வியாழன், 14 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து...4

17-4-2000
திங்கள், சென்னை 

...இதற்கிடையில் பேட்டைக்குச் சென்று வந்தேன். ஆனந்தமயமான சூழ்நிலை. அமைதியான சுற்றுச்சூழல். இதுபோன்ற அமைதி சென்னை நகரத்திலும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. பரிபூர்ணமாக அனுபவிக்க இயலவில்லை.

....கடந்த செவ்வாயன்று, பேட்டைக்குச் சென்றவுடன் எனது பெற்றோர் எனக்குக் கூறிய உடனடிச் செய்திகளுள் ஜங்ஷன் தருமை மடத்தில் யாரோ சாமியார் ஒருவர் வந்திருக்கிறார்; ஜடாமுடிகளை ஏற்றிக் கட்டியிருக்கிறார் என்பதும் ஒன்று.


நான்,  தருமை ஆதீன சந்நிதானம் வந்திருக்கலாமோ என்று முதலிலும், அல்லது தம்பிரான் அல்லது இளவரசு யாராவது ஒருவர் வந்திருப்பர் என நினைத்தேன்.

ஆனால், ஊருக்குக் கிளம்பிய அன்று சம்பந்தமையாவுடன் பேசிய பிறகுதான் தெரிந்தது, அவர் பனசை மடத்து காறுபாறு என்று.

சிறந்த கல்விமான், செயல்வீரர் என்று ஐயா அவர்கள் சொன்னார்கள்.

(இங்கு சொல்லப்பட்டவர், தற்போது திருச்சி, மவுனமடத்து தலைவரும், தருமை அடியவர் திருக்கூட்டத்தின் மூத்த தம்பிரானுமாகிய, குமாரசுவாமி தம்பிரான்)

...புத்தகங்களைச் சேகரிப்பதில் உள்ள ஆர்வம், நாளாக நாளாக வளர்ந்து கொண்டே வருகிறது.

பேட்டைக்குச் சென்றிருந்த  போழ்து, குறிச்சிக்கும் சென்று ஆத்தாவைக் (அம்மா வழி பாட்டி) கண்டு வந்தேன். புறப்படுகையில் என் கையில், 25 ரூபாய் திணித்தாள். (அம்மாவிடம் 10 ரூபாய் என்று கூறினது வேறு). நான் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்த பின்பும் பையில் வைத்துத் திணித்து விட்டாள்.

 அவளிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது, மதியம் மணி 3.

அங்கிருந்து ஜங்ஷனுக்கு வந்தேன். அப்போது கையில் இந்த 25 ஐயும் சேர்த்து, மொத்தமாய் 50 ரூபாயிருக்கிறது.

என்கையில் பணம் சேர்ந்தால் தான் போதுமே; கால்கள் பழைய புத்தகக் கடைகளை நோக்கி நடக்க ஆரம்பித்து விடும். அன்றும் அப்படியே நடந்தது.

மேம்பாலத்தைப் பழுது பார்ப்பதால், அதனடியில் இருந்த அனைத்துக் கடைகளையும் அகற்றச் சொல்லி அரசு உத்தரவு.

ஆயினும் என்போன்ற புத்தகப் பிரியர்களுக்காகவே பெரிய கடைகள் வைத்திருந்தவர்கள், அதே இடத்தில், சிறியதாய் விரித்திருந்தார்கள்.

ஒரு கடையிற்சென்று, தற்செயலாய் நின்று புத்தகங்களைப் புரட்டியபோது, 'குப்பைகளுக்குள் ரத்தினமணி' என்பார்களே அதுபோல, திருவையாறு, சீர்காழித் தலவரலாறுகள், திருவைகுந்தநாதன் பிள்ளைத் தமிழ், குலோத்துங்க சோழன் (டி.வி.சதாசிவப் பண்டாரத்தார் எழுதியது), என்று பெரிய இரத்தினச் சுரங்கமே கிடைத்தது.

பிறகு, திருத்துருத்திப் புராணம் மூலம்+குறிப்புரையுடன் ஒரு புத்தகம் கிடைத்தது. 45 ரூபாய் காலி.

ஆயினும், இப்புத்தகங்களிலெல்லாம் 'சிவசம்பு' என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. இப்பெயரையுடையவரைப் பற்றி நான் சிற்சில முறை கேள்விப்பட்டிருக்கிறேன்.

முதலில், இப்படிப் பார்த்ததும் யாரோ ஒரு சைவப் பெரியாருடைய புத்தகங்கள் போலும்; அவர் காலத்திற்குப் பின் இப்படியாயிற்று.... என்றெண்ணியபடி திரும்பினேன்.

மறுநாள், சம்பந்தமையாவுடன் பேசும்போதல்லவா தெரிகிறது விஷயம்? சிவசம்பு, பாளையில் வசிக்கிறவர். ....ஆயினும் அவருடைய book collections அற்புதமானவை. பொருளாதார ரீதியில் நலிந்தவர் போலும்.

....மற்ற புத்தகங்கள் என்னவாயினவோ  யாரறிவார்? எத்தனை ஆறுமுக நாவலர்கள், எத்தனை கதிரைவேற்பிள்ளைகள் வந்தாலும், சைவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்று ஒப்பந்தம் எழுதிக் கொடுத்திருக்கின்றனர் போலும். நிற்க.

டி.கே.சி.யின் கடிதங்கள் எனும் புத்தகத்தைப் படித்த பின்பு எனது மனமான குரங்கு, தனது ஸ்வதேசமான குற்றாலத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது, அங்கு தங்கி நாட்களை கழிக்கலாம் என்ற எண்ணத்தில்.

...செய்ய வேண்டிய பணிகள் நிறையக் காத்திருக்கின்றன. திருவருட் பயனுக்கு நிரம்பவழகிய தேசிகர் உரையும், சிவப்பிரகாசத்துக்கு, காஞ்சி தொண்டை மண்டலாதீனம் 229வது சந்நிதானத்தின் உரையும் கிடைத்திருக்கின்றன, அம்பத்துார் நுாலகத்தின்  தயவால். அவற்றை நகலாவது மறுபடியாவது எடுக்க வேண்டும். ஈசன் அருள் புரிவானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate