சனி, 4 ஜூலை, 2009

சிவபேதங்களும் பதிபேதங்களும்


(இக்கட்டுரை பலவான்குடியிலிருந்து வெளிவந்த ‘சிவநேசன்’ என்ற மாத இதழில் 7ஆம் ஆண்டுத் தொகுதியில் (1934) சுதுமலை சிவஸ்ரீ ச. பொன்னுஸ்வாமிக் குருக்களவர்கள் எழுதியது)

சிவம் ஆநந்தமாய் விளங்கும் சொரூப நிலையுள்ள பொருளாகும். இந்தச் சிவம் எல்லையொன்றில்லா வியாபகமாய் இருக்கும். அக்கினியில் சூடு போலவும், சூரிய கிரணம் போலவும் இதனிடத்து விளங்கும் அருட்குணம் சத்தி எனப்படும். அந்தச் சத்தி பராசத்தியாம். மகாமாயை என்னும் சுத்த மாயை இந்தச் சிவ வெளிப்பரப்பின் ஏகதேசத்தில் அடங்கிக் காரண ரூபமாயிருக்கும்.


சிவத்தை நோக்க ஏகதேசமான அந்த மகாமாயையைக் காரியப்படுத்தும் சத்தி ஆதிசத்தி எனப்படும். அது பராசத்தியின் ஏகதேச பாகமாம். அச்சத்தியோடு கூடிய சிவத்தின் ஏகதேச நிலை பதி எனப்படும்.

சிவத்தின் ஏகதேச நிலையாகிய பதியின் சந்நிதானத்தில் மகாமாயை காரியப்படும். அதனைக் காரியப்படுத்துவது பதியின் சத்தியாகிய ஆதிசத்தியாம்.

ஆதிசத்தியால் அம்மாயை தொழிற்பட அதன் காரியங்கள் தோன்றி நின்று ஒடுங்கும். அவ்வாறு காரியப்படும் பொழுது சிவதத்துவம், சத்தி தத்துவம், சாதாக்கிய தத்துவம் என்னும் சுத்தமாயா தத்துவங்களில் அப்பதி தமது சத்தியினால் இலயம், போகம், அதிகாரம் என்னும் மூன்று அவத்தை உடையவராய், அருவமும் அருவுருவமும் உருவமும் ஆன சிவன், சதாசிவன், மகேசுரன் என்னும் மூன்று திருமேனிகளை அடைகின்றார். இந்த மூன்றும் பதி தமது சத்தியினால் கொள்ளும் வடிவங்களாம்.

சிவம் சத்தி சாதாக்கியம் என்னும் தத்துவங்கள் தோன்றிய பின்னர்த் தோன்றிய ஈசுவர தத்துவத்தில் அநந்தர் இருப்பர். இவர் விஞ்ஞானகலரில் மலம் நீங்கி வித்தியேசுர நிலை பெற்றவர்.

பதியினுடைய சத்தி இவரிடத்தே தங்கி இவரை அதிட்டிக்கும். அச்சத்தியினால் அதிட்டிக்கப் பெற்ற அநந்தேசுரர் அசுத்தமாயையைத் தொழிற்படுத்தி அசுத்த மாயா தத்துவங்களை உண்டாக்குவர்.

அன்றி அவ் வநந்தேசுரர் பிரளயாகலரில் மலம் நீங்கி உருத்திர பதம் பெற்ற ஸ்ரீ கண்ட ருத்ரரை அதிட்டித்துப் பிரகிருதி மாயையைத் தொழிற்படுத்திப் பிரகிருதி காரியமான தத்துவங்களை உண்டாக்குவர்.

ஸ்ரீகண்ட ருத்ரர் பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தும், விஷ்ணுவை அதிட்டித்து நின்று காத்தும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்தும் இவ்வாறு தொழில் செய்வர்.

இவருள், பிரமாவும்,விஷ்ணுவும் சகலரில் தவ விசேஷம் உடையவராய் அப்பதம் பெற்றவர்.

கால ருத்திரர் பிரளயாகலரில் மலம் நீங்கி முத்தராய் அப்பதம் பெற்றவர்.

பிரம விஷ்ணுக்களுக்கு ஆணவம் முதலிய மலங்கள் நீங்காமையால் அவர் பசு வர்க்கத்தவராக எண்ணப்படுவர்.

உருத்திரரும் வித்தியேசுரரும் மலம் நீங்கிச் சிவசத்தியினால் அதிட்டிக்கப்படுவர் ஆதலின், அவ்வுரிமை நோக்கிப் பதிவர்க்கத்துள் வைத்து எண்ணப்படுவர்.

உயிர்களின் பொருட்டுப் பதியினால் செய்யப்படும் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐந்து தொழில்களும் பஞ்சகிருத்தியம் எனப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate