திங்கள், 18 நவம்பர், 2013

தலபுராணங்களில் நால்வர் ஸ்துதி - மாணிக்கவாசக சுவாமிகள்


1. ஊற்றிருந்தா னந்தவெள்ளம் ஒழுகவுளம் அனல்மெழுகா உருகு வோனை
நாற்றடந்தோட் சுந்தரர்மண் சுமந்திடமெய் அன்புகொண்ட நலத்தி னானைத்
தேற்றுதிரு வாசகமிவ் வுலகுய்யச் செப்பியசெவ் வாயுங் கொண்டு
தோற்றுபரா னந்தநடப் பொதுவினிற்சென் றிருந்தோனைத் துதித்து வாழ்வாம்

-துறைசைப் புராணம்


2.பணிமொழிதன் அறிவிச்சை செயலெல்லாம் ஒழிந்திடவே பரிந்து வேண்டி
மணிமிடறன் அருளின்றி ஒன்றறியாது அன்பதனில் மகிழ்ந்து மூழ்கி
பணிமொழியாம் அகப்பொருளும் புறப்பொருளும் அவனருளால் அமைத்துப் பாடும்
மணிமொழியார் எனப்பெற்ற வாதவூர் அடிகளடி மனத்துட் கொள்வாம்

-சிங்காரவேற் பிள்ளை இயற்றிய திருநாகேச்சுரப் புராணம்

3. உளத்திற் தேக்கிய சிவானந்த வெள்ளம்உட் பொசிந்து
வளத்திற் தேக்கிய தெனவெயர் பொடிப்பவான் மடையாற்
களத்திற் தேக்கிய தெனவிழிகாலவன் பிறைதாட்
தளத்திற் தேக்கிய வாதவூரடிகளைச் சார்வாம்

-திருவானைக்காப் புராணம்

4. கள்ள யின்று களிக்கும் வரிச்சிறைப்
புள்ள லம்பு பொழில்புனை வாதவூர்
வள்ளல் மாணிக்க வாசகன் சேவடி
உள்ளம் அன்புற் றுருக வணங்குவாம்

-சங்கர நாராயண சுவாமி கோயிற் புராணம்

5. உள்ள மாகிய புலத்தினைப் பத்தியால் உழுது
தெள்ளு ஞானவித்து உறுத்துநற் சிரத்தைநீர் பாய்த்திக்
கள்ள வான்பொறிக் களைகள்கட் டானந்தம் விளைத்துக்
கொள்ளை கூறுமா ணிக்கவா சகன்கழல் குறிப்பாம்

-பேரூர்ப் புராணம்

6. பேசுபுகழ் வாதவூர்ப் பிறந்துபெருந் துறைக்கடலுண்டு
ஆசில்எழில் தடித்தயர அஞ்செழுத்தால் அதிர்த்தெழுந்து
தேசமலி தரப்பொதுவார் சிவபோக மிகவிளைவான்
வாசகமா மாணிக்க மழைபொழிமா முகில் போற்றி

-கோயிற்புராணம்

7. கந்தமொடுயிர் படுங்கண பங்கம் மெனச்
சிந்தைகொள் சாக்கியர் தியங்க மூகராய்
முந்தொரு மூகையை மொழிவித் தெந்தைபால்
வந்திடும் அடிகளை வணக்கஞ் செய்குவாம்

-கந்தபுராணம்

8. செழியர்குல பதிகொடுத்த மாடுகொண்டு
          சென்று திருப்பெருந்துறையிற் செறிந்த சம்புப்
பழிவிரவு பரித்திரள் கொண்ட ணைந்துமாறன்
         பணித்த இடர்க்கிரங்கி அருள் பாடிப்போற்றி
வழியமுத கிரணநிலா மகுடமீதே
         மதுரையமர் பரம்பரனை வந்திக்காகச்
சுழிபெருகு புனற்றரங்க வைகைவாய் மண்
         சுமப்பித்தார் பதந்தலைமேற் சுமத்தல் செய்வாம்

-யாழ்ப்பாணம் மாதகல் பிரம்மஸ்ரீ சு.ஏரம்பையர் செய்த சேதுபுராணம்

9. சீதவார் பொழிற் தில்லைப் பரமனுக்கு
ஓது நற்றமிழ்க் கோவை உரை செய்த
நாதன் மாணிக்க வாசகன் நாள்மலர்ப்
பாத பங்கயம் ஏத்திப் பரவுவாம்

-பிரேமாத்தர காண்டம்

10. எழுதரு மறைகள் தேறா இறைவனை எல்லிற் கங்குல்
பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து
தொழுதகை தலைமீதேறத் துளும்புகண் ணீருள்மூழ்கி
அழுதடி அடைந்த அன்பன் அடியவர்க் கடிமை செய்வாம்

-திருவிளையாடற் புராணம்

11. பரிமேல் வரவமலன் பாடியமெய்ப் பத்தன்
இருபதமுஞ் சென்னியில் வைப்பேம்

-சைவ சமய நெறி

12. கொழுதியின வரியளிகள் கூட்டுண்ணுங் கொன்றையந்தார்க் குழகன்தாளிற்
பழுதறுசொற் பாமாலை புனைந்தேத்தி எறிதிரைநீர்ப் பரவையாட
முழுதுலகுமதிக் கவிகை தனிநிழற்றி ஒருசெங்கோல் முறை நடாத்தும்
வழுதி முனம்பரியழைத்த வாதவூர் இறைவனடி வழுத்தல் செய்வாம்

-காசி  கண்டம்

13. மைதவழ் குடுமி மாட மறுகணி மதுரை மூதுார்க்
கைதவன் எதிரே சேற்பார் கடற்றிரை எழுந்த தென்ன
எய்தரு முதிய கானத் திசைநரி பரிய தாகச்
செய்தருள் வாதவூரர் சேவடி சென்னி  சேர்ப்பாம்

-திருவாரூர் சாமிநாத தேசிகர் இயற்றிய திருவாடானைப் புராணம்

14. முழுதல கவித்தை என்னும் மூடிருள் முருங்கி மாயப்
பழுதகல் தவமென்றோதும் பைம்பொருள் உடையர் பாங்கி
ஒழுகுதங் காதிற் கோப்ப உயர்ந்தவா சகமென் றோதுஞ்
செழுமணி வாயாற் கான்ற சிவபோ கியர்தாள் போற்றி

-திருத்துருத்திப் புராணம்

15. தேசிகன் ஞானபோத மந்திரச் சிறையில் பட்டுப்
பாசவெண் தோலுரித்து பவுத்தர மேலாலங் கான்று
வாசக மாணிக்கங் களுமிழ்ந்து மண்டலத் தினாடி
ஆசில் மன்றகத் தடங்குஞ் சேடனுக் கன்பு செய்வாம்

-திருவையாற்றுப் புராணம்

16.சொன்னவனைத் துளகலையும் பயிலாமாத் தியர்குலத்துத் தோன்றி யாங்கோர்
தென்னவனை அரசுரிமைத் திறல்செயுமந் திரியாகித் தென்னர்க் கெல்லாம்
முன்னவனைப் பின்னுசடை முடியின்மேற் பொன்னின்முடி சூட்டி யாண்ட
மன்னவனை மதுரையிலே குதிரைவாங்கச் சொன்னவனை வணக்கஞ் செய்வாம்

- கடம்பவன புராணம்

17. திருந்துகுருந் துறைகயிலைத் துவாதசாந் தேசனருட் தேசன் அன்பின்
பெருந்துறைவா ரிதிபடிந்து ஞானநீர் முகந்தகம் பேர்த்திடித்து மின்னி
வருந்துமுல குயிர்ப்பயிர்கள் பவக்கோடை யால்வெதும்பி வாடா தோங்க
அருந்தமிழ்வா சகமழைபெய் தருள்வாத வூர்முகிலை அகத்துள் வைப்பாம்

-கடம்பவன புராணம்

18. கொள்ளை வண்டிருந்து விருந்துணச் செழுந்தேன் கொப்புளித் தலர்ந்த பூங்கொன்றை
துள்ளு தெண்டிரை நீர்முடித்த செஞ்சடிலச்சோதி செங்கரம் பிடித்தெழுதத்
தெள்ளுசெந் தமிழிற்கோவை நானுாறுஞ் செப்பிய நற்கவிராசப்
பிள்ளை செஞ்சரணக் கிரணவாரீ சம்பிரசநாண் மலரிணை துதிப்பாம்

-வென்றிமாலைக் கவிராயர் அருளிய திருச்செந்துார்ப் புராணம்

1 கருத்து:

Translate