திங்கள், 25 நவம்பர், 2013

நாம் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறோமா?


நுால்: காந்தியின் ஆடை தந்த விடுதலை
ஆசிரியர்: பீட்டர் கன்சால்வஸ்
தமிழில்: சாருகேசி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பக்கம்: 159
விலை: ரூ.75/-

8ம் வகுப்பு படிக்கும் போது, நான் காந்தியை வாசிக்க துவங்கினேன். பள்ளி விட்டு வந்ததும் எனது முதல் வேலை, நுாலகத்தில் இருந்து எடுத்து வந்த, தலையணை அளவுக்கு காட்சியளிக்கும், காந்தியின் நுால் தொகுப்பை எடுத்து விட்ட இடத்தில் இருந்து படிப்பது  தான்.


தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளில், மொழிபெயர்ப்பு நுால்களை அரசே மிகப் பெரிய அளவில் செய்தது குறிப்பிடத்தக்கது. பின்னாளில், அதை தமிழகம் மறந்து விட்டது.

1960களில், அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்த போது,  காந்தியின் எழுத்துக்கள், பல்வேறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டன.

மகாத்மா காந்தி நுால்கள் என்ற தலைப்பில், காந்தி நுால் வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட  அந்த  புத்தகங்களில் சிலவற்றை நான் பழைய புத்தக கடைகளில் வாங்கி வைத்திருக்கிறேன்.

சமீபத்தில் அவற்றை,  பொள்ளாச்சி  நா.மகாலிங்கம் தமது  பொருட்செலவில், மண்டும் பதிப்பித்து காப்பாற்றினார். அரசு செய்ய வேண்டிய வேலை அது.

நிற்க. நான் முதலில் படித்தது, அவரது தென்னாப்ரிக்க அனுபவங்கள், அடுத்தது, சத்திய சோதனை, புலனடக்கமும் உணவும் ஆகியவை.

இன்று வரை எனது ஆதர்ச நாயகர் காந்தி  தான். வீட்டு வாசற்படியில் அமர்ந்து, அவரது சடலத்தின் புகைப்படத்தைப் பார்த்து, கண்ணீர் விட்ட நாட்களில், என் வீட்டார் என்னை அதிசய பிராணியைப் பார்ப்பது போல பார்த்தனர்.


இரவு நேரங்களில், நான் வீட்டின் தெருவாசலில் அமர்ந்து, தெருவிளக்கு வெளிச்சத்தில், காந்தியின் தொகுப்பைப் படிப்பதைப் பார்த்த, எதிர்வீட்டு அண்ணன், `நீ ரொம்ப நல்ல பையன்' என்று பாராட்டி விட்டு சென்றார்.

என் அம்மா, அடிக்கடி சொல்வது, `காந்தியைப் போல இருக்கணும்னு நினைக்காதே! ஊர்ல உன்னை ஏமாத்திருவானுவல' என்பது தான். இன்று வரையும் அந்த ஏச்சு மாறவில்லை.

காந்தியைப் படிப்பதை என் தாத்தா மனமார வரவேற்றார். என் தாத்தாவோடு பிறந்தவர்கள், பதினோரு பேர். அவர்களில், ஆறு பேருக்கு மேல் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்தனர்.

குடும்பம் சிதறிய  போது, பொருட்கள் பங்கிடப்பட்டன. அந்த பழைய கோட்டை போன்ற வீட்டில், சிரித்துக் கொண்டிருக்கும் காந்தி படம் தொங்கியது என், சிறு வயதிலேயே மனதில் பதிந்து விட்டது.

பல ஆண்டுகள் கழித்து, நான் காந்தியை வாசித்த போது, அந்த படம் என் மனதில் நிழலாடியது.

தாத்தாவிடம் கூறி, அவரது தங்கை மகள் வீட்டில் (எனக்கு பாட்டி முறை) இருந்த படத்தை வலுக்கட்டாயமாக கொண்டு வரச் செய்து, தார்சாவில் அதை மாட்டி அழகு பார்த்தேன்.

தார்சா வாசலில் உட்கார்ந்து அந்த படத்தைப் பார்த்து விட்டு, காந்தியைப் படிப்பதில் அவ்வளவு ஆனந்தம் அடைந்தேன்.

காந்தியைப் படித்ததால் நான் தெளிவோடு, பல சமயங்களில் குழப்பமும் அடைந்திருக்கிறேன்.

அதில், ஆடை அணிவதும் ஒன்று. 8ம் வகுப்பில், உலகியல் அறியாத வயதில், காந்தியைப் படித்தது, நடுத்தர வர்க்கத்தில் பிறந்தது, எப்போதும் கடன் சுமை துரத்தும் சூழலில் வாழ்ந்தது என, எல்லாம் சேர்ந்து என்னை, ஒவ்வொரு நிமிடமும், செலவு செய்வதில் விழிப்போடு இருக்க வைத்தன.

தீபாவளிக்கு ஒருமுறை மட்டுமே அப்போது ஆடைகள் வாங்குவோம். அதையே, ஆண்டு முழுவதும் அணிவோம்.

நான் முதன்முதலாக வேலைக்குச் சென்று கைநிறைய இல்லாவிட்டாலும், சட்டைப் பை நிறைய சம்பளம் வாங்கிய போது கூட, 120 ரூபாயை தாண்டி ஆடைகள் எடுக்க மனம் துணிந்ததில்லை.

பின், ஓரளவுக்கு வருவாய் உயர்ந்த போதும் கூட அதே மனநிலை தான்.

திருநெல்வேலி  டவுன், ஆரெம்கேவி ஜவுளிக் கடையில், வேலை பார்த்த ஆறு மாதங்களில், கழிவு  போக, குறைந்த செலவில் தான் ஆடைகள் எடுத்தேன்.

திருநெல்வேலி, ஓட்டல் ஜானகிராமில், அரவிந்த் மில்ஸ்‌ ஆடைகள், சல்லிசான விற்பனைக்கு வந்ததாக கேள்விப்பட்டு, நண்பர் மணி என்னையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

அங்கு, 250 ரூபாய்க்கு, ஒரு சட்டை எடுத்து எனக்கு கொடுத்தார். நான் அதை தொட்ட போதே, அது அவ்வளவு சுகமாக இருந்தது. பத்து ஆண்டுகளுக்கும் மேல் அதை நான் அணிந்து வந்தேன். சமீபத்தில் தான் அதை கழித்தேன்.

சென்னைக்கு வந்தபின், நங்கநல்லுாரில் தங்கியிருந்த போது, முதன்முறையாக, 350 ரூபாய்க்கு சட்டை, கால்சட்டை உள்ளிட்டவை எடுத்து வந்தேன்.

இவ்வளவு செலவழித்து நமக்கு ஆடை தேவையா என, அன்று   இரவு முழுவதும் என் மனம் என்னை வதைத்தது.

அந்த ஆடைகளை அணிந்த போதெல்லாம், மனம் குறுகுறு என, குற்ற உணர்வினால் அரித்தது.

ஆடைக்கு குறைந்த அளவிலும், செருப்புக்கு மிகக் குறைந்த அளவிலும் மட்டுமே, செலவழிக்க வேண்டும் என்பது என் தந்தையின் கொள்கை.

ஒரு ஆடை கிழியும் வரையிலும், உடுத்தி, கிழிந்த பின், அதை சட்டிபிடி துணியாகவோ, கால் மிதியடியாகவோ, துாசு துடைக்கும் துணியாகவோ பயன்படுத்தி, ஒன்றுக்கும் உதவாது என்ற நிலையிலும், அதை பழைய துணி வாங்குவோரிடம் அளிக்க வேண்டும் என்பதை அவர்  இன்று வரை கடைப்பிடித்து வருகிறார்.

சமீப காலம் வரை, நான்  சட்டைக்கு அதிகபட்சமாக 800 ரூபாயும், கால்சட்டைக்கு அதிகபட்‌சமாக 1200 ரூபாயும் தான் செலவழித்திருக்கிறேன்.

ஆயிரம் ரூபாய்க்கு மேல் சட்டை, கால்சட்டை இத்யாதிகளை வாங்கினேன்  என்று யாராவது சொன்னால், என் உள்ளம் இன்றும் பதறத்  தான் செய்கிறது.

காரணங்களை நான் முன்னமே சொல்லிவிட்டேன்.

எளிமையான ஆடை என்பதை எப்படி வரையறுப்பது? எளிமை என்பதை எதை வைத்து முடிவு செய்வது?

 அதேநேரம், விதவிதமாக வரும் ஆடைகளைப் பார்த்து மனம் ஏங்குகிறது. அதை அடக்கவும் துப்பில்லை.

என் நண்பர்களில், பலர், ஆடைகளுக்கு மட்டுமே மாதத்தில், ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர்.

ஆடை விஷயத்தில், நான் இன்னும் தெளிவுக்கு வரவில்லை. ஆனால், என் எல்லையையும் தாண்டவில்லை.

விலைவாசி விண்ணுக்கு உயர்ந்து விட்ட இக்காலத்தில், விலையை வைத்து மட்டுமே, எளிமையை நாம் எடைபோட்டு விட முடியாது என்பதையும்  உணர்ந்திருக்கிறேன்.

ஆனாலும், எளிமையான ஆடையை தேடும் என் பயணம், இன்னும் முடிவடையவில்லை.

அதற்கான தீர்வை நான் கண்டடையும் போது, என் மனம் சாந்தி பெறும்.

அந்த  தீர்வை நோக்கி செல்லும் ஊக்கத்தை எனக்கு மீண்டும் ஊட்டியது, காந்தியின் ஆடை தந்த விடுதலை நுால்.



சமகாலத்தில், தான் எதிர்கொண்ட பிரச்னைக்கு, காந்தி கண்ட தீர்வுகள், என்னை மலைக்க வைத்திருக்கின்றன.

அதிலும், உடை விஷயத்தில் அவர், இதுவரை யாரும் தொடாத உச்சத்தை தொட்டிருக்கிறார்.



இந்த நுாலில், காந்தியின் பேச்சுத் திறனை முதலில் விரிவாக எடுத்துக் கூறும் கன்சால்வஸ்,
  • ரோலண்ட் பார்த்தஸின், கருத்துப் பரிமாற்றத்துக்குப் பயன்படும் சொற்கள், அடையாளங்கள், சமிக்ஞைகள்
  • விக்டர் டர்னரின் சமூக கலாசார மாற்றங்களில் குறியீடுகளின் இடம் அல்லது அவை வகிக்கும் பங்கு
  • இர்விங் கோஃப்மேனின்,  தனிமனிதன் தன்னை அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தும் தன்மை 
ஆகிய மூன்று கோட்பாடுகளின் அடிப்படையில், காந்தியின் ஆடை பற்றி அலசுகிறார்.

இறுதியில் இந்த முடிவுகளுக்கு அவர் வருகிறார்:
  • காந்தியின் அடையாளப்படுத்துதல், ஒரு புரட்சி. ஆனால் அந்த அடையாளங்கள், சமூக அடிப்படையாகவும், வரலாற்று ஆராய்ச்சியின் முடிவிலும் தான் அமையும்.
  • காந்திய அடையாளங்கள், சுற்றியுள்ள சூழல்களில் இருந்துதான் உருவாகும். சூழல்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இயங்கும்.
  • காந்திய அடையாளங்களின் நோக்கம் உண்மையை தேடுதல்.
  • காந்திய அடையாளங்கள், தார்மீக பொறுப்பை உருவாக்குபவை. தப்பித்து செல்லுதல் என்ற எண்ணத்தை உருவாக்காதவை.
  •  ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்துதல்
  • தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள துாண்டுவது. மேம்பட்ட உலகைக் காண்பதில், பொறுமையோடு செயல்பட  வைப்பது.
கன்சால்வஸ் மிகப் பொருத்தமான வார்த்தைகளோடு அந்த புத்தகத்தை முடிக்கிறார்:

அடையாளம் உருவாக்குவோர் எல்லோரும் - பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஊழியர்கள், ஊடகப் பணியாளர்கள், அறிவாளிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், புதிய உலகம் சமைக்க விரும்பும் அத்தனை பேர் உட்பட, காந்திஜியின் சத்திய சோதனையில் இருந்து ஊக்கமும் துாண்டுதலும் பெற வேண்டும்.

இல்லை என்றால், நாம் போட்டி, சுயநலம், சுரண்டல் ஆகியவற்றால் பிளவுபட்ட உலகைத் தான் காண வேண்டியிருக்கும். அப்படியானால் நாம், தற்கொலையைத் தான் விரும்பித் தேர்ந்தெடுக்கிறோம்!

இப்படி முடிக்கிறார்.

நாம், இப்போது அதைத் தானே செய்து கொண்டிருக்கிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate