சனி, 15 ஜூன், 2013

ஆறுமுக நாவலரின் தினசரி நியமங்கள்


(நான் 2000ல் திருநெல்வேலியில் இருந்த போது, டவுன் கீழரத வீதியில் உள்ள சிவஞான முனிவர் நுாலகத்திற்கு வாரத்தில் ஐந்து நாளாவது செல்வேன். அங்கு நுால்களை படித்த போது குறிப்பெடுத்திருந்தேன்.

அப்படி, 2001, ஜூலை 11ம் தேதி எடுத்த குறிப்பு தான் இது. `சித்தாந்தம்' இதழ்  தொகுப்பில் மலர் 8ல் இந்த விஷயம் அச்சிடப்பட்டிருந்தது

 யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான `இந்து சாதனம்' இதழில் இந்த குறிப்பு வெளியாகியிருந்தது. அதை `சித்தாந்தம்' இதழில் மறுபதிப்பாக வெளியிட்டிருந்தனர். ஆண்டினை  குறிக்கவில்லை.

ஆறுமுக நாவலர்

இதை வாசித்து பார்க்கும் போது, நமக்கு மிரட்சியும், வியப்பும் தோன்றுவதை  தவிர்க்க இயலாது.

சைவத்திற்கென்றே தனது வாழ்வை அர்ப்பணித்த ஒருவர் இவ்விதமாக தனது வாழ்வை ஒழுங்கு செய்து கொண்டது வியப்பில்லை.

 அவர் தனது வாழ்வில் கடைப்பிடித்த ஒழுக்கமும், சமரசமின்மையும், நேர்மையும் நாம் பின்பற்ற  வேண்டியவை. இதை வாசிக்கும் போது காந்தியும் நினைவுக்கு வருகிறார்.
அடைப்பு குறிக்குள் இருப்பவை எனது)

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தின நியமம்

  • 3  மணி முதல் 4 மணி வரை சிவத்தியானமும் சிவமூல மந்திர செபமும் தோத்திரமும் செய்க
  • 4 மணி முதல் 5 மணி வரை திருவள்ளுவர் பரிமேலழகர் உரையும் திருக்கோவையார் உரையும் படிக்க
  • 5 மணி முதல் 6 மணி வரை தந்த தாவனமும் (பல் விளக்குதல்), அநுட்டானமும் சிவாலய பிரதட்சிணமும் செய்க
பகல்
  • 6 மணி முதல் 8 மணி வரை ப்ரூப் பரிசோதிக்க
  •  8 மணி முதல் 10 மணி வரை சிவபூசை செய்து போசனம் பண்ணுக
  • 10 மணி முதல் 12 மணி வரை சைவ சித்தாந்தம் படிக்க
  • 12 மணி முதல் 2 மணி வரை புத்தக பரிசோதனம் செய்க
  • 2 மணி முதல் 4 மணி வரை உரை செய்க
  • 4 மணி முதல் 5:30 மணி வரை சமஸ்கிருதம் படிக்க
  • 5:30 மணி முதல் 6 மணி வரை உலாவுக
இராத்திரி
  • 6 மணி முதல் 6:30 மணி வரை அநுட்டானம் பண்ணி சிவாலய தரிசனம் செய்க
  • 6:30 மணி முதல் 9 மணி வரை புத்தக பரிசோதனம் செய்க
  • 9 மணி முதல் 10 மணி வரை புராண வசனம் எழுதுக
  • 10 மணி முதல் 3 மணி வரை நித்திரை செய்க
  • அமாவாசை பெளர்ணிமைகளிலும் பிரதமைகளிலும் சைவ சித்தாந்தம் முதலியவை படித்தல் ஒழித்து அவற்றிற்குரிய நேரத்திலே மற்றைய நுால்கள் வாசிக்க
  • சிவாலய பிரதட்சிணம் செய்யும் போது திருவாசக மனனம் பண்ணுக
  • உலாவும் போது சித்தியார், சிவஞானபோதம் மூலம் மனனம் பண்ணுக
  • ஜன்ம நட்சத்திரம் தோறும் (மாதம் தோறும் வரும் பிறந்த நட்சத்திர நாளன்று) விசேஷ பூசை செய்து அட்டோத்திரசத நாமார்ச்சனை பண்ணுக. மாகேசுர பூசை செய்க. சுப்பிரமணிய சுவாமிக்கு சகச்சிரநாமார்ச்சனை (சகஸ்ரநாம அர்ச்சனை) செய்விக்க
  • பிரதோஷம் தோறும் தேவாரதோத்திரத்தோடு சிவதரிசனம் செய்க
  • கார்த்திகை நட்சத்திரம் தோறும் கந்தரலங்கார தோத்திரத்தோடு சுப்பிரமணிய சுவாமி தரிசனம் செய்க
  • கார்த்திகை சோமவாரம் தோறும் சிவசந்நிதியில் நெய்விளக்கிடுக.
  • சமயகுரவர் நால்வர்க்கும் சேக்கிழார் நாயனார்க்கும் சந்தான குரவர் நால்வர்க்கும் திருவள்ளுவ நாயனார்க்கும் குருபூசை செய்க
  • வருஷந்தோறும் பெரியபுராணம், திருவிளையாடற்புாரணம், கந்தபுராணம், உபதேச  காண்டம், கோயிற்புராணம், திருவாதவூரடிகள் புராணம், காசிகண்டம் இவைகளை நியமமாக படிக்க
(இதன் பிறகு அவரது உடலை பேணும் நியமங்கள்)
  • நாடோறும் காலையில் சீரக கஷாயமேனும் நன்னாரிக் கஷாயமேனும் உட்கொள்க அல்லது சீந்தின்மாவேனும் சிவகரந்தைச் சூரணமேனும் பொற்றலைக்கையாந்தகரைச் சூரணமேனும் வல்லாரைச் சூரணமேனும் உட்கொள்க
  • வாரத்துக்கு இரண்டுதரம் தைலாப்பியாங்க ஸ்நானம் (எண்ணெய்க் குளியல்) செய்க 
  • கண்ணுக்கு வெண்மிளகிட்ட எண்ணெயிடுக
  • உள்ளங்கால்களில் வெண்ணெய் தேய்ப்பித்துக் கொள்க
  • மாதந்தோறும் முதற்பானு வாரத்திலே (ஞாயிறு) பேதி மருந்து உட்கொள்க
  • முதல்மாசத்துக் கணக்கெல்லாம் முடித்துக் கொள்க
  • பட்சம்தோறும் பஞ்சகற்பம் (கடுக்காய்த்தோல், கத்துாரி மஞ்சள், நெல்லிப்பருப்பு, மிளகு, வேப்பம் வித்து என்பன) தேய்த்துக் கொள்க
  • நாடோறும் பொற்றலைக்கையாந்தகரை நெய் கொண்டு கண்டசுத்தி செய்து கொள்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate