திங்கள், 6 ஏப்ரல், 2009

மகாபாரதம் தமிழாக்கிய ம.வீ.ராமானுஜாசாரியார்

ச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு வந்தபிறகு அச்சேறிய முதல் மொழி தமிழ்தான். கி.பி. 1800க்குப் பிறகு, அச்சிடுதல் குறித்த சட்டங்கள் விரிவாக்கப்பட்டு பரவலாக அச்சிடுதல் நடைபெற ஆரம்பித்தது.



தமிழகத்தில் அவ்விதம் திருக்குறளிலிருந்து பற்பல நூல்களும் அச்சுவாகனம் ஏறி உலாவர ஆரம்பித்தன. தமிழ்த் தாத்தா சங்க இலக்கியங்களையும், காப்பியங்களையும் மீட்டுக் கொடுத்த வரலாறு நாம் அறிவோம். 


உ.வே.சா. போன்று தமிழ் இலக்கிய உலகிற்கு எண்ணற்ற சான்றோர்கள் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றியுள்ளனர்.


அவர்களில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மாமேதை தான் ம.வீ. ராமானுஜாசாரியார்.

திருச்சிக்கு அடுத்த மணலூரில் அந்த கிராமத்து முன்சீஃபாக பணியாற்றிய வீராசாமி ஐயங்கார் - கனகம்மாள் தம்பதியருக்கு 1866 ஏப்ரல் 16ஆம் தேதியன்று இரண்டாவது மகனாக இவர் பிறந்தார்.



வளர்ந்து, படித்து, சில காலம் கும்பகோணம் நேட்டிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக பணியாற்றி பின்பு கும்பகோணம் காலேஜில் பணியாற்றினார்.
கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூலில் இவர் பணியாற்றிய காலத்தில் நேரம் இருக்கும் போது, உ.வே.சா அவர்களைச் சந்தித்து இலக்கியங்களை வாசித்து இன்பம் அடைந்திருந்தார்.



அப்போது, உ.வே.சா சம்ஸ்க்ருதத்தில் சிறந்த பண்டிதர்கள் பலரை அடிக்கடி சந்திப்பார். அவர்கள் மஹாபாரதத்தில் உள்ள சில சிறந்த, அரிய விஷயங்களைச் சொல்லக்கேட்ட பிறகு, ஐயர் "வில்லிபுத்தூர் ஆழ்வார் ஒப்புயர்வற்ற சிறந்த மகாகவி. அவர் வடமொழி மஹாபாரதத்தில் உள்ள விஷயங்களையெல்லாம் விடாமல் பாடியிருந்தால் மிக நன்றாய் இருந்திருக்கும்" என்று பல முறை கூறுவார். 


பின்பு மஹாபாரதத்தைத் தமிழில் மொழி பெயர்ப்பது குறித்து சிற்சில முயற்சிகள் நடைபெற்றன.


1903-ல் ஆசாரியார் தமது நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மஹாபாரதத்தைத் தமிழாக்க துணிந்தார். ஆயினும் இந்தப் பெரிய காரியத்தில் ஏற்படக்கூடிய சிரமங்களை நினைத்து இவர் மனம் கலங்க ஆரம்பித்தார். பிறகு ஒருவாறாக மொழிபெயர்க்கத் தொடங்கினார்.


கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மொழிபெயர்ப்புப் பணியை இவர் செய்து, மஹாபாரதத்தை தமிழில் அச்சிட்டுக் கொடுத்தார். இதற்காக இவர் தமது ஆசிரியர் பணியையும் விட்டு விலகினார். 


ஆரம்பத்தில் இந்தப் பணியினுடைய சிரமங்களை நோக்கி வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் உள்ளிட்ட பெரியவர்கள் சிலர் இதை தனியொரு ஆளாகச் செய்யவேண்டாம் என்று கூறி தடுக்க முனைந்தனர். ஆயினும் இவர் கண்ணபிரானது திருவருள் ஒன்றையே துணையாகக் கொண்டு இந்த மலைபோன்ற காரியத்தை எடுத்துக்கொண்டார்.


வனபர்வம் இரண்டாம் பாகத்தில் தாம் இந்த மொழிபெயர்ப்புக்காக மேற்கொண்ட சிரமங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் பல பக்கங்களில் விரித்துரைத்துள்ளார். அதில் ஒன்றை இங்கே குறிப்பிடலாம்.


தெரிந்த ஜோதிடர் ஒருவர் இந்த வேலையைப் பற்றி ஒரு சீட்டில் ஆரூடம் எழுதி இவரிடம் கொடுத்து அனுப்பினார். மஹாபாரத பதிப்புப் பணிக்காக ஏற்கனவே பல்வேறு துன்பங்களைத் தாங்கியிருந்த இவர், இந்த ஆரூடச் சீட்டு என்னவிதமான துன்பத்தைத் தரப்போகிறதோ என்று கருதி தாமே அதைப் பிரித்துப் பார்க்காமல் ஒரு உறைக்குள் வைத்து அரக்கு முத்திரையிட்டு பத்திரப்படுத்தி வைத்தார். மஹாபாரத வெளியீடு பூர்த்தியாகிய வேளையில் அந்தச் சீட்டினை எடுத்து படித்துப் பார்த்திருக்கிறார். இதை இவரே இவ்விதம் கூறுகிறார்:


"... அந்தக் காகித உறையைப் பிரித்துப் பார்த்ததில் `பாரதம் தமிழ் செய்யக்கேட்கிறது. வருஷம் மூணு செல்லும். இதில் கவலை அதிகம்' என்று எழுதியிருந்தது. ஆதியில் திவான் பகதூர் ரகுநாதராயர் சி.எஸ்.ஐ. அவர்களும், ஷ்ரீமான் வை.மு. சடகோப ராமானுஜாசாரியார் அவர்களும் பல காரணங்காட்டி தடுத்தார்கள். பிறகு என் அம்மானும் தமக்கையாரும் தடுத்தார்கள். ஷ்ரீமான் வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர் அவர்களும் மற்றும் பலரும் இது முற்றுப்பெறாது என்று சொல்லியிருந்தார்கள். அவற்றோடு செட்டியாருடைய ஆரூடமும் சேர்ந்து என் மனத்திற்கு இன்ன கவலையை உண்டாக்கியிருக்குமென்பதை அறிஞர்கள் ஊகிக்க வேண்டும். கோவிந்த செட்டியார் எழுதிக் கொடுத்த ஆரூடத்தை என்னோடு இடைவிடாமல் பழகிக் கொண்டிருப்பவர்களுக்கும் சொல்லாமல் 22 வருஷகாலம் மனத்தில் வைத்துக் கொண்டு இருந்தது சிரமமாகவே இருந்தது."


இந்த மாபெரும் பணிக்காக இவர் தனது அரசு வேலையை உதறித் தள்ளியது மட்டுமில்லாமல், இவரது மகன் எம்.ஆர். ராஜகோபாலனும் தனது பணியை துறந்து விட்டு தகப்பனாருக்கு உதவியாக இருந்து வந்தார்.


இந்த மிகப்பெரும் பணியின் பரிமாணத்தை இன்றைய சூழ்நிலையில் நாம் உணருவதற்கு ஆசாரியாரின் கீழ்க்கண்ட வரிகளை நாம் படிக்க வேண்டும்.

"எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரிதும் பெரும் பொருட்செலவினால் நிறைவேறக் கூடியதும் பல வருஷங்களில் நடந்து வந்ததும் ஆகையால் பல கனவான்களுடைய பேருதவி இன்றியமையாததாய் இருந்தது.... சம்பளம் படிச் செலவுகளும், வாங்கிய கடனுக்கு வட்டியும் முதலாக பலவகைகளிலும் பெருந்தொகை செலவாயிற்று. சுமாராகக் கணக்கு பார்த்ததில் ரூ.1,35,000க்கு மேல் செலவு தெரிகிறது... ஆரம்பச் செலவுகளுக்கும்... அச்சிடுவதற்குமாக ரூ.10,000க்கு மேல் கடன் வாங்க வேண்டிற்று. அதற்கு சுமார் 22 வருஷமாக சாதாரணமான வட்டி என்ன ஆகியிருக்கும் என்பது நான் தெரிவிக்க வேண்டியதில்லை.... என்னுடைய இதர வரும்படிகளாலும் ஈடானது போக பாக்கி ரூ.15,000 என் கைப்பொறுப்போடு இந்த மகாபாரதம் பூர்த்தியாகியிருக்கிறது."



இவருக்குத் திருவாவடுதுறை, திருப்பனந்தாள் திருமடங்கள் மிகப் பெரிய உதவிகளை ஆரம்பகாலம் தொட்டுச் செய்து வந்திருக்கின்றன. 1932ல் ஒருவர் ரூ.15,000 கைநட்டம் ஆக வேண்டுமென்றால் அவர் எவ்வளவு பெரிய லட்சிய வெறியோடு இந்த மாபெரும் பணியைச் செய்திருப்பார் என்பது நமக்கு விளங்காமற் போகாது.


ஆசாரியார் வெளியிட்ட பதிப்புகள் யாவும் தீர்ந்துபோன பின் கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் 1945-1959 காலகட்டத்தில் மீள்பதிப்புச் செய்தார். அந்தப் பிரதிகளும் இப்பொழுது கிடைப்பதில்லை.


சிவராமகிருஷ்ண ஐயரின் பேரன். எஸ். வெங்கட் ரமணன் (ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ்) இந்த மாபெரும் பணியை இப்பொழுது நிறைவேற்றியிருக்கின்றார்கள்.


அடக்கத்தின் மறு உருவமான ரமணனிடம் இது குறித்து நாம் கேட்ட பொழுது, "ஆசாரியார் 25 வருஷம் உழைத்தார், நிறைய நஷ்டப்பட்டார். அவருக்குப் பின்பு எனது தாத்தா செய்த பணியை நான் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கம் தான் என்னை இந்த மாபெரும் பணியில் ஈடுபட வைத்தது. 2000த்தில் இதற்கான பணியை ஆரம்பித்தேன். 


முதல் பிரதியை காஞ்சி ஷ்ரீஜெயேந்திரர் வெளியிட்டார். 2004 வரையிலும் முதல் நான்கு பாகங்களை வெளியிட்டேன். பின்பு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களினால் 2007-2008ல் தான் மீதி ஐந்து பாகங்களை என்னால் வெளியிட முடிந்தது. 


இந்த மஹாபாரதப் பதிப்பு பூர்த்தியான பிறகு பண்டித சா.ம. நடேச சாஸ்திரிகள் சம்ஸ்க்ருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து 6 வால்யூம்களாக வெளியிட்ட ராமாயணம், ஆசாரியார் மாப்பிள்ளை எஸ். ராமானுஜாசாரியார் மொழிபெயர்த்த ஹரி வம்சம், வைத்தியநாத தீட்சிதரின் வைத்தியநாத தீட்சிதீயம் என்ற தர்ம சாஸ்திர நூல், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு சங்கரர், பராசரபட்டர் ஆகியோரின் பாஷ்யங்களை ஆசாரியார் தமிழில் மொழி பெயர்த்த நூல் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடலாம் என்று எண்ணி இருக்கின்றோம். ஹிந்து சமுதாயமும் சான்றோர்களும் எங்களுக்குத் துணை நின்றால், இந்தப் பணி விரைவில் நிறைவேறும்" என்று கூறினார்.


ம .வீ. ராமானுஜாசாரியார் மஹாபாரதப் பதிப்புப் பணியில் பட்ட அதே கஷ்டங்களை, இப்பொழுது வெங்கட் ரமணனும் எதிர்கொண்டு வருகிறார். தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பது இதுதானோ என்னவோ?


100 வருடங்களாக நாம் மாறாமலேயே இருக்கின்றோம் என்பதை இந்நூலுக்கு அணிந்துரை எழுதிய டி.என். ராமச்சந்திரனின் கீழ்க்கண்ட கூர்மையான வார்த்தைகள் நிரூபிக்கின்றன.

"நம் அன்பர் தம் கடமையைச் செ
ய்து விட்டார். நாம் நம் கடமையைக் கைகழுவி விட்டோம். சனாதன தர்ம சனாதனிகள் என்று கூறி வருவோர் உரிய கழுவாய் தேடிக் கொள்வார்களாக."


( 2008 அக்டோபர் விஜயபாரதம் இதழில் வெளியானது )

2 கருத்துகள்:

  1. மகாபாரதத்தினை தமிழில் தந்த மாமனிதர் ராமானுஜாச்சாரியாரில் பணியைப் போற்ற வார்த்தைகள் ஏதும் இல்லை.ஆனால் ஒன்று அவருக்கு நம்மால் கைமாறு செய்யவேண்டுமானால் அது அம்மகானுபாவரின் மாபாரத மொழிபெயர்ப்பின் அத்துணைபாகங்களையும் வாங்கி ஒருமுறையேனும் படித்தலே சிறந்தது.

    பதிலளிநீக்கு
  2. "கீழ்கண்ட வலைபதிவினை தங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
    http://mahabharatham.arasan.info/
    அருட்செல்வபேரரசன் என்பவரின் தன்னலமற்ற தனிஒரு மனிதரின் உழைப்பால் எளிய தமிழில் படங்களுடன் உருவாகும் முழு மகாபாரதம்...
    வண்ணப்படங்களுடன் எளிய தமிழில் முழு மகாபாரதம் மிக அற்புதமான மொழிபெயர்ப்பு.அருமையான எளிய நடையில். படித்து பயன் பெறுவீர்.""
    முழு மஹாபாரதம்
    கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட """"The Mahabharata"""" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு (முழு மஹாபாரதமும் தமிழில்... இணையத்தில்... தயாரிப்பில்...)"""

    பதிலளிநீக்கு

Translate