வியாழன், 28 நவம்பர், 2013

காசிகண்டம் - தெரிந்தெடுத்த பாடல்கள் - 2


5. தீர்த்த மகிமை உரைத்த அத்தியாயம் (ஆறாவது அத்தியாயம்)
(லோபாமுத்திரைக்கு அகத்தியர் உரைத்தது)

சத்தியந்தானஞ் சம்மதம் இன்சொற்சாற்றுதல் ஒருவழிப்படுதல்
புத்தியே முதல கரணமோர் நான்கும் அடங்குதல் புலன்கள்போம் வழியின்
உய்த்திடாதமைத்தல் பொறைதிட ஞானம் உயிர்க்கெலாம் தண்ணளி புரிதல்
இத்திறமனைத்தும் மானத  தீர்த்தம் என எடுத்தியம்பினர் மேலோர் -7


அறத்துறை பயிலும் மானத தீர்த்தம் ஆடலராகி நீராடிற்
புறத்தழுக்கு ஒழிவதல்லது புனிதராகிலர் பூந்திரை சுருட்டும்
சிறைப்புனல் அதனின் முழையுறழ் பகுவாய்த் தீவிழிச் செறி எயிற்று இடங்கர்
சுறக்குலம் முதல அளப்பரும் காலம் தோய்ந்ததால் துறக்கம் உற்றனவோ -8

கற்றதங் கல்வியும் கடவுட்பூசையும்
நற்றவம் இயற்றலும் நவையில் தானமும்
மற்றுள அறங்களும் மனத்தின்பால்அழுக்கு
அற்றவர்க்கே பயன் அளிக்கும் என்பரால் -10

பொறிவழிப் புலன் செலாதடக்கிப் புந்தியை
நிறைபரம் பொருளிடை நிறுத்து நின்மலர்
உறைவிடம் அல்லதை உள்ளதாங் கொலோ
எறிபுனல் தீர்த்தம் என்று இயம்பப்பட்டதே - 11

உரைப்பரும் மானத தீர்த்தம் ஓதிடில்
சுருக்கமில் ஞானநீர் தோய்தல் மற்றது
விருப்பொடு வெறுப்பென விளம்பப்பட்டதோர்
கருப்புகுத்திடு மலங்கழுவும் என்பவே -12

மேற்கண்ட பாடல்களில், மானச தீர்‌த்தம் என்றால் என்ன என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.

சித்தர் பாடல்களில், கோயிலாவது ஏதடா, குளங்களாவது ஏதடா என, குறிப்பிடப்பட்டதை, புரட்சி என, எழுதும் ஆய்வாளர்கள், புராணங்களிலும் அதே கருத்து சித்தர்களுக்கு முன்பும் பின்பும் வெளிப்பட்டிருக்கிறது என்ற உண்மையை இதுவரை உணரவில்லை என்றே நினைக்கிறேன்.

ஏழாம் பாடலில், சத்தியம், தானம், இன்சொல், அந்தக்கரணங்களை அடங்குதல், புலன்வழிச் செல்லாமல் புத்தியை ஒருப்படுத்துதல், பொறுமை, உறுதியான அறிவு, உலகத்து உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு செலுத்துதல் இவை தான், மானத தீர்த்தம் என, குறிப்பிடப்படுகிறது.

இது, கோவிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே என்ற சித்தர் வாக்கியத்தின் விரிவுரை தான்.

அப்படி, மானத தீர்த்தத்தில் நீராடாமல், வெளியுலகத்தில் உள்ள குளங்களிலும், ஆறுகளிலும் நீராடுவதால், உடலில் உள்ள அழுக்குத் தான் போகுமே ஒழிய, மனத்து அழுக்கு போகாது.

குளங்களிலும், ஆறுகளிலும், நீராடுவதால், புனிதராகலாம் என்பது உண்மையானால், அந்த குளங்களிலும் ஆறுகளிலும் உள்ள சுறா உள்ளிட்ட அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் சொர்க்கம் சென்றிருக்கலாமே, அப்படி நடந்ததா? என கேள்வி எழுப்புகிறது எட்டாம் பாடல்.

இது, கபீர் தாசரின் உபதேசத்தை அப்படியே எடுத்து வைக்கிறது.

வெளிச் சடங்குகள் யாவும் அவற்றை செய்வதால் மட்டுமே பலன் அளித்திடா. மாறாக, அவற்றின் நோக்கமே, மனத்துக் கண் மாசினை குறைப்பது அல்லது அழிப்பது தான். அது நிகழாதவரை, சடங்குகளால், பெரிய அளவில் பலன் அளிப்பதில்லை என்கிறது பத்தாம் பாடல்.

இது, சடங்குகளாலேயே அறிவு கிட்டும் என்பதை மறுத்தது என கொள்ளலாம்.

பொறிவழிப் புலனும், புலன் வழி சிந்தையும் செல்லவிடாமல் அடக்கி, இறைவனை நினைத்து வழிபடும் மனமே, தீர்த்தம் எனப்படும். அதைவிட உலகில் வேறு தீர்த்தம் என தனியாக ஒன்று இருக்கிறதா என்கிறது பதினொன்றாம் பாடல்.

அறிவு என்னும் நீரில் ஆடி, விருப்பு, வெறுப்பு என்னும் அழுக்குகளை களைவதே, மானத தீர்த்தம் ஆடுதல் என்பதற்கு பொருளாம் என்கிறது 12ம் பாடல்.

ஆக, மானத தீர்த்தம் என்பது உருவகம் வாயிலாக, மனிதன் மேற்கொள்ள வேண்டிய, நற்குணங்களை குறிப்பிட்டு காட்டுகிறது என்பது தெளிவு.

இதனோடு தொடர்புடைய பதிவுகள்:

தீர்த்த யாத்திரை ஏன்?

தாமிரவருணிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate