செவ்வாய், 30 ஜூன், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 8

வேதமும் சிவபரத்வமும்

"வேதம் சிவபெருமானுடைய வாய்மொழி ஆகும். சைவ சித்தாந்த தத்துவத்தில் இஃது ஓர் அடிப்படைக் கொள்கையாகும். சிவபெருமான் வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் எடுத்தோதி அவற்றின் மூலம் வழிபாட்டு முறையையும் வாழ்க்கை முறையையும் விளக்கியுள்ளார். வேதத்தின் பொருள் சிவபெருமானே. ஏனெனில் சிவபெருமானே இறுதியாக அடையப் பெறும் ஞானமாகும். வைதிக நெறியிலமைந்த வழிபாடு மறைவழக்கம் எனவும், வைதிகம் எனவும் வழங்கப்பட்டது."36

"வைணவர்களும் கூட வேதங்கள் சிவபெருமானுடைய வாய்மொழி என்று கொள்கிறார்கள். (`இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோளீசர்' - திருமங்கையாழ்வார் திருமொழி 6.6.8)" 37



வேதத்தை சிவபிரானே அருளிச் செய்தனன் என்று சங்க இலக்கியங்களும் பறைசாற்றுகின்றன.

எனவே, அவனருளிச் செய்த வேதத்தில் அவனைப் பற்றிய பரத்வம் குறிப்பிடப்படாமல் இருந்திருக்க முடியாது.

உயிர்கள் எண்ணில்லாதன. எத்தனை உயிர்கள் உள்ளனவோ அத்தனை சிந்தனை பேதங்கள் இருக்கும், என்பது சைவசித்தாந்தம். எனவே உயிர்கள் உய்யும் பொருட்டு வேதங்களை அருளிச் செய்த இறைவன் அவற்றில் தீவிர சத்திநிபாதமுடையார் வழிபட்டு உய்ய ஆங்காங்கே சிவபரத்வம் தொனிக்கும்படியும், மற்ற உயிர்கள் உய்யும் பொருட்டு பிற இடங்களில் பிற தேவதைகளின் பரத்வம் தொனிக்கும்படியும் அருளிச் செய்தனன் என்பர் பெரியோர்.

இதனையே தாயுமான சுவாமிகளும்,

"வினையனந்தம் கருத்தோ அனந்தம் பெற்றபேர் -
சீரனந்தம் சொர்க்க நரகமுமனந்தம் நற்தெய்வமும்
அனந்தபேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம்"

என்று அருளிச் செய்தனர்.

"பலதெய்வ வழிபாடுகள் வேதத்திற் கூறப்பட்டிருப்பதற்குக் காரணம், உலகோர் பற்பல கன்மங்களைச் செய்வோர் ஆதலானும், அவ்வவர் பரிபாகத்துக்குத் தக்கவாறு தெய்வவழிபாடு வேண்டப்படும் ஆதலாலும், பொதுநூலாகிய அவ்வேதத்தில் அங்ஙனம் கூறப்பட்டதென்று அறிக.

“அன்றியும் அப்பல தெய்வங்களும் சிவபெருமானுடைய அஷ்டமூர்த்தமாதலினாலும் என்பதாம்.

“ஓர் அரசனுக்குப் பரிவாரர்களாயுள்ள அமைச்சர் படைத் தலைவர் முதலிய பலரையும் குடிகள் புகழ்ந்து கூறினும், அப்புகழ்ச்சிகள் அனைத்தும் அரசனைச் சேருமாறுபோல, ஏனைத் தேவர்கள் பரிவாரராகச் செப்பப்படுதலினாலே, அத்தேவர்க்குக் கூறும் புகழ்ச்சிகள் அனைத்தும் சிவபெருமானையே சாரும் என்றும் கூறுப.

”பிரமவிஷ்ணு முதலிய தேவர்களைச் சிருஷ்டிகர்த்தா, திதிகர்த்தா, சங்காரகர்த்தா என்பது முகமனே. சிலர் மனுடரைத் தேவர் என்பர். தேவரை மும்மூர்த்திகள் என்பர். இந்தச் சொற்றிறங்களெல்லாம் முகமனேயாம்.

"...வேதங்களிலே விட்டுணுவுக்குக் கூறப்பட்ட பெருமையும் பிரமன் இந்தின் அக்கினி முதலியோருக்குக் கூறப்பட்ட பெருமையுமாகிய எல்லாம் சுருங்கிய பொருள்படும். விட்டுணுவையும் பிரமாவையும் வேறுபலரையும் புகழுகின்ற வேதமானது பரமசிவனைத் துதித்தது போல, விட்டுணு முதலியோருக்கு ஓருரையாயினும் கூறியதில்லை. அவர்களைச் சொல்லியதும் உபசாரமே என்று இவ்வுலகமெல்லாம் அறியும்படி அவர்களை அவ்வேதம் முன்னும் பின்னும் விலக்கியது.

உங்களுடைய ஸ்தோத்திரத்தை நிக்கிரானுக்கிரக சக்தி உடையவரும், வீரபத்திரர் முதலிய கணங்களால் சூழப்பட்டவருமாகிய உருத்திரருக்கு நமஸ்காரத்தோடு கூடக் காட்டுங்கள்; அந்த நமஸ்காரங்களால் தேவர்களாகிய நீங்கள் எண்ணும் விருப்பங்களிலெல்லாம் அடையக்கூடிய பலன்களை எல்லாம் எஜமானரும் பிறர்க்கில்லாத கீர்த்தியை உடையவருமாகிய சிவபெருமான் ஒருவரே சேர்த்திருக்கிறார்.

”இந்த இருக்குவேத மந்திரத்தால் மஹாருத்திரராகிய சிவபெருமான் ஒருவரே எஜமானரும், பிறர்க்கில்லாத கீர்த்தியை உடையவருமென்பது காட்டப்பட்டது.

”மஹாபிரளய காலத்திலே சிவபெருமான் ஒருவரே உளர் என்பதை இருக்குவேதம் (10.129-1) "மஹாபிரளய காலத்திலே அசத்துமில்லை; சத்துமில்லை; அந்த ஒன்று இருந்தது; அதினின்று முதற்கண்ணே காமம் எனப்படும் பராசக்தி உளதாயிற்று" எனக்கூறும்.

”இந்தக் கருத்தையே "எப்போது இருள் உளதாய்ப் பகலுமின்றி இரவுமின்றி, சத்துமின்றி அசத்துமின்றி இருந்ததோ அப்போது சிவன் ஒருவரே இருந்தார்; அந்தச் சிவசூரியனுடைய அந்த அழியாத முக்கியப் பொருளாகிய பிரக்ஞை எனப்படும் பழைய பராசக்தி உதித்தார்" என்று சுவேதாஸ்வதர உபநிஷத்துக் கூறும்.

”ஆகவே, இருக்கு வேதத்திலே கூறப்பட்ட (ஏகம்) ஒன்று என்பது சிவபெருமான் என்பதும், அவரினின்று பின்னர்த் தோன்றியவர் பராசக்தி என்றும் பெறப்படுகின்றது. இருக்கு வேதத்தில் கூறப்படும் உருத்திரசப்த முழுமையும் மஹா ருத்திரராகிய சிவபெருமானைச் சார்ந்ததேயாம்.
சிவபெருமான் பசுபதி எனக் கூறும் வாக்கியம் இருக்குவேத 10-121-3 இல் உள்ளது. அம்மந்திரப் பொருள், "எவர் சுவாசம் விட்டதினாலேயேயும், கண் கொட்டினதினாலேயும், உலகமெல்லாம் சிருஷ்டிக்கப்பட்டதோ எவர் ஒருவராகவே அரசனாகவே இருக்கின்றாரோ, எவர் இரண்டு காற்பசுக்களுக்கும் நாற்காற் பசுக்களுக்கும் பதியாக இருக்கின்றாரோ அந்தப் பரமேசுரனுக்கு அவியைக் கொடுப்போம்" என்பதாம்.

"...இன்னும் யசுர்வேதம் "நானே பசுக்களுக்குப் பதி" என்றும், "நாற்காலும் இருகாலுமுடைய பசுக்களைப் பதியானவர் ஆளுகின்றார்" என்றும் கோஷிக்கின்றது. இப்பசுபதிப் பெயர் சிவபெருமானை யொழிந்த வேறெந்தத் தேவர்களுக்கும் எந்த நூலிலும் பகரப்படாமையாலும் வேதத்திலே முழுமுதற் கடவுளாகப் போற்றப் பெற்றவர் பரமசிவனே என்பது சித்தமாயிற்று.

"இன்னும் இந்தின் அக்கினி விட்டுணு முதலிய தெய்வப் பெயர்களும் மஹாருத்திரராகிய சிவபெருமானுடைய திருநாமங்களேயாம் என்றும் அச்சுருதிகளே சித்தாந்தம் செய்கின்றன. வடமொழி வேதங்களில் வருகின்ற அக் கடவுட் பெயர்களின் கருத்துக்களை ஆராய்ந்து நோக்குமிடத்து, அப்பெயர்கள் எல்லாம் முழுமுதற் கடவுளுக்குரிய ஒவ்வொர் சிறப்புகளை விளக்குவனவாய் வழங்கப்பட்டுள்ளன என்னும் உண்மை வெளிப்படும்.

"ஒருவனே பலருளன் காண்மினே" என்று வரும் தமிழ்மறையுரையும், "சத்து ஒன்றே அதை அறிஞர் பலவாகக் கூறுவர்" "ஒன்றே பலவாக விரிந்தது" என்று வரும் வடமொழி வேத உரைகளும், "ஒன்றென்றது ஒன்றேகாண் ஒன்றே பதி" என்ற முடிவாகிய உண்மையையே காட்டி நிற்கின்றன.

"...வேதமானது சிவபெருமானையே தனது இருதயத்துள் வைத்துக் காட்டுகின்றது என்பதும், சிவனை அர்ச்சிப்பதும் அவன் அடியவரைப் பணிவதும் வேதங்களின் உள்ளுறைப் பொருள் என்பதும், சிவபெருமானே விசுவரூபன், விசுவாதித்தன், விசுவசேவியன் என்றும், பிறப்பிறப்பில்லாதவர்; எண்குணமுடையவர்; வேதாகமம் முதலிய எல்லா நூல்களுக்கும் கருத்தா; சிவனே பசுபதி; அவனே தேவதேவன்; மும்மூர்த்திகட்கும் தலைவர் என்றற்றொடக்கத்தனவாக முழுமுதற் கடவுளென அவ்வேதங்கள் துணிந்து துதிக்குமென்பதும் அறிஞர்களால் நாட்டப்பட்ட உண்மைகளாகும்."

"ஆகவே வேதத்துள் ஏனைத் தேவர்கட்குத் தலைமை கூறப்பட்டது தத்துவத்துக்கேற்ப ஆன்மாக்கள் ஒவ்வொருவரைத் தமக்குக் கடவுளாகக் கொண்டு சமுத்திரகலச நியாயமாக ஒவ்வொரு மதம் உண்டாக்கி, அவ்வவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுதற் பொருட்டென்பதும் அவ்வொழுக்கத்துக்கு ஏதுவாய மதங்கள் அவ்வான்மாக்கள் சோபான முறையானே மேன்மேற் செல்லுதற்குக் காரணமாமென்பதும் அறிய வேண்டியனவாம்."

"...வேதத்தின் கண் பற்பல தேவர்கட்குத் தலைமை கேட்கப்படுதலானும் பலபல சமயக் கொள்கைகளும் கூறப்படுகின்றமையானும் தலைவர் யாவர்? எக்கொள்கை உண்மையாகச் சிறந்தது? என்னும் ஐயப்பாடு எய்துமாலோ எனின்; அஃதொழித்தற்கே வேதம் பொது நூலாயதென்க.

"உலகத்துள்ள மக்கள் பலதிறப்பட்ட அறிவினையும் கொள்கையினையும் உடையராகலின், அவ்வெல்லாரையுங் காக்க வேண்டும் என்னுங் கருணை வள்ளலாகிய சிவபெருமான், அவ்வவர் தகுதிக்கேற்ப பற்பல கருத்துக்கள் தோன்ற வேதங்களை அருளிச் செய்தார். அவ்வேத ஆராய்ச்சியுடையார் பலரும்,கீழ்க்கண்ட தத்துவங்களையே பரம்பொருளென முன்னர் கண்டு பின்னர் அவையனைத்தும் அழிதன்மாலைய என்றொருவி, மேற்சென்று சென்று முடிவில் தனக்கொப்பாரும் மிக்காருமில்லாத சிவபெருமானையே பரம்பொருளெனத் தெளிதற்குரிய சிவாகம நெறி நின்று அப்பெருமான் திருவடி நீழல் எய்தி இன்புறுவாராதலின், பக்குவமிக்க ஆன்மாக்களின் பொருட்டு அருளப் பட்டனவாகிய சிவாகமங்கள் சிறப்பு நூல்கள்.

"இதனால் வேதங்களில் பிறதேவர்களுக்குக் கூறப்படும் தலைமை உபசாரம் என்பதும் சிவபெருமானுக்குக் கூறப்படும் தலைமை உண்மை என்பதும் வெளியாம்."

"இவ்வுண்மை வேதங்களில் உபசாரமாகக் கூறப்பட்ட சமயங்களுக்கு எல்லாம் வழிநூலாசிரியர்கள் பிறதேவர்கள் இருடிகளாயிருப்ப அவ்வேதங்களை அருளிச் செய்த முதலாசிரியராக சிவபெருமானே உண்மையாகக் கூறப்பட்ட சைவசமயத்தைப் போதிக்கும் சிவாகமங்களுக்கு ஆசிரியராக உள்ளமையின் சிறிதும் ஐயமின்றித் தெளியலாம்."
38

வேதங்களில் கூறப்பட்ட விராட், விச்வன், அக்னி, ஹிரண்யகர்ப்பன், வருணன், இந்திரன், விஷ்ணு, அர்யமான் முதலான நாமங்கள் மற்றொரு கருத்தும் உண்டு.

எங்ஙனமெனின், "...விராட், புருஷன், தேவன், ஆகாசம், வாயு, நெருப்பு, நீர், பூமி முதலிய பெயர்கள் லௌகிக பதார்த்தங்களைக் குறிக்கும். ஏனெனில் உற்பத்தி, ஸ்திதி, நாசம், சிற்றறிவு, உயிரற்றதன்மை, காட்சிப் பொருள் - இவற்றைக் குறிக்குமிடங்களில் பரமேசன் என்று பொருள் செய்யலாகாது. அவர் பிறப்பு முதலிய விவகாரங்களுக்கு அப்பாலானவர். ஆதலால் இங்கே விராட் ஆதி நாமங்கள் உலகப் பொருள்களாகவே கொள்க; சர்வக்ஞாதி விசேஷணங்கள் காணும் இடங்களில் மட்டுமே பரம்பொருளைக் குறிக்க வேண்டும். இச்சை, துவேஷம், முயற்சி, சுகம், துக்கம், சிற்றறிவுகளைக் குறிக்கும் இடங்களில் ஜீவனை வைத்துப் பொருள் செய்ய வேண்டும்."39

இன்னும், "இருக்குவேதத்தைச் சேர்ந்த மற்றொரு பிரமாணமாகிய கௌஷீதகியின் ஆறாம் இயல் முதல் ஒன்பது செய்யுட்கள் வரையில் சிவபிரான்றன் பெயர்களாகிய பவன், சர்வன், பசுபதி, உக்ரதேவன், மகாதேவன், உருத்திரன், ஈசானன், அசனி முதலியவற்றால் அவனே முழுமுதற் கடவுளாதல் காட்டப்பட்டது.

"இப்பெயர்களைக் கொண்டே சிவபிரான் வாஜசநேய சம்ஹிதையிலும் (39-8-9), மைத்திராயணீ சம்ஹிதையிலும் (2-9-1), அதர்வ வேதத்திலும் (15-5) வழுத்தப்படுதல் காண்க. ...இங்ஙனமே, `சாங்காயன பிராமணத்'திலும் சுக்லயஜுர் வேதத்தைச் சேர்ந்த `சதபத பிராமணத்'திலும் (26,6,2,9) சிவபிரானும் அம்பிகையும் ஒருங்கு வைத்து முழுமுதற்கடவுளாக வணங்கப்படுதல் காண்க."
40

இனி, சிவபரத்வ விஷயத்தில் உபநிஷதங்கள் ஒன்றோடொன்று மாறுபடுவன என அறியாதார் கூறுவர்.

ஏனெனில்,

"உபநிடதங்களினுஞ் சுபால முதலிய உபநிடதம் உலகம் தோன்றியொடுங்கு முறைமையும், தோற்றியொடுக்குதற்கு ஒரு கருத்தாவுண்டென்னும் மாத்திரையும் போல்வன உணர்த்துதலிற் பொதுவெனப்படும். சாந்தோக்கிய முதலிய உபநிடதம் இருவகையுங் கூறுதலிற் பொதுவுஞ் சிறப்புமாம். அதர்வசிகை அதர்வசிரம் சுவேதாச்சுவதரம் கைவல்லியம் முதலிய உபநிடதங்கள் முத்தி நிலையே பற்றிச் சாதகமும் பயனுங் கூறுதலின் உண்மையெனப்படும். ஆகலான், அதர்வசிகை முதலிய உபநிடதப் பொருள்பற்றிச், சுபால முதலியவற்றிற்கு பொருள் கொள்வதன்றிச், சுபால முதலியவற்றின் பொருள்பற்றி அதர்வசிகை முதலியவற்றிற்குப் பொருள் கோடல் பொருந்தாதென்பது நுண்ணறிவான் உணர்ந்து கொள்க. இக்கருத்தறியாத இராமானுசர் முதலியோர் கூறும்பொருள் போலியென்றொழிக."41

மேலும், "...தைத்திரியத்தில் அதிகாரி பேதம் பற்றி, "அன்னமய கோசம் பிரமம்" என்றும், அதனை மறுத்து மேல் அதனிற் சூக்குமமாகிய "பிராணமய கோசம் பிரமம்" என்றும், அதற்குமேல் "மனோமய கோசம் பிரமம்" என்றும், அதற்கு மேல், "விஞ்ஞானமய கோசம் பிரமம்" என்றும், அதற்குமேல் "ஆனந்தமய கோசம் பிரமம்" என்றும், ஒன்றற்கொன்று சூக்குமமாய் உணர்த்துதல் போலவும், கவுசிதக உபநிடதத்தில் அதிகாரி பேதத்தால் இந்திரன் தைத்தியனுக்குத் தன்னையே பிரமமாகக் கூறியது போலவுங் கொள்க. அங்ஙனம் புல்லை எதிரே காட்டி ஆக்களைப் பிடிக்குமாறு போலச், சோபான முறைமை பற்றிக் கூறியது என்பதூஉம் அவையெல்லாம் ஒருவாற்றாற் பிரமாணம் என்பதூஉம் சூத சங்கிதையிற் காண்க"42

ஆதலினால், கர்ம காண்டம் ஞான காண்டங்களாகிய வேதமும் உபநிஷதங்களும் எவ்வாற்றானும் சிவபிரானையே முழுமுதற் கடவுளாகப் பிரதிபாதிக்கின்றன என்பது தெளிவாகும்.

குறிப்புகள்:
36. சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும் - பக். 35,36.
37. மேலது - பக். 48.
38. வேதாகம நிரூபணம் - பக்.66 - 70.
39. சத்தியார்த்தப் பிரகாசம் - பக். 16.
40. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - பக். 553.
41. சிவஞான மாபாடியம் - பக். 10.
42. மேலது - பக். 19.

1 கருத்து:

  1. நல்ல கருத்துக்கள். சிவபெருமானே பரம்பொருள் என்று வேதங்கள் கூறுவதனை தெளிவு படுத்தியிருக்கிறீர்கள். இணையத்தில் தங்கள் சிவனருட்பணி தொடர சிறக்க ஓங்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

Translate