செவ்வாய், 26 நவம்பர், 2013

மறந்தாரா பெருமாள் முருகன்?


(இந்த சிறிய கட்டுரை, தி இந்து பத்திரிகையில் கடந்த அக்டோபர் 24ம் தேதி வெளியான, பாலும் அழுக்கும் என்ற தலைப்பில், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரைக்கு பதிலாக எழுதியது.

இதனை, ஓரிரு நாட்கள் கழித்து, தி இந்து, கட்டுரையின் கமென்ட் பகுதியில் பிரசுரித்தது.  நான் பதில் அனுப்பிய உடனே எனது முகநுால் கணக்கில் பிரசுரித்து விட்டேன்.

பார்க்க: பாலும் அழுக்கும்

இனி, எனது பதில்...)
------------------------------


பெருமாள் முருகன், சங்க இலக்கியம் பற்றிப் பேச வந்தவர், அப்படியே சைவத்தையும் சாடியிருக்கிறார். 17ம் நுாற்றாண்டில் இருந்த சுவாமிநாத தேசிகர் எழுதிய இலக்கணக் கொத்து என்ற நுாலை அதற்கு ஆதாரமாகக் காட்டியிருக்கிறார்.

  • இலக்கணக் கொத்து நுால் போல பல இலக்கண நுால்கள் அக்காலத்தில் புதிதாக தோன்றிய போதிலும், அவை அதிகளவில் பயிற்சியில் இல்லை. 
  •  மாறாக, தொல்காப்பியம், நன்னுால் போன்றவையே பண்டித உலகத்திலும், சைவ மடாலயங்களிலும் பயிற்சியில் இருந்தன.
  •  நன்னுாலுக்கு சங்கர நமச்சிவாயர் உரையும், அதற்கு மாதவச் சிவஞான சுவாமிகள் எழுதிய விருத்தியுரையும் அதற்கு உதாரணம்.
  •  இலக்கணக் கொத்து நுாலாசிரியர் சொன்னவை, அவரது கருத்துக்கள். சைவ உலகத்தின் கருத்தல்ல. 
  •  வடமொழி, தென்மொழி இலக்கணங்கள் குறித்தும் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு குறித்தும், சிவஞான போத பாஷ்யத்தில், மாதவச் சிவஞான சுவாமிகள் சுட்டிக் காட்டியிருப்பதை பெருமாள் முருகன் அறிவாரா?
  •  அப்படி அது சைவ உலகத்தின் கருத்துக்களாக இருந்தால், சைவ மடாலயங்களில் இருந்தும், நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் வாழ்ந்திருந்த சைவர்களான கவிராயர்கள் வீடுகளில் இருந்தும், சங்க இலக்கிய நுால்கள், உ.வே.சா.,வுக்கும், வையாபுரிப் பிள்ளைக்கும் எப்படி கிடைத்திருக்கும்?
  •  தமிழ்ப் பண்பாட்டிற்கு முற்றிலும், அன்னியர்களான, இஸ்லாமியர்கள், விஜயநகரத்தவர்கள், மராட்டியர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்தில், சைவ நுால்கள் மட்டுமின்றி, சங்க இலக்கிய நுால்களையும் ஓலைச் சுவடிகளாக காத்து வந்தவை, சைவ மடாலயங்களும், சைவக் கவிராயர் வீடுகளும் தானே?

இந்த வரலாறு பெருமாள் முருகன் அறியாததா?

‘மூத்தோர்கள்  பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்’

‘கற்றார் வழங்கு பஞ்சகாப்பியமும்’

என்று, சைவத்தை ஏற்றிப் போற்றும் தமிழ் விடு துாது நுாலில், தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

1 கருத்து:

Translate