வியாழன், 16 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 3

களப்பிரர்களும் சமணமும்



கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்து முடியுடை மூவேந்தர்களையும் வடபுலத்திலிருந்து வந்த களப்பிரர்கள் வென்று தமிழகத்தைப் பிடித்துக் கொண்டனர்.




"களப்பிரரர்கள் தென்கன்னடப் பகுதியைத் தாயகமாகக் கொண்டு மலையின்கண் வாழும் அரச குடியினராய்த் தனியாட்சி செலுத்தி வந்தவராதல் வேண்டும்" என்பது டாக்டர் க.ப. அறவாணன் கருத்து.11



”எருமை நாடு எனப்படும் மைசூர்ப் பக்கத்திலிருந்து புறப்பட்ட களப்பிரர்கள் பாண்டியர்களை வென்று அடிமைப்படுத்தி அங்கேயே தங்கி ஆட்சி புரிந்தனர். இவர்களில் மற்றொரு சாரார் சோழநாட்டைக் கைப்பற்றிக் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். மூன்றாம் பிரிவினர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டில் காலூன்றினர்” என்பது ஆய்வாளர் மு. அருணாசலம் அவர்களின் கருத்து. 12



"இவர்கள் அரச குலத்தினர் அல்லர். எனவே பண்பு முதலியவற்றை இவர்கள்பால் எதிர்பார்ப்பது சரியன்று. அரசாட்சியைக் கைப்பற்றிய பின்னர் தத்தம் சமயத்தை இவர்கள் மக்களிடையே திணிக்க முயன்றனர். இவர்களைப் பற்றிக் குறிப்பிடும் வேள்விக்குடி அறமுறியின் தமிழ்ப் பகுதியில் கூட இவர்கள் பெயரைக் குறிப்பிடும் பொழுது பிராகிருத மொழியே பயன்படுத்தப்படுகிறது. எனவே இவர்கள் பெயரைத் தமிழில் எழுத முயன்ற பிற்காலத்தார் "களப்பிரர்" என்றும் "களப்பாளர்" என்றும், பல்வேறு வகையாக எழுதினர்" என்றார் அ.ச. ஞானசம்பந்தனார்.13



களப்பிரர் தமிழகத்தை ஆண்ட மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தில் கலை முதலியன வளர்ச்சி பெறவில்லை. ஆகவே அது இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.



"தமிழ்க்கலை தமிழர் நாகரிகம் பிற சிறந்த பண்புகள் எல்லாம் சிதைந்து போயின. மதுரை மாநகரில் தமிழாராய்ச்சி செய்து கொண்டிருந்த கடைச் சங்கமும் அழிந்தது. களப்பிரர் ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளுள் இதனினும் கொடியது வேறில்லை என்று கூறலாம். எனவே இவர்களது ஆட்சிக் காலம் ஓர் இருண்ட காலம் ஆகும்" என்று வரலாற்றறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.14



களப்பிரர் காலத்தில் சமணசமயம் செழித்தோங்கியது. கன்னட நாட்டில் அது தலை நிமிர்ந்து நின்றது. தமிழ்நாட்டில் ஆங்காங்கு பரவத் தொடங்கியது. தமிழும், தமிழர் சமயமும், களப்பிரர் ஆட்சியில் மிதிப்புண்டு ஒடுங்கிக் கிடந்தன. வளர்ச்சியின்றி வாழ்விழந்தன. 


எனவே இக்காலப் பகுதியில் புலவர்கள் தலையெடுக்கவோ, சீரிய தமிழ்நூல்கள் தோன்றவோ முடியவில்லை. எனவே இக்காலத்தை ”இருண்டகாலம்” என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். சிலர் இக்கருத்தை மறுக்கின்றனர்.



தமிழக வடகொங்குப் பகுதிப் பெரும்பாலும் கன்னட நாட்டு அரசியலுடன் கலந்தே வந்திருக்கிறது. இப்பகுதியை கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை ஹொய்சாளர்கள் ஆண்டு வந்துள்ளனர். 


கங்க மன்னர்களுடைய ஆட்சியில் அவர்களால் போற்றப்பட்ட சமணசமயம் இப்பகுதியை மிகவும் ஆட்படுத்தியுள்ளது. அதாவது கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முடிய 6 நூற்றாண்டுகள் வரை சமணசமயம் வடகொங்கில் மிகுதியாகப் பெருகியது.15



சமயக்குரவர் காலத்தில் கங்கநாடு சமணர் நிறைந்த நாடாக இருந்தது. பல்லவர்க்கும் கங்கர்க்கும் ஏற்பட்ட உறவு காரணமாகத் திகம்பர சமணமுனிவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிச் சமயப் பிரச்சாரம் செய்து வந்தனர். திருப்பாதிரிப்புலியூரில் புகழ்பெற்ற சமணமடம் ஒன்று இருந்தது. 


நாட்டின் பல பகுதிகளிலும் சமண மடங்கள் பாலி, வடமொழி, தமிழ் ஆகிய இம்மூன்று மொழிகளிலும் சமயநூல்களை வெளியிட்டன. சமணக்குரத்திமார் (பெண் துறவிகள்) மடங்களைத் தோற்றுவித்துப் பெண் உலகிற்குத் தொண்டு செய்து வந்தனர்.16



குறிப்புகள்


1. சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு (முனைவர்.சோ.குமரேச மூர்த்தி) - பக். 23.
12. மேலது -பக்.25.
13. மேலது -பக்.25.
14. மேலது -பக்.14.
15. மேலது -பக். 58.
16. மேலது - பக்.58

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate