புதன், 6 மே, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 5

தமிழகமும் வேதமும்

வேதங்கள் பற்றியும் வேதநெறிகள் பற்றியும் எடுத்தியம்பும் குறிப்புகள் தமிழில் தொல்காப்பியம் முதலே காணக் கிடைக்கின்றன.
எழுத்து அதிகாரத்தில் ஒலிபிறப்பியலுக்கு இலக்கணம் கூற வந்த தொல்காப்பியனார் நாவிடைப் பிறக்கும் ஒலிகளுக்கு மட்டுமே இலக்கணம் கூறுவதாகவும், நாபியிலிருந்து எழும் ஒலிகளுக்குக் கூறவில்லை என்றும் அவையெல்லாம் வடமொழி வேதத்திற்குரியன என்றும் கூறுகின்றார்.



`வினையினீங்கி' என்ற சூத்திரத்தின் உரையில் பேராசிரியர், "முனைவனாற் செய்யப்படுவதோர் நூலில்லையென்பார், அவன் வழித் தோன்றிய நல்லுணர்வுடையார் அவன்பாற் பொருள் கேட்டு முதனூல் செய்தாரெனவும், அம்முனைவன் முன்னர் ஆகமத்துப் பிறந்ததோர் மொழியைப் பற்றி அனைத்துப் பொருளும் கண்டு பின்னர் அவ்வவற்றுக்கு நூல் செய்தார் அவரெனவும், அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலுஞ் சார்பு நூலுமெனப் பலவுஞ் செய்தாரெனவும் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்த நூலன்மையின் அவை தேறப்படா. அல்லதூஉம் அவை தமிழ் நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியில வென்பது" என்று கூறி பரமாப்தனான இறைவன் அருளியவை வேதாகமங்கள் எனவும், அவை தமிழில் அமையாது வடமொழியில் அமைந்தவை எனவும் தெளிவாக்கியிருக்கிறார்.

மேலும், "தமிழ் நூலுள்ளும் தமது மதத்திற்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் செய்துகாட்டினும் அவை முற்காலத்தில என்பது முற்கூறிய வகையான் அறியப்படும்" என்றும்,

"தாமே தலைவராவாரும், அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராகலின், தாமே தலைவராயினார் நூல் செய்யின் முதனூலாவதெனின், அற்றன்று; தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலர்" என்றும் இதனையே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

இன்னும், "அறங்கறை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து" என்னும் தொல்காப்பியப் பாயிர அடிகளுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர், "நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையின் நான்மறையென்றார். அவை தைத்திரியமும் பௌடிகமும் தலவகாரமுஞ் சாமவேதமுமாம். இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமுமென்பாருமுளர். அது பொருந்தாது. இவர் (தொல்காப்பியர்) இந்நூல் செய்த பின்னர், வேதவியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின்" என்று விளக்கியிருக்கின்றார்.

எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வேதங்கள் இருந்தன என்பது தெளிவாகிறது.

பின்னும் வேதங்களைப் பயின்ற வேதியர் பற்றியும் அவரது ஒழுக்கங்கள் பற்றியும், வேதநெறியிற் செய்யப்படும் வேள்விகள் பற்றியும் சங்க இலக்கியங்கள் பலபடியாய்ப் பேசுகின்றன.

திருக்குறளும், "அந்தணர் நூல்" என்றும், "ஓத்து" என்றும் வேதத்தைக் குறிக்கின்றது.

திருவள்ளுவ மாலை, "ஆரியம், வேதமுடைத்துத் தமிழ் திருவள்ளுவனார் ஒது குறட்பா உடைத்து" என்று வடமொழி வேதத்தை இனம்பிரித்துச் சுட்டுகிறது.

நரிவெரூஉத்தலையார், "வடமொழி வேதத்தில் சொல்லப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப் பொருள்கள் நான்கனையும் வள்ளுவர் குறளில் மொழிந்திருக்கின்றார்" என்று கூறுகின்றார்.

திருஞானசம்பந்தரும், "அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும் செந்தமிழ்க் கீதமும்" என்று வேறுபடுத்தி அருளிச் செய்கின்றார்.

நம்பியாண்டார் நம்பிகள் சம்பந்தப்பிள்ளையாரைத் தோத்திரிக்கும் இடங்களில், "வளமலி தமிழிசை வடகலை மறைவல" என்றும், "பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவாகமவிதியும் நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே" என்றும், "வகைதகு முத்தமிழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்" என்றும், "பலமலிதருந் தமிழின் வடகலை விடங்கன்" என்றும் வேறுபடுத்திக் காட்டியருளுகின்றார்.

தொல்காப்பியத்திற்குப் பின்னர் பல்லாயிரக் கணக்கான தமிழிலக்கியங்களில் காணப்படும் வேதம், வேள்வி, வேதியர் பற்றிய குறிப்புகளைக் காணுமிடத்து தமிழர்கள் வேதம் பற்றியும் வேள்வி பற்றியும் நன்றாக அறிந்திருந்தனர் என்பதையும், அவற்றை தம் சமய வாழ்வில் ஏற்று நடத்திக் கொண்டு இருந்தனர் என்பதையும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.
இவ்வேத நெறியினையே தம் வாழ்வில் மேற்கொண்டு சமயப்பூசலின்றி வாழ்ந்திருந்த தமிழரிடையே சமண பௌத்த மதங்கள் நுழைந்து குழப்பத்தை விளைவிக்கத் தொடங்கின.


வேதங்கள் பிரமாண நூல்கள் அல்ல என்றும், வேள்விகள் இயற்றி ஆவதொன்றில்லை என்றும், வேதநெறியின்படி தெய்வ வழிபாடு இயற்ற வேண்டியதில்லை என்றும் அவைதீக மதங்களான சமண, பௌத்தங்கள் பிரச்சாரம் செய்யலாயின.

தமிழகத்தில் சமணம் பரவியபோது வேதநெறியைத் தாக்குவதைத் தனது முதல் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டது. 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவநாதர் வேதங்களையும், வேள்விமுறைகளையும் கடுமையாக எதிர்த்தவர். வேதவேள்வியின் நிந்தனை, ஒழுக்கத்தை வற்புறுத்தல் என்ற இரண்டை அடிப்படையாகக் கொண்டே சைன நூலான யசோதர காவியம் இயற்றப்பட்டது. 23

வட இந்தியாவில் தோன்றி வளர்ந்த போதும் தென்னாட்டில் வந்து பரவிய போதும் சமணம் முற்றிலும் வைதீக எதிர்ப்புச் சமயமாகவே விளங்கியிருக்கிறது.24

எனவேதான் நலிந்த வேதநெறியை மீண்டும் நிலைநாட்ட அவதரித்தனர் அப்பரடிகளும், சம்பந்த சுவாமிகளும்.

"அன்றிருந்த தமிழகத்தின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது சமயக் குரவர்களுடைய பிறப்பின் சிறப்பு நன்கு புலப்படும். ஏறக்குறைய ஒரே விதமான கருத்தைத் தெரிவிக்கும் வகையில் சேக்கிழார் அவர்களுடைய பிறப்புக்களின் பெருமையை எடுத்துரைக்கிறார். தமிழ்நாட்டில் சமண, பௌத்த நெறிகளை எதிர்த்து வைதிக நெறி மீண்டும் ஓங்கி வளர்வதை அவர்களுடைய வருகை தெரிவித்தது."25

"தமிழகத்தில் வெவ்வேறு சமயங்கள் பரவி ஆட்சி செலுத்திய காலத்தில், சிவநெறியை மீண்டும் நிலை நிறுத்துவதற்காக சமயாச்சாரியர்கள் தோன்றினார்கள். திருநாவுக்கரசர் உலகைக் கவ்வியிருந்த இருளை நீக்கும் கதிரவனைப் போலத் தோன்றினார். அவர் பெயரே `மயக்கத்தை நீக்குபவர்' (மருள் நீக்கியார்) என அமைந்தது. திருநாவுக்கரசர் எதற்காகத் தோன்றினார் என்பதை அவருக்குப் பெற்றோர் இட்ட பெயரே உணர்த்துகின்றது."26



குறிப்புகள்:


23. சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு (முனைவர் சோ. குமரேச மூர்த்தி )- பக்.35.
24. மேலது - பக்.187.
25. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் (டாக்டர். டி.பி.சித்தலிங்கம் ) - பக். 32.
26. மேலது - பக்.32.


1 கருத்து:

  1. உங்கள் கருத்து தமிழை விட தமிழர்களை விட வட நாட்டவர் சிறப்பான அறிவோடு திகழ்ந்தது போல சித்தரிப்பதாக அமைந்துள்ளது.. நீங்கள் ப்ராமணரா? தமிழில் இருந்து வேதம் உருவானது ஆதலால் சில‌ கோட்பாடுகள் ஒன்று போல் தோன்றும. திருக்குறளில் கூட இடை செருகி இருப்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு

Translate