செவ்வாய், 19 நவம்பர், 2013

சச்சிதாநந்தம் - வ.உ.சிதம்பரம் பிள்ளை - (2ம் பகுதி)


நமது முன்னோர் தமது முன்னோர் கூறியவற்றைச் சரியென்றே கொள்ளும் சுபாவத்தைக் கொண்டிருந்தா ரென்பதும், தமது முன்னோர் கூறியவை சரியானவையா பிசகானவையா என்று விசாரிக்கும் சுபாவத்தைக் கொண்டிருக்கவில்லை யென்பதும் நம்மில் ஒரு சிலர் அறிந்தவையே.

நமது முன்னோர் கூறியுள்ளவற்றில் ஒன்று சரியானதா பிசகானதா என்று நம்மில் ஒருவர் விசாரிக்கப் புகின், அவரைப் புரட்சிக்காரரென்றும் ஆன்றோரை நிந்திப்பவரென்றும், ஆன்றோரினும் அறிவுடையவ ரென்ற பெயரைக் கொள்ளக் கருதுபவரென்றும் பலவாறாக நிந்திக்கின்றனர் நம்மிற் பலர்.


அப்பலரையும் தாமே முற்றுணர்ந்தவரென்று தருக்கி்த் திரிகின்ற சிலரையும் கருதியதன்று; முழுநடுவு நிலைமையோடும் யுக்தியோடும் மெய்ப்பொருளை ஆராய்வாரையே கருதியது இனி இங்குக் கூறப்படுவது.

‘சத் சித்’ என்னும் இரண்டு பதங்களுக்கும் நமது முன்னோர் உரைத்துள்ள பொருள்கள் எனக்கு உடன்பாடானவையே.

ஆனந்தம் என்பதற்கு நமது முன்னோர் உரைத்துள்ள பொருளே எனக்கு உடன்பாடற்றது.

சுகமும் அதற்கு மறுதலையாய துக்கமும் மனத்தின் அநுபவங்களே யென்பது யாவருக்கும் நேரில் தெரிந்த தொன்று.

கடவுள் மனதிற்கு அப்பாற்பட்ட பொருளென்பது அறிஞர் பலர்க்கும் ஒப்பமுடிந்த ஒரு முடிவு. அம்முடிவைக் கொண்டும் மனத்தின் அனுபவமாகிய சுகத்தை மனத்தைக் கடந்து நிற்கும் கடவுளது வடிவ மாகவோ இலக்கணமாகவோ கூறுதல் இழுக்கினுள்ளெல்லாம் பெரிய இழுக்கு.

சில சுருதிகள் ‘‘பிரஹ்மம் சுகமன்று’’ எனக் கூறுகின்றனவென வறிக. சுருதிகள் ஒன்றற்கொன்று மாறாக ஒரு பொருளைக் கூறுமிடத்துச் சுருதிப் பிரமாணத்தை எடுத்துக் கூறாது விடுதலே முறைமை.

ஒரு கணமேனும் தான்தானாக நின்றவர் சுகமும் துக்கமுமற்ற நிலையே தனது நிலை. அஃதாவது ஆத்ம நிலை, அஃதாவது பிரஹ்ம நிலை என்று அறிவர்.

தான்தானாக நின்றறியாதார் அந்நிலையில் நிற்றற்குப் பயிலுவதே முறைமை; மற்றையோர்பால் அந்நிலையைப் பற்றி வினவப் புகுதல் முறைமையன்று. அம்மற்றையோர் தான்தானாக நின்றவரோ என்பதைப் பிறர் அறியமுடியாதாகலான்.

இனி, நடுவு நிலைமையோடு நின்று ஆராயும்  யாவர்க்கும் பொதுவாய யுக்தி கொண்டே ‘‘பிரஹ்மம் சுகம்’’ என்பது சரியா, பிழையா என்று விசாரித்தல் வேண்டும். அவ்யுக்தியின் விசாரணையில் மனத்தின் ஓர் அநுபவமாகிய சுகத்தைக் கடவுளுக்கு இலக்கணமாகக் கூறுதல் இழுக்கென்று முன்னரே கண்டோம்.

‘ஆனந்தம்’ என்பதற்குச் ‘சுகம்’ என்னும் பொருளைக் கூறுங்காலையில், ‘‘சச்சிதாநந்தம்’’ என்பது கடவுளின் சர்வ வியாபக இலக்கணத்தை விளக்கி நிற்கின்றதென்று சொல்ல முடியாது, சத் என்பது நித்யத்துவத்தையே காட்டும் பதமாகலான்.

கடவுளைச்  ‘‘சச்சிதாநந்தம்’’ என்று கூறிய ஆன்றோர் அத்தொடர் மொழிக்குப் பொருளுரைத்த ஆன்றோரினும் பெரியவரென்றே நாம் கொள்ளல் வேண்டும்.

அப்பெரியோர் கடவுளுக்கு இன்றியமையாத சர்வ வியாபக இலக்கணத்தை விட்டிருக்கமாட்டார் என்று நாம் நினைத்து ‘ஆனந்தம்’ என்பதற்கு வேறு பொருளுண்டாவென்று விசாரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இங்கு விசாரிக்கப்படுவது ‘ஆனந்தம்’ என்னும் பதத்தின் அர்த்தமே யன்றி, பிரஹ்மத்தின் சர்வ வியாபக இலக்கணமன்றென்பதையும், சத்தாயுள்ள பிரஹ்மம் சர்வவியாபகமாயிருத்தலால் ‘சத்’ என்னும் பதம் சர்வவியாபக பொருளையும் குறித்து நிற்கின்ற தென்றல் பொருந்தா தென்றும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

‘‘சச்சிதாநந்தம்’’ என்பது ஆன்றோருரைப்படி கடவுளது சர்வவியாபக இலக்கணத்தைத் தாங்கி நிற்கவில்லையே யென்று வினவுவார்க்குச் சமாதானமாக ‘‘ஆனந்தம்’’ என்பது (ஆ–எங்கும், நந்தம் –சுகம்) ‘எங்கும் நிறைந்த சுகம்’ எனப் பொருள்படுமென்று சிலர் கூறுகின்றனர்.

‘நந்தம்’ என்பதற்குச் ‘சுகம்’ என்னும் குணப் பெயர்ப் பொருளில்லையென்றும், சுகித்தல் என்னும் தொழிற்பெயர்ப் பொருளே உண்டென்றும், அப்பொருளைக் கொள்ளுங்கால் ‘‘கடவுள் சுகிக்கின்றவர்’ என்று ஒப்புக்கொள்ள நேரிடுமென்றும், அவ்வாறு ஒப்புக்கொள்ளின் ‘கடவுள் செயலற்றவர்’ என்னும் கோட்பாட்டிற்குக் கேடு நேரிடுமென்றும் அவர் அறிவாராக.

அன்றியும் ‘சித்’ என்பதற்குப் பின்னுள்ள ‘நந்தம்’ எங்கும் நிறைந்ததென்றால், அதற்கு முன்னுள்ள ‘சித்’ எங்கும் நிறையாததென்று கூற நேரிடுமென்றும் அவர் அறியக்கடவர்.

இனி, ‘‘ஆனந்தம்’’ என்பதற்கு யான் கூறுகிற பொருள் ‘‘எங்கும் நிறைந்திருத்தல்’’ என்பதாம், ‘ஆ’ என்பது ‘எங்கும்’ என்று பொருள்படுமென்று மேலே கூறப்பட்டுள்ளது.

‘நந்தம்’ என்பது ‘நத்’ என்னும் தாதுவினின்று வந்தது. ‘நத்’ என்னும் தாதுவுக்கு இரண்டு பொருள்களுண்டு.

ஒன்று ‘சந்தோஷி’ என்பது. மற்றொன்று ‘நிறைந்திருக்க’ என்பது.

முந்திய பொருளைக் கொள்ளாது பிந்திய பொருளைக்கொள்ளின், ‘‘ஆனந்தம்’’ என்பது ‘‘எங்கும் நிறைந்திருத்தல்’’, அஃதாவது ‘‘சர்வ வியாபகம்’’ என்று பொருள்படும்.

அப்போது ‘‘சச்சிதாநந்தம்’’ என்பது ‘‘நித்தியமாகவும் சர்வ வியாபகமாகவும் நிற்கின்ற அறிவு’’ என்னும் பொருளைத் தரும்.

அப்பொருளைக் கொள்ளுங்காலையில் மனத்தின் பல அநுபவங்களில் ஒன்றாகிய சுகத்தைக் கடவுளுக்கு இலக்கணமாகக் கூறி இழுக்கப்படுதலும் கடவுளுக்கு இன்றியமையாத  சர்வ வியாபக இலக்கணத்தை ‘‘சச்சிதாநந்தம்’’ என்பது கொண்டு நிற்கவில்லை யென்னும் கூற்றுக்குட்பட்டு இடர்ப்படுதலும் நீங்கி ஒழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate