புதன், 15 ஏப்ரல், 2009

சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் – 2


19. ............இதன்பின் சயனாலய முத்திரா தண்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனால் ஆலயத்தில் அருள் சக்தியுள்ள சூட்சும நிலையை இராக் காலங்களில் வலி மீறி நிற்கும் அசுரர்களால் பாதிக்கப் படாமல் பாதுகாப்பதே வைரவர் வேலையாம். இதுவன்றி மனிதர் செய்ய வேண்டிய பாரா வேலையை அவர் செய்வார் என்று கொள்வது தவறாம் -பக். 54


இறைவன் தரிசன பலத்தால் மல மறைப்புகள் நீங்கப் பெற்றவர், ஆணவத்தின் அணுத்தன்மை நீங்கி வியாபகத் தன்மை எய்திய திகம்பரர். ஆகவே வைரவர், அழுக்கு மணம் நீங்கிய அம்மணர் – நிருவாணியாக காட்சி அளிக்கிறார்.

ஆன்மாவிற்கு புறத்திருந்து வரும் மலமறைப்பு, மனிதனுக்கு செயற்கையாலாகும் துணி மறைப்புக்கு ஒப்பிடப் பட்டு அம்மறைப்பை அகற்றுவதான அறிகுறிப் பொருளை உண்மை அனுபவத்திற்குக் கொண்டு வருதலே ஆலயத்தில் வைரவருக்கு ஆடை அணிவிக்கவில்லை எனலாம்.

இந்த நிர்மல வைரவருடைய தரிசனம் ஆன்மாவின் விடுதலையைக் குறிப்பிடுவதாகும். –பக். 55

20. தீபாராதனைக் குறிப்புகள்

1). பிரதான தீபத்திற்கு அலங்கார தீபம் என்றும் , புஷ்ப தீபம் என்றும், ரத தீபம் என்றும் பல்வேறு வகைப் பெயர் விளங்குகிறது.

இது 3, 5, 7, 9, 11 ஆக இந்த ஐந்து வித அடுக்கு பேதங்களுடன் கூடியதாயிருக்கும்.

மூன்றடுக்கு தீபத்திற்கு 27 அல்லது 36 சுடரும் , 5 அடுக்கு தீபத்திற்கு 51 சுடரும், 7 அடுக்கு தீபத்திற்கு 81 அல்லது 94 சுடரும், ஒன்பது அடுக்கு 108 சுடரும், 11 அடுக்கு தீபத்திற்கு 121 சுடரும் இருக்க விதியுள்ளது.

11 அடுக்கு தீபாராதனை செய்யும் காலத்தில் 11 மலத்தட்டு சக்தி தீப முதலாகவும், 7 அடுக்கு தீபாராதனை காலத்தில் 7 மலத் தட்டு சக்தி தீப முதலாகவும், 5 அடுக்கு தீபாராதனை காலத்தில் 5 மலத் தட்டு சக்தி தீப முதலாகவும், 3 அடுக்கு தீபாராதனை காலத்தில் 3 மலத் தட்டு முதலாகவும் ஆராதனை செய்ய வேண்டும் என்றும், பிரதான தீபம் சிவம் என்றும் மலத் தட்டுகள் சக்தி தீபம் என்றும் சிவபேதத்திற்குத் தகுந்தவாறு சக்தி தீபமும் கூடுதலும் குறைதலுமாகும் என்று நூல்கள் கூறுகின்றன.

3 அடுக்கு தீபத்தில் 27 அல்லது 36 தீபச் சுடர் உள்ளதால் தத்துவாதீதர் என்றும், 27 நட்சத்திரங்களிலும் நட்சத்திர பூஜா விதிப்படி பூஜிக்கத் தகுந்தவர் என்றும் தாம் அதற்கு மகிழ்ந்து அனுக்கிரகம் செய்து கொண்டு நிற்பவன் என்பதைக் குறிக்கும்.

5 அடுக்கு தீபத்தில் 51 சுடர் ஆதலால் 51 அட்சரங்களையும் அங்கம் ஆகக் கொண்டு அதற்கு மேல் தான் தனித்து நிற்பதையும். அவ்வட்சரங்களைத் தான் தோற்றி வைத்ததையும் குறிக்கும்.

7 அடுக்கு தீபத்திற்கு 81 அல்லது 94 சுடர் ஆதலால் 81 – 94 பதங்களில் உள்ளவர்கள் செய்கின்ற வினைக்கு ஈடாய்த் தான் அதற்கு மேம்பட்டு நின்று அவர்களுக்கு நிக்ர அனுக்கிரகம் செய்பவன் என்பதைக் குறிக்கும்.

9 அடுக்கு தீபத்தில் 108 சுடர் ஆதலால் 108 உருத்திரர்களுக்கும் அனுக்கிரகித்து அவர்களுக்கு எல்லாம் மேலாய் மகாருத்திரனாய் நிற்கும் நிலையைக் குறிக்கும்.

11 அடுக்கு தீபத்தில் 121 சுடர் ஆதலால் அதிருத்திரன் மகாருத்திரன் முதலியவர்களுக்கு மேம்பட்டு நிற்கும் பரமசிவன் தான் என்பதைக் குறிக்கும்.
3 அடுக்கு 3 தத்துவங்களையும், 5 அடுக்கு பஞ்சகிருத்திய காரணேஸ்வரர்களையும், 7 அடுக்கு 7 வித சிவ பேதங்களையும், 9 அடுக்கு 9 வித சிவ பேதங்களையும், 11 அடுக்கு ஏகாதச ருத்திரர்களையும் குறிக்கும். இவைகளுக்கு மேல் உச்சியில் தனித்திருக்கும் தீபம் மேலான பரமசிவத்தைக் குறிக்கும்.

இவ்வலங்கார தீபத்திற்கு அதிதேவதை உருத்திரன் (சிவன்). இப்புஷ்ப தீபம் பரமேஸ்வரனை வழிபட்டு உய்ய வேண்டிய புஷ்பமான தன்மையைக் குறிக்கும்.

2). சர்ப்ப தீபத்திற்கு அதிதேவதை நாகராஜன். இது குண்டலினீ சக்தியை மேல் நோக்கி செலுத்தினால் ஒளிவடிவான இறைவனைக் காணலாம் என்பதைக் குறிக்கும்.

3). புருஷா மிருக தீபத்திற்கு அதிதேவதை சரஸ்வதி. பரிசுத்தமான புருஷா மிருகத்தின் சிரசில் தீபம் வைத்து சோதிக் கடவுளை வழிபடுவதால் மிருகத் தன்மை நீங்கி புருஷத் தன்மை பெறலாம் என்பதைக் குறிக்கும்.

4). விருஷப தீபத்திற்கு அதிதேவதை விருஷபம். பசுதர்மம் அனுஷ்டித்து அதன் பலனால் பதி தர்மம் அனுஷ்டிக்க ஒளிவடிவமான தத்துவத்தைத் தரிசிக்கலாம் என்பதையும் குறிக்கும்.

5). கஜ தீபத்திற்கு அதிதேவதை கணபதி. இது அகார உகார மகார வடிவமான பிரணவத்தின் தன்மையால் இறைவனை வழிபட்டு உய்யலாம் என்பதையும், பஞ்சமூர்த்திகளில் முதல் மூர்த்தியான கணபதியை நினைந்து வழிபட்டவர்களுக்கு எல்லாவித விக்னங்களையும் போக்கி அருள் வழங்குவான் என்பதையும் குறிக்கும்.

6). வியாக்கிர (புலி) தீபத்திற்கு அதிதேவதை பராசக்தி. பரமேஸ்வரரால் குறிப்பிடுகிற நியமத்திற்கு மேல் இஷ்டரூபமாகச் செய்யப்படுகிற காரியங்களை இம்சிப்பதாக இவ்வியாக்கிர தீபம் குறிக்கும்.

7). வாஜி (குதிரை) தீபத்திற்கு அதிதேவதை சோமன். வாசி என்பதை உஸ்வாச நிஸ்வாசத்துடன் விடாமல் ஜபித்தால் அது சிவமாகும். அவற்றால் மிருகத் தன்மை நீங்கி சிவத் தன்மை அடையலாம் என்பதை இக்குதிரை தீபம் குறிக்கும்.

8). சிம்ம தீபத்திற்கு அதிதேவதை துர்க்கை. தேவர்களை எப்படி நம்மில் உயர்ந்தவர்களாகக் கருதுகிறோமோ அப்படி நாமும் அகங்காரம் முதலிய துர்க்குணங்களை சம்காரம் செய்து உயர்ந்த மேன்மையை அடையலாம் என்பதை இச்சிம்ம தீபம் குறிக்கும்.

9). ஹம்ச(அன்ன) தீபத்திற்கு அதிதேவதை பிரும்மா. இது அன்னப் பறவையானது எப்படிப் பாலுடன் கலந்த நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்துகின்றதோ அது போல் பசு தர்மங்களைச் செய்து அதை விட்டு சிவ தர்மங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும்.

10). குக்குட தீபத்திற்கு அதிதேவதை ஸ்கந்தர். இதி ஓங்கார ரூபனான இறைவனை வழிபட்டால் மேலே உயர்த்துவான் என்பதைக் குறிக்கும்.

11). சக்தி தீபம் 11 மலத் தட்டுக்கு அதிதேவதை 1. வாமை; 2, ஜேஷ்டை; 3. சிரேஷ்டை; 4. ரௌத்ரி; 5. காலா; 6. கலவிகரணி; 7. பலவிகரணி; 8. பலா; 9. பலப்ரதமனி; 10. சர்வ பூத தமனி; 11. மனோன்மணி என்ற சக்திகளாகும்.

நவ சக்தி தீபம்
1.வாமை – பிருதுவி; 2. ஜேஷ்டை – அப்பு (ஜலம்); 3. ரௌத்ரி – அக்னி; 4. காளி – வாயு; 5. கலவிகரணி – ஆகாசம்; 6. பலவிகரணி – சூரியன்; 7. பலபிரதமனி – சந்திரன்; 8. சர்வ பூத தமனி – ஆன்மா; 9. மனோன்மணி – பராசக்தி. அந்த பராசக்தியே வாமாதி நவசக்தியாய் பவன் முதலிய மூர்த்தீஸ்வரர்களோடும் ஒன்றுபட்டு பிருதுவியாதி எண்வகைச் சரீரங்களைப் பொருந்தி, சிருஷ்டியாதி பஞ்சகிருத்தியங்களை நடத்துகிறான் என்பதை இந்த நவசக்தி தீபம் குறிக்கும்.

சப்த மாத்ரு தீபம்
1. பரவாகீஸ்வரி; 2. அபரவாகீஸ்வரி; 3. மனோன்மணி; 4. மகேஸ்வரி; 5. உமை; 6. வைஷ்ணவி; 7. பிராம்மீ இவை ஏழுவகைச் சிவபேதங்களுக்கும் முறையே ஏழுவகைச் சக்திகளாம் என்பதை இச்சப்தமாத்ரு தீபம் குறிக்கும்.


பஞ்ச சக்தி தீபம்
சிவசக்தியே பஞ்ச கிருத்திய நிமித்தமாக கிருத்திய பேதத்தால் ஐவகைப் படும். அவை முறையே பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி என்பதை இவைந்து தீபம் குறிக்கும்.

திரிசக்தி தீபம்
சிவபெருமான் ஆன்மாக்களின் பொருட்டு, பஞ்சகிருத்தியம் செய்வதற்கு முதற்காரணமான சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை அல்லது ஆரணி, ஜனனி, ரோதயித்ரி என்னும் மூவகைச் சக்திகளை இம்மூன்று தீபம் குறிக்கும்.

சிவசக்தி தீபம்
சிவபெருமான் பஞ்ச கிருத்தியம் செய்வதற்குத் துணைக் காரணமாய்க் கொண்ட சிவசக்தி என்பதை இவ்வேக தீபம் குறிக்கும்.

12). கும்பதீபம்
பஞ்ச கிருத்தியத்தின் பொருட்டு எழுந்தருளிய நிமித்த காரணராகிய நிஷ்கள சிவபெருமானைக் குறிக்கும். யாவும் தன்னுள் ஒடுக்கம் என்பதையும், தான் யாவற்றையும் சங்கற்ப மாத்திரையாய் சக்தியினிடமாகக் கொண்டு தோற்றுவிப்பன் என்பதையும் இச்சக்தி தீப விஷயத்தில் கும்பதீபம் காட்டுகிறது.

ஆராத்திரிக பூர்ணகும்ப தீப விஷயத்தில் சிவம் கும்ப தீபமாகவும் ஈசானாதி ஐந்து முகங்களுடன் கூடியிருப்பதையும் குறிக்கிறது. சுவாமியின் பாஞ்சராத்திரிக பூஜையைப் போல் தேவிக்கும், பாஞ்சராத்திரிக பூஜை சக்திபரமாய் இருக்கிறது.

இதி கர்மாவினுடைய திருப்தியையும் பரமேஸ்வரனுடைய நித்திய திருப்தியையும் குறிக்கும்.

13). கூர்ம தீபம்
கூர்ம தீபத்திற்கு அதிதேவதை விஷ்ணு. இது பரமேஸ்வரனை அநந்ய பாவனையினால் காணலாம் என்பதைக் குறிக்கும்.

14). மேரு தீபம்
மேரு தீபத்திற்கு அதிதேவதை தேவி. இது கைலாச கிரியின் மேல் உள்ளான் பரமசிவம் என்பதைக் குறிக்கும்.

15). நட்சத்திர தீபம்
நட்சத்திர தீபத்திற்கு அதிதேவதை நட்சத்திரங்கள். நட்சத்திரங்களில் பூஜை உற்சவம் செய்த பலனை பரமேஸ்வரரால் அடையலாம் என்பதை இது குறிக்கும்.

16). கற்பூர தீபம்
கற்பூர தீபத்திற்கு அதிதேவதை தேவதேவன். கற்பூரமானது வெண்மை நிறத்தைப் பொருந்தி அக்கினி பற்றிய இடத்தே அதன் வடிவாக விளங்கி ஓர் பற்றும் இல்லாமல் முற்றும் கரையப் பெற்று ஆகாயத்துடன் கலந்து அத்துவிதமாய் விளங்குவது போல் ஆன்மா வெண்மை நிறமான சாத்விக குணத்தைப் பொருந்தி ஞான அக்கினி பற்றிய இடத்தே பசுத்தன்மை நீங்கி சிவத்தன்மை விளங்கப் பெற்று மூவகைச் சரீரங்கள் கரையப் பெற்று எல்லாப் பற்றும் கழன்று சிதாகாசத்தோடு அத்துவிதமாய் பேரானந்தப் பெருவாழ்வு அடைதல் வேண்டும் என்னும் குறிப்பை உணர்த்துவதற்காக கற்பூர ஆராதனை செய்யப் படுகிறது.

1.தர்ப்பணம் (கண்ணாடி) : இது பரமேஸ்வரனுடைய நிர்மலத் தன்மையைக் குறிக்கும்.

2.சத்ரம் (குடை) : இது பரமேஸ்வரனுடைய ஆணையைக் குறிக்கும்.

3.சாமரம் : இது நந்தியானது சுவாமிக்கு எதிராக நின்று வாயுக்களுடைய சஞ்சாரத்தை உஸ்வாச நிஸ்வாசங்களை உபய சாமரம் குறிக்கும்.

4.வியஜனம் (விசிறி) : இது சுவாமியினிடத்தில் சராசரம் அசைந்து கொண்டிருக்கின்றதை உணர்த்தும்.


5.துவஜம் (கொடி) :} இவ்விரண்டும் பரமேஸ்வரருக்குரிய
6.சுருட்டி : சூரிய சந்திரர்களின் சேவகத்
தன்மையைக் குறிக்கும் என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate