வெள்ளி, 17 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 14

சூரிய சந்திரரைப் படைப்பவன்:

1. ஸுர்யா சந்த்ர மிஸௌ தாதா யதா பூர்வமகல்பயத்

- ரிக் -10-190-3

கடந்த கல்பங்களில் சூரியசந்திரர்களை அவருடைய ஞானத்தினின்றும் தோற்றுவித்தார்.


2. நதத்ர ஸுர்யோ பாதி நசந்த்ர தாரகம் நேமா வித்யுதோ
பாந்தி குதோSயமக்னி: I
தமேவ பாந்த மனுமாதி ஸர்வம் தஸ்ய பாஸா
ஸர்வமிதம் விபாதிII


-கடோபநிஷத்

சூரியன் சந்திரன் நக்ஷத்ரங்கள் மின்னல் அக்னி இவை எவையும் இறைவனில் பிரகாசிக்கின்றவையல்ல. இவை யாவற்றையும் பிரகாசிக்கச் செய்கின்றவன் அவன் ஒருவனே.

வாகீசப் பெருந்தகை,

"சென்றுருளும் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்" - 6-14-9 எனவும்,
"விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
விண்ணோடுமண் ஆகாசம் ஆயினானை" - 6-67-7 எனவும்,
"வாண்மதியாய் நாண்மீனும் ஆயினான் காண்" - 6-65-8 எனவும்,
"சூழ்கதிர்த் திங்களை விரிவிப்பார்
வெயில் பட்டவிளங்கொளி எரிவிப்பார்" - 5-16-3 எனவும்

அருளிச் செய்துள்ளனர்.

சிவபிரானே பர்க்கன்:

"சித்த சுத்திக்கு ஏதுவான நாற்பது சம்ஸ்காரங்களால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட பிராமணர்களுக்கு விதிக்கப்பட்ட வைதிக கர்மங்களில் மிகவும் முக்கியமான கர்மம், காலையிலும் மாலையிலும் செய்யப்படும் சந்தியாவந்தனம். அவ்வந்தனம் வேதங்களிலே விதிக்கப்பட்டுள்ளது.

...நான்கு வேதங்களே சிரேஷ்டமானவை. ...வேதங்களோ காயத்திரி மகாமந்திரத்திற்குள் அடக்கம். அக்காயத்திரி மந்திரமோ பிரணவத்துக்குள் அடக்கம். அதனால் பிரணவத்தின் பொருளும் காயத்திரி மந்திரத்தின் பொருளும் ஒன்றேயாம்.

...காயத்திரிக்கு... சந்தஸ் - 24 அக்ஷரமுள்ள காயத்திரி சந்தஸ்; ரிஷி-விசுவாமித்திரர். இவர் ராஜாவாகவிருந்து பிறகு பிரம்மரிஷி ஆனவரல்லர். சிருஷ்டி காலத்தில் தோன்றிய சப்த ரிஷிகளில் ஒருவர். அதிதேவதை - சூரியனிடத்திலுள்ள ஞானஸ்வரூபராகிய ஹிரண்மய பரமாத்ம புருஷர். இவரது ஞான தேஜஸே சித்ரூபிணியாகிய பராசக்தி...

காயத்திரி மந்திரத்திலுள்ள உண்மையை அறிவிப்பது சப்த வியாஹிருதிகளாம். அவை பூ முதல் ஸத்யம் ஈறானவையாம்.

தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹிI
தியோ யோந: ப்ரசோதயாத்II


எவன் நம்முடைய புத்திகளை நன்றாக நடத்துவானோ அந்த ஸவிதா என்னும் சூரியனுக்கு அந்தர்யாமியாகிய பர்க்கன் என்னும் நாமம் வகித்த ஹிரண்மய புருஷராகிய மகாதேவனுடைய மேன்மையான (ஞானதேஜஸை) தியானிப்போம்.
- தைத்ரீயாருண சாகை நாராயணம்

இதில் கூறப்பட்ட பரமபுருஷர் சகுணப்பிரமமாகிய ஹிரண்மய சிவபெருமான். அவருடைய பராசக்தியே ஞானதேஜஸ் என்று சொல்லப்படுவர். அவர் சூரியனுக்குப் பிரகாசத்தைக் கொடுத்துக் கொண்டு அவனுக்கு அந்தராத்மாவாக விளங்குகின்றனர். சிவபெருமானுடைய அஷ்டமூர்த்தங்களுள் சூரியனும் ஒன்றாகலின் சூரியனுள் சிவன் இருக்கின்றனன் என்பது பொருத்தமே... இதனால் உபாசிக்கப்படும் பொருள் சூரியனல்ல. அவனுக்கு ஆத்மாவாயுள்ள பரப்பிரமசிவபிரானாரே. இத்தகைய உபாசனைக்கே அந்தராதித்திய வித்தையென்று பெயர்.

...காயத்ரி மகாமந்திரத்தின் அரும்பொருளை விளக்க எழுந்த சாமவேத மைத்ராயண்யுபநிஷத் அம்மந்திரத்தின் மூன்று பாதங்களை விவரிக்கின்றது.

அதில்

அதபர்க இதியோஹவா கஸ்மிந்நாதித்யே நிஹிதஸ்
தாரகேக்ஷிணி சைஷ பர்காக்யோ பாபிர்கதி ரஸ்யஹீதி
பர்கோ பர்ஜயதீதி வைஷ பர்கா இதி ருத்ரோ பிரஹ்மவாதிந:I


பொருள்: இனி பர்க்கனென்பான், எவன் இந்த ஆதித்தியனிடத்தும் கண்ணின் கருவிழியிடத்தும் உள்ளவன். பர்க்கன் என்ற பெயர் உடையவன், `பா' என்ற பிரகாசத்தால் இவனுக்குக் கதியிருத்தலின் பர்க்கன். வெதுப்புவதால் (சம்ஹரிப்பதால்) பர்க்கன் இவன். உருத்திரன் என்று பிரமவாதிகள் சொல்லுகிறார்கள்.

இம்மந்திரத்தால் அந்தராதித்த வித்தை, அட்சிவித்தை ஆகிய இரண்டும் சிவபரமேயென நிரூபிக்கப்பட்டது.” 51

மேலும், பர்க்க சப்தத்தை சிவபிரானோடு சாத்தி, யஜுர்வேத கர்ப்போபநிஷத்தானது,

யதியோந்யாநம் ப்ரமுச்யேயம் ப்ரபத்யே பரமேச்வரம்I
பர்க்கம் பசுபதிம்ருத்ரம் மஹாதேவம் ஜகத்குரும்II

”யோனியை விட்டு வெளியே வருவேனாயின் பரமேசுவரரும், பர்க்கரும், பசுபதியும், உருத்திரரும், ஜகத்குருவுமான மஹாதேவரைச் சரணமடைவேன்”
என்று கூறியது.

வடமொழி நிகண்டுகளும் "பர்க்கஸ் த்ரயம்பக" எனவும், "ஹர:ஸ்மரஹரோ பர்க்க" எனவும் தெளிவுபடுத்துகின்றன.

ஆக, சூரியனுக்குள்ளிருந்து ஒளி தருபவர் சிவபிரானே என்பதை வடமொழி வேதம் தெளிவுற எடுத்தியம்பிற்று.

வாகீசமூர்த்திகள் அருளிச் செய்த தமிழ் வேதமும் இக்கருத்தை,

"அங்கதிரோனவனை அண்ணலாக் கருத வேண்டா
வெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்து கொள்மின்
அங்கதிரோனவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி
செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறையனாரே" -4-41-8 என்றும்

"அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல்மனவரே" -5-100-8 என்றும்

தெளிவுபட அருளிச் செய்தது.

குறிப்புகள்:
51. ப்ரணவ வித்யா பரிமளம் - பக். 135,136,138,139,140,141.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate