சனி, 11 ஏப்ரல், 2009

பங்குனி உத்திர நாள் ஒலிவிழா

லிவிழா வீதி மடநல்லார் மாமயிலை’யில் பங்குனி உத்திரத் திருநாள் பெருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாய்த் தொடங்கிவிட்டது. மயிலையிலேயே குடியிருந்தால் தினமும் கண்டு களித்து இன்புறலாம். வாய்ப்பில்லை.


அதனால் என்ன? 2 ஆம் திருநாளன்று மாலை மயிலைக்குச் சென்றேன். எங்கெங்கும் மக்கள் கூட்டம். வாகன நெரிசல். சாதாரண நாட்களிலேயே அப்படித்தான்.இப்போது திருவிழா வேறு. கேட்க வேண்டுமா?

கீழ வாசலில் கோயில் முன்பு குடியிருந்த கடைகள் வாகனங்கள் இந்த 10 நாளைக்கு மட்டும் அகற்றப்பட்டிருக்கின்றன. இப்பொழுதுதான் அங்கே சந்நிதித் தெரு என்று ஒன்று இருக்கிறது என்பதும், அத்தெருவில் கடைகளுக்கிடையில் வீடுகளும் இருக்கின்றன என்பதும் தெரிய வந்தது.

கோயிலுக்குட் சென்று விநாயகரை வணங்கி வலம் வந்தேன். பிராகாரத்தில் முக்கால் பங்கு பந்தல் போட்டிருக்கிறார்கள். சுவாமியும் அம்பிகையும் ஓரளவு நெரிசலின்றித்தான் இருந்தனர். சிங்காரவேலரையும் சுவாமி அம்பிகையையும் தரிசித்து விட்டு நவராத்திரி மண்டபத்திற்கு வந்தேன்.

சற்குருநாத ஓதுவார் தலைமையில் 7 ஓதுவார்கள் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கேட்கலாமே என்றமர்ந்தேன். அச்சமயம் ஓதுவார்கள் இருவர் ஏதோ பாடிக் கொண்டிருந்தனர். சற்று நேரம் ஐம்புலன்களையும் ஒடுக்கி ஆழ்ந்து உற்று நன்றாகக் கேட்ட பின்புதான் ‘ஆல நீழலுகந்த திருக்கையே’ பதிகம் என்பது புலப்பட்டது. அவ்வளவு உச்சரிப்பு சுத்தம்.

முதலில் ‘தம்மையே புகழ்ந்து’ பாடினார் சற்குருநாதர். என்ன ராகம் என்பது தெரியவில்லை. ஆனால் கேட்ட ராகம் மாதிரியே இருந்தது. அடுத்து சாரமதியில் ‘வேதநாயகன் வேதியர் நாயகன்’ எடுத்தார். ஆகா....... அந்த ராகத்தில் என்ன சொக்குப் பொடிதான் இருக்கிறதோ? என் உயிர் முழுதும் அதில் கலந்து விடுகிறது. அதிலும் சற்குருநாதர் பாடும்போது கேட்கவேண்டுமா என்ன?

கேட்டவுடன் மெய்மறந்தேன். குற்றால அருவியின் கீழ் நின்றது போல இருந்தது.

மற்ற ஓதுவார்களும் பாட ஆரம்பித்தனர்.

நான் எழுந்து பிராகாரம் வலம் வந்தேன். அங்கே சுவாமி மண்டபத்தில் நந்திதேவர் அருகே சிலர் இருந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். வலமாக வரும்போது வாயு மூலையில் 20 பேர் எதிரெதிராக அமர்ந்து வேதம் ஓதியபடி இருந்தனர். கேட்க ஆனந்தம்தான்.

அப்படியே செல்லும்போது தங்கத்தேர் அருகே உள்ள அறையில் ஒன்றரையாள் உயரத்தில் வெள்ளி அதிகாரநந்தி வாகனம் இருந்தது. என்ன ஒரு கலைநுணுக்கம்? அப்பப்பா...... பிரமாண்டம் என்றாலும் ஒவ்வொரு அங்குலத்திலும் சிற்பி விளையாடியிருக்கிறான்.

இவ்வாகனம் 1917ல் தண்டரை வைத்தியர் த.செ.குமாரஸ்வாமி பக்தர் (பத்தர்?) என்பவரால் செய்தளிக்கப் பட்டதாம். இவ்வாகனத்தில் சுவாமி எழுந்தருளியிருப்பதை ஓவியர் மணியம் உயிரோட்டம் ததும்ப வரைந்திருக்கிறார். அவ்வோவியத்தை பெரிய வினைல் பேனராகத் தொங்க விட்டிருந்தனர்.

அப்படியே சனீஸ்வரர் அருகே சென்றேன். ஒருபுறம் மேடையில் நாதஸ்வரக் கச்சேரி. இந்தப்புறம் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் அலங்காரராக எழுந்தருளியிருந்தனர். மதுரையிலிருந்தே வட தமிழகத்தில் சுவாமிக்குச் செய்யப்படும் அலங்காரங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன.

கபாலீஸ்வரர் கையில் எப்போதும் ஒரு அஸ்திரம் ஏந்தியிருக்கிறார். அருகில் பிரியாவிடை. வலப்பக்கம் கற்பகாம்பிகை. இடப்புறம் சிங்காரவேலர். அவர் முன் விநாயகர். சண்டேசர் என் கண்ணுக்குப் புலப்படவில்லை.

தீபாராதனை கபாலீஸ்வரருக்கு நடந்தது. மனம் குளிர தரிசனம் செய்து கொண்டேன்.

அவ்வப்போது அர்ச்சகர்கள் உள்ளிட்ட பலரும் சுவாமியை தங்களது கேமராக்களிலும் செல்போன்களிலும் சிறைபிடிக்க முயன்றனர்.

”உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்
கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன்
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்”
திருவாசகம்தான் நினைவுக்கு வந்தது.

சிந்தையை ஈர்த்து நாதத்தில் ஒன்ற வைக்கும் உயரிய நாதஸ்வர இசை இருக்க டமாரங்களை ஏன் தட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. ‘ஒலிவிழா’ என்பதை நிரூபிக்கிறார்களோ என்னவோ?

தீபாராதனை சமயத்தில் நெல்லையப்பர் கோயில் பஞ்சமூர்த்திகள் தீபாராதனையை நினைத்துக் கொண்டேன். அங்கு போல் எங்கும் செய்வதில்லை போலும்.

வெளியில் வரும்போது மாமிகள் இருவர் பெண் போலீஸ்களிடம்,”அவாள்ளாம் ‘சைவைட்’. நாயன்மார்ன்னு சொல்வோம்” என்று அறுபத்து மூவர் பற்றி விளக்கிக் கொண்டிருந்தனர்.

‘சோர்வில்லா நிலையே சக்தி’ என்பான் பாரதி. பலசிந்தனை, பசி அலுப்பு இவற்றால் வந்த சோர்வுடன் தான் கோயிலுக்குச் சென்றேன். கோயிலை நெருங்கும் போதே என்னைப் பீடித்த சோர்வு நீங்கிவிட்டது. புத்துணர்வு வந்துவிட்டது.

கண்டு கேட்டு உண்டு உற்று அறியும் ஐம்புலன்களுக்கான வேலையும் திருக்கோயிலில் இருக்கிறது. திருவிழாவில் இன்னும் அதிகம்.
கண்குளிர இறைவனைக் காணலாம். செவிகுளிர வேதம், திருமுறை, இசை கேட்டு இன்புறலாம். வயிறார பிரசாதம் உண்டு மகிழலாம். சுவாமியைத் தரிசிக்க பக்தர்களோடு தள்ளுண்டு எதிர்பார்ப்போடு தரிசிக்கலாம். இறைவனுக்குச் சார்த்தப்படும் பூக்கள் தூபம் இவற்றின் நறுமணத்தை நுகரலாம்
. இன்னும் பலப்பல....

இதனால்தான் திருவிழா என்பது உற்சாகத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. இது உலகியல் சார்ந்ததாகத் தான் உள்ளது. நம் நாட்டிலோ உலகியலும் ஆன்மீகமும் கலந்தே தான் திருவிழா நடைபெறுகிறது.

திருவிழா மகிழ்ச்சியின் அடையாளம். இறைவன் ஆனந்த வடிவமானவன் என்பதைத் திரும்பத் திரும்ப நமக்கு நினைவூட்டுவதுதான் திருவிழா. அங்கே துக்கத்துக்கோ, சோர்வுக்கோ, பொறாமைக்கோ இடமில்லை

தமிழகத்தில் திருவிழா வெறும் புறத்து மகிழ்ச்சிக்காக மட்டுமே நடத்தப்படுவதில்லை. துன்ப மயமான பிறவிச் சுழலில் இருந்து விடுபட்டு நிலையான பேரின்பத்தை நல்கும் இறைவனின் திருவடியை அடைவதுதான் ஒவ்வொரு உயிரின் நோக்கம்.

இதனை நடைமுறையில் அவ்வப்போது நினைவூட்டுவதுதான் திருவிழா.

‘கண்டு கண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே’ என்பதுதான் நாம் அனுபவிக்க வேண்டியது. ஆகமங்களும் ‘உலக நன்மையின் பொருட்டே திருவிழா செய்க’ என்றுதான் ஆணையிடுகின்றன. நிற்க.

மறுநாள் ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை 5.55 க்கு அதிகாரநந்தி வாகனத்தில் கபாலி எழுந்தருளுவார் என்பதைக் கண்டவுடன், ‘நாளைக் காலை 6.30/ 7 க்காவது இங்கு வந்துவிட வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அதிகாலை 4 மணிக்கு அலாரமும் வைத்து விட்டேன். அப்புறம் என்ன? வழக்கம் போல்தான். “எல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்”. மெய்யான வார்த்தைகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate