ஞாயிறு, 1 டிசம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 5


8. சிவசன்மா தாரகையுலகமும் புதன் உலகமும் கண்ட அத்தியாயம் (15வது அத்தியாயம்) (கவி கூற்று)

1. வெய்ய கூற்றுருத் தெறிவேல் விலக்கினும்
எய்தும்ஊழ்வினைத் தொடர் எண்ணி மாற்றினும்
தையலார் முழுமதி முகத்தில் தயங்கிய
மையகண் காலவேல் மாற்றலாகுமே - 13

பொருள் வெளிப்படை: எமன்  நம்மீது எறியும் வேலை விலக்கி விடலாம்; நம் முன்வினையை கூட நினைத்து மாற்றி விடலாம்; ஆனால், பெண்களின் கண்களாகிய வேலின் தாக்குதலை மாற்ற முடியாது.

அடுத்துவரும் பாடல்களில், செல்வம் குவியத் தொடங்கினால், எப்பேர்ப்பட்ட நிலைத்த புத்தியுடையவனது  மனதும் மாறி விடும் என்கிறார் கவி.

2.அரும்பெறற் செல்வம் வந்து அடைந்த காலையில்
திருந்திய நல்லறஞ்செய்து நாடொறும்
விரிந்தநற் புகழினை விளைத்தல் வீறுசால்
புரந்தரற் காயினும் புரியலாகுமே - 14

செல்வம் வந்த போது, அதை நல்வழியில் செலவழித்து, நல்லறம் செய்தல் என்பது, இந்திரனாலும் செய்ய முடியாத ஒன்று தான்.

3. தனித்தனி முச்சுடரியற்றித் தங்கிய
அனைத்துலகி ருளையும் அகற்று நான்முகன்
நினைப்பருஞ் செல்வம் வந்தெய்தின்நீடிய
மனச்செருக்கு எனும் இருளகற்ற வல்லனே - 15

செல்வம் வரும்போது, மனதில் இருளும் வந்து சேர்ந்து கொள்ளும். அதை, அந்த நான்முகனே நினைத்தாலும் கூட நீக்குவது கஷ்டம் தான்.

4. ஏர்பெறும் இருநிதிச் செருக்கும் எய்திடில்
தேர்செவி உடையரும் செவிடராகுவர்
ஓர்தரும் உரைவலோரும் ஊமராகுவர்
கூர்விழி உடையரும் குருடர் ஆவரால் - 16

அருமையான பாட்டு: செல்வம் வரும்போது கூடவே செருக்கும் வந்து சேர்ந்து விடும். அப்படி நடந்தால், அதுவரை அறிவுரைகளைக் கேட்டு நடந்தோரின் காதும் கூட அப்போது செவிடாகிவிடும்.

நன்றாகப் பேசுவோர் கூட, ஊமையாகி விடுவர். அதுவரை யாரைக் கண்டாலும் வரவேற்றுப் பேசுவோர், அப்போது யாரையும் கண்டு கொள்ளாதவர் போல நடந்து கொள்வர்.

9. வாராணசியின் சிறப்புரைத்த அத்தியாயம் (30வது அத்தியாயம்)
(வாராணசி என்பதன் காரணம் உணர்த்துகிறார்) (அகத்தியர்க்கு அறுமுக அண்ணல் உரைத்தது)

1. சார்ந்தவர் பாவம்நீங்கத் தகைதலான் வரணையென்னும்
ஆர்ந்தநீர் படிந்தோர் பாவம்அறுத்தலால் அசியேயென்னும்
சேர்ந்தன நாமந்தெற்கு வடக்கதாய் உண்மை தேர்ந்தோர்
ஓர்ந்திடு முத்திவைப்பின் காவலாய் ஒழுகுமன்றே - 2

அருகில் வந்தாலே அவர்களது பாவத்தை தீர்ப்பதால் ஒரு நதிக்கு வரணை என்று பெயர். தன்னில் நீராடினோரின் பாவத்தைத்  தீர்ப்பதால், மற்றொரு நதிக்கு அசி என்று பெயர்.

அடுத்தடுத்த பாடல்களில், உலக அழிவு எப்படி நடக்கிறது என்பதை விளக்குகிறார்.

2. மன்பெரும் பூதமெல்லாம் ஒடுங்கலின் மாமசானம்
என்பர் அவ்வொடுக்கம் எவ்வாறு என்றிடிற் பூமிநீரின்
ஒன்றிடும் அந்நீர் வெய்ய கனலிடை ஒடுங்கும் வெந்தீச்
சென்றிருவெளியிற் சேரும் வளியிரு விசும்பிற் சேரும் - 23

காசிக்கு மாமசானம் என்று பெயர். உலக அழிவு (சாத்திரப்படி அழிவு என்பது ஒடுக்கத்தை குறிக்கும்) எப்படி நடக்கிறது என்றால், மண்  நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும், காற்று வானிலும் ஒடுங்கும்.

3. உயர்விசும்பு ஆங்காரத்தின் ஒளிக்கும் ஆங்காரம் துாய்தாய்
மயர்வறு புந்தி என்னும் கானிடை மருவும் புந்தி
பயில் பிரகிருதி தன்னில் அடையும் ஆங்கதுவும் பார்க்கில்
அயர்வறு புருடன் தன்னை ஒளியற மறைக்குமன்றே - 24

வான் ஆங்கார தத்துவத்திலும், ஆங்காரம் புத்தி  தத்துவத்திலும், புத்தி பிரிகிருதி தத்துவத்திலும் ஒடுங்கும். அந்த பிரகிருதி தத்துவம் தான், புருட தத்துவத்தை மறைக்கும்.

4.மேயகைகால்கள் சேர்த்திப் பழுகழி நிரைத்து வீக்கிப்
பாய்புனல்மயிர் தோல் வேய்ந்து சுவர்த்தசை நிறீஇய பண்பின்
ஆயதோர் ஆக்கை இல்லில் அரும்பெரும் சீவனாகி
ஏய அப்புருடன் தானே  இனிது வீற்றிருக்கு மாதோ - 25

அந்த புருடன், புன்புலால் யாக்கையை தனது உறைவிடமாகக் கொண்டு வாழும்

5. முருகவிழ் கமலத்தோனும் முகுந்தனும் ஒழியத் தோன்றும்
பிரளயம் அதற்கு நாமம் பிராகிருதம் என்பரால் அப்
புருடன்அது அகத்துள் காலமூர்த்தியாம் புனிதன் வைகி
அருளொடும் இருந்தெஞ்ஞான்றும் இனிதளித்து அருளுமன்றே - 26

விஷ்ணுவும், பிரமனும் அழியும் பிரளயத்திற்கு பிராகிருத பிரளயம் என்று பெயர். புருடனின் உள்ளத்துள், இறைவன் இருந்து, அருள் செய்வன்.

6. அருள்புரி காலமூர்த்தி ஆகும்அப் பிரமந்தன்னைத்
திருவளர் காசிவாழும் சிவனென உரைப்பர்மேலோர்
பொருவில்அப்பரனே தோன்று புருடனைத் தொடர்‌ந்து எஞ்ஞான்றும்
மருவிநீங்காத மூலமலத்தினைத் துடைப்பன் அன்றே - 27

உயிர்க்கு உயிராய் இருந்து அருளும் அந்த இறைவனை, காசியில் வாழும் சிவன் என பெரியோர்கள் உரைப்பர். அவன் தான், உயிரோடு நீங்காமல் இருக்கும் மூலமலமாகிய ஆணவத்தைத் துடைப்பவன்.

10. வயிரவன் தோன்றிய அத்தியாயம் (31வது அத்தியாயம்)

1. சாற்றும் உலகம் எவற்றினுக்கும் தானேயாகி இனிது அமைத்தல்
போற்றி அளித்தல் துடைத்தல் என்னப் புகலும் அரியமுத் தொழிலும்
ஆற்றும் ஒருவன் எவன் சிவனாம் அவனே மொழிந்த தத்துவம் என்று
ஏற்ற மறைகள்ஒரு நான்கின் முதலாம் வேதம் இசைத்ததுவே - 5.

2. புரிதற்கரிய அருமகத்தால் யோகம் அதனால் புவனம் எலாம்
பரவப்படுவான் யாவன் உளன் யாமும் அவனால் பரிவோடும்
உரைபெற்று உலகின் நிலைபெறுதும் அனைய கண்மூன்றுடையோனே
தெரிதற்கரிய தத்துவம் என்றிரண்டாம் வேதம் செப்பியதால் - 6

3. யாவன்உலக மூன்றினையும் திரிவிப்பவன் மற்றெஞ்ஞான்றும்
யாவன் யோக முனிவரரால் ஏத்தப் படுவோன் இனிதோங்க
யாவன்தனது பேரொளியால் எவையும் விளங்கும் அவ்விறைவன்
மேவவரும் தத்துவம் என்றே மூன்றாம் வேதம் விளம்பியதால் - 7

4. கண்ணீர்வார மயிர்பொடிப்ப உள்ளம் நெகழ்ந்து கசிந்து கசிந்து
உண்ணீர்மையினால் எஞ்ஞான்றும் தன்னை உணரும் உணர்வுடையோன்
எண்ண வழுத்தத் தன்னருளால் தன்னை அறிவிப்பவன் யார் அத்
தண்ணார் கடுக்கையோன் என்ன நான்காம் வேதம் சாற்றியதால் - 8


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate