சனி, 4 ஏப்ரல், 2009

ஆகமங்களைப் புறக்கணித்த அறநிலையத்துறை


டந்த 40 வருடங்களில் திராவிடக் கட்சிகள் செய்த மாபெரும் சாதனைகளுள் இரண்டு குறிப்பிடத்தக்கன. 


ஒன்று – தமிழகத்தில் தமிழே படிக்காமல் பட்டம் பெற்று வேலை வாங்கி விடலாம்; இரண்டு – ஆகமம் ,கோயில், இறைவன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் கூட ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் அமைச்சர் முதல் திருக்கோயில் நிர்வாக அலுவலர் வரை ஆகிவிடலாம்.


நாட்டின் நிர்வாகம் செம்மையாக நடப்பதற்கு நாம் சட்டம் இயற்றுவதைப் போல, மக்கள் நலனையே கருத்தில் கொண்டு அமைக்கப்படும் கோயில்களின் பூஜைகள், நிர்வாகம் எப்படி அமைய வேண்டும் என்பதை இறைவன் ஆகமங்களில் அருளி இருக்கிறான்.


கோயில் பூஜைகள் யாவும் ஆகமங்கள் விதித்த சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடக்க வேண்டும். நம் ஆகமங்களில் எங்கும் டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு 12 மணிக்குக் கோயிலைத் திறந்து வழிபட வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரியவில்லை.


ஆனால் ஹிந்து சமய அறநிலையத்துறை டிசம்பர் 31 ஆம் தேதி இரவு கோயில்களைத் திறந்து வைக்க ஆணையிட்டது. இதற்கு பத்திரிக்கைகளில் விளம்பரம் வேறு. அப்படி கஷ்டப்பட்டுத் தரிசனம் செய்யப் போனால் தர்ம தரிசனம், காசு கொடுத்து தரிசிக்கும் சிறப்பு தரிசனம் வேறு.


அறநிலையத் துறையின் அதிகாரிகள் நிதி அமைச்சகத்தில் வேலை பார்க்கத் தகுதியானவர்கள். சென்ற வருடத்தை விட இவ்வருடம் வசூலை அதிகமாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது தலைபோகிற கவலை. ஆகமமாவது ஒன்றாவது?


மகாசிவராத்திரி, கும்பாபிஷேகம், திருவிழாக் காலங்களில் சில நாட்கள் தவிர மற்ற நாட்களில் இரவு 9 மணிக்கு மேல் திருக்கோயிலைத் திறந்து வைக்கக் கூடாது என்றே ஆகமங்கள் கட்டளையிடுகின்றன. இது யாருக்குத் தெரியும்?


அறநிலையத்துறையின் அமைச்சர் நாத்திகக் கட்சிக்காரர். எனவே அவருக்கும் ஆகமத்திற்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இருக்கப் போவதில்லை. 


அறநிலையத்துறையின் ஆணையர் முதல் நிர்வாக அலுவலர் வரை அனைவருமே கோயில் வருவாய் அதிகாரிகள் மட்டுமே. வசூலை மட்டும்தான் கவனிக்க வேண்டும். பூஜைகளைப் பற்றி கவலை கிடையாது. எனவே அவர்களுக்கும் ஆகமத்திற்கும் தொடர்பே இல்லை.


அர்ச்சகர்கள் நிலையோ இன்னும் பரிதாபம். தீபாராதனை செய்வது மட்டுமே அவர்களுக்குரிய பதவி, அதிகாரம் எல்லாம். நிர்வாக அலுவலர் சொன்ன நேரத்தில்தான் பூஜை செய்ய வேண்டும்.ஆகமம் சொல்கிறபடியல்ல. எனவே இவர்கள் ஆகமம் கற்றிருந்தாலும் அதனால்கூட பயனில்லை.


இதற்கெல்லாம் மேலாக ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்று திரியும் நம்மவர்கள். இவர்கள் ஆங்கில வருடப் பிறப்பிற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திக்கவே மாட்டார்களா? 31 ஆம் தேதி இரவு 9 மணி முதல் விடியற்காலை வரை எல்லாக் கோயில்களிலும் பெருங்கூட்டம். அறநிலையத்துறைக்கு நல்ல வசூல்.


ஆகமங்களில் சொல்லப்பட்ட நாட்களையும் நேரங்களையும் தவிர கோயில்கள் திறக்கப்பட்டாலோ, மக்கள் வழிபாடு செய்தாலோ தோஷம் உண்டாகும். அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அர்ச்சகர்கள் செய்தார்களோ என்னமோ? அறநிலையத்துறை செய்யவிட்டால் தானே?
இவை பற்றியெல்லாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. 


சுவாமி விவேகானந்தர் சொன்னதுதான் நம் நினைவுக்கு வருகிறது.


“எத்தகைய உள்ளீடற்ற ஒரு நாகரீகத்தை வெள்ளையன் நம்மிடம் புகுத்தியிருக்கிறான்? என்ன ஒரு உலகியல் மோகத்தை அவன் உண்டாக்கி இருக்கிறான். பலவீன இதயம் படைத்த இந்த நம் மக்களை விசுவநாதர் காப்பாராக “


( 2008 ஜனவரியில் விஜயபாரதத்தில் வெளிவந்த கட்டுரை)


1 கருத்து:

Translate