வெள்ளி, 15 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்


(சைவ நுால்களை கற்ற ஆரம்ப நாட்களில் இருந்தே, எனக்கு தலபுராண இலக்கியத்தின் மீது தீராத காதல் இருந்து வருகிறது.

அவற்றின் படல அமைப்புகளும், கருத்து வெளிப்பாடும், சமய பிரசாரத்திற்கு ஏற்ற எளிமையும் என பல பரிமாணங்களில், தலபுராண இலக்கியங்கள், முக்கியத்துவம் பெறுகின்றன.


* தலபுராணங்கள், பெரும்பாலும் பொய்யே சொல்வன; ராமன் வந்தான், வால்மீகி வழிபட்டான் என்பன போல

* கவித்துவம் என்பதையும் தாண்டி, கற்பனை வறட்சியை நோக்கி வீழ்ந்தவை
* யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த தமிழ மனப்பான்மையை, எங்கள் தலம், எங்கள் மூர்த்தி என குறுகிய வட்டத்திற்குள் அடைத்தவை

* வடமொழியில் இருந்து  தான் தமிழுக்கு வந்தது என, வீம்பிற்கு பெருமை பேசியவை

என, பல குற்றச்சாட்டுகள் உண்டு.  அவற்றில் உண்மையும் உண்டு.

ஆனால், தலபுராணங்கள் எழுந்த காலகட்டத்தின் வரலாற்றை பார்க்கும் போது, அவற்றின் நோக்கமும், தலங்களை உயர்த்திப் பேசவேண்டியதன் அவசியமும் நமக்கு புலனாகின்றன.

கி.பி.,13ம் நுாற்றாண்டிற்குப் பின், தமிழகம், இஸ்லாமியர் வாளுக்கு சிறிது காலம் இரையாகிக் கிடந்தது.

அதை விஜயநகரம் மீட்டெடுத்தாலும், தமிழ் பண்பாடு போனது போனது தான். தெலுங்கு  முதலிடம் பிடித்தது. தமிழுக்கு அவ்வளவு வேலையில்லை. வடமொழிக்கு மேன்மேலும் உயர்வு  கிட்டியது.

இந்த நிலையில், தமிழையும், தமிழ்நாட்டு தலங்களையும் உயர்த்திப் பிடிப்பதன் மூலம், பண்பாட்டை ஒரு வகையில், தலபுராணங்கள் பேணிக் காத்திருக்கின்றன என்றே  நான் சொல்வேன்.

* அவை, வரலாற்றை கவித்துவமாக, பெளராணிகமாக சொன்னவை

* காட்டாட்சிகளால் கலங்கியிருந்த தமிழக மக்களுக்கு, தெய்வ நம்பிக்கையின் வழியாக, வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டியவை

* நகர அமைப்பு, கோவில் அமைப்பு, தீர்த்த அமைப்பு போன்றவற்றை வரைபடமாக காட்டியவை. இன்று அவை காட்டிய தீர்த்தங்களுள் 75  சதவீதத்தை அழித்ததே, அறிவியல் வரலாறுபேசும் நாம் தான்.

* வாழ்க்கையில் நேரிடும் துன்பங்களை கடந்து செல்ல, மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியவை

* சமயப் பிரசாரத்திற்கு ஏற்ற வகையில், எளிய கதைகளுடன், சுவையார்ந்த சொல்லாடல்களை கொண்டவை

இப்படி, பல பரிமாணங்களில் தலபுராணங்கள், தமிழ்த் தாய்க்கு அணிகலனாகவே திகழ்கின்றன. அன்று அவை, பொதுநலங்கருதி  சொன்னவற்றை,  இன்று, டிவி ஆன்மீக நிகழ்ச்சிகளும், ஆன்மீக பத்திரிகைகளும், வியாபாரமாக்கி, காசு பார்த்து வருகின்றன.

நிற்க. நான் சில தலபுராணங்களை  (இங்கு தலபுராணம் என்றால், செய்யுள் நடையில் அமைந்த பழைய நுால். வசன நுால் அல்ல) சேகரித்து வைத்துள்ளேன். சேகரித்து வருகின்றேன்.

அவற்றில், நால்வர் மீதான துதிகளை தொகுக்க வேண்டும் என, ஆசைப்பட்டு, கடந்த 2000ம் ஆண்டில் சிலவற்றை தொகுத்தேன். ஆனால் அது முழுமையடையவில்லை.

எனினும், தொகுத்த வரையிலும் எல்லாருக்கும் பயன்படும் என்பதால், அவற்றை இங்கு பதிவிடுகிறேன்.

ஒவ்வொரு குரவருக்கும் 16 பாடல்கள் வீதம், நான்கு பதிவுகளாக இங்கு வெளியிடுகிறேன்.

முதலில்  வருவது ...திருஞானசம்பந்தர் மீதான தலபுராண துதிகள்)
--------------

1. பரசமயம் வயிறெரியத் தமிழ்ப்பதிகந் தீயிலிட்டுப் பச்சையாக்கி
கரவுடைய பொய்ச்சமணர் கழுவேறப் பாசுரம்வை கையின்மீ தேற்றிப்
புரவலன்கூன் நிமிர்த்தினிய தமிழ்நாட்டைச் சோணாடு போலச் செய்த
சிரபுரக்கோன் சிற்றடிப்பொற்  றாமரப்போ தெப்போதும் சிரமேற் கொள்வாம்.

- சாத்திரம் சாமிநாத முனிவர்  இயற்றிய துறைசைப் புராணம்

2. ஒருஞான முணராதேம் உடற்பிணியோ டுயர்பிறவி ஒழியவோர்ந்தே
வருஞான மொழிமறை மந்திரந்தந் திரமும் மா மருந்தாப்  பாடி
அருஞான வடிவன்றன் அடிநினைந்து தனைமறந்தே அருளிற் தோய்ந்த
திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருத்தாளைச் சிரத்திற் சேர்ப்பாம்

 -திருநாகேச்சரப் புராணம்

3. மழலையின்ன முதுாற்றெழ மாசை வள்ளத்துக்
குழலின் மென்மொழி உமையவள் கொடுத்தபால் கமழப்
பழகு செந்தமிழ்ப் பாடலந்தேன் வடித்தாடும்
அழகனஞ் செவியூட்டிய அறிஞனை அடுப்பாம்.

-கச்சியப்ப முனிவர் இயற்றிய திருவானைக்கா புராணம்

4.இழிதொழில் அமணரென்னும் இருள்கெடுத் திமையோர் போற்றப்
பழுதற நின்ற தொல்லைப் பரம்பொருள் விளங்கச் செய்த
பொழிகதிர் இரவிதன்னிற் பொழிற்புனை புகலி  வாழும்
வழிமதுக் கமலப் பைந்தார் வள்ளலை வணங்கல்செய்வாம்.
-
சீவலமாற பாண்டியனார் செய்த சங்கர நாராயணசுவாமி கோயிற் புராணம்.

5. தவந்த என்பினைப் பெண்ணெனப் படைத்துஞ்சார் மழவன்
உவந்த பெண்ணுயி ரளித்துமொட் டாதெதிர் புத்தன்
நிவந்த சென்னியை உருட்டியும் முத்தொழில் நிறுவிப்
பவந்த டுத்துயிர்க் கருளுஞ்சொற் பனவனைப் பணிவாம்

-கச்சியப்பர் அருளிய பேரூர்ப் புராணம்

6. பண்டைவல் வினையினாற் பாயுடுத்துழல்
குண்டரை வென்றுமுன் கூடல் வைகியே
வெண்டிரு நீற்றொளி விளஙகச் செய்திடு
தண்டமிழ் விரகன்மெய்த் தாள்கள் போற்றுவாம்

- கந்தபுராணம்

7.சங்கமணிக் குழை தயங்கத் தழைந்த காதுந்
        தனிவிடையும் முதலபல தனிப்பில் காட்சி
பொங்கும் அடையாளங்கள் புகன்று போற்றிப்
       பொருவிறந்த பரஞ்சுடரைப் புத்திக்கெட்டா
அங்கணனை வழுதியுடல் வெப்பு நீங்க
        அணிதிகழ் வெண்டிரு நுண்துாளள்ளிச் சாத்துஞ்
செங்கைவிரல் கொடுகுறித்துத் தெரிக்குந் தோன்றல்
       சிற்றடியின் பெருந்தகைமை சிந்தை செய்வாம்

-சேதுபுராணம்

8. அழியும் புனற்செஞ் சடையாளர் பங்கிற் தோகை துணைமுலைக்கண்
வழியும் கொழும்பாற் கடலுண்டு பாவக்கோடை மலிந்துசுட
ஒழியும் பசும்புல் எனஉலகம் ஒடுங்கா தோங்கத் தண்ணளியால்
பொழியுங் கவிதைக் காளிமுகில் பொன்னங் கமலத் தாள்தொழுவாம்

-அதிவீரராமபாண்டியர் இயற்றிய பிரமோத்தர காண்டம்

9. கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக்
கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான் கற்பிற்
பிடியன நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த
முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம்

-திருவிளையாடற் புராணம்

10. வெப்பொழி மீனவற்கு நீறளித்த வேதியன்றாள்
எப்பொழுதுஞ் சிந்திப்பாம் யாம்

-சைவ சமய நெறி

11. கேழ்கிளர் புனிற்றுத் திங்கள் கிடந்தொளிர் சடையோன் பாங்கில்
தாழிருங் கூந்தற் பேதை தடமுலைத் தீம்பான் மாந்தி
ஏழ்நில வரைப்பும் உய்ய ஈர்ந்தமிழ் மாரி பெய்த
காழிமா முகிலின் செய்ய மலரடி கருத்துள் வைப்பாம்

-அதிவீரராம பாண்டியர் இயற்றிய காசிகண்டம்

12.அம்பந்த மானவிழி ஆதிபரை அகமகிழ்ந்து
செம்பந்தை நிகரான திருமுலைப்பால் தரநுகர்ந்து
நம்பந்த வினையகல நண்ணியமெய்த் திருஞான
சம்பந்தர் செய்யமலர்த் தாமரைத்தாள் இணைபோற்றி

-திருவாடானைப் புராணம்

13. அரியயன் முதலோர் தந்தம் ஆணையென் றிடுதற் கஞ்சி
விரிசிவன் ஆணை என்றே விளம்பவொற் றுமையி னாலே
திரிபுவ னமுந்தன் ஆணை சென்றிடப் பாடி அன்னான்
பரிபுரப் பதஞ்சார் காழிப் பனவனைப் பாடி  வாழ்வாம்

-மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய திருத்துருத்திப் புராணம்

14.தோடுகாட்டியும் இசைத்தமிழ் துாக்கினார் சுருதிக்
காடு காட்டியுங் கூடலிற் கசடர்முன் அகன்ற
சேடு காட்டியும் இறைவழி நீரிவை காட்டி
வீடு காட்டினோன் எமக்கிருள் துார்க்குமோர் விளக்காம்

-திருவையாற்றுப் புராணம்

15. மதுரேசர்  திருநாட்டு வந்தசமண் கழுவேற மாறாச் சைவம்
சதுரேற மனுநீதி தழைத்தேறத் திருவேடு தமிழ்சேர் வைகை
எதிரேறத் தொண்டர்குழாம் ஈடேறப் பரசமய இருள்விட் டோடக்
கதிரேறு மணிச்சிவிகை ஏறினான் சரணம்அந்தக் கரணம் சேர்ப்பாம்

-திருக்குற்றாலத் தலபுராணம்

16. அறுகால்உழுக்கச் சிறுமுகைத்தே னாறுபாயுஞ் சோணாட்டில்
உறுகாழியில் வந்தவதரித் தெனுள்ளத் திருந்து சமணரெனுங்
குறுகார் தமைக்கட்டழித் துமையாள் கோமான் சரணந் தனைப்போற்றுஞ்
சிறுகான் முளையினிருசரணச் செந்தாமரைவந் தனைபுரிவாம்

-திருச்செந்துார் தலபுராணம்

1 கருத்து:

  1. உங்களின் ஆய்வு சிறப்புடையது.தலபுராணங்கள் கலக்கண்ணாடியாகும்.பிற்காலமாந்தரக்கு வரலாறாக்கிடைக்கும் ஆவணம்.

    பதிலளிநீக்கு

Translate