திங்கள், 20 ஏப்ரல், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 4

சமணத்தின் வீழ்ச்சி

க, வைதீக சமயம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பரத கண்டம் முழுவதுமே நலிவுற்றிருந்தது. பௌத்த சமயங்கள் புயலெனப் பொங்கி மக்களைப் பெருமளவில் ஈர்க்கலாயின என்பது மேற்கண்ட சான்றுகளிலிருந்து தெரிய வருகின்றது.
பண்டைக் காலத்திலேயே கடவுட்கோட்பாடு சிறந்திருந்த போதும், தமிழகத்தை ஆண்ட சிற்றரசர்களிடையே ஏதாவதொரு காரணம் தொட்டு போர்கள் நடந்தன என்பதை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பேரரசு தோன்றாக் காலத்தில் நிகழ்ந்த இப்போர்கள் நீடித்த விளைவுகளை அளிக்காவிட்டாலும் நிம்மதியான வாழ்விற்கு உலை வைத்தன.



"பண்டை இலக்கியங்கள் கடவுளரைப் பற்றிய வழிபாடுகளைப் பற்றியும் கூறுகின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழகத்தில் பல்வேறு சமயங்கள் நிலவியிருந்தமையைக் காட்டுகின்றன. தொடர்ந்து நடந்த போர்களாலும் பிரிவினைகளாலும் தளர்ந்து போயிருந்த மக்களின் மனத்தைச் சமண, பௌத்த சமயக் கருத்துக்கள் ஈர்த்தன."17



"காதல் வாழ்க்கை என்றிருந்த தமிழ் மக்களுக்குச் சமண பௌத்தக் கோட்பாடுகள் வரவேற்கத் தக்கனவாயிருந்தன. புதுமை, அவர்களைப் பெரிதும் கவர்ந்தது."18



வைதீக சமயங்களைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட களப்பிரருக்குப் பின்பு தொண்டை நாட்டைக் கைப்பற்றி யாண்ட பல்லவ மன்னர்கள் தமிழர் அல்லர் என்றே அறிஞர் பெரும்பாலோர் கருகின்றனர்.


"பல்லவர்கள் தமிழ்நாட்டவரல்லர் என்பதும், காலம் செல்லச்செல்லப் படிப்படியாக வடநாட்டிலிருந்து தென்னாடு புகுந்து தொண்டைநாட்டிலும் சோழநாட்டிலும் பரவியவர் என்பதும் அவர்கள் வரலாற்றால் அறியப்படுகின்றன. எனவே அவர்கட்குத் தமிழ் வேற்றுமொழி என்பதும் வடமொழி உரிமைமொழி என்பதும் வெளிப்படை. ஆகவே, அவர்கள் ஆட்சியில் வடமொழியே பெரிதும் பேணி வளர்க்கப்படும் என்பது சொல்லாமலே விளங்கும்."19



அப்பரடிகள் காலத்தில் வாழ்ந்திருந்த பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் வடமொழியில் பெரும்புலமை கொண்டவன். பாடலிபுத்திரத்தில் இருந்த சமண சங்கத்தின் மீது பேரன்பு கொண்டிருந்தான். 


சமண சமயத்தைச் சேர்ந்த மகேந்திரவர்மன் சமணத் துறவிகள் மனமகிழும்படியாகப் பிறமதத்தவர்களைக் கிண்டல் செய்யும் நையாண்டி நாடகமான `மத்த விலாசப் பிரகசன' த்தை வடமொழியிலே இயற்றினான்.20



அக்காலத்துத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்தம், பாசுபதம், காபாலிகம், காளாமுகம், பைரவம் ஆகிய மதங்களைக் கிண்டல் செய்து இந்நாடகத்தை இயற்றியிருக்கிறான்.21



இவன் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டிருந்த மாறவர்மன் அரிகேசரியாகிய கூன்பாண்டியனும் சமணசமயத்தைத் தழுவியிருந்தான்.

சமணசமயக் கொள்கைகளுள் பெரும்பாலன நடைமுறைக்கு ஒவ்வாதனவாயிருந்தன.



"துறவு பூணுதலின்றி, குறிக்கோளை எட்ட உதவும் வழிவேறில்லை என்னும் விதி ஏற்றுக் கொள்வதற்கு ஏற்றதாயில்லை. மேலும் அரசு இந்த வகையில் வற்புறுத்தலை மேற்கொண்டது. வழிபாட்டு முறையில் தாராளமான சுதந்திரத்தை அனுபவித்துப் பழகிய மக்களுக்கு இந்தக் கட்டாயமும் திணிப்பும் வெறுப்பை ஊட்டின. எனவே தான் களப்பிரர்களின் ஆட்சி முடிவடையும் காலத்தில் தோன்றிய சைவ சமயக்குரவர்களுக்கு வரவேற்பு இருந்து. அவர்கள் துறவினுடைய சிறப்பை ஒரு சிறிதும் குறைக்காமலேயே `இறைவன் துறவியர்க்கெல்லாம் துறவி' என்று கூறியும் அதே நேரத்தில் `பாகம் பெண்ணுருவானவன்' என்று கூறியும் இறைவனைப் பாடியுள்ளார்கள். அதாவது துறவியாய் உள்ள அதே இறைவன் காதல் வாழ்க்கைக்கும் கடவுளாக அமைகின்றான். துறவு என்பது அன்புக்கு மாறானது அன்று. பௌத்த சமண சமயங்கள் வெறுத்து ஒதுக்கிய பல்வேறு கலைகளும் சமயக் குரவர்களால் புத்துயிர் பெற்றன. இறைவன் புகழைப் பாடுவதற்கும் பரப்புவதற்கும் அவர்கள் இசையைப் பயன்படுத்தினர்."22



இன்னும் சமண சமயத்தார் மேற்கொண்ட காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளை அப்பரடிகள் தமது தேவாரத்தில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.


தலைபறித்தல், கடுப்பொடி பூசிக் கொள்ளுதல், நின்று கொண்டு உரையாடாமல் உண்ணல், பாயுடுத்தல், மெல்லோசைகளைக் கொண்ட மந்திரங்களை முணுமுணுத்தல், பீலிகளை இடுக்கிக் குண்டிகைத் தூக்கி கொள்ளுதல், உடல் அழுக்கை நீக்காமை, பல் விளக்காமை, போலி அறவுரை கூறல் என்பது முதலியன சமணர்களின் அன்றாட வழக்கங்களாக இருந்தன என்பதை அப்பரடிகள் தேவாரத்தின் அகச்சான்றுகள் விளக்குகின்றன.



பரத கண்டம் முழுதும் நிலவியிருந்த வேதநெறியினைப் பழித்ததும், வேள்விகளைக் கடுமையாக எதிர்த்ததும் சமண சமயத்தின் அழிவிற்கு வித்திட்ட முக்கிய காரணங்களாம். 


மேலும், பண்டை தமிழ்ச் சமூகத்தில் மேம்பட்டிருந்த பெண்கள் நிலை இழிவடைந்தமை, தமிழ்ப்பண்பாட்டிற்கு முற்றிலும் மாறான வழக்கங்களை சமணத் துறவிகள் மேற்கொண்டமை, சமண மடங்களில் ஏற்பட்ட குழப்பங்கள், துறவிகளின் போலித்தன்மை இவையாவும் சேர்ந்து தமிழகச் சமய வரலாற்றில் சமண சமய வீழ்ச்சிக்கும் வைதீக சமயங்களின் எழுச்சிக்கும் முக்கிய காரணங்களாயின.



சமணசமயத்தைக் குறிக்க வந்த தெய்வச் சேக்கிழாரும், "உலகில் வரும் இருள்" என்றும், "கொல்லாமை மறைந்துறையும் அமண் சமயம்" என்றும், "பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறி" என்றும், "கொலையும் பொய்ம்மையும் இலமென்று கொடுமையே புரிவோர்" என்றும், "கொலைபுரியா நிலை கொண்டு பொய்யாழுகும் அமண் குண்டர்" என்றும் சமண சமயத்தின் அன்றைய உண்மை நிலையை எடுத்துரைத்தனர்.



இச்சூழ்நிலையில் தான் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் அவதரித்து வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை தழைக்கவும் பாடுபட்டனர்.



குறிப்புகள்


17. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் (டி.பி.சித்தலிங்கம்) - பக். 27.
18. மேலது - பக்.28.
19. சைவ இலக்கிய வரலாறு (ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை) - பக்.23.
20. மேலது - பக்.18.
21. சைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு (முனைவர்.சோ.குமரேச மூர்த்தி) -- பக்.27.
22. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் - பக்.28.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate