வியாழன், 9 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 9


அப்பரடிகளும் வேதங்களும்:


வைதிக நெறியே பரவியிருந்த பாரத தேசமெங்கணும் அவைதிக நெறிகளான சமண பௌத்தங்கள் பரவின. ஆரம்பத்தில் இவை மிக்கோங்கி வளர்ந்தாலும் நாளடைவில் ஏற்பட்ட சமூக நெருக்கடிகளினாலும், இந்நெறிகளுக்கிடையே ஏற்பட்ட உட்பூசல்களினாலும், துறவிகளின் போலித்தனத்தாலும் நலிய ஆரம்பித்தன.



இச்சமயத்தில் தான் வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத் துறை விளங்கவும் சமயக்குரவர் அவதரித்தனர். இவர்கள் தலந்தோறும் சென்று இறைவனைப் பண்பொருந்தப்பாடி வைதிக சைவ நெறியினைப் பரப்பலானார்கள்.


 சைவம் இசையையும் பிறகலைகளையும் இறைவனின் வடிவமாகவும் இறைவனை வழிபடும் நெறியாகவும் போற்றியது. இந்நிலை அக்காலத்துச் சமணர், கலை நிகழ்ச்சிகளை ஆன்மிக நெறிக்கு எதிரியாகக் கருதியதற்கு முரணானதாகும்.43


இவர்களுள் அப்பர் சம்பந்தர் காலத்தவர். (கி.பி.570-650). வயதில் மூத்தவர். இறைவன் திருவருளால் இவர் சமண சமயத்திலிருந்து சைவத்துக்கு வந்தடைந்தார். எனவே இவருடைய பாடல்கள் உணர்ச்சி மிகுந்தவை. எளியவை. தாம் வழிபடும் பொருளிடத்தில் இணைந்து தம்மையே அழித்துக் கொள்ளும் அவரது அன்புக்கு இணையாக வேறு எங்கும் காணலரிது. இவர் சமண சமயத்திலிருந்து மாறி வந்ததால் இவர் பாடும் சிவனுடைய புகழ் சிறந்து விளங்குகிறது.44


அப்பரடிகள் தத்துவ சாத்திர உலகிற்குத் தமது திருவாக்குகளினால் வழங்கியுள்ள செய்திகள் விழுமிய பயனுடையவை. ஏனெனில், சமணம் சைவம் முதலான பல சமய ஆராய்ச்சிகளில் தமது இளமையைக் கழித்தவர். மிக்க இளமைப் பருவத்திலேயே இத்தகைய அறிவு வேட்கை அடிகளார்க்கு இனிது எழுந்தது என்று சேக்கிழார் கூறுவது இங்கு நினையத் தக்கது.


நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்(று) அறத் துறந்து சமயங்களானவற்றின்
நல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம் குறுகுவார்.


உலகின் இயல்பு நிலையாது என்று கண்டுகொண்டபின் நிலையற்ற இவ்வாழ்க்கைக்குத் தான் உரியவனல்லன் என்ற துறவுணர்வு தோன்றியவராய், எல்லாச் சமயங்களின் நன்னெறியை அறிந்து கொள்ள அப்பரடிகள் ஆசைமிகக் கொண்டார் என்பது இங்கு அறியத் தக்கது.45


இனி, மூவர் முதலிகள் அருளிச் செய்த பதிகங்களுக்கு முதலில் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டன. 


ஞானசம்பந்த சுவாமிகள் பாடலை `திருக்கடைக்காப்பு' என்றும், அப்பரடிகள் பாடல்களை `தேவாரம்' என்றும், சுந்தரமூர்த்திகள் பாடல்களை `திருப்பாட்டு' எனவும் அழைத்தனர்.


இவர்களுள் அப்பரடிகள் பாடியவை 49,000 பாடல்கள் என்பர். ஆயினும் இன்று கிடைப்பவை 3066 மட்டுமே. `தேவாரம்' என்னும் சொல்லுக்கு தெய்வத்திடம் அன்பை விளைவிப்பது; தெய்வத்தன்மை பொருந்திய பாடல் எனப் பல பொருள்கள் வழங்கப்படும்.


அப்பரடிகளின் தேவாரப் பாடல்கள் அவர் காலத்து சமய, சமூக, அரசியல் சூழ்நிலைகளை நாம் தெரிந்து கொள்ள உதவுகின்றன.


மேலும் அப்பரடிகள் இளமையிலேயே சமய ஆராய்ச்சியில் தலைப்பட்டு நின்றமையால் அவர் தமிழ் வடமொழி பாலி ஆகிய மொழிகளிலுள்ள சாத்திரங்களிலும் வல்லவராய் இருந்திருப்பார் என்பதை அவரருளிச் செய்தவற்றில் வரும் சொல்லாட்சிகளே நிரூபிக்கின்றன.


வேதவேள்வியை நிந்தனை செய்த சமணசமயத்தின் கண் இருந்தவராதலின் அவ்வேதங்களின் அருமையைப் பின்பு நன்கு உணர்ந்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை.


ஏனெனில், யஜுர் வேதத்தின் ஸ்ரீருத்ரத்திலுள்ள கருத்துக்கள் அப்பரடிகளின் நின்ற திருத்தாண்டகத்தில் காணலாம். ஸ்ரீருத்ரத்தில் கூறியபடியே சிவபிரானுடைய எண்வகை நிலைகளை (அஷ்டமூர்த்தம்) அடிகளார் இப்பதிகத்தில் எடுத்து ஓதியுள்ளார். 


சிவஞான போத மகாபாஷ்யத்தில் மாதவச் சிவஞான சுவாமிகள் ஸ்ரீருத்ரம் - நின்ற திருத்தாண்டகக் கருத்தொப்புமையைக் குறித்து இருக்கின்றார். மேலும் புராணங்களில் வரும் பல்வேறு சம்பவங்களையும் தமது பதிகங்களில் அப்பரடிகள் குறிப்பிட்டுள்ளார். 45அ


குறிப்புகள்:
43. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் - பக். 34.
44. மேலது - பக். 40.
45. அப்பர் தேவாரத் திறன் - அப்பர் மெய்ப்பொருள் நெறி - பக். 40.
45.அ. மேலது - அப்பர்தேவாரத்தில் கண்ட இலக்கணச் சிறப்பியல்புகள் - பக். 9.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate