புதன், 22 ஜூலை, 2009

திருத்தொண்டத் தொகை தந்த திருவாளன்


திருக்கயிலையில் பரமேசுரன் திருக்கல்யாணத்­தின் போது தேவர்கள் சிவபிரானுக்கு பொன்னாலும் மணியாலும் அலங்காரம் செய்ய வேண்டும் என நினைத்தனர். இறைவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத் தாம் அணிந்திருந்த பாம்புகளைத் தொட்டார்.
அவை பொன் ஆபரணங்களாக மாறின. ஜடையைத் தொட்டார். அது பொன்முடியாக மாறியது. புலித்தோலைத் தொட்டார். அது பொன்னாடையாக மிளிர்ந்தது. இவ்வண்ணம் இறைவன் தம் திருவுள்ளத்தால் மாப்பிள்ளைக் கோலம் பூண்டார்.


இத்திருக்கோலத்தை கண்ணாடியில் கண்டார். அவர் நித்த மணாளர் அல்லவா? கண்ணாடியில் தெரிந்த தம் பிம்பத்தை நோக்கி `சுந்தரா வருக' என்று அழைத்தார். சுந்தரரும் வெளியே வந்தார். இறைவன் அவரை தமக்கு அணுக்கத் தொண்டராக வைத்துக் கொண்டார். கவரி வீசுதலும் திருநீற்றுக் கலம் ஏந்தலும் சுந்தரரின் திருப்பணிகளாயின. பாற்கடலில் ஆலால விஷம் தோன்றிய போது இறைவன் சுந்தரரை அனுப்பி அதனைக் கொண்டு வரப் பணித்தார். சுந்தரர் உலகங்களை எல்லாம் அச்சுறுத்திய ஆலால விஷத்தை ஓர் உளுந்தளவு சுருக்கித் தம் உள்ளங்கையில் வைத்து இறைவனிடம் அளித்தார். உலகத்தைக் காக்க சிவனாரும் அவ்விஷத்தை உண்டு தம் கண்டத்தில் நிறுத்திக் கொண்டார். இந்த நிகழ்வைத் தான் பிரதோஷம் என இன்று வழிபடுகிறோம்.


திருக்கயிலையில் நந்தவனத்தில் உமையம்மை­யின் தோழியரைச் சுந்தரர் சில விநாடிகளே ஆசையோடு பார்த்தார். பின்பு தம் தவறை உணர்ந்து அவசரமாக இறைவன் சந்நிதிக்குச் சென்றார். எல்லாம் உணர்ந்த இறைவன் சுந்தரரை நோக்கி `மாதர் மேல் மனம் போக்கினமையால் நீ பூமிக்குச் சென்று சில காலம் இருந்து அம்மாதர்களை மணம் புரிந்து பின் திருக்கயிலாயம் வா' என்று கூறிவிட்டார்.


சுந்தரர் இறைவன் திருவடி பணிந்து மானிடர்களுக்கே உரிய மயக்கத்தில் ஆழ்ந்து விடாமல் தன்னை தக்க சமயத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்று வேண்டினார். முக்கண் மூர்த்தியும் அவ்வாறே செய்வதாக வரமளித்து விடையளித்தார்.


சுந்தரரும் உமையம்மையின் தோழியராகிய கமலினி, அநிந்திதை ஆகிய இருவரும் தினமும் திருக்கயிலையில் சந்திக்கக் கூடியவர்கள்தான். அப்புறம் ஏன் அன்றைக்கு மட்டும் அவர்கள் ஆசையோடு பார்த்துக் கொள்ள வேண்டும்?

இந்தக் கேள்வி சேக்கிழாரடிகளுக்கும் தோன்றியிருக்க வேண்டும். இதற்கு ஒருகாரணம் சொல்கிறார் அவர். சுந்தரர் தானாக ஆசை கொண்டு பார்க்கவில்லை, அடியார்களின் பெருமையை உலகத்தாருக்கு உணர்த்த
' திருத்தொண்டத் தொகை' தருவதற்காக சுந்தரரை அம்மாதர்களைப் பார்க்கச் செய்தார் இறைவன் என்கிறார்.

`மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப்
போதுவான் அவர் மேல் மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்`

என்பது சேக்கிழார் வாக்கு.

சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடவில்லை­யெனில் பிற்காலத்தில் தோன்றிய நம்பியாண்டார் நம்பிகள் `திருத்தொண்டர் திருவந்தாதி'யோ, அதனை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் `பெரியபுராண'த்தையோ பாடியிருக்க முடியாதல்லவா? அவர்கள் பாடவில்லையெனில் நமக்குத் தமிழகம் மட்டுமின்றி நம் அண்டை மாநிலங்களில் வாழ்ந்திருந்த நாயன்மார்கள் பற்றித் தெரிந்திருக்குமா?

சேக்கிழாரியற்றிய பெரியபுராணத்திற்கு சுந்தரர் அருளிச் செய்த `திருத்தொண்டத் தொகை' முதல் நூலாகவும் நம்பியாண்டார் நம்பிகள் செய்த `திருத்தொண்டர் திருவந்தாதி' வழிநூலாகவும் விளங்குகின்றன.

அதனால்தான் சேக்கிழார் தாமியற்றிய பெரியபுராணத்திற்குக் கதாநாயகனாக சுந்தரரையே வைத்தார். `ஈசனடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத், தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகை முன் பணித்த திருவாளன்' என்று போற்றுகிறார்.

இந்நாட்டில் வாழ்ந்திருந்த பல குலத்தைச் சேர்ந்த பல கால கட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில்கள் புரிந்த நாயன்மார்கள் பற்றி முதன்முதல் தொகுத்துத் தந்தவர் சுந்தர மூர்த்திகள் தான்.

63 நாயன்மார்களும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த சுந்தரமூர்த்திகள் அவர்களைப் பற்றி தொகுத்து வழங்கியிருக்கிறார் என்றால் அவருக்கும் முன்னமே இம்மண்ணில் எத்தனை அடியார்கள் இருந்திருப்பார்கள் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

63 நாயன்மார்களில் சேரநாட்டைச் (கேரளா) சேர்ந்தவர்கள் 2 பேர். சோழநாட்டைச் சேர்ந்த அடியார்கள் 37 பேர். மலைநாட்டு நாயன்மார்கள் 2 பேர். பாண்டிய நாட்டு அடியார்கள் 5 பேர். நடுநாட்டு அடியார்கள் 7 பேர். தொண்டை நாட்டு அடியார்கள் 8 பேர். வடநாட்டு அடியார்கள் 2 பேர்.

இவர்கள் பல்வேறு குலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் செல்வர்கள். பலர் இல்லறத்தார்கள். இவர்கள் செயற்கரிய செய்த பெரியவர்கள். இவர்களைப் பற்றி நமக்குத் தெரியாமல் போயிருக்குமானால் அக்காலத்து தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலைகள், தமிழரின் வாழ்க்கை முறைகள் இவையெல்லாம் வரலாற்றில் இருண்ட பக்கங்களாகப் போயிருக்கும்.

சுந்தரர் கி.பி. 690 - 720 களில் ஆண்ட இரண்டாம் நரசிம்ம வர்மன் காலத்தில் வாழ்ந்தவர். இந்த நரசிம்மவர்மன் சுந்தரரால் `காடவர்கோன் கழற்சிங்கன்' எனத் திருத்தொண்டத் தொகையில் குறிக்கப்பட்டவர். இவர்தான் காஞ்சி கயிலாசநாதர் கோயிலைக் கட்டியவர். பூசலார் நாயனாரும் இவர் காலத்தவரே.

சுந்தரர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் 13 பேர். அப்பர் - சம்பந்தருக்கு முற்பட்ட நாயன்மார்கள் 17 பேர். அப்பர் - சம்பந்தர் காலத்து நாயன்மார்கள் 11 பேர். அப்பர் - சம்பந்தர் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் இடைப்பட்ட நாயன்மார்கள் 22 பேர். தொகையடியார்கள் 9 பேரும் கால வரம்பைக் கடந்தவர்கள். எந்த நாட்டைச் சேர்ந்தவராயினும் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் ஈசன் அடியார்களாகலாம் என்பதற்கு இவர்களே சான்று.

சுந்தரர் 63 நாயன்மார்களைப் பற்றி தொகுத்துப் பாடியதால் அவர்களைப் போற்றி வணங்க வேண்டுமென்னும் பேரவா அந்நாளைய மன்னர்களுக்கு எழுந்தது. சுந்தரருக்கு முன்பிருந்த நாயன்மார்களுக்குத் திருவுருவங்கள் தமிழகத்தில் உள்ள சில சிவாலயங்களில் இருந்தன. எனினும் சுந்தரருக்குப் பின் தமிழகம் எங்கும் உள்ள சிவாலயங்களில் அறுபத்துமூவர் திருமேனிகள் எழுந்தருளச் செய்யப்பட்டன. அவர்களுக்கு விழாக்கள் எடுக்கப்பட்டன.

அறுபத்துமூவரின் திருப்பெயர்களை மக்கள் தமக்கு வைத்துக் கொண்டனர். `ஆரூரன் பொன்னம்பலத்தடிகள்', `ஆரூரன் கம்பன்', `பிள்ளை நம்பி ஆரூரன்', `வேளாளன் ஆரூரன்', `பெரும்புலியூர் நம்பி' என்று சுந்தரர் பெயரை மக்கள் வைத்துக்கொண்டதை கல்வெட்டுகள் காட்டுகின்றன.

சுந்தரர் காலத்திற்கு முன்பே நாயன்மார்களின் வரலாறுகளை மக்கள் அறிந்திருந்தனராயினும் அவர் காலத்திற்குப் பின்பு அவ்வரலாறுகள் மிக வேகமாகப் பரவலாயின.

ஒரு சில கோயில்களில் இடம் பெற்றிருந்த நாயன்மார்கள் பற்றிய வரலாற்றுச் சிற்பங்கள் அவர் காலத்திற்குப் பின்பு எல்லாக் கோயில்களிலும் இடம் பெறலாயின. மேலைக் கடம்பூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய கோயில்களை இதற்கு சான்று காட்டலாம்.

தஞ்சைப் பெரிய கோயிலில் கருவறையின் உள்பகுதியில் காணப்படும் ஓவியங்­களில் சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட வரலாறும், சுந்தரர் யானை மீதும் சேரமான் பெருமாள் குதிரை மீதும் கயிலை செல்லும் வரலாறும் குறிப்பிடத்தக்கவை.

தமிழில் வரலாற்று உண்மைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டிருக்கும் ஒரே காப்பிய நூல் பெரியபுராணம் தான். இந்நூல் எழுவதற்குக் காரணமான சுந்தரமூர்த்திகளை சேக்கிழார் `தில்லை வாழந்தணர்' சருக்கம் முதல் `மன்னியசீர்' சருக்கம் ஈறாக உள்ள 11 சருக்கங்களின் முடிவிலும் துதிக்கிறார்.

சுந்தரரின் திருத்தொண்டத் தொகை மூலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் வரலாறு நமக்குக் கிடைத்திருக்கிறது. வரலாற்றின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்தைப் பெற்றிருக்கின்றன. தீதிலாத் திருத்தொண்டத் தொகை தந்த திருவாளனை நாமும் துதிப்போம், சேக்கிழார் வாக்கின் மூலம்...

`நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத்
தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்
வாச மலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்'

(ஜூலை 29, சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate