தமிழகத்தில் சிவ வழிபாடு
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் பண்டைக் காலந்தொட்டு சிறந்து வரும் வழிபாடுகளுள் சிவ வழிபாடு முதன்மையானதாகும்.
திராவிட நாகரிகத்தோடு தொடர்புடைய சிந்துவெளி நாகரிகத்தில் சிவவழிபாடு இருந்தது.
சங்க இலக்கியங்களில் `தாழ்சடைப் பொலிந்த அருந்தவன்'; `ஈர்ஞ்சடை அந்தணன்'; முக்கண்ணன்; கறைமிடற்றண்ணல், முதுமுதல்வன், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன், ஆலமர் செல்வன், கணிச்சியோன், நுதல்விழி நாட்டத்து இறையோன், பிறவாயாக்கைப் பெரியோன் எனப் பல்வேறு பெயர்களில் சிவபிரான் சுட்டி அறியப்படுகிறார்.
ஆயினும் திருமால், இந்திரன், பலராமன், முருகன், வஜ்ராயுதம், வெள்ளையானை ஆகிய தெய்வ வழிபாடுகளும் தமிழகத்தில் இருந்து வந்துள்ளன.
"கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழகம் மிக வளர்ந்த நாகரிகத்தையும், இலக்கியத்தையும் கொண்டிருந்தது. கடவுள் உலகங்கள், அவற்றினமைப்பு போன்றவற்றைப் பற்றிய கோட்பாடுகளோடு வேறுபல உயரிய குறிக்கோள்களும் அவற்றில் நிரம்பியிருந்தன."1
இச்சமயத்தில் வடநாட்டில் தோன்றிய பௌத்த சமண சமயங்கள் தமிழகத்தில் ஒன்றன்பின் ஒன்றாகப் பரவலாயின.
தமிழகத்தில் பௌத்தம்
தேவனாம் பிரியனான அசோகனின் மகனான மஹிந்தன் காலத்தில் பௌத்தம் தமிழகத்தில் பரவத் தொடங்கியதென்பர்.
"சிங்கள நாட்டு மகாவம்சமும் பாகியான் எழுதிய குறிப்புகளும் பல்லவராட்சி தோன்றும் முன்பே, பாண்டிய நாட்டில் பௌத்தம் பரவி இருந்தது எனக் குறிக்கின்றன. மணிமேகலை சேரநாட்டு வஞ்சி மாநகரிலும், சோழநாட்டுக் காஞ்சிபுரத்திலும், காவிரிப்பூம்பட்டினத்திலும் புத்த சமய சங்கிராமங்கள் இருந்ததைக் குறிப்பிடுகின்றன."2
புத்தரின் மறைவுக்குப் பின்பு மகாயானம், ஹீனயானம் என இருபெரும் பிரிவாக பௌத்தம் பிரிந்தது. தமிழ்நாட்டில் மகாயான பௌத்தமே பரவியது.
கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் தென்னாட்டிற்கு வந்த நாகார்ஜுனர் பௌத்தத்தை இங்கே பரப்பினார் என்றும், அவர் தென்னாட்டு வேந்தன் ஒருவனையும், 10,000 பிராமணர்களையும் பௌத்தர்களாக மதம் மாற்றினார் என்றும் அறிஞர் கூறுவர்.3
பிற்காலத்தில் அதாவது கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் காஞ்சியைக் காண வந்த சீனயாத்ரிகர் ஹியூன்சாங் "இங்கு 100க்கும் மேற்பட்ட பௌத்த சங்கிராமங்கள் உள்ளன. 10,000க்கும் மேற்பட்ட குருமார்கள் தேரவாத நூல்களைப் பயில்கின்றனர். சைனர் உள்ளிட்ட ஏனையோர் கோயில்கள் எண்பதுக்கும் குறையாமல் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.4
எனினும் சமண சமயத்தைப் போல் பௌத்தம் தமிழகத்தில் செழித்து வளரவில்லை என்பது வரலாற்றறிஞர்களால் குறிப்பிடப்பட்டு வருகிறது.
பௌத்தக் காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசி ஆகிய நூல்களின் வழியே பௌத்த சமயம் குன்றிய செய்தியும், பௌத்தர்களுக்குச் சமணர்களோடும், ஏனைய வைதீகச் சமயத்தாரோடும் இருந்து வந்த முரண்பாடுகளும் தெற்றெனப் புலப்படுகின்றன.
மணிமேகலையைப் பெரிதும் ஆராய்ந்த அறிஞர் சோ.ந. கந்தசாமி, "பௌத்தத்தின் பல்வேறு பிரிவுகட்கும் இடையே இந்தியாவில் கி.பி. 100-500லும், சீனத்தில் கி.பி. 500-900லும் கொள்கைப் போராட்டங்களும் முரண்பாடுகளும் நிகழ்ந்தன. காலக்கோட்பாட்டினாலும் அயலார் படையெடுப்பிலும், புறச் சமயத்தாக்குதலாலும், போலித் துறவிகளின் பொறுப்பின்மையாலும், பௌத்தம் நலிந்தது. பௌத்தப் பனுவல்கள் பல மறைந்தன" என்றுரைப்பார்.5
கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் (கி.பி. 753ல்) சமண சமயக் குருவாய்ப் பெயர்பெற்ற ஆசாரிய அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்தக் கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்தப்பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார்.6
அவைதீக சமயங்களின் உட்பூசல், பௌத்தத் துறவிகளின் போலித்தனம் (மத்த விலாசப் பிரகசனத்தில் கூறியபடி) ஆகியவற்றால் தமிழகத்தில் பௌத்தம் தன் செல்வாக்கை இழந்து பெயரளவில் வாழலாயிற்று.
தமிழகத்தில் சமணம்
பௌத்தத்திற்குப் பின்பு தமிழகத்திற்குள் நுழைந்த சமணம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையிலும் தன் செல்வாக்கைச் செலுத்தி வந்தது.
வடநாட்டிலிருந்து தெற்கே வந்த சமணம் தென்கன்னடப் பகுதியிலுள்ள சிரவண பெலகுளாவில் நிலைகொண்டு பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தன்மதத்தை வளர்த்து வந்தது.
சந்திரகுப்த மௌரியருடன் வந்த பத்ரபாகுவிற்குப் பின் கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாமந்தப்பத்திரர் எனும் சமணத் துறவி பற்றியும், அவருக்குப் பின் வந்த எண்ணற்ற சமணத் துறவிகள் பற்றியும் அவர்கள் காஞ்சிமாநகரில் இருந்து சமயத்தைப் பரப்பினர் என்பதையும் சிரவணபெலகுளாக் கல்வெட்டுகளும், வேறுசில சமண சமய நூல்களும் கூறுகின்றன.7
தென்னார்க்காடு மாவட்டத்தில் இன்றுள்ள திருப்பாதிரிப்புலியூர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பாடலிபுத்திரம்/பாடலிபுரம் என்று அழைக்கப்பட்டது. இங்கு ஒரு பெரிய சைனமடம் இருந்தது. இதனைச் சேக்கிழார், "பாடலிபுத் திரமென்னும் பதியணைந்து சமண்பள்ளி மாடணைந்தார்" (திருநா. 38) என்று கூறுவார்.
இம்மடத்தில் சந்திரநந்தி என்ற சமணமுனிவர் தங்கியிருந்து "லோகவிபாகம்" எனும் நூலை அர்கத்மாகதி மொழியிலிருந்து வடமொழியில் பெயர்த்தெழுதியுள்ளார். இந்நூல் எழுதி முடித்த காலம் சகம் 380 (கி.பி. 458) சிம்மவிஷ்ணு பல்லவனின் 22 ஆம் ஆட்சியாண்டில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.8
இம்மடத்தில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் சிம்மசூரி என்பவரும், சர்வநந்தி என்பவரும் சம்ஸ்க்ருதத்திலும் பிராகிருதத்திலும் பெரும்புலமை பெற்று விளங்கினர்.
இம்மடத்தில் தான் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் மருள் நீக்கியார் `தருமசேனர்' எனும் பெயர் பூண்டு சமணர்களுக்குத் தலைமை தாங்கினார். பிற்காலத்தில் சைவராகித் திருநாவுக்கரசர் ஆயினார்.
இம்மடத்தினருகில் சமணர் கோயில் இருந்தது. இதனை மஞ்சள்குப்பம் பயணியர் மாளிகையின் அருகிலுள்ள நான்கடி உயரச் சமணர் சிலை இன்றும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.9
கி.பி. 525 அளவில் பூஜ்யபாதர் என்பவருடைய மாணவரான வஜ்ரநந்தி என்பவர் சமணசங்கம் ஒன்றினை நிறுவினார். தேவசேனர் என்பார் எழுதிய `திகம்பர தரிசனசாரம்' என்னும் நூல், அச்சங்கம் தமிழகத்து பாண்டி நாட்டு மதுரையில் நிறுவப்பட்டதெனக் கூறுகிறது.10
ஆராய்ச்சியாளர் சிலர் இச்சங்கத்தையே தமிழ்ச்சங்கம் என்றும், முதலிடை கடைச் சங்கங்கள் இருந்தனவாக இலக்கியங்கள் கூறுவன மிகையே என்றும் கூறுவர்.
பௌத்தத்தின் நலிவைக் கண்ட சமணர்கள் தமிழ் பயின்றனர். தமிழுக்கான இலக்கண நூல்களையும், நீதிநூல்களையும், காப்பியங்களையும் இயற்றலாயினர். பௌத்தம் போன்று சாதிக் கோட்பாட்டினை முற்றிலும் வெறுக்காது, வணிகர்களை முதன்மையாகக் கொண்டு சாதிகளை ஒருபால் ஏற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் பெரும்பான்மையும் திகம்பர சமணமே இருந்ததெனினும் சிறுபான்மை சுவேதாம்பர சமணமும் இருந்து வந்தது.
சிலப்பதிகாரக் காலந்தொட்டு கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்த சமணம், மன்னர்களால் ஆதரிக்கப் பெற்றது. பல்லவராட்சிக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட களப்பிரர்கள் சமணர்களே.
மதுரையைச் சுற்றியிருந்த மலைகளில் எண்ணாயிரம் சமணர்கள் வாழ்ந்தனர் எனப் பெரியபுராணம் கூறும்.
குறிப்புகள்
1.சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் ( டாக்டர். டி.பி.சித்தலிங்கம்) - பக்.27.
2.சைவ இலக்கிய வரலாறு (ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை) - பக்.11.
3.மேலது - பக்.13.
4.மேலது - பக்.11,12.
5.தமிழக வரலாற்றில் சமயப் பூசல் (வீரா. அழகிரிசாமி) -பக். 127.
6.மேலது - பக்.118.
7.மேலது - பக். 117.
8.சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு (முனைவர். சோ. குமரேச மூர்த்தி) - பக்.106.
9.மேலது - பக்.107.
10. சைவ இலக்கிய வரலாறு - பக்.16.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக