திங்கள், 11 நவம்பர், 2013

எனது நாட்குறிப்பில் இருந்து....1


(விடுப்பில், எனது சொந்த ஊருக்கு வந்துள்ள நான், இன்று, எனது, புத்தகப் பெட்டிகளை எடுத்து சுத்தம் செய்து, எலியாரின் 'கைங்கரியங்களை' அகற்றி விட்டு, மீண்டும் புத்தகப் பெட்டிகளை ஒழுங்குபடுத்தினேன்.

அப்போது, எனது நாட்குறிப்பு டைரி  என் கண்ணில் பட்டது.

1999ல் நான் எனது சொந்த ஊரில் இருந்த போது, சைவம் தொடர்பாக, நிறைய படித்தேன். திருமலை மில்ஸ் நிறுவனத்தின், முதலாளிகளில் ஒருவரான திருஞான சம்பந்தத்தின் உதவியுடன், திருவாவடுதுறை ஆதீனத்தின், சைவ சித்தாந்த வகுப்பிலும்சேர்ந்தேன்.


அப்போது, தினசரி நாட்குறிப்பு எழுத வேண்டும் என நினைத்து, எழுதத் துவங்கினேன். அதுவும் சில நாட்களுக்குத் தான்.

இன்று எடுத்து வாசித்தேன். சில சம்பவங்கள் சுவாரசியமாகவே இருந்தன. அவற்றில் சில, எனது வலைப்பூவிற்கு தேவைப்படாது. எனவே, தேவையான, அதாவது  எடிட் செய்யப்பட்ட எனது நாட்குறிப்புகளை இங்கு தருகிறேன்.

நாட்குறிப்பு என்ற உடன், ஆண்டுக்கணக்கில் என,நினைத்துவிட வேண்டாம். மொத்தமே நான்கு நாட்கள் தான் எழுதியிருக்கிறேன். இரண்டு நாட்கள் அடுத்தடுத்து. மூன்றாம் நாள், ஒரு வாரம் கழித்து, நான்காம் நாள், ஓராண்டு இடைவெளிக்குப் பின்.

இவை, எனது சித்தாந்த ஆசிரியர், ரத்னவேலன் அவர்களை சந்திக்கும் முன்பு  எழுதியது.

 1999ல் நான், சைவ நுால்களில் பயிற்சி மேற்கொண்டிருந்தமையால், எனது எழுத்து நடை, மிகப் பழைய நடையாகவே இருக்கும். எனினும், படிப்பதற்கு  தடையாக இருக்காது.

சமஸ்கிருதம் - சமற்கிருதம் என்ற  ரீதியில் அந்த நடை இருக்கும். சைவத்தில் தமிழை மட்டுமே கொண்டாடும் ஒரு பிரிவைப் பற்றி, அப்போது எனக்குத் தோன்றிய எண்ணங்களை, டைரியில் பதிவு செய்தபடியே இங்கு கொடுத்திருக்கிறேன், அவற்றில் இன்று எனக்கு சில உடன்பாடில்லை என்றாலும் கூட.

மொழியறிவு,  வரலாற்றறிவு, அரசியல் அறிவு இன்றி, பக்தி மற்றும் அபிமானத்துடன் மட்டுமே எழுதப்பட்ட வார்த்தைகள் அவை.

மொழியும், சிலஇடங்களில், சற்று திமிர்த்தனத்துடன் தான் இருக்கும். காலம் தான்  மனிதனை எப்படி மாற்றிவிடுகிறது...!)
--------------------------------------

நமசிவாய வாழ்க
சிவமயம்
செவ்வாய்
9-3-99
பேட்டை

சின்னாட்களுக்கு முன்னரேயிருந்து, இந்நாட்குறிப்பு எழுத வேண்டும் எனும் எண்ணம் பலமடைந்து வந்ததாயினும், என் மனம் துணியவில்லை.

ஆயினும், அன்றாடம் பற்பல எண்ணங்கள் எழுதலாலும், அவற்றுள் நல்லெண்ணங்களும் இருத்தலாலும், அவற்றை எதிலாவது பதியவைத்தல் நலந்தரும் எனக் கருதி, இந்நாட்குறிப்பை இன்று முதல் எழுதத் துணி்ந்தேன்.

6ம் தேதி சனியன்‌று, அதிகாலையில் நிகழ்ந்த கும்பகோணத்தையர் தொடர்புள்ள நிகழ்ச்சியானது என் மனதை உருக்கி, வேதனைக்குள்ளாக்கியது.

(நாட்குறிப்பி்ல் அதைப் பற்றி நான் விரிவாக எழுதவில்லை. ஆனால் அந்த சம்பவம் இன்றும் என் நினைவில் உள்ளது.

அன்று அதிகாலை, 4 மணிக்கு எங்கள் வீட்டு வெளிக்கதவை யாரோ ஒருவர், தடதடவென தட்டும் சத்தம் கேட்டு, பதறிப்போய், நான் எழுந்து கதவை  திறந்தேன்.

கதவைத் திறந்து பார்த்தால், ஒரு வயதான பெரியவர், தளர்ந்து போய் படியில் உட்கார்ந்திருந்தார்.

என்ன ஏது என விசாரித்தபோது, தனது சொந்த ஊர் கும்பகோணம் என்றும், (பெயர் சொன்னார், நினைவில்லை. ஊரை வைத்து கும்பகோணத்தையர் என குறிப்பிடுகிறேன்) தனது மகன், பிழைப்பிற்காக, இந்த ஊர் வந்தததால், தானும் வந்ததாகவும் தெரிவித்தார்.

உடனடியாக காலைக் கடனைக் கழிக்க வேண்டும் என, இறைஞ்சினார். நான் அவரை, எனது வீட்டின், கழிப்பறைக்கு கைத்தாங்கலாக கொண்டு விட்டேன்.

முடித்து விட்டு, திரும்பினார். தார்சாவில் உட்கார்ந்து, நான், எனது பெற்றோர், எனது தாத்தா ஆகியோர் அவரிடம் பேசினோம்.

அப்போதுதான், தனது மகன், தனது மூப்பையும் பொருட்படுத்தாது, அதிகாலையிலேயே பால் வாங்கி வரும்படி பால் பண்ணைக்கு அனுப்பியதாகவும், இது போன்று, கொடுமைப்படுத்துவதாகவும் வருந்தி தெரிவித்தார். கண்ணீரும் விட்டார். நான் மனம்வெதும்பினேன்.

அதன் பின் சில நாட்கள் தொடர்ந்து அந்த வழியாக அவர் செல்லும் போது எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார். ஓராண்டில் அவர் இறந்து விட்டார் என, நினைக்கிறேன். ஆனால் முதுமையில் அவர் படாதபாடு பட்டார்)

வயதால், மனமும் உடலும் ஒருசேர தளர்ந்து ஆதரவென தன் தனயனை எதிர்நோக்கி நிற்கும் தந்தையை, அடிப்பதற்கும் ஏசுதற்கும் எவனும் ஒருப்படுவனோ? அவன் புல்லனாயினும் ஒருப்படான்.

ஆனால், இந்த கும்பகோணத்தையர் மகன், புல்லர்களுக்கெல்லாம் தலைவனாய் மகாபுல்லனாய் இருப்பன் போலும். அப்பெரியவர் அதிகாலை 4 மணி முதல், 6 மணிவரை என்னிடம் பேசிய பேச்சுகளிலிருந்து-புலம்பல்களிலிருந்து- இதைத் தெரிந்து கொண்டேன்.

 அன்று தான், அந்த மஹாபுல்லனை நேரிலும் பார்த்தேன். அவனைப் பார்த்தால் யாராயினும் அவன் ஒரு பிராமணன் என்பதை ஒப்புக்கொள்ளார். அவன் உடலும் அத்தகையதாய்பருத்துசராசரி உயரம் உடையதாய்  இருந்தது.

 அகத்தில்உள்ளது முகத்தில் தெரியுமன்றோ? அவனது முகத்தில் உள்ள பெரிய மீசையும், உருண்ட விழிகளுமே அதைக் காட்டுவதாயிருந்தது.

இன்னும் அவனைப் பற்றிய வர்ணனை ஏன்? அவன் மஹாபுல்லன்.
அப்புல்லன், அவ்வையரை அடிப்பான் போலும்.

அவ்வையர் சொன்ன வேண்டுகோளை நான் நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறேன்.

இருப்பினும்,  இந்நிகழ்ச்சியில் இருந்து ஒரு பாடங்கற்றேன்.

யாரையும் எதிர்நோக்கி நிற்றல் இக்காலத்திற்குத் தகாது. நமக்கென்று சிறிது பொருளாவது கைவசம் வேண்டும். இல்லையேல், நம்மை நாயினும் கடையனாகக் கருதுவர். நிற்க.

இன்று மதுரையில், பன்னிரு திருமுறை வரலாறு 1,2ம் பகுதிகள், சர்வோதய இலக்கியப் பண்ணையில் கிடைத்தது. உடனே அதை வாங்கி விட்டேன். தொல்காப்பியம் நான்னுால் எழுத்ததிகாரம் எனும் நுாலும் கிடைத்தது.

எனது உடைமைகளிலே பெரும்பாலும், புத்தகங்களாகவே இருந்தன. அதைக் கண்டு வீட்டில் எனக்கு அதிக ஏச்சுக் கிடைத்ததாயினும், நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இன்றையச் சூழலில், 150 ரூபாய்க்கு, புத்தகம் வாங்குவதென்றால், அது என்னைப் பொறுத்தவரை, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாயினும், எனது பேராவலால் பல புத்தகங்கள் வாங்கி விடுகின்றேன்.

 இங்ஙனமாகவே, பல புத்தகங்கள் சேர்ந்து விட்டன. அதற்கு ஒரு அலமாரி தயாரிக்க வேண்டும். நிற்க.

நான் சென்றவாரம், சிதம்பரம் சென்றது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. (இது இரண்டாவது முறை).

இங்கிருந்து நானும் விஸ்வநாதனும் தஞ்சாவூர் சென்றோம்.

அடேயப்பா! வெளியிலிருந்து பார்க்கவே அக்கோயில் எவ்வளவு பிரும்மாண்டமாயிருக்கிறது! அணுவோர் அண்டமான தன்மை எனலாம்.
மிகப் பெரிய அகழி! அகலம் அதிகமான மதிற்சுவர்! சுவர்மேலெல்லாம் நந்திகள்! என்னே இராசராசனது பெரும்பக்தி!

 அந்த இருவாயில்களும் கூட பிரம்மாண்டமாகத் தான் இருக்கின்றன.

அந்தச் சுதை வேலைப்பாடுகளைக் காணும்பொழுது மனம் வேதனையடைகின்றது. பாதி உடைந்தும், மீதி விழவா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டுமிருக்கின்றன.

அக்கோயில், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் வசம் உள்ளது. அவர்கள் சிறிதுகூடப் பேணாமலே தான்ண அக்கோயிலை வைத்திருக்கிறார்கள்.

பிரகாரத்திலே இலிங்கங்களுக்கு  பின் சுவர்களிலேயெல்லாம் மிகமிக அழகான ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார்கள்.

கலை இரசனை இல்லாத கடையர்கள் அவ்வோவியங்களை அழித்தும், அவற்றின் மீது கிறுக்கியும் இன்னும் பற்பல இழிசெயல்களையும் புரிந்துள்ளனர். அவற்றைச் சொல்லவே மனம் கூசுகிறது.

பிரகாரம் மிக அழகாகச் செல்கிறது. முருகப் பெருமான் தீர்த்தத் தொட்டி மிகமிக அழகாக இருக்கிறது. அங்கேயுள்ள நடராஜ மூர்த்தம், மிக அழகாக இருக்கிறது. தெய்வ சாந்நித்யம் திகழ்கிறது.

குடிதண்ணீர் வசதி வைத்திருக்கிறார்கள். வாழ்க!

சன்னிதி 4 மணிக்குத் திறந்தவுடன், உள்ளே  சென்று, முதலில் உற்சவரைத் தரிசித்தோம. அவர் தியாகராஜரைப் போலவே இருக்கிறார்.

அவருக்கு எதிரே மங்காப் புகழ்கொண்ட இராசராசன் தனது இருகைகளையும் கூப்பி அஞ்சலி செய்த வண்ணம் எதிர்நிற்கிறார். அப்பெருமானையும் வணங்கினோம்.

பின், பெருஆவுடையாரைத் தரிசித்தோம். இராசஇராசனின் பெரிய மனதைப் பிரதிபலிக்கிறது அத்திருவுருவம். மனதை விட்டு நீங்கவில்லை. பின்பு பெரியநாயகியைத் தரிசித்தோம்.

செளந்தர்யமெல்லாம், ஒருங்கே திரண்டு வடிவடுத்தாற் போல், அத்திருவுருவம் அமைந்துள்ளது. அப்பிராட்டியாரின் சாந்நித்யத்தை வர்ணிக்க வார்த்தையில்லை.

பின், சிதம்பரம் சென்றோம்.  பெருமானைத் தரிசித்தோம். அப்பெருமானைக் காணக் கண்கோடி வேண்டும். மனிதப்பிறவி வேண்டாமென்ற அப்பரடிகள் கூட, இப்பெருமானைப் பார்த்தல்லவோ மனிதப் பிறவியும் வேண்டும் என்றார்!

ஆனித் திருமஞ்சனத்திற்குக் கட்டாயம் செல்ல வேண்டும் என, நினைத்திருக்கிறேன். எல்லாம் ஈசன் திருவருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate