சனி, 11 ஏப்ரல், 2009

சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் - 1

சில குறிப்புகள்
1997 ல் இருந்து சைவ சம்பந்தமான பல நூல்களைப் பயில எனக்கு வாய்ப்பு இருந்தது. அவ்வப்போது படிக்கும் நூல்களில் இருந்து குறிப்புகள் எடுத்து வைப்பது என் வழக்கம். திருச்செந்தூர் முத்தையா பட்டர் எழுதிய சைவாலய பரார்த்த பூஜா விளக்கம் எனும் நூலினை திருநெல்வேலி பெரிய தெரு சபாபதி முதலியார் என்னிடம் படிக்கக் கொடுத்தார். அந்நூலில் இருந்து முக்கியமான குறிப்புகள் இங்கே.........


1. பரார்த்தாலய பூஜா கிரியா விதிகள் யாவும் அறிகுறியாகவும் அருள் நெறியாகவும் உள்ளன.

காலையில் பள்ளியறை திறப்பு சிவமும் சக்தியும் பிரிந்து தொழில் படுவதாலுண்டாகும் தோற்றத்தையும், இரவு பள்ளியறை மூடுதல் சக்தியானது சிவத்தில் ஒடுங்கும்போது ஏற்படும் லயத்தையும் குறிப்பன.

பூஜாமுறைகளையும் அவற்றில் ஆதாரசக்தி, ஆசனம், மூர்த்தி, மூலம், ஆவாகனம், நியாசம், ஆவரணம், இதன் மந்திரங்கள், தியானங்கள் கலாதிகளாகிய ஆறு அத்துவாக்களின் மந்திரங்களை உற்று நோக்கினால் ஏகமாய் நின்ற இறைவன் முதலில் பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை இச்சக்திகளாகவும் பின் அகார, உகார, மகார, நாத விந்துக்களாகவும், பின் பிரும்ம, விஷ்ணு, ருத்திர, மகேச, சதாசிவ மூர்த்திகளாகவும் அவ்ர்கள் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம் ஆகிய ஐந்தொழில்களாகவும் பரிணமித்து நடைபெறும் முறை தெரியவரும். – பக். 1

2. நித்திய பூஜையில் அபிஷேகம்சிருஷ்டி; நைவேத்தியம்ஸ்திதி; பலிசம்ஹாரம்; தீபம்திரோபவம்; விபூதிஅனுக்கிரஹம் எனப் பஞ்ச கிருத்தியங்களாகும். –பக். 2

3. ஆதிசைவர்களும் ஆன்மார்த்த பூஜை செய்த பின்னரே பரார்த்த பூஜையைச் செய்ய வேண்டும். அவர்கள் ஆகமத்தில் கூறியபடி அபரம், பரம் இரண்டு சம்ஸ்காரங்களுடன் சமயம், விசேஷம், நிர்வாணம், அஸ்திராபிஷேகம், ஆசாரியாபிஷேகம், சிகாச் சேதனம், ஏழு விஷூவங்களின் சோதனம் செய்தபின் பரார்த்தாலயத்தில் நித்திய நைமித்திய காமிய முதலிய கிரியைகளைச் செய்ய பூர்ண உரிமை உடையவர் ஆவார். சமய , விசேஷம் இரண்டும் பெற்றவர் நித்திய பூஜைக்கு அருகர் என்றும் சிவாகமம் விதிக்கின்றது. – பக். 3

4...... ஆதிசைவ சிவாசாரியார்கள் தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்பிருந்தே அனாதிகால முதல் கோயில் தோன்றிய காலத்திலிருந்தே ஆலய வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள். இவர்கள் திராவிட தேசத்தவர்கள். யஜூர் வேதத்தை முக்கியமாய்க் கொண்டவர்கள். ஆதலால் யஜூர் வேதத்தில் இவர்களுக்குத் திராவிட பாடம் என்ற ஒரு பேதம் இருந்து வருகிறது. இதனையே இவர்களும் இவர்களின் முன்னோர்களாகிய பத்ததி கர்த்தர்களும் கையாண்டு வந்திருக்கிறார்கள். – பக். 5-6

5. கால சந்தியிலும் சாய ரக்ஷையிலுமே பரிவார மூர்த்திகளுக்குப் பூஜை. மற்றக் காலங்களில் நடைபெறுகிற பூஜையில் பரிவார மூர்த்தி பூஜை இடம் பெறவில்லை. –பக். 10.

6. உற்சவ காலங்களில் பள்ளியறை பூஜைக்கு சுவாமி பல்லக்கில் எழுந்தருளல் இல்லாமல் சங்கிரமமாய் ஆசாரியர் கொண்டு வைத்து வழிபாடுகளைச் செய்ய வேண்டியதாகும். –பக். 11

7. நித்திய பூஜையானது நித்தியம் என்றும் ஆகந்துக நித்தியம் என்றும் இருவகைப் படும். அவையாவன: 1. நித்திய பூஜை என்பது தினந்தினம் செய்யும் உஷக்கால முதலிய பூஜையாம். 2. ஆகந்துக நித்திய பூஜை என்பது மாதந்தோறும் செய்யப் படும் விசேஷ பூஜையும் அஷ்டமி, விஷூ, சங்கிராந்தி, பிரதோஷம், அமாவாசை முதலியவைகளில் செய்யப்படும் பூஜையாம். –பக். 14.

8. 12 கால பூஜை விபரம் : 1. உஷக் காலம்; 2. பிராதக் காலம்; 3. கால மத்திய சந்தி; 4. த்வீதிய கால சந்தி; 5. மத்ய சந்தி; 6. மத்தியான்னம் (உச்சிக்காலம்) 7.சாயங்காலம்; 8. ராத்திரி சந்தி(சாயரட்சை அல்லது இரண்டாங்காலம்); 9. அர்த்த ஜாமம்; 10. பூத ராத்திரி; 11. காலராத்திரி; 12. மகாநிசி என்பனவாம். –பக்.15.

9. மந்திர பேதம்: ஆவாகனம், பாத்யம், ஆடைத்ரித்தல், சந்தனம் பூசுதல், ஆபரணம் அணிதல், கண்ணாடி, குடை, சாமரம், ஓலைவிசிறி, ஜபம், ஸ்தோத்திரம், நமஸ்காரம் இவைகளில் ’நம:’ என்னும் பதத்தை முடிவுடைய மந்திரம் உச்சரிக்க வேண்டும்.

அருக்கியம், அபிஷேகம், தூபம், தீபம், நைவேத்தியம், நீர், முகவாசம், நீராஞ்சனம், பவித்திரம், ஜப சமர்ப்பணம், ஆன்ம சமர்ப்பணம், ஓமம் இவைகளில் ‘சுவாஹா’ என்னும் பதத்தை முடிவாகவுள்ள மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

நனைத்தல், துடைத்தல், புஷ்பம் சார்த்துதல், பூர்ணாகுதி இவைகளில் வௌஷட் என்னும் பதத்தை இறுதியாக உச்சரிக்க வேண்டும்.

அபிஷேகம், சுத்திசெய்தல், பாசச் சேதம், புரோட்சண்ம், தாடனம், பேதனம், விக்னங்களைப் போக்குதல் இவைகளில் முடிவில் ‘ஹூம்பட்’ என்பதை உச்சரிக்க வேண்டும்.

ரட்சையில் ‘பட்’ என்பதை முடிவாக உச்சரிக்க வேண்டும்.

ஆசமனத்தில் ‘சுவதா’ என்று உச்சரிக்க வேண்டும்.

கவச வேஷ்டனத்தில் ‘ஹூம்’ என்று உச்சரிக்க வேண்டும். இந்த விதமாய் சப்தகோடி மகாமந்திரங்களை உச்சரிக்கும் முறை தெரிந்து கொள்ள வேண்டும். –பக். 16 – 17

10. திரையிட வேண்டிய காலங்கள்


ஆவாகன, ஆசன, ஆவரண, நைவேத்திய பூஜா காலங்களிலும், இரவு இரகசிய பூஜா காலங்களிலும் திரையிடுதல் வேண்டும். திரையிடப் பட்ட காலங்களில் பக்தர்கள் த்ரிசன்ம் செய்யக் கூடாது என்பதாம்.

அபிஷேகத்தின் போது, விபூதி, சந்தனம், அபிஷேகமானவுடன் திரையை நீக்கி பக்தர்கள் கற்பூர தரிசனம் செய்யலாம் என விதி கூறுகிறது.

ஸ்நபன சங்காபிஷேகத்தின் போதும் தரிசிக்கலாம். மாதபூஜா வழிபாட்டில் வருகிற அபிஷேக விசேஷ திரவிய காலத்திலும் தரிசித்தல் விசேஷமாகும். –பக். 17.

11.உஷக் கால பூஜை

............ இந்த உஷக் கால பூஜையில் தைலாபிஷேகம் கூடாது. ஆதலால் பால் முதலிய திரவியங்களினால் (அபிஷேகம் செய்க) என்று கூறப் பட்டிருக்கிறது. இப்பூஜையின் முடிவில் சூரியோதயம் ஆக வேண்டும் என்பதாம்.
12. சுயம்பு முதலிய லிங்கங்களில் பகவான் சதா சர்வ காலமும் சாந்நித்தியராய் இருப்பதால் பூஜாக் கிரியைகளில் ஆவாகனத்தின் போது மூலமந்திரத்தால் பூஜிக்க வேண்டும். இது அபிமுக ஆவாகனம் எனப்படும். –பக். 28 -29

ஜீவநியாச புரஸ்சரமாக செய்யப் படுகின்றது சித்பிரகாச ஆவாகனம் என்றும், பூஜா காலங்களில் செய்யப் படுகின்றது சம்முக ஆவாகனம் என்றும் இருவகை பேதம் கூறப் படுகின்றது.

சம்யோஜனம்,சாபேட்ச விசர்ஜனம், விசர்ஜனம் என 3 வகை. அதாவது 1. அகினியிலிருந்து கும்பத்திற்கும், கும்பத்திலிருந்து பிம்பத்திற்கும் , பிம்பத்திலிருந்து இருதயத்திலும் ஒடுக்கிக் கொள்வது சம்யோஜனம் எனப்படும். 2. விச்ர்ஜனம் செய்தாலும் கும்பஜலம் அபிஷேகம் செய்யப்ப்டும் வரை கும்பத்தில் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனையுடன் கூடியது சாபேட்ச விசர்ஜனம்; 3. ஸ்மார்த்த கர்மாக்களில் யதாஸ்தானம் செய்வது விசர்ஜனம் என்பதாம். –பக். 29

13. தூபம் கந்தர்வ கணத்தையும் , தீபம் அக்னி கணத்தையும் சார்ந்து வழிபடுவர்களுக்கு ஆணவமாகிய அறியாமையை கிரியாசக்தி கொண்டு நீக்கி ஞான அறிவையும் கொடுக்கும் என்பதாம். –பக். 30

14. அபிஷேகக் கிரமம்

பிம்பத்தின் சிரசிற்கு மேல் நான்கு அங்குல உயரத்திலிருந்து பசுவின் கொம்புநுனிப் பிரமாண தாரையாய் ஜலத்தை அபிஷேகத்தில் வேண்டும். ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், சந்தனம், கோரோசனை, தக்கோலம், கச்சோலம், வெட்டிவேர், சண்பக மொட்டு, சுவர்ணம் இவை யாவும் அபிஷேக ஜலத்தில் இடும் திரவியங்களாகும். –பக். 33

15. ஆடைகள், பட்டுகள் பிம்பத்தில் தனித்தனி கலையின் சக்திகளை சேமிப்பதற்கும் உதவுவனவாம். ஆதலினாலே முற்பகலில் மஞ்சள் வஸ்திரமும், நடுப் பகலில் சிவப்பு வஸ்திரமும், சாயங்காலத்தில் அநேக விசித்திர வஸ்திரங்களும், அர்த்த ஜாமத்தில் வெள்ளை வஸ்திரமும் அணிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு நிற ஆடைகளைச் சார்த்தும்படி சிவகாமங்கள் கூறுகின்றன. –பக். 36

16........பரிசாரகர் தரும் தீபத்தை நிரீட்சணம் முதலிய சம்ஸ்காரங்கள் செய்து புஷ்பத்தால் அருச்சித்துக் கையில் வாங்கி சுவாமிக்கு நேரே உயர்த்தி முகம், கண்கள், மூக்கின் நுனி, கழுத்து, மார்பு, கால்கள் இவ்விடங்களில் தனித்தனி பிரணவாகாரமாகக் காண்பித்து பிரத்தியேகமாய் மும்முறை சுற்றிக் காண்பிக்க வேண்டும்.

முதல் சுற்றினால் பூமியையும், இரண்டாவது சுற்றினால் ஆகாயத்தையும், மூன்றாவது சுற்றினால் சுவர்க்கத்தையும் ரட்சித்தலைப் புலப்படுத்துகின்றது. அன்றியும் முதல் சுற்று உலக் நன்மைக்காகவும் இரண்டாவது சுற்று கிராம நன்மைக்காகவும் மூன்றாவது சுற்று உயிர் நன்மைக்காகவும் எனக் குறிப்பிடப் படுகின்றது. –பக். 43

17. சக்தி தீப வரிசை

புஷ்ப தீபம், சர்ப்ப தீபம், புருஷாமிருக தீபம், விருஷப தீபம், யானை தீபம், புலி தீபம், குதிரை தீபம், சிம்மதீபம், அன்ன தீபம், குக்குட தீபம், சக்தி தீபம் இவை 11, 9, 7, 5,3,1 மலத்தட்டுகளும், கும்பதீபம், ஆமைதீபம், மேரு தீபம், நட்சத்திர தீபம், கற்பூர தீபம் காண்பித்து பஸ்ம ரட்சை சார்த்த வேண்டும்.பக். 44

18. ஸ்ரீபலி ( நித்ய உத்ஸவம்)

மூர்த்திகளுக்கு ஆவரண தேவதைகள் உள்ளன போன்று ஆலயங்களுக்கும் ஆவரணங்கள் உள்ளன. அவை கோயில் பிரகாரங்களில் பிரதிஷ்டிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பிரகாரத்திலும் அமைக்கப் பட்டிருக்கும் பலிபீடங்களில் அந்தந்த ஆவரண தேவர்கள் வசிக்கும் ஸ்தானமாகும். அவர்களுக்கு பலியிடுவதே நித்ய உத்ஸவம் எனப்படுவது. இறைவனே பலி தேவராக மூர்த்தம் கொண்டு பிரகாரங்களில் வலமாகச் சுற்றி வந்து அந்தந்த ஆவரண தேவர் முன்னின்று தாமே நேரில் அவருக்கு பலியிடுவர் என்பதாம்.


இந்த ஸ்ரீபலி சுற்றுதல் பிரகாரங்களில் வலம் சுற்றி வரும் காந்த ஓட்டத்தைப் பயன்படுத்துவதாகும். ஆகையால் பூஜா காலங்களில் ஆவரண பலி பீடங்களுக்கு இடையே குறுக்குமறுக்குமாக அடியார்கள் நடமாடுதல் கூடாது. – பக். 51

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate