சனி, 11 ஏப்ரல், 2009

பாவைப் பாட்டும் பாவை நோன்பும்

ங்க காலந்தொட்டு இன்று வரை நமக்குக் கிடைக்கும் சிற்றிலக்கிய வகைகளில் பாவைப் பாட்டும் ஒன்று. ‘பாவை’ என்றாலே நமக்குத் திருவெம்பாவையும் திருப்பாவையும்தான் நினைவுக்கு வரும்.


’பார்ப்பு’ எனும் சொல் பாப்பு – பாப்பா என்றாகிப் பின்னாளில் ‘பாவை’ எனத் திரிந்தது என்பர். இச்சொல்லுக்குப் புதுமை, கருவிழி, குரவமலர் முதலிய பல பொருள்கள் இருப்பினும் அழகிய உருவம் என்ற பொருளில் மிகுதியாக வழங்கப் படுகிறது.

பாவை விளையாட்டும் பாவைப் பாட்டும்

இளம் பெண்கள் அழகிய பாவைகளை வைத்து விளையாடினர்; மணலில் பாவை செய்து பூச்சூட்டி விளையாடினர்; மணல் பாங்கான இடம், நீர் நிலைகளின் அருகில் விளையாடினர்; தாம் நீராடும் போது பாவையினையும் நீராட்டி மகிழ்ந்தனர் எனப் பலச் செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

அவ்வாறு இளம் பெண்கள் நீராடும் போது பாவையை நோக்கி ‘பாவாய்’ என அழைத்துப் பாடுவதே பாவைப் பாட்டாகும். இது நீராடல் பாட்டு என அழைக்கப் படலாம் ஆயினும், பாவையினை அழைத்துப் பாடப் படுவதால் பாவைப் பாட்டு எனப் படுவதாயிற்று. இப்பாடல்கள் ‘எம்பாவாய்’ என முடியும். தொல்காப்பியம் பொருளதிகாரம் கொச்சக ஒருபோகிற்கு இலக்கணம் கூற வந்த பேராசிரியர், பாவை அம்மானைப் பாடல்களின் அடிவரையறையைக் குறிக்கின்றார்.

நீராடும் போது மகளிர் பாடும் பாடலே ‘பாவைப் பாட்டு’ ஆகும். எனவே நீராடலும் பாவைப் பாட்டும் ஒரே சமயத்தில் நிகழ்வன என்பது தெளிவாகிறது.

அம்பா ஆடல்

மார்கழிப் பௌர்ணமி தொடங்கி தைப் பௌர்ணமி வரையிலும் இளம் பெண்கள் பொய்கையிலும் , சுனைகளிலும் நீராடி நோன்பு நோற்றனர். சங்க இலக்கியங்கள் இச்செயலைத் ‘தைந்நீராடல்’ எனக் குறிப்பிடுகின்றன.

இத் தைந்நீராடலில் இளம் பெண்கள் தம் தாயோடு நீராடினர். முதிய பெண்கள் நோன்பு நோற்கும் முறைமையையும் நீராடும் நெறியையும் எடுத்துக் கூறியபடி வையையில் நீராடினார்கள். எனவே இது ‘அம்பா ஆடல்’ எனப் பெயர் பெற்றது. இச்செய்தி பரிபாடலில் உள்ளது.

தைந்நீராடலின் போது பெண்கள் நல்ல கணவன் தமக்கு அமைய வேண்டுமென்று நோன்பு நோற்றதாகப் பரிபாடலுக்கு உரை எழுதிய பரிமேலழக்ரும், கலித்தொகைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும் குறிப்பிடுகின்றனர்.

தைந்நீராடலும் மார்கழி நீராடலும்

தைந்நீராடல் தை மாதம் பௌர்ணமியோடு நிறைவு பெற்றதால் அப்பெயர் பெற்றதெனவும், மார்கழி பௌர்ணமி அன்று தொடங்கியதால் ‘மார்கழி நீராடல்’ எனப்பட்டது எனவும் கூறுவர். எனினும் திருவாதவூரடிகள் புராணம் இந்நீராடல் மார்கழி பௌர்ணமி – திருவாதிரை கூடிய நாளுக்குப் பத்து நாட்கள் முன்பே தொடங்கி விடுவதாகக் கூறுகின்றது.

பரிபாடல் மார்கழிப் பௌர்ணமியும் திருவாதிரையும் கூடிய நாளன்று அம்பா ஆடல் நிகழ்ந்ததாகக் கூறுகின்றது. முதலில் தைந்நீராடல் என அழைக்கப் பட்டதே பின்னாளில் ‘மார்கழி நீராடல்’ எனப் பெயர் பெறலாயிற்று. திருவெம்பாவைக்குப் பிறகு தோன்றிய பாவைப் பாடல்கள் எல்லாம் ‘மார்கழி நீராடல்’ என்றே கூறுகின்றன.

பாவை விளையாட்டோடு கூடிய தைந்நீராடல் சமயச் சார்பு பெற்று வளர்ந்தை அகநானூறு 181 ஆம் பாடலில் ,

‘நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழின்மனை மகளிர்
கைசெய் பாவை துறைக்கண் இறுக்கும்
.............புகார்’

என வரும் அடிகளும்

பரிபாடல் 11 ஆம் பாடலில் வரும்,

‘ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பா தாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின்’

என வரும் அடிகளும் தெளிவாகக் காட்டுகின்றன.

பாவை நோன்பின் நோக்கம்

சங்க காலத்தில், தைந்நீராடலோடு கடைபிடிக்கப்படும் நோன்புக்கு, மழை பொழிதலும், நல்ல கணவன் அமைதலும் ஆகிய இரண்டுமே முக்கிய நோக்கங்களாகும். இதனை நல்லந்துவனார் பாடிய பரிபாடல் 11 ஆம் பாடல் கூறுகின்றது.

திருவெம்பாவை, திருப்பாவை இரண்டிலுமே ‘மழை பொழிய வேண்டும்’ எனும் வேண்டுதல் உண்டு. சிவபக்தியில் சிறந்த மகளிர், சிவனடியார்களே தமக்குக் கணவனாக வரவேண்டுமென்று சிவபிரானை வேண்டுவதாகத் திருவெம்பாவையிலும், கண்ணனே தமக்குக் கணவனாக வர வேண்டுமென்று அவனிடம் ஆய்ப்பாடி மகளிர் வேண்டுவதாகத் திருப்பாவையிலும் நாம் காண்கிறோம்.

திருப்பாவையில் பாவை நோன்பு

‘கண்ணனே தமக்குக் கணவனாக அமைய வேண்டுமென்று ஆயர்குல மகளிர், மார்கழியில் காத்யாயினி தேவியை வேண்டி நோற்பதுவே ‘பாவை நோன்பு’ எனப் பாகவதம் கூறுகின்றது. இக்கருத்தினையே திருப்பாவைக்கு உரை எழுதியவர்களும் ஆதரித்துள்ளனர். திருப்பாவையிலும் பாவை நோன்புக்குரிய அகச்சான்றுகள் காணப்படுகின்றன.

சங்கு, பறை, பல்லாண்டு பாடுவார், விளக்கு, கொடி, விதானம் ஆகியன நோன்புக்கு வேண்டுமெனத் திருப்பாவை (26) கூறுகின்றது. நோன்பு எவ்விதம் நோற்க வேண்டுமென 2 ஆம் பாடலும், நோன்பு முடிந்த பின் என்ன செய்வர் என்பதனை 27 ஆம் பாடலும் குறிப்பிடுகின்றன. நோன்பு நடக்கும் இடத்தைப் ‘பாவைக் களம்’ என 13 ஆம் பாடலும், பாவைக்கு நீராட்டுதலை 2,3 ஆம் பாடல்களும் , மழை பொழிய வேண்டுவதனை 3,4, ஆம் பாடல்களும், கண்ணன் கணவனாக வர வேண்டும் என வேண்டுவதை 25, 28,29 ஆம் பாடல்களும் தெளிவாகவே கூறுகின்றன.

‘பறை’ எனும் சொல் திருப்பாவையில் அதிகமாகப் புழங்கும் சொல்லாகும். இதற்கு ‘கண்ணனைக் கூடி மகிழ்ந்திருத்தல்’ என வைணவ உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.

மேலும், காத்யாயினி தேவியைப் பற்றிய குறிப்பு திருப்பாவையில் இல்லை. மாறாக, பாவை என்பதற்கு ‘தையொரு திங்களிலே காம ஸமரச்யணம் பண்ணுகையாலே, பாவையென்று அவன்(காமன்) அகம் உடையாளான ரதியைச் சொல்லுதல்’ எனவும், ‘பாவைக் களம் புக்கார்’ என்பதற்கு, ‘கிருஷ்ணனும் தாங்களும் கழகமிடும் சங்கேத தலம் புக்கார்கள். கழகம் – ஓலக்கம்; சங்கேத தலமாவது – வர்ஷார்த்தமாக (மழை பொழிய) இந்த்ராணியையும், ஸம்ச்லேஷார்த்தமாக (கண்ணனைப் புணர) ரதியையும் நோற்கைக்குப் பெண்கள் திரளுமிடம்’ எனவும் வைணவ உரைகாரர்கள் எழுதியுள்ளனர்.

திருவெம்பாவையில் பாவை நோன்பு உண்டா?

மணிவாசகப் பெருமான் ‘சித்தத்தால் சிவமே ஆனவர்’ எனத் திருக்கோவையார் உரையில் பேராசிரியர் குறிப்பிடுவார். மணிவாசகர் திருப்பெருந்துறையில் உறைந்த போது, அந்நகரில் இருந்த பெண்கள் அம்மானை, ஊஞ்சல், சாழல், பூவல்லி, உந்தி முதலிய விளையாட்டுகள் விளையாடுவதைக் கண்டார். எங்கும் சிவத்தையே காணும் இயல்புடைய வாதவூரடிகள், பெண்களின் விளையாடல்களை எல்லாம் இறைவன் புகழ் பாடும் பாடல்களாக ஆக்குவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

தமக்கு மட்டுமேயன்றி இவ்வையத்தார்க்கும் தமதனுபவம் கிடைக்க வேண்டும் என்னும் பெருங்கருணை பற்றியே அவர் அவ்விதம் அருளிச் செய்தார். அவ்விதம் அவர் பாடியதே ‘திருவெம்பாவை’. இவ்வாறு திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறுகின்றது.

‘வாதவூரடிகள் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருந்த போது, அங்கிருந்த இளம்பெண்கள் எல்லாம், மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு முன்னதாகிய பத்து நாட்களில் வீடுகள்தோறும் சென்று பெண்களை அழைத்து விடியற்காலத்தில் குளிர்ந்த நீரையுடைய தடாகத்தில் நீராடினார்கள். அவர்களுடைய இச்செயலைக் கண்ட வாதவூரடிகள், அவர்கள் பாடியதாக ‘திருவெம்பாவை’யை அருளிச் செய்தனர்.’ எனத் திருவாதவூரடிகள் புராணம் கூறும்.

திருவெம்பாவைக்குத் தத்துவப் பொருள் கூற வந்த பழைய திருப்பெருந்துறைப் புராணம் திருவாசகச் சிறப்புரைத்த சருக்கத்தில், ‘மல இருளில் அழுந்திக் கிடந்துவிடாமல், இறைவன் அருளாகிய குளிர்ந்த நீரில் நீராட வருக என உயிர்களை அழைப்பதே திருவெம்பாவை’ எனக் குறிப்பிடுகின்றது.

வாதவூரடிகளின் அருள் வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறும் முக்கியமான நூல்களான பெரும்பற்றப் புலியூர் நம்பி செய்த திருவாலவாய் உடையார் திருவிளையாடற் புராணம், கடவுள் மாமுனிவர் செய்த திருவாதவூரடிகள் புராணம், சுந்தரலிங்க முனிவர் இயற்றிய (பழைய) திருப்பெருந்துறைப் புராணம் எனும் மூன்றுமே, வாதவூரடிகள் ‘திருவெம்பாவையைப் பாவை நோன்பிற்காகப் பாடியருளினார்’ என்று ஏன் குறிப்பிடவில்லை? மாறாக, மூன்று நூல்களுமே ‘திருவாதிரைத் திருவிழாவினை ஒட்டி நிகழும் மார்கழி நீராடல்’ என்பதனையே திருவெம்பாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறுவானேன்?

பாவை நோன்பல்ல – பாவைப் பாட்டு

முன்னரே கூறியபடி, மணிவாசக்ப் பெருமான் மகளிர் விளையாடல்களை, இறைவன் புகழ்பாடுவதற்கு ஏற்ற செயல்களாக அமைத்துப் பாடினார் என்பதற்கு திருவாசகத்தில் வரும் திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருப்பூவல்லி, திருத் தோள்நோக்கம், திருவுந்தியார், திருச்சாழல், திருத் தெள்ளேணம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம் போன்ற பதிகங்களே சிறந்த சான்றாகும். இவ்வரிசையில் பாவைப் பாட்டாகிய ‘திருவெம்பாவை’ யும் சேர்த்திதான்.

நடைமுறையில் உள்ள செயல்களைப் புலவர்கள், பாட்டுடைத் தலைவனின் பெருமையை எடுத்துக் கூறுவதற்குப் பாடல்களாகப் பயன்படுத்துவது தமிழ் இலக்கிய மரபாகும். அம்மானை வரி, ஊசல் வரி, போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. தொல்காப்பியர் இதற்காக பாடாண் திணையுள் ‘கொற்றவள்ளை’ என்றொரு துறை கூறியிருக்கின்றார். ‘வள்ளை’ என்பது உரற்பாடல் என்பதும், இதன் மூலம் பாட்டுடைத் தலைவர் பாடப்படுவர் என்பதும் அப்பகுதி உரையினால் நாம் அறியலாம். இதுபோலவே அம்மானைப் பாடல், ஊசல் பாடல் முதலியவற்றாலும் பாட்டுடைத் தலைவர் பாடப்பட்டனர், கும்மிப் பாட்டு பள்ளுப் பாட்டு என்பது போல.

எனவே நீராடலின் போது நிகழ்வதாகிய ‘பாவைப் பாட்டு’ என்ற விளையாட்டினையே இங்கு வாதவூரடிகள் பயன்படுத்திக் கொண்டார். அப்பாடலையும் இயல்பாக நிகழ்ந்த தைந்நீராடலாகிய அச்செயலினை, இறைவன் புகழ் ஏத்துவதற்கு ஏதுவாக திருவாதிரைத் திருவிழாவின் போது அருளிச் செய்தனர். சமுதாயத்தை உயர்ந்த சமய வழியில் நெறிப்படுத்த வேண்டும் என்பதே அடிகளின் நோக்கமாகும்.

மேலும், ‘பாவை நோன்பி’னைக் குறிப்பதாகிய காத்யாயினி தேவி பற்றிய பாவை நீராடல் குறிப்புகளோ, பாவைக் களம், நோன்புச் செயல், நோன்பின் முடிவு பற்றிய குறிப்புகளோ திருவெம்பாவையில் காணப்படவில்லை.

மாறாக, சிவத்தினோடு பிரிப்பின்றி நிற்கும் சக்தியினது மேன்மையை வியந்து, அவளை சிவத்தின் அருளாகவே கூறும் நிலையைத் திருவெம்பாவை 14,16 ஆம் பாடல்களில் காண்கிறோம். எனவே, பாகவதம் குறிப்பிடும் பாவை நோன்பிற்கும் திருவெம்பாவையின் ‘சக்தியை வியந்தது’ என்ற குறிப்பிற்கும் எள்ளத்தனையும் தொடர்பில்லை என்பது தெளிவு.

இன்னும், திருப்பாவை போல இறைவனே கணவனாக அமைய வேண்டுமென்று கூறாது, ‘சிவனடியார்களே தமக்குக் கணவனாக் வர வேண்டும்’ என்று மகளிர் வேண்டுவதாக திருவெம்பாவை காட்டுகிறது. வைணவம் போல இறைவனை மணத்தல் என்பது சைவ சித்தாந்தச் செந்நெறிக் கொள்கையில் கிடையாது. சைவம் குறிப்பிடும் ‘சன்மார்க்கம்’ என்பது ‘ஞான நெறி’ யே அன்றி ‘ நாயக – நாயகி’ பாவம் அல்ல. இதனைத் தான் திருவெம்பாவை 9,19 ஆம் பாடல்கள் தெளிவாக்குகின்றன. காரைக்காலம்மையார் புராணத்திலும் இதை நாம் கண்டு தெளியலாம்.

திருவெம்பாவை ‘பாவைப் பாட்டி’னையும், திருப்பாவை ‘பாவை நோன்பி’னையும் குறிப்பிடுகின்றன என்பது தெளிவு.

எனவே, ‘பாவை’ என்னும் சொல் ஒற்றுமை ஒன்றையே கொண்டு திருவெம்பாவையும் ‘பாவை நோன்பி’னைக் குறிப்பதாகும் என்று கருதுவது பிழையாகும். மேலும், தமிழிலக்கியத்திலுள்ள எல்லாப் பாவைப் பாடல்களும் பாவை நோன்பினைக் குறித்துத் தோன்றியவை அல்ல.

திருப்பாவையின் கருத்து மற்றும் பொருள் நிலையும், திருவெம்பாவையின் கருத்து மற்றும் பொருள் நிலையும் மிகப் பெரும் வேறுபாடு உடையவை என்பதை நாம் உண்ர்ந்து கொள்ள வேண்டும்.

(ஓம் சக்தி மாத இதழில் 2009 ஜனவரியில் வெளியான கட்டுரை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate