன் காட்டிய விதத்தை பேராசிரியர், அணுஅணுவாக ரசித்து எடுத்துக் காட்டியுள்ளார்.
  • இறுதியில், கம்பன் கண்ட விழுப்பொருள்கள் என்ற தலைப்பிலான கட்டுரையில், ஒவ்வொரு சமுதாயமும், விழுமியத்தோடு இருக்க வேண்டும் என்பதை, கம்பன் தனது கதாபாத்திரங்களிடம் காட்டுவதை விரிவாகக் கூறும் பேராசிரியர், பட்டாபிஷேக வைபவத்தை, விளக்குவதை நாம் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது.
அதன் சுருக்கத்தை  மட்டும் இங்கு தருகிறேன்:

அனுமன், புலனடக்கம், தன்னலத் தியாகம்,  தொண்டுள்ளம் என்பவற்றின் மொத்த வடிவம். அவன் அரியணையைத் தாங்கினான் என்றால், அதிகாரத்தின் அடித்தளம், தன்னலம், யதேச்சாதிகாரம் என்பவையாக இராமல், அடக்கம், பரநலம், தொண்டுள்ளம் என்பவையாகவே இருக்கும்.

வாலி வதை ப டலத்தில் தான் செய்தது தவறோ என, எண்ணிய ராமன், உடைவாளை அங்கதன் கையில் கொடுத்து, `நீ இது பொறுத்தி' என்றான்.

`ஏன் இதனைச் செய்தோம்?' என ராமன் வருத்தப்படும்படி தன் வாழ்நாளில் எதையும் செய்யவில்லை - வாலியைக் கொன்றதைத் தவிர.

அதனால், இனி தவறிழைக்காமையை சுட்டிக் காட்ட, அங்கதன் உடைவாள் ஏந்தினான்.

பரதன் புலனடக்கத்தின் உச்சமானவன். வேண்டாமை என்றதன் அடையாளம். அவன் வெண்குடையைத் தாங்கியதில் சிறப்பு தான்.

அரியணை தாங்கியவனும், வெண்கொற்றக் குடை பிடித்தவனும், புலனடக்கம்,  துறவு, பரநலம் தொண்டு என்பவற்றின் மொத்த வடிவமானவர்கள்.

நடுவில் இராகவன் முடிகவிக்கப் பெறுகிறான். அடியும் முடியும் புலனடக்கத்தின்  அடையாளமாக உள்ள இருவர் உளர் என்றால், நடுவே உள்ள பரம்பொருள் எத்தகையதாக இருக்கும் என்று கூறத் தேவையில்லை அல்லவா?

இவ்வாறு பேராசிரியர் முடிக்கிறார்.

களப்பிரர் பற்றிய பேராசிரியரின் கருத்துக்கள், சங்க காலத்திற்கு பின், தமிழகத்தில், புலனடக்கத்தைப் பெரிதாக வற்புறுத்திய சமண பவுத்தர்கள் தமிழர்கள் வாழ்வில் ஏற்படுத்திய  மாற்றங்களை கணக்கில்  கொள்ளாமல், கம்பன் புலனடக்கத்தை கையில் எடுத்தது குறித்த பேராசிரியரின் விளக்கங்கள், பக்தி இயக்க காலகட்டத்தில், சமய சகிப்புத் தன்மை இல்லை என்ற அவரது கருத்து போன்றவற்றில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழை அனுபவித்தால் மட்டுமே ஒருவன் மனிதனாக வாழ முடியும். அதற்கு ஒருவன் வாசிக்க வேண்டிய நுால்களுள் கம்ப  ராமாயணமும் ஒன்று.

பேராசிரியரின் இந்த நுால், அவரது அரும்படைப்புகளுள் ஒன்று.

வக்கீல் நண்பர் தந்த கம்ப ராமாயணப் புத்தகத்தை கடந்த வாரமே, எடுத்து பத்திரப்படுத்தி வைத்து விட்டேன். அடுத்த வாரம் செல்லும் போது மறக்காமல் எடுத்து வந்து விடுவேன். படிக்கவும் ஆரம்பித்து விடுவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate