வெள்ளி, 22 நவம்பர், 2013

அற்புதப் பதிகங்கள் - உரையுடன்


நுால்: அற்புதப் பதிகங்கள்
உரையாசிரியர்: சித்தாந்த நன்மணி சிவஸ்ரீ இரத்நவேலன்
வெளியீடு: சைவ சித்தாந்த சபை, சங்கரன்கோவில், 
பக்கம்: 100
விலை: குறிப்பிடப்படவில்லை

நான், சிதம்பரத்தில், எனது ஆசிரியர் ரத்னவேலன் ஐயாவை 2000ல் முதன்முதலாக சந்தித்த  போது, அதிகளவில் கேட்ட கேள்விகள், சந்தேகங்கள் எல்லாம், தமிழ்நாட்டு சைவத்தில், தமிழ், வடமொழி பற்றிய வாதபிரதிவாதங்கள் குறித்துத் தான்.


அவை என்னை பெருமளவு குழப்பியிருந்தன. இரு தரப்பு வாதங்களுமே சரியாக தோன்றின.

தமிழுக்கு முக்கியத்துவம்  கொடுத்தோர், அப்போது திருநெல்வேலியில், சைவ அமைப்புகளில் தலைதுாக்கத் துவங்கியிருந்தனர்.

அவர்களில், பன்னிரு திருவுருமாமலை அறக்கட்டளை மற்றும் வழிபாட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த, சங்கரவடிவு, பேட்டை  சிவா  நர்சரி பள்ளி  நிறுவனர் காளியப்பன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்கள், வடமொழியை பிராமண மொழி என அடையாளப்படுத்தி, சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம், அறக்கட்டளை நிகழ்ச்சிகளில் பேசி வந்தனர்.

அறக்கட்டளையை உருவாக்கி, வழிபாட்டுக்  குழுவை திருநெல்வேலியில் ஒரு பேரியக்கமாக நடத்தி வந்த, நிர்வாகத் திறமை மிக்க மயிலப்ப பிள்ளையும் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

இதனால் தீட்சை பெற்ற அடியார்கள் மத்தியில், சந்தியாவந்தனத்தை  தமிழில் செய்வதா, வடமொழியில் செய்வதா என்ற குழப்பம் எழுந்தது.

வடமொழியை மதிக்க வேண்டும் என்ற கருத்துடையவர்களான, திருமலை மில்ஸ் திருஞானசம்பந்தம், டவுன் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் குழு, மேற்கண்ட காளியப்பன் குழுவினருக்கு அவ்வப்போது பிற கூட்டங்களில் பதில் அளித்து வந்தனர்.

இன்று வரை அங்கு, இந்த பனிப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நான், 1994ம் ஆண்டு முதல், பன்னிரு திருவுருமாமலை வழிபாட்டுக் குழுவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் துவங்கியதால், இந்த குழப்பம் என்னையும் பற்றிக் கொண்டதில், வியப்பில்லை.

ஆனால், திருஞானசம்பந்தம், என்னை அடையாளம் கண்டறிந்து, அவ்வப்போது வெளியாகும், சைவ  நுால்களை எனக்கு தந்து படிக்கச் சொல்வார்.

எனது சந்தேகங்களை, ரத்னவேலன் ஐயாவிடம் கேட்டபோது, அவர் தர்க்க ரீதியாக பதில் அளிக்கவில்லை என்றாலும், சிந்திக்கத் தக்க அளவில், சில பதில்களை அளித்தார்.

அப்போதைக்கு எனக்கு அவை திருப்தியை அளித்தன. இன்று தமிழ் சைவம் - வடமொழி சைவம் பற்றிய சில புரிதல்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும் கூட, சாதாரண அடியார்கள் எத்தனை பேர் இந்த பிரச்னையை வரலாற்று புரிதலோடு  ஏற்றுக் கொண்டிருப்பர்? அதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு உண்டா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சங்கரன்கோவில்  சைவ சித்தாந்த சபை, அன்று தொட்டு இன்று வரை, இந்த பிரச்னையில், எவ்வித குழப்பமுமின்றி, பிள்ளை, ரத்னவேலன் ஐயா ஆகியோர் உருவாக்கித் தந்த வழியிலேயே  நடைபோட்டு  வருகிறது.

இன்று தமிழகத்தில், பூர்வ சைவ நுால்களுக்கு காலத்தில் ஏற்பட்டுள்ள அவசியத்தை உணர்ந்து, அவற்றை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஒன்றிரண்டு சைவ அமைப்புகளில், சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபைக்கு குறிப்பிடத் தகுந்த இடம் உண்டு.

ரத்னவேலன் ஐயாவிற்கு பின், அவரது நெருங்கிய  சீடரான, ஆவுடையப்பன், சபையை, அதன் பாரம்பரிய வழியில் இருந்து வழுவாமல், நடத்தி வருகிறார்.

அவரது, மணிவிழா, 13ம் தேதி சங்கரன்கோவிலில்,  வெகுவிமரிசையாக நடந்தது.

பாளையங்கோட்டையில் அதற்கு இருநாட்கள் முன்னதாக, சிவஞானம் வீட்டில் நடந்த திருவாசகம் முற்றோதலுக்கு வந்திருந்த அவரை, நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்துப் பேசினேன்.

மணிவிழாவிற்கு, எனது நண்பரும், சிவஞானத்தின் சகோதரருமான, முத்துவிநாயகம் சென்றிருந்தார். அங்கு  வெளியிடப்பட்ட, அற்புதப் பதிகங்கள் என்ற நுாலின் பிரதிகள் இரண்டினை, சென்னைக்கு வரும்போது கொண்டு வந்தார்.



அந்த நுாலில்,

  • தோடுடைய செவியன்
  • அவ்வினைக்கிவ்வினை
  • இடரினும் தளரினும்
  • மந்திரமாவது நீறு
  • மட்டிட்ட புன்னையங்  கானல்
  • மாசில் வீணையும்
  • சொற்றுணை வேதியன்
  • கருநட்ட  கண்டனை
  • கோவாய் முடுகி
  • பண்ணின் நேர் மொழியாள்
  • மாதர்ப் பிறைக்கண்ணியானை
  • தம்மானை
  • தில்லைவாழ் அந்தணர்தம்
  • நீள நினைந்தடியேன்
  • தம்மையே புகழ்ந்து
  • ஆலந்தான் உகந்து
  • மீளா அடிமை
என, 17 பதிகங்கள், ரத்னவேலன் ஐயாவின் உரையுடன் வெளியிடப்பட்டுள்ளன.

நுாலின் மிக முக்கியமான அம்சமாக நான் குறிப்பிடவிரும்புவது, அதன் முன்னுரையைத் தான்.

தமிழ் சைவத்தில், தமிழ் மொழியைத் துாக்கிப் பிடிப்பவர்கள் செய்யும் மிக முக்கியமான தவறு, முன்னுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முன்னுரையில் அது தொடர்பாக குறிப்பிடப்பட்ட சில பகுதிகளை கீழே தருகிறேன்:

... அற்புதங்களைச் செய்தது தமிழே என்று கூறிக் கொண்டு சிலர் அறியாமையினால், சைவக் கிரியா பாத வடமொழி மந்திரங்களுடன் கூடிய சடங்குகளை உதாசீனப்படுத்தி விட்டு, இப்பதிகங்களைச் சடங்குகளின் ஒவ்வோர் அங்கத்திற்கும் பாடிப் பயன்படுத்தி எந்த நுாற்றாண்டிலும் இல்லாத ஒரு புரட்சியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் தடம் மாறுதலுக்கு  காரணம், தமிழில் நமக்குக் கிடைத்த அருங்கருவூலமாகிய ஞானபாதக் கருத்துக்களடங்கிய 14 சித்தாந்த சாத்திரங்கள் காட்டும் உண்மைப் பொருளை உய்த்து உணராமையே.

மூவர் பெருமக்களும் அற்புதம் நிகழ்த்திய பாங்கை உணர்த்த வந்த ஸ்ரீதிருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்,

பாலை நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்போல் அல்லாமை காண்

என்ற பாடல் மூலம் திருக்களிற்றுப்படியாரில் தெற்றென உணர்த்துகிறார்.

திருஞானசம்பந்தர் தமிழ்ப்பதிகம் பாடி பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கியதும்.... தமிழால் அல்ல.

தமிழ் பாடிய திருவருட் செல்வர்களின் கருவி கரணங்களெல்லாம் நம்மவர்க்கிருப்பதைப் போன்ற காலத்தால் அழிகின்ற மாயா கரணமாக இல்லாமல், சிவகரணமாக மாறப் பெற்றமையே காரணம் என்பதை இப்பாடலின் மூலம் உணர முடிகிறது.

எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் ஜீவன் முக்தராக இருந்தால் அவரால் அற்புதங்கள் நிகழ்வதற்குத் தடையில்லை.

....அப்படியானால், இப்பதிகங்களை நாம் பாடினால் அற்புதம் நிகழாதா? என்று கேட்கலாம். முடியும்.

நம்முடைய கரணங்களும் சிவகரணமாக மாற வேண்டும். இப்பதிகங்கள் அருளாளர்களால் பாடப்பெற்றவை என்பதை நாம் உயிரினோடு உள்ளுணர்வு தெரிய நன்குணர்ந்து பாடினால், சிவப்பிரகாசமான நம் அறிவில் இறைவன் தங்கி நின்று அற்புதம் நிகழ்த்துவான்.

ஆனால், வெறுமனே தமிழ் என்ற மொழியுணர்வு மட்டும் அற்புதம் நிகழ்த்தாது. இதனை நன்குணர்ந்து கொண்டு, ஆன்மாவைக் கடைத்தேற்றும் ஞானாபாதத்திற்குரிய இவ்வற்புதப் பதிகங்களை, உலக சேமத்திற்காகச் செய்யப்படும் கிரியாபாதச் சடங்குகளுக்குள் முனைப்புடன் புகுத்தாமல், உண்மை நெறிகண்டு உய்யும் வழி காண்போம்.

இவ்வாறு அந்த முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிழையின்றி நுால் வெளியாகியிருப்பதற்கு, தனியாக பாராட்டு தெரிவிக்கலாம்.

கடன் நீங்க, கல்யாணம் ஆக, வீடு கட்ட, வேலை கிடைக்க, நாமே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்னைகளில் இருந்து வெளிவர என, சில்லரைப் பிரச்னைகளுக்காக, தேவாரப் பதிகங்களை  பாராயணம் செய்வதிலும், அதற்கு தனியாக நுால்களை வெளியிடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை.

அவை முழுக்க, முழுக்க ஞானக் கருவூலம் என்பதை சைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வங்கி கடன் அடைக்க, வாராக் கடனை வரவைக்க என, பதிகங்களை தேடிப் புறப்பட வேண்டி வரும்.

பிற்காலத்தில் ஏற்பட்ட இந்த மனோபாவத்தில் இருந்து சைவர்கள், உடனடியாக வெளிவர வேண்டும். அதற்கான குறிப்பை தான், அற்புதப் பதிகங்கள் நுாலின் முன்னுரை சுட்டிக் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate