வியாழன், 30 ஏப்ரல், 2009

சீர் பல நல்கும் சித்திரை பௌர்ணமி

மது பாரதப் பண்பாட்டில் ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு பின்னணி இருப்பதை நாம் காண முடியும். விழாவிற்கான காரணங்கள் , விழாக் கொண்டாடினோர், பயனடைந்தோர் முதலிய செய்திகள் நமது புராணங்களில் காணப்படுகின்றன. இது ஒரு வகையில் வரலாற்றுப் பதிவு எனலாம். மகிழ்ச்சியை அளிக்கும் இவ்விழாக்களைத் தொடர்ந்து கொண்டாடுவதற்கான ஊக்கத்தை இவை நமக்கு அளிக்கின்றன.


“ஒவ்வொரு மதத்திலும் தத்துவம்,புராணம், சடங்கு என்று மூன்று பகுதிகள் உள்ளன. எந்த மதத்திற்கும் தத்துவமே சாரமாக அமைந்துள்ளது. இந்தத் தத்துவத்தை ஏறக்குறைய கற்பனைப் பாத்திரங்களான மாமனிதர்களின் வாழ்க்கை, கதைகள், உவமைகள் போன்ற அற்புதமான விஷயங்கள் மூலம் விளக்கி விவரிப்பது புராணம். சடங்கு என்பது தத்துவக் கருத்துகளுக்கு எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவான வடிவம் கொடுப்பது. உண்மையில் தத்துவத்தின் உருத் தோற்றமே சடங்கு’ என இதனை விளக்குவார் சுவாமி விவேகானந்தர்.(ஞானதீபம்- 1-பக்.117)

சித்திரை பௌர்ணமி

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று வரும் பௌர்ணமி சித்திரை பௌர்ணமி ஆகும்.

‘ராசிச் சக்கரத்திலுள்ள 12 ராசிகளில் 6 ஆவதான கன்னிராசியிலும், 7ஆவதான துலாராசியிலும் உள்ள நட்சத்திர மண்டலத்துக்கு ‘சித்திரை’ எனப் பெயர். அசுபதி முதலான 27 நட்சத்திரங்களில் 14 ஆவது நட்சத்திரம். சித்திரை பௌர்ணமியெனப் புகழ் பெற்ற தினத்தன்று சந்திரன் சித்திரை நட்சத்திரத்திலோ அதற்கு அடுத்தோ இருக்கும்’ எனக் கலைக் களஞ்சியம் கூறும்.

சித்ரா நதி

நெல்லை மாவட்டம் திருக்குற்றால மலையிலுள்ள சித்ரா நதி சித்திரை பௌர்ணமி அன்றுதான் உற்பத்தியானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் அந்நதியில் நீராடுவது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.

கல்வெட்டில் சித்திரை

திருச்சி மலைக்கோயிலின் தூணில் உள்ள கி.பி. 1011 ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று சித்திரைத் திருவிழாவின் 9 ஆவது நாளன்று பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய நிலம் தானம் அளிக்கப் பட்டதைக் குறிக்கின்றது.

திருச்சி நெடுங்கள நாதர் திருக்கோயிலில் உள்ள அதே ஆண்டுக் கல்வெட்டு, சித்திரைத் திருவிழாவின் போது 550 சிவயோகிகளுக்கு அன்னதானம் செய்ய நிலம் தானம் தரப்பட்டதைச் சொல்கிறது.

இந்திர விழா

பூம்புகாரில் நடந்த இந்திர விழா சித்திரை பௌர்ணமியில் தான் தொடங்கப்பட்டது. இவ்விழாவை சோழன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் துவக்கி வைத்தான் என மணிமேகலை கூறுகிறது.

மகாபாரதத்தில்..

பாரதப் போர் முடிந்து தர்மர் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் அசுவமேத யாகம் செய்ததும் இந்த நாளில் தான்.

சித்திரை மூலிகை

சித்திரை பௌர்ணமி அன்று நிலவின் ஒளியில் பூமியில் ஒருவகை உப்பு பூரித்து வெளிக்கிளம்பும். இதை பூமி நாதம் என்பர். இந்த உப்புத் தூள் மருந்துக்கு வீரியமளிக்கும். இளமையையும் மரணமில்லாத வாழ்வையும் கொடுக்கும். சித்தர்கள் இதை பௌர்ணமி என்பர்.

கன்னியாகுமரியில்...

கன்னியாகுமரியில் சந்திரோதயமும், சூரிய அஸ்தமனமும் சித்திரை பௌர்ணமி அன்று ஒரே நேரத்தில் நடக்கும்.

சித்திரகுப்தரும் சித்திரை பௌர்ணமியும்

சித்திரை பௌர்ணமியன்று தமிழகம் முழுவதும் சித்திரகுப்தர் வழிபடப்படுகிறார். யமதர்மராஜாவின் கணக்கரான இவர் சித்திரை பௌர்ணமியன்றுதான் அவதரித்தார் என புராணங்கள் கூறும்.

கயிலையில்...

கயிலாயத்தில் ஒருநாள் பரமேஸ்வரன் உமையம்மையோடும் வீற்றிருந்தார். திருமால், பிரமன், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் பெருமானைத் தரிசித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் தர்மத்தின் பாதுகாவலனான கூற்றுவன் எனும் யமன் சுவாமியைத் தரிசிக்க வந்தான்.

சிவபிரானார் அவனை நோக்கி புன்னகைத்து “தர்மனே! உன் முகம் வாட்டம் அடைந்துள்ளதன் காரணம் என்ன?” என்று கேட்டார்.

யமனும் “சுவாமி! நாளுக்கு நாள் எனது பணியின் பாரம் கூடிக் கொண்டே இருக்கிறது. உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை நான் ஒருவனே கணக்கிட வேண்டியதிருக்கிறது. அக்கணக்குகளை ரகசியமாகவும் முறையாகவும் பார்க்கத் தெரிந்த ஓர் உத்தமன் எனக்குத் துணையாய் இருந்தால் நான் நிம்மதியாக இருப்பேன்” என்றான்.

பெருமானும் பிரமனை நோக்கி “அயனே! இவன் கோரிக்கையை நேரம் வரும் போது நிறைவேற்ற ஆவன செய்வாயாக” என்றருளினார்.

பிரமனும் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டான்.
சித்திரகுப்தர் அவதாரம்

இஃது இவ்வாறிருக்க ஒருநாள் சூரியன் தனது தேரில் ஏறி கிழக்கு திக்கிலே உதயமானான். அவனது பொன்மயமான ஒளிக் கதிர்கள் பட்டு கடலின் அலைகள் பொன்னிறம் பெற்றன. பிரமன் விருப்பத்தால் அச்சமயம் கடலில் பேரழகு வாய்ந்த மங்கை ஒருத்தி தோன்றினாள். அவள் பெயர் நீலாதேவி. சூரியன் அவளைக் கண்டான். இருவரும் காதல் கொண்டனர். கூடிக் களித்தனர். ஒரு சித்திரை பௌர்ணமியன்று நீலாதேவிக்கு பிறந்தவர்தான் சித்திரகுப்தர்.

கயிலாயத்தில் ஒருநாள் சிவபிரான் ஒரு பொன்னாலான பலகையில் ஓர் உருவத்தை வரைந்தார் என்றும், அச்சித்திரம் உயிர்பெற்றது என்றும் அவரே சித்திரகுப்தர் என்றும் மற்றுமொரு புராணம் சொல்லும்.

யமன் பிரமனிடம் வேண்ட அவர் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் தவமிருந்து தனது உடலிலிருந்து சித்திரகுப்தரைத் தோற்றுவித்தார் எனவும், பிரமனின் காயத்திலிருந்து (உடலில் இருந்து) தோன்றியதால் சித்திரகுப்தருக்கு காயஸ்தர் என ஒரு பெயர் உண்டு எனவும் வட இந்தியாவில் சொல்லப்படுகிறது.
தமிழக கிராமங்களில் இந்திரன் இந்திராணி வளத்த பசுவுக்குப் பிறந்தவர் சித்திரகுப்தர் எனக் கூறப்படுகிறது

சித்திரகுப்தர் படைப்புத் தொழில் நடத்தல்

குழந்தைக்கு செய்யவேண்டிய சடங்குகளை சூரியன் செய்வித்தான். சித்திரகுப்தர் கற்க வேண்டிய அனைத்துக்கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். தன் தந்தையின் அறிவுரைப் படி சிவபிரானை நோக்கித் தவமிருந்தார். இவரின் தவத்திற்கு மனம் மகிழ்ந்த சிவனார் தோன்றி “சித்திரகுப்தா! நீ நினைத்த எல்லாம் நடக்கும்” என வரமருளி மறைந்தார்.

சிவனார் கொடுத்த வரத்தை சோதனை செய்வதற்காக சித்திரகுப்தர் படைப்புத் தொழிலை நடத்த ஆரம்பித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவர்கள் சூரியனுக்கு இத்தகவலை சொன்னார்கள். சூரியனும் தன் மகனை அழைத்து “மகனே! படைப்புத் தொழில் என்பது பிரமா செய்யவேண்டிய தொழிலாகும் என்பது சிவபிரான் விதித்த நியதியாகும். அதை நீ மாற்றுவது முறையாகாது. உனக்குரிய பணி காத்திருக்கின்றது. நேரம் வரும்போது நீ அதை ஏற்றுத் திறம்பட நடத்துவாயாக” என்று அறிவுரை கூறினான்.சித்திரகுப்தரும் அதை ஏற்றுக் கொண்டு படைப்புத் தொழிலை கைவிட்டார்.

சித்திரகுப்தர் திருமணம்

இவருக்கு மணம் செய்விக்க வேண்டிய காலம் வந்ததும் மயன்பிரம்மாவின் மகள் பிரபாவதி, மனுபிரம்மாவின் மகள் நீலாவதி, விசுவபிரம்மன் மகள் கர்ணிகி ஆகிய மூன்று பெண்களை சூரியன் சித்திரகுப்தருக்கு மணம் செய்வித்தான்.

சித்திரகுப்தர் கணக்கராதல்

சிறிது காலம் கழித்து தேவர்கள் சித்திரகுப்தரிடம் வந்து “தாங்கள் யமதர்மராஜாவிடம் கணக்கராக அமர்ந்து உயிர்களின் பாவபுண்ணியங்களை எழுதித் தரவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர். சித்திரகுப்தரும் அவ்வாறே செய்வதாகக் கூறினார்.

யமனின் பட்டணமான வைவச்சுத நகரம் விசுவகர்மாவால் நிர்மாணிக்கப் பட்டதாகும். இந்நகரம் வானில் விரும்பிய இடங்களுக்கெல்லாம் செல்ல வல்லது. இந்நகரத்தின் மையத்தில் யமன் தர்பார் இருக்கும். இதில் முனிவர்களும் சித்தர்களும் தேவர்களும் இருப்பர்.

இத்தகைய செழிப்புள்ள நகரத்திற்குச் சென்று சித்திரகுப்தர் யமனைக் கண்டு நடந்ததைக் கூறி கணக்கராகப் பணியாற்ற வந்திருப்பதைச் சொன்னார். யமனும் மிக மகிழ்ந்து சிவபிரானைப் போற்றி வழிபட்டு இவருக்கு கணக்கர் பதவியை வழங்கினான்.

சித்திரகுப்தர் பிரமனின் புத்திரர்களான சாரணர்கள் என்பவர்கள் மூலமாக உயிர்களின் பாவ புண்ணியங்களை அறிந்து ரகசியமாக எழுதிக் கொள்வார். யமன் சித்திரகுப்தரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான்.

கணக்குகளை ரகசியமாக வைத்துக் கொள்வதால் இவர் ’சித்திரகுப்தர்’ என அழைக்கப்படுகிறார். சிவபிரான் பொன் பலகையில் வரைந்தபோது பிறந்ததால் இப்பெயர் பெற்றார் என்றும் புராணங்கள் கூறும்.

சித்திரகுப்தர் திருவுருவம்

சூரியனுக்கும் நீலாதேவிக்கும் பிறந்த இவர் யம தர்ம ராஜனுக்கு உதவியாக இருந்து உயிர்களின் பாவ புண்ணியக் கணக்குகளையும் ஆயுளையும் கணித்துக் கணக்கெழுதி வருகிறார். இவர் வலக்கையில் எழுத்தாணியும் இடக்கையில் ஏடும் வைத்துக் கொண்டு வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்துக் கொண்டு சுகாசன நிலையில் வீற்றிருப்பார். அக்ர சந்தானி என்பது இவர் வைத்துள்ள கணக்குப் புத்த்கத்தின் பெயர். நவக்கிரகங்களுள் கேதுவுக்கு அதிபதி இவரே.

(சித்திரகுப்த) நயினார் நோன்புக் கதை

பண்டைத் தமிழகத்தில் ‘சிலம்பு கழி நோன்பு’ ஒன்றிருந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். இன்றைய தமிழகத்தில் மாசி-பங்குனி நோன்பு, ஔவையார் நோன்பு ஆகிய நோன்புகள் உள்ளன. இவற்றோடு சித்திரகுப்த நயினார் நோன்பும் மிகப் பிரசித்தமானது.

முத்திபுரியில் கலாவதி என்றொரு இளவரசி இருந்தாள். ஒரு சித்திரை பௌர்ணமியன்று அவள் தன் தோழிகளோடு கங்கையில் நீராடச் சென்றாள். அப்போது வழியில் இருந்த ஒரு சோலையில் பெண்கள் சிலர் பூஜை செய்யும் ஒலி கேட்டது. கலாவதி விரைந்து அச்சோலைக்குள் சென்று பார்த்தாள். அங்கே தேவ கன்னியர்கள் சிலர் பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவளைக் கண்ட தேவ கன்னி ஒருத்தி அவளருகே வந்தாள். கலாவதி அவளிடம் “நீங்கள் யார்? இங்கே என்ன பூஜை செய்கிறீர்கள்?” என்று வினவினாள்.

அவளும் “நாங்கள் தேவலோகத்துப் பெண்கள். இந்தப் பூஜைக்கு சித்திரகுப்தர் நோன்பு என்று பெயர். இதைக் கடைப்பிடித்தால் நாம் சகல செல்வங்களும் பெறலாம். மனம் நிறைந்த கணவர் கிடைப்பார்” என்றாள். கலாவதியும் அந்த தேவ கன்னியிடம் பூஜையின் முறைகளைக் கேட்டுக் கொண்டு கடைபிடித்தாள். அதன் பயனாக ஆகமபுரியின் அரசனான வீரசேனன் கலாவதியின் அழகைக் கேள்விப்பட்டு அவளை மணம் புரிந்து கொண்டான்.

சித்திரகுப்த நயினார் நோன்பு முறை

சித்திரை பௌர்ணமியன்று அதிகாலை எழுந்து நீராடி தூய ஆடைகள் அணிந்து நீறு (விபூதி) அணிந்து வீட்டின் பூஜை அறையிலோ அல்லது தனியான இடத்திலோ நோன்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட இடத்தில் மாக்கோலம் போட வேண்டும். அம் மாக்கோலத்தில் தெற்கு நோக்கிய தேரில் எழுத்தாணி ஓலை இவற்றைக் கையில் கொண்ட சித்திரகுப்தர் திருவுருவம் வரைந்து கொள்ள வேண்டும்.

அதன் முன் ஒரு சிறு பித்தளை அல்லது வெள்ளி அல்லது தங்கக் குடத்தில் நூல் சுற்றி குடத்தின் வாயில் மாவிலை வைத்து அதில் தேங்காய் வைத்து குடத்திற்கு வண்ண ஆடை உடுத்தி கூர்ச்சம் சார்த்தி அக்கும்பத்தில் சித்திரகுப்தரை ஆவாகனம் செய்ய வேண்டும். பின்பு ஓர் காகிதத்தில்,

கத்துநீர்க் கடற்பரப்பில் காண்எழில் நீலா தேவிப்
பத்தினிப் பெண்முயங்கப் பரிதியின் சேயாய்த் தோன்றும்
சித்திரகுப்தர் பேரின் தேவுஉனை நோற்பார்க் கென்றும்
நத்துநற் பேறது அனைத்தும் நயந்தருள் புரிவாய் போற்றி

எனும் பாடலை எழுதி அதற்கு மஞ்சள் காப்பிட்டு சுருட்டி கும்பத்தின் முன் வைக்க வேண்டும். விதைநெல், எழுத்தாணி(பேனா), மாங்காய், பழங்கள், பானகம், பட்சணங்கள் முதலியன வைத்து தாமரை முதலிய பூக்களால் சித்திரகுப்தரை அர்ச்சிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம், எள்ளினால் செய்த உணவுப் பண்டங்கள் ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். பின்பு தூப தீபம் கற்பூரம் காண்பித்து சித்திரகுப்தர் நோன்புக் கதை வாசித்து தோத்திரப் பாடல்களைப் பாடி காகிதத்தில் எழுதி சுருட்டி வைத்த பாடலையும் வாசித்து விதைநெல், எழுத்தாணி, ஆடை இவற்றோடு அன்னத்தையும் தானம் செய்து உண்டு முடிக்க வேண்டும். வழிபாட்டின் முடிவில் பாயசம் நிறைந்த வெண்கலப் பாத்திரம் தானமாகக் கொடுப்பது வழக்கம்.

முதல் முறை விரதம் தொடங்கும் போது 5 அல்லது 9 கலசங்கள் வைத்து அவைகளில் சித்திரகுப்தரையும் எட்டு திக்கு பாலகர்களையும் அல்லது 4 திக்கு பாலகர்களையும் ஆவாகனம் செய்து வழிபட வேண்டும்.

அன்று முழுதும் உப்பிடாத உணவு உண்ண வேண்டும். பால், தயிர், நெய், மோர் இவற்றை உண்ணக் கூடாது.

சித்திரகுப்தர் மரபினர்

சித்திரகுப்தர் – கர்ணிகை தம்பதியினரின் வழியினர் என கருணீகர் குலத்தினர் தம்மைக் கூறிக் கொள்கின்றனர். இவர்களின் தோற்றம் குறித்து ஸ்ரீ கருணீக புராணம், ஆதித்ய புராணம் முதலியவற்றில் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் தமிழகத்தில் கருணீகர் எனவும், கேரளத்தில் மோனன் (மேனன்) எனவும், வங்காளத்தில் காயஸ்தர் எனவும் அழைக்கப் படுகின்றனர். இவர்களிடம் 64 வகையான கோத்திரங்கள் உள்ளன. 32 மடங்கள் உள்ளன.

”கர்ணம்+ஈகம்+அர் = கருணீகர். கர்ணம்- காது; ஈகம் – தன்மைப் பொருட்டாய் வருவதோர் வடசொல்; கண்ணால் கண்டறியப் பெறாதன செவியான் அறிந்து நம்பப் பெறுதல் போலப் பூர்வ அரசர்கள் தாம் கண்ணுறப் பெறாதவற்றை இவர்கள் கணக்குகளான் மெய்பெற அறிந்து நீதி செலுத்தலின் இப்பெயர் பெற்றனர்” என்பார் கருணீக புராணம் இயற்றிய அ.வரதநஞ்சைய பிள்ளை.

தமிழகத்தில் ’பிள்ளை’ பட்டம் இட்டுக் கொள்ளும் இவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் கர்ணம் எனும் கணக்கப் பிள்ளை உத்தியோகம் பார்த்து வந்தனர்.

’தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ எழுதிய எட்கர் தர்ஸ்டன் இவர்களை ’கணக்கர்’ என்றே கூறுகிறார் என்பது பிள்ளையவர்களின் கூற்று.

சித்திரகுப்தர் கோயில்

தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கென தனியாக ஒரு கோயில் நெல்லுக்காரத் தெருவில் அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காலப்போக்கில் அழிந்து போன இக்கோயிலை 1911ல் கருணீக மரபைச் சேர்ந்தவர்கள் மீட்டு புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வித்தனர். இங்கு சித்திர குப்தருக்கு உற்சவ விக்கிரகம் உள்ளது. இக்கோயிலை கருணீக குலத்தினர் பராமரித்து வருகின்றனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கஜூரகோவில் சூரியன் கோயில் வளாகத்தில் சித்திரகுப்தருக்கென தனிக்கோயில் உள்ளது. இது கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் சந்தேல மன்னர்களால் கட்டப்பட்டது.

இவை தவிர தமிழகத்தில் ஆங்காங்கே சித்திரகுப்தருக்கு கோயில்கள் உள்ளன. பல இடங்களில் இவர் உருவத்திற்குப் பதிலாக பீடம் ஒன்றை வைத்து அதையே சித்திரகுப்தராக பாவித்து வழிபடும் மரபும் இருந்து வருகின்றது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்க வாசகர் கோயிலில் சிவபிரான் சந்நிதிக்கு முன் சித்திரகுப்தருக்கு தனிச் சந்நிதி உள்ளது. சித்திரை பௌர்ணமி நன்நாளில் ஆயுள் விருத்தி, சஷ்டியப்த பூர்த்திக்கான ஹோமம் இவரது சந்நிதி முன் நடைபெறுகின்றன.

கோவை மாநகரில் சிங்காநல்லூர் – வெள்ளலூர் பாதையில் சித்திர புத்திர எமதர்ம ராஜா கோயில் உள்ளது. கருவறையில் எமன் தனது வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். அருகில் சித்திரகுப்தர் இருக்கின்றார். சித்திரை பௌர்ணமியன்று இங்கு சித்திரை வாணிப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் சாலையில் ஒன்பதாவது கி.மீ.ல் கோடாங்கிப்பட்டி உள்ளது. இங்கு சித்திரகுப்தருக்கு தனிக்கோயில் உள்ளது. இங்குள்ள சித்திரகுப்தரிடம் வேண்டி வேண்டுதல் நிறைவேறினோர் பசுவை நேர்ந்து விடுகின்றனர். அல்லது இங்குள்ள பசுக்களுக்கு உணவளிக்கின்றனர். சித்திரை பௌர்ணமியன்று விசேஷ பூஜைகள் இங்கு நடக்கின்றன.

சிவாலயங்களில்.......

அசுரர்களின் கொட்டத்தை அடக்க சிவபிரான் தமது கோபத்திலிருந்து தமனர் எனும் பெயருடைய பைரவரை தோற்றுவித்தார். தமனரும் அசுரர்களை அடக்கினார். மனம் குளிர்ந்த சிவனார் தமனரை நோக்கி “நீ பூமியில் செடியாகத் தோன்றுவாய். உன் தளிர் இலைகளால் சித்திரை பௌர்ணமி அன்று எம்மை பூஜிப்பவர்கள் மேலான நிலையை அடைவார்கள்” என்று வரம் அருளினார்.

சித்திரை பௌர்ணமியன்று நாடு செல்வ செழிப்புடன் விளங்க தமன உற்சவம் செய்ய வேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. தமனம் என்றால் மருக்கொழுந்து. அன்றைய தினம் யாகசாலையின் மத்தியில் சர்வதோபத்திரம் எனும் குண்டம் அமைத்து அதில் சிவபிரானை அர்ச்சனை செய்து ஹோமம் செய்து மருக்கொழுந்தை பூஜித்து கோயிலை வலம் வந்து சிவபெருமானுக்கு சார்த்த வேண்டும்.

விஷ்ணு கோயில்களில்.....

ஒரு சமயம் ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் தமது மனைவிகளுடன் குளம் ஒன்றில் நீராடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு முனிவர் அக்குளத்தில் நீராட இறங்கினார். ஹூஹூ ஒரு முதலை வடிவெடுத்து அவர் காலை கவ்வினான். இதை அறிந்த முனிவர் கோபம் கொண்டு அவன் முதலையாகட்டும் என சபித்தார்.

இந்திரத்யும்னன் என்ற மன்னன் நாராயண பூஜை செய்து கொண்டிருந்த போது அகத்தியர் அவனைக் காண்பதற்கு வந்தார். மன்னன் கவனிக்காததைக் கண்ட அகத்தியர் அவன் யானையாகப் போகட்டும் என சபித்தார்.

ஹூஹூ ஒரு குளத்தில் முதலையாக மாறி வசித்து வந்தான். யானையாக மாறிய மன்னன் அக்குளத்தில் இருந்த தாமரை மலரைப் பறித்து விஷ்ணுவிற்குப் பூஜை செய்வான். ஒருநாள் முதலை யானையின் காலைப் பிடித்து கவ்வ யானை “ஆதிமூலமே” என்று கதறியது. விஷ்ணு கருடன் மீது வந்து தமது சக்கராயுதத்தால் முதலையைக் கொன்று யானையை மீட்டார். இருவரும் சாப விமோசனம் எய்தினர்.

இந்த நிகழ்ச்சி ’கஜேந்திர மோட்சம்’ எனப் புராணங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் பலபடியாக அனுபவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது சித்திரை பௌர்ணமியன்று என்பதால் அன்று அனைத்து விஷ்ணுவாலயங்களிலும் கஜேந்திர மோட்ச விழா நடைபெறும்.

நெல்லை மாவட்டம் அத்தாள நல்லூரில் இந்த விழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. அவ்வூர் பெருமாளுக்கு ‘கஜேந்திர வரதர்’ என்றே பெயர்.

மதுரையில்.......


ஆலவாய்ச் சொக்கர் அங்கயற்கண்ணியொடும் கோயில் கொண்டருளிய மதுரையில் சித்திரை பௌர்ணமி பெருந்திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.

ந்திரன் ஒருநாள் தனது அரசவையில் அரம்பையர்களின் நாட்டியத்தைக் கண்டு களித்திருந்தான். அப்போது அவன் குரு பிரகஸ்பதி அங்கு வந்தார். பெண்களின் அழகில் மயங்கியிருந்தமையால் இந்திரன் குருவைக் கவனித்து மரியாதை செலுத்தவில்லை. பெண்கள் மையலில் பட்டவனுக்கு அறிவு வேலை செய்யுமோ எனும் பொருள்பட பரஞ்சோதி முனிவர் “செய்யதாள் வழிபாடின்றித் தேவர்கோன் இருந்தான் அந்தோ, தையலார் மயலில் பட்டோர் தமக்கு ஒரு மதி உண்டாமோ” ( திருவிளையாடற்புராணம்- இந்திரன் பழி தீர்த்த படலம்-5) என்பார்.

இதைக்கண்ட பிரகஸ்பதி விரைந்து அரசவையை விட்டு வெளியேறினார். இந்திரன் பதைத்து அவரைத் தேடினான். எங்கும் அவர் அகப்படவில்லை. தன் அறியாமையை நொந்து கொண்ட இந்திரன் வேறு குருவைத் தேடலானான். பிரமனிடம் ஆலோசனை கேட்டான். அவன் அறிவுரைப் படி துவட்டா என்ற அசுரனின் மகன் விச்ரவசுவை குருவாகக் கொண்டான்.

புதிய குருவை தேவர்களின் நலனுக்காக ஒரு யாகம் செய்யச் சொன்னான். விச்ரவசு அந்த யாகத்தில் வெளியில் தேவர்களுக்கு நல்லது செய்வது போல மந்திரங்கள் சொல்லி மனதிற்குள்ளே அசுரர்களுக்கு நன்மை சேரும்படி நினைத்தான். இதையறிந்த இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் விச்ரவசுவின் மூன்று தலைகளையும் கொய்தான். பிரமஹத்தி தோஷம் இந்திரனைப் பிடித்தது. தேவர்கள் அத்தோஷத்தை நீரில் நுரையாகவும், பெண்களிடம் பூப்பாகவும், மரத்தில் பிசினாகவும், மண்ணில் உப்பாகவும் போகச் செய்து கழித்தனர்.

தன் மகன் இந்திரனால் கொல்லப்பட்டதை அறிந்த துவட்டா ஒரு யாகம் செய்து அதில் விருத்திரன் என்ற அசுரனை உருவாக்கி இந்திரனைக் கொல்ல ஏவிவிட்டான்.

விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் நடந்த போரில் இந்திரனின் வஜ்ராயுதம் முனைமழுங்கிப் போனது. தப்பித்த இந்திரன் பிரமனிடம் சென்றான். இருவரும் வைகுண்டம் சென்று விஷ்ணுவிடம் கேட்டனர். அவர் “பாற்கடல் கடைந்த போது அசுரர்களும் தேவர்களும் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் ஒப்படைத்திருந்தனர். வெகுகாலம் இருவரும் வராமல் போகவே அவர் அவற்றை விழுங்கி முதுகெலும்பில் வைத்திருக்கின்றார். அவரிடம் சென்று அவரது முதுகெலும்பைக் கேள். அதை வைத்து புதிய வஜ்ராயுதம் செய்து விருத்திரனைக் கொல்வாயாக” என்றார்.

இந்திரனும் ததீசி முனிவரிடம் சென்று தான் வந்த நோக்கத்தை சொன்னான். ததீசி முனிவரும் “ நாய், நரி, கழுகு, பேய் இவையெல்லாம் இந்த மனித உடலைத் தின்ன ஆசை கொண்டிருக்கின்றன. இதை எப்படி நம் உடல் என்று கூற முடியும்? பாம்பின் சட்டை, பறவைகளின் கூடு போல இந்த உடல் நிலையற்றது. பிறருக்குத் துன்பம் நேரிடும்போது அதைத் தீர்ப்பதில் இந்த உடலை விட்டால்தான் என்ன? அதுவன்றோ உடல் பெற்ற நோக்கம்?” என்று கூறித் தன் உயிரை சுழுமுனை நாடி வழியாக வெளியேற்றி சுவர்க்கம் சென்றார்.

அவர் உடலில் இருந்து முதுகெலும்பினை எடுத்து புதிய வஜ்ராயுதம் செய்து விருத்திராசுரனுடன் இந்திரன் போரிட்டான். அசுரன் கடலில் போய் ஒளிந்து கொண்டான். இந்திரன் அகத்திய முனிவரிடம் உதவுமாறு வேண்டினான்.

அகத்தியரும் விருத்திரன் ஒளிந்திருந்த கடல் நீரைத் தமது தவ வலிமையால் உழுந்தளவாக்கி உண்டார். பரஞ்சோதி முனிவர் அறவழியிலன்றித் தீய வழியில் சம்பாதிப்பவர்களின் செல்வம் நொடியில் காணாமல் போய் விடுவதைப் போல கடல் நீர் காணாமல் போனது என்கிறார்.

“அறம் துறந்து ஈட்டுவார் தம் அரும்பெறல் செல்வம் போல
வறந்தன படுநீர்ப் பௌவம்”
(இந்திரன் பழி தீர்த்த படலம் – 54)

கடலுக்குள் ஒளிந்திருந்த விருத்திரனை வஜ்ராயுதத்தால் கொன்ற இந்திரனை பிரமஹத்தி தோஷம் பிடித்தது. அதற்கு அஞ்சி அவன் ஒரு தாமரைத் தண்டினுள் ஒளிந்து கொண்டான்.

தேவர்கள் அரசன் இல்லாததனால், பூமியில் 100 அசுவமேத யாகம் செய்த நகுஷன் என்ற அரசனை இந்திரனாக்கினர். அவன் தனது நிலையை மறந்து இந்திராணி மீது மையல் கொண்டு தூது விடுத்தான். இந்திராணி பிரகஸ்பதியிடம் யோசனை கேட்டாள். அவர் சொன்னபடி ‘நகுஷன் சப்த ரிஷிகள் பல்லக்கில் தாங்கி வர என்னிடம் வர வேண்டும்’ என்று சொல்லிவிட்டாள்.

நகுஷன் மகிழ்ந்து சப்த ரிஷிகளையும் அழைத்து தன்னைப் பல்லக்கில் தாங்கி வர வேண்டுமென்று கூறினான். அவனது இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்து கொண்ட ரிஷிகள் சம்மதித்தனர். இந்திராணியைக் காணப் போகிறோம் என்ற மோகத்தில் ’வேகமாகச் செல்லுங்கள்’ என்பதற்காக ‘சர்ப்ப சர்ப்ப’ என்றான் நகுஷன்.

முன்னாலிருந்த அகத்தியர் கோபம் கொண்டு “நீ சர்ப்பம் ஆகக் கடவாய்” என்று சாபமிட்டார். நகுஷனும் பாம்பாகி பூமியில் விழுந்தான். அறிவில்லாத அற்ப புத்தி உடையவர்களுக்கு அவர்களது செல்வமே பகையாகிவிடும் என்கிறார், பரஞ்சோதி முனிவர்.

“அறிவிலாத அற்பரானவர்க்குச் செல்வமல்லது பகை வேறுண்டோ?” ( இந்திரன் பழி தீர்த்த படலம் – 65)

நடந்ததை அறிந்த பிரகஸ்பதி இந்திரனை அழைத்து வந்தார். ஆயினும் அவனது தோஷம் நீங்கவில்லை. கங்கை,யமுனை முதலான தீர்த்தங்களில் நீராடியும் காசி, காஞ்சி,கேதாரம் முதலிய தலங்களைத் தரிசித்தும் பிரமஹத்தி தோஷம் நீங்கவில்லை.தென்திசை நோக்கி வந்தவனுக்கு ஓரிடத்தில் அவன் சுமை நீங்கியது போல் உணர்ந்தான்.

கடம்ப மரங்கள் நிறைந்த அந்தக் காட்டில் நுழைந்த இந்திரன் கண்ணில் ஒரு கடம்ப மரத்தடியில் சுயம்புவாய்த் தோன்றிய ஒளி பொருந்திய லிங்கம் ஒன்று தென்பட்டது. அந்தத் திசை நோக்கி அடியற்ற மரம் போல வீழ்ந்து வணங்கினான் இந்திரன். அருகில் சென்று வழிபட்டான். தேவ தச்சனை அழைத்து குளிர்ந்த விமானம் செய்வித்து அதனை இறைவனுக்கு அர்ப்பணித்தான். பின்பு ஆகம விதிப்படி பூஜைகள் செய்து போற்றி வழிபட்டான். ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணியொடும் விடை மேல் தோன்றி இந்திரனுக்கு திருக்காட்சி அளித்தார்.

இடர்உறப் பிணித்த இந்தப் பழியினின்று என்னை ஈர்த்து உன்
அடியிணைக்கு அன்பன் ஆக்கும் அருட்கடல் போற்றி சேற்கண்
மடவரல் மணாள போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி
சுடர்விடு விமானம் மேய சுந்தர விடங்க போற்றி

பூசையும் பூசைக்கு ஏற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியில் பேறு நல்கும்
ஈசனும் ஆகிப் பூசை யான்செய்தேன் எனுமென் போத
வாசனை அதுவும் ஆன மறைமுதல் அடிகள் போற்றி

என்று இறைவனைப் போற்றிப் பணிந்து வழிபட்டான் இந்திரன்.

”இந்திரா! நீ வேண்டும் வரம் யாது?” என்று வள்ளல் கேட்க, இந்திரனும் “சுவாமி! இந்தக் கடம்ப வனத்தினுள் நுழைந்த போதே என் பிரமஹத்தி தோஷம் நீங்கிவிட்டது. யானும் என் வினை நீங்க தேவரீரை பூஜித்தேன். எப்போதும் தேவரீரது திருவடிச் சிந்தனையிலேயே அடியேன் தோய்ந்திருக்க வேண்டும்.” என்று விண்ணப்பித்தான்.

முக்கண் வரதரும் கருணை பொங்க இந்திரனை நோக்கி
“ பருவங்களில் சிறந்த வேனில் பருவம், மாதங்களில் சிறந்த மேஷ மாதம், நட்சத்திரங்களில் சிறந்த சித்திரை, திதிகளில் சிறந்த பௌர்ணமி இவை எல்லாம் பொருந்திய சித்திரை சித்திரை தோறும் என்னை இங்கு வந்து வழிபடுவாயாக. அது ஒரு வருடம் முழுதும் அர்ச்சித்த பலனை உனக்கு தரும்.
“இப்போது நீ சுவர்க்கம் சேர்ந்து போகம் அனுபவித்து, பிறகு பிரம விஷ்ணு பதங்களை அனுபவித்து மலபரிபாகம் வரும்போது உனக்கு வீடுபேறு வழங்குவோம்” என்று வரமளித்து மறைந்தார்.

இந்திரனும் இறைவனை வழிபட்டு தன் நாடு போய்ச் சேர்ந்தான்.

இன்றும் மதுரையில் சித்திரைத் திருவிழாவில் சித்திரை பௌர்ணமியன்று இந்திரன் வழிபாடு செய்வதாக ஐதீகம். அன்றுதான் ஆலவாய்ச் சொக்கர் அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்து இன்புறும்படி நடைபெறுகின்றது.

சுவாமி சிவானந்தா இந்தப் புராணம் குறித்துக் கூறிய ஒரு செய்தி நாம் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

“ ஒவ்வொரு வருடத்தின் முதலாவது பௌர்ணமி அன்று செய்யப்படும் இந்த வழிபாட்டின் மானசீகமான பலன், இப்பூவுலகில் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் இடையறாது கண்காணிக்கும் ஒரு மேலான சக்தி உள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

“ நீங்கள் சித்திரா பௌர்ணமியன்று வழிபாடு செய்கையில் இந்தக் கதையை ( இந்திரன் பழி தீர்ந்தது) நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் ஆழ்ந்த சிரத்தை இருக்குமானால், அறியாமையின் காரணமாக நீங்கள் பாபம் புரிந்துவிட்டீர்கள் என உறுத்தும் இதயத்துடன் நீங்கள் உணர்வீர்களே ஆனால், உங்கள் பாபங்களை மன்னிக்க பக்தி சிரத்தையுடன் நீங்கள் இறைவனை வழிபடுவீர்களேயாகில், அவற்றை மீண்டும் எதிர்காலத்தில் செய்யமாட்டீர்கள் என்று உறுதி கொள்வீர்களேயாகில், உங்கள் குருவிடம் பணிவு கொண்டு அவரது அறிவுரைகளை ஒருபொழுதும் மீற மாட்டீர்கள் என்று உறுதி எடுப்பீர்களாகில் அப்பொழுது உங்கள் பாபங்கள் மன்னிக்கப் படும். இதில் சந்தேகமே கிடையாது. மேற்காணும் இந்திரனின் கதையின் உட்பொருள் இதுவே. சித்திரா பௌர்ணமியன்று இந்தக் கதையைத் தியானியுங்கள்.

“கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லியவாறே சித்திரகுப்தரைத் தியானியுங்கள்.

சித்ரகுப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபத்ர தாரிணிம்
சித்ர ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்”
(ஹிந்து விரதங்களும் பண்டிகைகளும் – சுவாமி சிவானந்தா)


1 கருத்து:

  1. வெகு சிறந்த ஆய்வுக்கட்டுரை.
    நன்று வளரட்டும் வளங்கள்.

    பதிலளிநீக்கு

Translate