புதன், 29 ஏப்ரல், 2009

தென் திசைத் திலகம் திருமாலிருஞ்சோலை

ரம், விபவம், வியூகம், அர்ச்சை எனும் 4 நிலைகளில் திருமால் உயிர்களுக்கு அருள்புரிகின்றார் என வைஷ்ணவ ஆகமங்கள் கூறும். இந்நான்கினையும் சங்கர்ஷணன், வாசுதேவன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என அவை அழைக்கும். இதைப் பற்றிய குறிப்பொன்று பரிபாடலில் உள்ளது.


இந்நான்கு நிலைகளில் மக்கள் வழிபடக் கூடிய வகையில் திருக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும் திருமாலின் திவ்ய திருவுருவங்கள் தான் அர்ச்சை எனப்படும்.

பாரத தேசத்தில் எம்பிரான் அர்ச்சை வடிவத்தில் எழுந்தருளியுள்ள திவ்யதேசங்கள் மிகப்பல.அவற்றுள் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம்(பாடல் பெற்ற) பெற்ற திருப்பதிகள் 108. அவற்றுள் பாண்டியநாட்டுத் தலங்களில் ஒன்றுதான் திருமாலிருஞ்சோலை.

இத்தலத்தைப் பற்றிய குறிப்பு முதன் முதலாக பரிபாடலில்(பாடல்-15) காணக் கிடைக்கின்றது. அப்பாடலை பாடிய புலவர் இளம்பெருவழுதியார் இக்குன்றத்தினை இருங்குன்றம், ஓங்கிருங்குன்றம், ஐயிருங்குன்றம், சீர்கெழு திருவில் சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம் எனப் பலவகையாக கூறுகின்றார்.

இதில் ‘சீர்கெழு திருவில்’ என்ற அடிக்குப் பொருள் உரைக்கும் போது பரிமேலழகர், ‘ அழகு பொருந்திய திருவென்னும் சொல்லோடும் சோலையென்னும் சொல்லோடும் தொடர்ந்த மொழியாகிய ‘திருமாலிருஞ்சோலை’ என்னும் நாமம்’ எனத் தெளிவிக்கின்றார்.

இத்திருத்தலத்தில் கண்ணனும் பலராமனும் வழிபடப் பெற்ற செய்தி பரிபாடலில் உள்ளது.

இக்கோயில் குறைந்த பட்சம் 1500 ஆண்டுகளாவது பழமையுடையதாக இருக்கலாம். இக்கோயில் முற்காலத்தில் பௌத்த துறவிகள் தங்கியிருந்த இடமாக இருந்திருக்கலாம் எனவும் காலப்போக்கில் விஷ்ணு கோயிலாக மாறியிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வட்டமான கருவறை, இக்கோயிலிலுள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரில் உள்ள குளத்துக்குரிய ‘ஆராமம்’ எனும் பெயர், கருவறையின் பின்புறம் உள்ள உக்கிர நரசிம்மர், பழைய ஸ்தல விருட்சம் போதி (அரச மரம்) ஆகியவை இத்தகவலை உறுதிபடுத்துகின்றன.

இக்கோயிலின் கருவறைக்கு ‘நங்கள் குன்றம்’ எனப் பெயர். இது நம்மாழ்வார் திருவாக்கு. தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் கருவறைக்குப் பெயர் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

விமானம் சோமசந்திரவிமானம். இறைவன் பெயர் சுந்தர ராஜன். அழகன், அலங்காரன், திருமாலிருஞ்சோலை நின்றான், சுந்தரத் தோளுடையான், ஏறு திருவுடையான், நலந்திகழ் நாரணன் என்பன ஆழ்வார்கள் தமது பாசுரங்களில் குறித்தவையாகும்.

சுந்தரத் தோளுடையான் என்பதே இன்று சுந்தரராஜன் என வழங்கப்படுகிறது.

இக்கோயிலுக்குரிய ஆறு சிலம்பாறு. இது மலை உச்சியில் ஒரு சுனை வடிவில் இருக்கின்றது. இதற்கு நூபுர கங்கை, இஷ்டசித்தி, புண்யச்ருதி, பவஹாரீ என்பன பிற பெயர்கள்.

கிருதயுகத்தில் ஆலமரமும், திரேதாயுகத்தில் அரசமரமும், துவாபரயுகத்தில் வில்வமரமும், கலியுகத்தில் சோதிமரமும் தலவிருட்சங்களாக விளங்கும் என ஸ்தல புராணம் கூறுகின்றது.

பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஐவரும் மொத்தம் 108 பாசுரங்களில் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

இக்கோயிலின் மூலத் திருமேனியைத் தொட்டு பூஜை செய்பவர்கள் வைகானசர்கள். கோயிலின் பிற பூஜைகளை பாஞ்சராத்திர அர்ச்சகர்கள் கவனிக்கின்றனர்.

இத்திருக்கோயில் 2 கோட்டைகளால் சூழப்பட்டது. கோயில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியன் கோட்டை எனவும், வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டை எனவும் அழைக்கப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் உட்கோட்டையினை ‘நள மகாராஜன் கோட்டை’ என்கின்றன.

வெளிக்கோட்டை கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வாணாதி ராயர்களால் கட்டப்பட்டது.

இக்கோயிலின் தென்புற வாயிலில் மொட்டைக்கோபுரம் ஒன்று உள்ளது. இதில் உள்ள கல்வெட்டொன்று விஜயநகர ஆரவீட்டு மன்னர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதன் காலம் கி.பி.1546. அச்சமயத்தில் இக்கோபுரம் எழுப்பப்பட்டுப் பாதியிலேயே நின்று விட்டது.

தலைவாசலான கிழக்கு வாசலில் உள்ள பெரிய கதவுகள் எப்போதும் பூட்டியே இருக்கும். இந்தக் கதவுகளே பதினெட்டாம் படிக் கருப்பசாமி என மக்களால் வணங்கப்படுகின்றன. இக்கதவுகளில் சந்தனம்,குங்குமம்,கஸ்தூரி தடவி மலர் மாலைகளை இட்டு அலங்கரித்து வழிபடுகின்றனர்.

இது குறித்த கதை ஒன்று மக்களிடையே வழங்கி வருகிறது.


பதினெட்டாம் படிக் கருப்பசாமி

கள்ளழகரின் ‘களை’யைத் (சாந்நித்யம்) திருடுவதற்காக மலையாளத்திலிருந்து 18 லாடர்கள் (மந்திரவாதிகள்) அழகர் கோயிலுக்கு வந்தனர். இவர்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்திருக்கத் தங்கள் மீது ஒரு மையைப் பூசிக் கொண்டு கருவறைக்குள் சென்று கொஞ்சம் கொஞ்சமாக அழகரின் களையை இறக்க ஆரம்பித்தனர். அழகர் இதனை கோயில் அர்ச்சகர் பரமசாமி பட்டரிடம் கனவில் தெரிவித்தார். பரமசாமிப் பட்டரும் பதறிப் போய் இது குறித்து நாட்டார்களிடம் சொன்னார். நாட்டார்கள் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதன்படி மறுநாள் அர்த்த சாம பூஜையில் பட்டர் கருவறைக்குள் சென்றார். உள்ளே சுடச்சுட ஆவிபறக்கும் அன்னக் கொப்பரையை இறைவன் முன்வைத்து நிவேதனம் செய்து அழகரை வழிபட்டார். உடனே வெளியே வந்து கருவறைக் கதவை இழுத்து மூடிவிட்டார்.

ஆவிபறக்கும் அதிக வெப்பத்தினால் மையானது கரைந்து போக 18 லாடர்களின் உருவங்களும் தெரிய ஆரம்பித்தன. நாட்டார்கள் அவர்களைப் பிடித்து விசாரித்துத் தண்டனையாக 18 பேர்களின் தலைகளையும் வெட்டி தலைவாசலான கிழக்கு வாசலில் புதைத்தார்கள். அவர்களுடன் துணைக்கு வந்த கருப்பசாமி தெய்வம் மட்டும் தான் காவல் தெய்வமாக இருப்பதாகக் கெஞ்சியது. நாட்டார்களும் அதற்குச் சம்மதித்தனர். கருப்பசாமி தலைவாசல் கதவுகளிலேயே குடிகொண்டார்.

அன்றிலிருந்து இன்று வரை கருப்பசாமி அழகர் கோயிலின் காவல் தெய்வமாக மக்களால் வணங்கப்படுகிறார். தினமும் அழகரின் அர்த்தசாமப் பூஜை முடிந்தவுடன் அவரது நைவேத்தியமும் மாலையும் கருப்பசாமிக்காக கொடுக்கப்படும்.

கருப்பசாமி குடி கொண்டிருக்கும் அந்த வாசலில் உள்ள கல்வெட்டுகளில் கி.பி.1608ல் சதாசிவராயர் காலத்தில் பொறிக்கப் பட்டதுதான் கடைசியாகும். எனவே இச்சம்பவம் கி.பி. 1608க்குப் பிறகு நடந்திருக்க வேண்டும் என வரலாறு கூறுகிறது.

அழகருக்கு கருப்பசாமி தம்பி முறை வேண்டும் என நாட்டார் பாடலான ராக்காயி வர்ணிப்பு கூறுகிறது. 18 ஆம் படி கருப்பன் வர்ணிப்பு ‘கண்ணா உன் தமையன் கருப்பன்’ என்கிறது.

இலக்கியங்கள்
அழகர் மீது பல்வேறு சிற்றிலக்கியங்கள் பாடப்பட்டுள்ளன. ஒரு ஸ்தல புராணமும் உள்ளது.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய அழகர் அந்தாதி, வேம்பத்தூர் கவிகுஞ்சரமையர் இயற்றிய அழகர் கலம்பகம், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய அழகர் கிள்ளைவிடு தூது, வேம்பத்தூர் சாமிகவி காளருத்திரர் இயற்றிய அழகர் பிள்ளைத் தமிழ், பெருங்கரை கவி குஞ்சர பாரதி இயற்றிய அழகர் குறவஞ்சி, வேம்பத்தூர் கிருஷ்ணையங்கார் இயற்றிய சோலைமலைக் குறவஞ்சி, நெற்குப்பை பைரவையர் இயற்றிய திருமாலிருஞ்சோலைப் பிள்ளைத் தமிழ், மதுர கவை ஸ்ரீநிவாஸையங்கார் இயற்றிய அலங்காரர் மாலை என்பன ஆசிரியர் பெயர் தெரிந்த சிற்றிலக்கியங்களாகும். அழகர் மீது பாடப்பட்ட ஆசிரியர் பெயர் தெரியாத அச்சேறாத சில நூல்களும் உள்ளன.

ஆற்றில் இறங்கும் அழகர்

லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும் தமிழக விழாக்களில் அழகர் வைகையாற்றில் இறங்கும் விழா மிகப் பிரபலமானதாகும். இதைக் கண்டு களிக்க ஆண்டு தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றங்கரையில் கூடுகின்றனர்.

திருமாலிருஞ்சோலையில் பிரம்மோற்சவம் எனும் பெருந்திருவிழா ஆடி மாதம்தான். எனினும் அதைவிட சித்திரை மாதத்தில் நடக்கும் திருவிழாவினையே மக்கள் அறிந்திருக்கின்றனர்.

ஆண்டு தோறும் சித்திரை மாதம் வள்ர்பிறையில் கொடியேற்றம் நிகழும். 11 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் 5 ஆம் நாள்தான் அழகர் ஆற்றில் இறங்குகின்றார்.

இவ்விழாவில் முதல் 4 நாட்கள் கோயிலிலேயே கொண்டாடப் படுகின்றன.

3 ஆம் நாளிரவு பூஜை முடிந்தவுடன் உடனே 4 ஆம் நாளுக்குரிய பூஜைகளைத் தொடங்கி 3 ஆம் நாளிரவு 12 மணிக்குள் முடித்துவிடுகின்றனர். நள்ளிரவு 1 மணியளவில் அழகர் கள்ளர் வேடம் பூண்டு மதுரை மாநகரின் கிழக்கில் வைகையாற்றங்கரையிலுள்ள வண்டியூருக்குப் புறப்படுகிறார்.


தவளைக்கு முத்தியளித்த அழகர்

சுதபஸ் முனிவர் தனது நித்தியக் கடன்களை முடித்து நீராடுவதற்காக கங்கையில் இறங்கினார். அச்சமயம் பார்த்து அங்கே துர்வாச முனிவர் வந்தார்.

ரிஷிகளுள் உயர்ந்தவரும் ஜபதவங்களில் நிலைத்தவரும் தனது தவ வலிமையால் மூவுலகிலும் தம் புகழை நிறுத்தியவரும் ஆன துர்வாசர் சுதபஸ் நீராட இறங்குவதைக் கண்டார். கரையினருகே போய் நின்றார். சுதபஸ் விஷ்ணுவைத் தியானித்துக் கொண்டே ஆற்றில் இறங்கினார். துர்வாசர் வந்ததைக் கவனிக்கவில்லை.

கோபத்திற்குப் பேர் போன துர்வாசர்,” பெரியவர்களைக் கண்டபிறகும் மரியாதை செய்யாமல் இருக்கின்றாய். தவளையானது தாமரையிலேயே இருந்தாலும் அதிலிருக்கும் தேனின் அருமையினை உணராது. அதுபோல நீயும் பெரியவர்களோடு கலந்து பழகி இருந்தும் அவர்களின் பெருமையை உணராமல் தேன் நுகராத தவளையைப் போல இருக்கின்றாய். நீ தவளையாகப் பிறந்து உழல்வாயாக!” என்று கொதித்து சாபமிட்டார்.

நிறைமொழி மாந்தரான துர்வாசரிட்ட சாபம் பலித்தது.நிலைமையை உணர்ந்த சுதபஸ் துர்வாசரின் திருவடிகளில் வீழ்ந்து “சுவாமி! அறிவில் பெரியவர் தாங்கள். அறிவிலும் வயதிலும் சிறியவன் நான். தாங்கள் வந்ததைக் கவனியாதது ஒரு குற்றமா? அறியாமல் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் உண்டே! அடியேனுக்கும் ஒரு நல்ல தீர்வினை அருள வேண்டும்” என்று இறைஞ்சினார்.

மனமிரங்கிய துர்வாசர் “வேகவதி ஆற்றில் நீ தவளையாக உருவெடுத்து விஷ்ணுவைத்தியானித்துக் கொண்டிரு. விரைவில் சித்திரை பௌர்ணமியன்று அவரது திருக்காட்சி உனக்குக் கிடைக்கும். அப்போது நீ பழைய உருவத்தை அடைவாய்!” என்று சாபவிமோசனம் அருளினார்.

இந்த சுதபஸ் என்ற மண்டூக ரிஷிக்கு சாபவிமோசனம் அருள்வதற்காகத்தான் கள்ளழகர் சித்திரை பௌர்ணமியன்று வேகவதி எனும் வைகையாற்றில் இறங்குகின்றார்.

வேகவதி ஆற்றில் தவளை வடிவுடனிருக்கும் மண்டூக மகரிஷிக்குச் சாபவிமோசனம் தரவும், சுந்தரத் தோளுடையான் என ஆண்டாள் சொன்னதால் அத்தோள்களில் ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை அணிந்து கொள்ளவும்தான் அழகர் வண்டியூருக்குச் செல்கிறார் என கோயில் வரலாறும் ஸ்தலபுராணமும் கூறுகின்றன.

பயணம்

4 ஆம் நாள் முழுதும் பயணத்திலேயே கழிக்கிறார் அழகர். கோயிலிலிருந்து புறப்பட்டவர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல், சுந்தரராஜன்பட்டி இவை வழியாக மூணுமாவடி வருகிறார். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அழகரைத் தரிசிக்கின்றனர். இது ‘எதிர்சேவை’ எனப்படுகின்றது.

பின்பு அங்கிருந்து தல்லாகுளத்திலுள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்கிறார். கள்ளர் கோலத்தை மாற்றி இயல்பான அலங்காரத்திற்கு வருகிறார். இங்குதான் ஆண்டாள் சூடிக் களைந்த மாலை சுந்தரத் தோளுடையானுக்கு சார்த்தப்படுகிறது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அர்ச்சகர்கள் ஆண்டாள் மாலையைக் கூடையில் வைத்து நடந்தே கொண்டு வருகின்றனர்.

இரவு தல்லாகுளத்தில் தங்கி அதிகாலையில் ‘ஆயிரம் பொன் சப்பரம்’ எனும் சப்பரத்தில் தங்கக்குதிரையுடன் ஏறி வைகை ஆற்றை நோக்கி விரைகிறார். இத்திருக்காட்சியைக் காணத் தான் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். வைகை மேம்பாலத்தை ஒட்டியுள்ள மூங்கில்கடை வீதியிலிருந்து 5 ஆம் நாள் சித்திரை பௌர்ணமியன்று அதிகாலை 6 மணியளவில் அழகர் ஆற்றில் இறங்குகின்றார்.

அங்கிருந்து அப்படியே வடகரை வழியாக கிழக்கு நோக்கித் திரும்பி ராமராயர் மண்டபத்திற்கு வருகின்றார். இங்கு பக்தர்கள் அழகர் மீது துருத்திநீர் பீய்ச்சியடிக்கிறார்கள். கிராமத்து மக்கள் மிக முக்கியமான நிகழ்ச்சியாக இதனைக் கருதுகின்றனர்.

சௌராஷ்டிர குலத்தவர் இம்மண்டபத்தில் அழகர் இருக்கும்போது ஒரு கையில் தேங்காயினைப் பிடித்துக் கொண்டு அங்கப்பிரதட்சிணம் செய்கின்றனர்.

5 ஆம் நாளிரவு அழகர் வண்டியூரிலுள்ள வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகின்றார்.

6 ஆம் நாள் காலை அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்படுகிறார். ஆற்றங்கரையில் கருடவாகனத்திற்கு மாறி அதில் எழுந்தருளி ஆற்றின் நடுவிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்குச் சாபவிமோசனம் அளிக்கின்றார்.

இதற்காக தேனூர் மண்டபத்தின் முன் ஆற்றுமணலைச் சிறிய குளம் போல் தோண்டி அதில் மீன், தவளை, நாரை இவற்றை விடுகின்றனர்.

இத்திருக்காட்சி முடிந்து திரும்புகிறார். வழியில் ராமராயர் மண்டபத்தில் தங்குகிறார். அன்றிரவு முழுவதும் பக்தர்களுக்குத் தசாவதாரக் காட்சி தருகிறார். அழகரை 10 அவதாரங்களாக மாற்றி மாற்றி அலங்காரம் செய்து கொண்டே இருப்பார்கள்.

7 ஆம் நாள் காலை அம்மாளு அம்மாள் மண்டபம் வருகிறார். பின்பு தல்லாகுளம் வந்து சேர்கிறார். அன்றிரவு தல்லாகுளம் கருப்பசாமி கோயிலுக்கு எதிரிலுள்ள சேதுபதி ராஜா மண்டபத்தில் கள்ளர் கோலம் பூண்டு காட்சி தருகிறார். பின்பு பூம்பல்லக்கில் ஏறி திருமாலிருஞ்சோலையை நோக்கி பயணம் கொள்கிறார்.

8 ஆம் நாளிரவு மூணுமாவடி அருகிலுள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருள்கின்றார். 9ஆம் நாள் காலை புறப்பட்டு இரவுக்குள்ளாக கோயிலுக்கு வந்து சேர்கிறார்.

இத்திருவிழாவில் பெரும்பான்மையும் கிராமத்து மக்களே கலந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் நெற்றியில் திருமண் இடுகின்றனர். பல நாட்கள் விரதம் இருக்கின்றனர். இவர்களில் பலர் அழகர் முன்பு ஆடுவார்கள். திரியெடுத்து ஆடுவோர், திரி இல்லாமல் ஆடுவோர், சாட்டையடித்து ஆடுவோர், துருத்தி நீர் அடிப்போர் எனப் பலவகையாக இருக்கின்றனர்.

ஆங்காங்கே கருப்பசாமி, அழகர் கதைகளைச் சொல்லும் வர்ணிப்புப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பர். அதைக் கேடபதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடுவர்.

திருமாலிருஞ்சோலை-வண்டியூர் பயணத்தின் போது அழகர் ஆங்காங்கே தங்கிச் செல்வார். அதற்கு ‘திருக்கண்கள்’ என்று பெயர். இவை கல் மண்டபமாகவோ கொட்டகையாகவோ, பந்தலாகவோ இருக்கும். இவ்வாறு மொத்தம் 321 திருக்கண்கள் உள்ளன. போகும்போதும் வரும்போது ஆக இருமுறை இவைகளில் அழகர் தங்குகிறார்.

1 கருத்து:

  1. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பல விஷயங்கள் அறியக் கிடைத்தன. நன்றி

    பதிலளிநீக்கு

Translate