சனி, 4 ஏப்ரல், 2009

உலகளந்த உத்தமன்


வேதம் அனைத்திற்கும் வித்தாகும் தமிழருளிச் செய்த கோதை, திருப்பாவை 4 ஆம் பாசுரத்தில் `தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்' என்று அருளிச் செய்தபடியே, மழை பெய்து கொண்டிருந்த (2008) மார்கழி 3 ஆம் நாளில், சென்னை ஒய்.ஜி.பி. ஆடிட்டோரியத்தில் வேளுக்குடி கிருஷ்ணனின் திருப்பாவை உரை நிகழ்ந்தது. கேட்டவர்களைப் பிணிக்கும் தன்மையதாய் திகழ்ந்த அவர் உரையிலிருந்து சில...  அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்- பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.
- உபதேச ரத்தினமாலை


திருப்பாவையில் 3 ஆவது பாசுரம், `ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி' என்பது. ஆண்டாள் தமது மற்றைய திருமொழிகளிலே அர்ச்சாவதாரத்தைப் போற்றியது போல் திருப்பாவையில் போற்றவில்லை.


30 ஆம் பாசுரத்தில் `அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை' என்று கூறியதில் `புதுவை' என்பது வில்லிபுத்தூரைக் குறித்தாலும், நாச்சியார் புதுவையை மங்களாசாசனம் செய்வதற்காகப் பாடவில்லை. 


அங்ஙனமே விபவத்திலும் வாமன, ராம, கிருஷ்ண அவதாரங்களை மட்டுமே பாடியிருக்கிறார். 13 ஆம் பாசுரத்தில் `பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை' என்ற இடத்தில் நரசிம்ம அவதாரத்தை ஓரளவு கூறியிருக்கிறார்.


வாமன அவதாரத்தின் சிறப்பினை இப்பாசுரத்தின் முதலடியிலேயே கூறுகிறார். வாமன அவதாரம், `திங்கள் மும்மாரி' என்ற வார்த்தை, எட்டெழுத்து இந்த மூன்றும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை.


கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கியதில் இந்திரன் அவரோடு மாறுபட்டு அபசாரம் செய்தான். அப்படி தமக்கு அபசாரம் செய்தவனே, மகாபலியினால் தனது ராஜ்யத்தை இழந்து துன்பப்பட்டு பிரார்த்தித்த போது, அவனுக்காக மகாபலியிடம் செல்கிறார்.


பெருமாள் நெடியவர், குறுகி அறியாதவர்; திருமகளோடு கூடி இல்லறம் நடத்துபவர்; பிரம்மச்சாரியாக வாழாதவர்; எல்லா உயிர்களுக்கும் அவை வேண்டும் வரங்களை வரையாது வழங்குபவர்; யாரிடமும் எதையும் கேட்காதவர்.


இந்திரனுக்காக மகாபலியிடம் சென்றபோது நெடியவர் குறுகி வாமனனாகச் சென்றார். இல்லறத்தார் பிரம்மச்சாரியானார்; வாரிக் கொடுப்பவர் மூன்றடி நிலம் கேட்கிறார்.இவையெல்லாம் உத்தமனுக்குரிய இலக்கணங்கள். 


எனவேதான் `ஓங்கி உலகளந்த உத்தமன்' என்றார் நாச்சியார்.


`யார் திருவுக்கும் திருவானவன்? யார் சத்வகுணமே வடிவமானவன்? யார் தாமரைக் கண்ணன்? யார் புருஷோத்தமன்? அவனே நம் கதி' என்றார் ஆளவந்தார்.வள்ளல் ஏன் பிகை்ஷயெடுக்க வேண்டும்? `மூவுலகையும் படைத்து, காத்து, அழிப்பவன், நீ; அவை யாவும் உனது சொத்து. இருந்தும் நீ வாமனாவதாரத்தில் ஏன் பிகை்ஷயெடுத்தாய்? ஏனெனில், அந்த அவதாரம் நீ செய்யவில்லையானால் வேதம், சாஸ்திரம் முதலாயின எப்படி உன்னைப் புகழும்?' என்றார் கூரத்தாழ்வான்.


`பிரம்மச்சாரியாய் இருந்தால்தான் பிகை்ஷயெடுக்க முடியும். இல்லறத்தான் பிகை்ஷயெடுத்தால் நன்றாகவா இருக்கும்? `அகலகில்லேன் இறையும்' என்று உனது மார்பை விட்டகலாத திருமகளை மறைக்க மான் தோலை மூடிக்கொண்டு நீ பிரம்மச்சாரியாகிவிட்டாய்' என்றார் வேதாந்த தேசிகர்.


`இரண்டடி கேட்ட நீ மூன்றாவது அடியை எங்கு வைத்தாய் என்பது உனக்கு மட்டுமே தெரியும்' என்றது உபநிஷத்.


ஆண்டாள் இப்பாசுரத்தில் மூவடி அளந்தது, மும்மாரி பெய்வது என இரண்டைக் குறிப்பிடுகிறார். எட்டெழுத்து மந்திரமும் மூன்று பதங்களையுடையது. இந்த மூன்று பதங்களையுமே மும்மாரி என நாச்சியார் குறிப்பிடுகிறார்.


மும்மாரி என்பதற்கு 9 நாள் வெயில், 1 நாள் மழை என மாதம் மூன்று தடவை பெய்வது என்பது ஒரு பொருள். 


`ஓம் நமோ நாராயணாய' எனும் மூன்று பதங்கள் என்பது மற்றொரு பொருள்.


ஓம் - அநந்யார்க சேஷத்வம் - நாராயணனுக்கே அடிமை செய்தல்;நமோ - அநந்யார்க சரணத்வம் - நாராயணன் திருவடிகளையே சரண்புகுதல்;நாராயணாய - அநந்யார்க போக்யத்வம் - நாராயணனின் கல்யாண குணங்களையே பேசி அனுபவித்தல்.


ஓம் என்ற அட்சரம் அ, உ, ம என்று பிரியும். - பரமாத்மா; - ஜீவாத்மா ; - அடிமைத் தன்மை. அ என்பது ஆய என்ற வேற்றுமை உருபோடு வரும்போது பரமாத்மாவுக்கு என்று பொருள்படும். எனவே பரமாத்மாவுக்கு ஜீவாத்மா அடிமை என்று பொருள் வரும். இதுவே அநந்யார்க சேஷத்வம் - நாராயணனுக்கே அடிமை செய்தல்.


நம - எனக்கு உரியேன் அல்லேன் என்பது பொருள். அப்படி என்றால் உனக்கே உரியவன் என்று பொருள்படுகிறது. இது அநந்யார்க சரணத்வம் - நாராயணனையே சரண்புகுதல்.நாராயணாய - நாராயணனை அநுபவித்தல். அவனைத் தவிர அநுபவிப்பதற்கு வேறு தக்கப் பொருளில்லை. அவனே அநுபவிப்பதற்கு இனியவன். இது அநந்யார்க போக்யத்வம் - நாராயணனையே அநுபவித்தல்.


இப்பொருளையெல்லாம் திருமங்கையாழ்வார் தாமருளிச் செய்த திருநெடுந் தாண்டகத்தில் காட்டுகிறார்.எட்டெழுத்தின் தன்மையை விளக்குவது வாமன அவதாரம்.


தேவர்களுக்கும் அகப்படாத திருவடிகளை வலிய வந்து நம் தலைமேல் வைக்கின்றான் இறைவன். இதனை `பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர் குலபதி போல், திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்' என்றார் பெரியாழ்வார்.


`மலையானது என்மீது உனது மீன் இலச்சினையைப் பொறி என்று பாண்டியனிடம் கேட்காவிட்டாலும், பாண்டியன் தானே வலிய சென்று அதன்மீது இலச்சினையைப் பொறித்தான். அதுபோல நான் கேட்காவிட்டாலும் நீயே வந்து உன் திருவடியை என் தலைமேல் வைத்து அருளினாய்' என்பது இதன் நயம்.


எட்டெழுத்தை ஓதினால் வியாதி, பஞ்சம், திருட்டு இவை நம்மிடம் இருக்காது.வியாதி - கண்டதையும் அநுபவிக்க ஆசைப்படுதல்.பஞ்சம் - கர்மயோகம், ஞானயோகம் இவை இல்லாமை.திருட்டு - பகவானுக்குரிய உலகப் பொருட்களை நமக்கென்று எண்ணுதல்.இவை மூன்றும், மூன்று பதங்களையுடைய எட்டெழுத்தை ஓதினால் நம்மை விட்டு நீங்கும். இதனை நாம் கண்கூடாக வாமனாவதாரத்தில் தரிசித்துத் தெளியலாம்.


( 04.01.2008 ல் விஜயபாரதம் இதழில் வெளிவந்த கட்டுரை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate