சனி, 11 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 1

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்.
தொன்மை முறை வருமண்ணின் துகளின்றி துகளில்லா, நன்மை நிலை ஒழுக்கத்து நலஞ்சிறந்த குடிகள்" வாழும் நாடு திருமுனைப்பாடி வளநாடு. 


`மறம் தரும் தீ நெறிகள் மாறும்படியும், மணிகண்டராம் மகாதேவரின் வாய்மைநெறி தழைக்கவும் அறந்தரு நாவுக்கரசரும் ஆலால சுந்தரரும் திருவவதாரம் செய்யும் தகைமைத்து அத்திருமுனைப்பாடி நாடு எனில் அதன் பெருமையை நாம் பேச முடியுமோ?" என வியப்பர் தெய்வச் சேக்கிழார்.அத்திருமுனைப்பாடி வளநாட்டில் சிவம்பெருக்கும் திருவாமூர் என்னும் தலம் உள்ளது. அவ்வூரில் வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில் வந்த புகழனார் - மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகத் திருவவதாரம் செய்தவரே நம் அப்பரடிகள்.திலகவதியார் இவர் தமக்கையார்.இவ்விருவரின் இளவயதிலேயே பெற்றோர் இறைவனடி சேர்ந்தனர். திலகவதியாருக்கு மணம் பேசி வைக்கப்பட்ட கலிப்பகையார் போர்க்களத்தில் உயிர்கொடுத்துப் புகழ் கொண்டார்.பெற்றோரும், மணம் பேசிய மணாளரும் மாண்டபின், இம்மண்ணுலகில் வாழ்வதற்கோர் ஏதில்லை எனக் கருதி உயிர்நீக்கக் கருதிய திலகவதியாரின் அடியிணை மீது மருள் நீக்கியார் (அப்பரடிகளுக்குப் பெற்றோர் இட்டபெயர்) விழுந்தார்.


தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயாவினால், திலகவதியார் உயிர்தாங்கி, அணிகள் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி, திருவதிகையில் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளின் திருக்கோயிலுக்கருகே வசித்து வரலானார்.இங்கே, மருள்நீக்கியார், தமது மனத்துயர் ஒழியும்படியாக நிலையாமையை உன்னிக் கருணையினால் அறங்கள் செய்வாராயினர்.சோலைகளமைத்தல், குளம் தொடுதல், இரப்போர்க்கீதல் முதலியன அவரீடுபட்ட அறங்களுள் சிலவாம்.நிலையாமையினை எண்ணி நிலைத்த பொருளைத் தேடுவாராய் சமயநூல்களைக் கற்று உணரலானார். நம்பர் அருளாமையினால் போலி வேடமிட்டுத் திரிந்த சமணசமயத்தில் புகுந்தார்.திருப்பாதிரிப்புலியூருக்கருகே இருந்த பாடலிபுத்திரம் என்னும் சமணர்களின் கலாசாலையை அடைந்து சமண தத்துவங்களைக் கற்றுத் துறைபோகி, சமணர்களின் தலைமைக்குருவாகி `தருமசேனர்' எனும் பெயரும் கொண்டார்.அங்கே, தம்பியாரின் நிலையினை அறிந்து மனவேதனை கொண்ட திலகவதியார், நாடோறும் திருவதிகைப் பெருமானிடம் பிரார்த்திக்கலானார். இறைவனும் அவர் கனவில் தோன்றி சூலை கொடுத்து ஆட்கொள்வதாகக் கூறிமறைந்தார்.அவ்வாறே தருமசேனர் சூலைநோயால் அவதியுற்றுப் பின்பு திருவதிகைக்கு வந்து தமக்கையாரிடம் அடைக்கலம் புகுந்து, அவரால் திருநீறளிக்கப் பெற்றுச் சைவரானார்."கூற்றாயினவாறு" திருப்பதிகம் பாடினார். 


சூலைநோய் மறைந்தது. இறைவன் அவருக்கு `நாவுக்கரசு' எனும் பெயர் சூட்டினான்.சமணர்களின் சூழ்ச்சியான நீற்றறை, யானை ஏவல், நஞ்சூட்டல், கடலில் இடல் முதலிய இடர்களை சிவபிரானின் திருவருளால் கடந்து, மன்னனையும் சைவனாக்கினார்.செந்தமிழ் நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு தலங்கள் தோறும் எழுந்தருளியுள்ள இறைவனைப் பாடித் தொண்டுநெறியை வலியுறுத்தித் தாமும் உழவாரப் படையினால் கோயில்களைச் சுத்தம் செய்து சமணகற்றி சைவம் வளர்த்தார்.தமது 81 ஆவது வயதில் திருப்புகலூரில் நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டஅரசு ஐக்கியமானார்.

2 கருத்துகள்:

Translate