திங்கள், 13 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 11

ரிக் வேதமும் அப்பரடிகள் தேவாரமும்:
"னி, வடமொழிநூல்கள் எல்லாவற்றுள்ளும் மிகப் பழையதாகிய இருக்கு வேதத்தின் முதன் மண்டிலம், 43 ஆம் பதிகம் உருத்திரன் ஒருவனே அறிவிலும் வரங்களை மிக வழங்குதலிலும் ஆற்றலிலும் சிறந்தோன் என்றும், எல்லா உயிர்களின் நோய்த் துன்பத்தை நீக்குவோன் என்றும், அவனே பாட்டுகட்கும் வேள்விகட்கும் தலைவன் என்றும், அவன் கதிரவன் ஒளியைப் போலவும், பொன்னைப் போலவும் விளங்குவோன் என்றும் கடவுளர் எல்லார்க்கும் அவனே தலைவன் (ச்ரேஷ்டோ தேவாநாம்), எல்லா தேவரிலும் அவனே ஈகையிற் சிறந்தோன் என்றும் எல்லாவுயிர்கட்கும் நலங்களை அருள்வோன் அவனே என்றும் வலியுறுத்திக் கூறுதல் காண்க." 46இதனை அப்பரடிகள்,


"எத்தேவும் ஏத்தும் எம்மான் தன்னை" -6-54-3
"வரும்பிறவி நோய் தீர்ப்பான் காண்" -6-64-4
"அன்புடைத் தொண்டர்க்கு அமுதருத்தி இன்னல் களைவன" -4-100-1
"பொன்னுள வார்சடைக் கொன்றையினாய்" -4-105-4
"முனிகள் ஏத்தும் இன்பனை, இலங்கு சோதி இறைவனை" -4-74-2
"முந்தியிவ் வுலகமெல்லாம் படைத்தவன் மாலினோடும்
எந்தனி நாதனே என் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை அடிமுடி அறியா வண்ணஞ்
செந்தழல் ஆனார்" -4-73-8
"பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்" -4-58-8
"நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்" -4-57-6
"ஏத்துவாரிடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர்" -4-56-10
"ஆத்தமாம் அயனும் மாலும் அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமானென்று தொழுதுதோத்திரங்கள் சொல்ல" -4-50-2
"பொன் பொதிந்த மேனியனை" -6-68-6
"வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" -6-23-1
"அடியார்கள் வேண்டிற்றீயும் விண்ணவனே
விண்ணப்பம் கேட்டு நல்கும் செய்யவனே" -6-44-10
"மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை" -6-80-3
"அந்தணாளர் ஆன்நெய்யால் வேட்கும் வெந்தழல் உருவர்" -4-64-7என்று அருளிச் செய்தனர்.


"அங்ஙனமே அதன் (இருக்கு) 114 ஆம் பதிகமும் சிவபிரான் ஒருவனே முழுமுதற் கடவுளாதலைத் தேற்றுவதோடு, அவன் சடைமுடியுடையோனாய், உருத்திர கணங்களுக்குத் தலைவனாய், அருளிரக்க ஈகையில் மிக்கோனாய், வேள்விப்பயனை நிறைவேற்றுவானாய், ஞானியாய் (அறிவோனாய்), உயர்ந்த மருந்துகளைக் கையில் வைத்திருப்போனாய், இறப்பிலியாய்த் திகழுமாற்றை வகுத்துரைக்கின்றது."47


"வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்" -6-16-3
"துலையாக ஒருவரையும் இல்லாதானை" -6-19-10
"விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை" -6-19-2
"மூவன்காண் மூவர்க்கும் முதலானான் காண்" -6-85-4
"அணைவரியர் யாவர்க்கும் ஆதிதேவர்" -6-83-7
"மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி" -6-54-8
"மூதறிவாளன்" -4-39-10
"மூவாத பிறப்பிலாரும்" -4-29-9
"உருத்திர கணத்தினார் தொழுதேத்தும் கருவிலி" -5-69-8
"மற்றமரர் உலந்தாலும் உலவாதானே" -6-50-5என அப்பரடிகள் இதனை அருளிச் செய்தார்.


"(இருக்கின்)இரண்டாம் மண்டிலத்து 33 ஆம் பதிகமும் அங்ஙனமே சிவபிரான் தேவர்கள் எல்லாரினும் மிகச் சிறந்தோனாதல் தெரிப்பதுடன், அவனே வலிமையின் மிக்கார் எல்லாரினும் வலிமையிற் சிறந்தோனாவன் என்றும், அவனே சாந்தனாய் (அமைதிமிக்கவனாய்) அடியார்க்கு எளியனாம் எனவும், ஏனைத் தேவர்களாற் போதருந் தீமைகளை எல்லாந் துடைப்பவனாம் எனவும், அவனைவிட ஆற்றலின் மிக்கது எதுவும் இன்றெனவும், புகழ்மிக்கோனாய் என்றும் இளையோனாய்த் தன் தேர்மீது அமர்ந்து முப்புரங்களை அவித்தக்காற் பெரிதும் அஞ்சத் தக்கோனாய் கிளர்ந்தனன் எனவும் அறிவுறுத்துகின்றது... ஆறாம் மண்டலத்தில் 16 ஆம் பதிகமானது உக்கிரனாகிய சிவபிரான் மூன்று பட்டினங்களைப் பொடி செய்தான் என நுவல்கின்றது". 48


அப்பரடிகளும்,


"நிலைவலியின்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனஞ்செய்தோடு புரமூன்று
அலைநலி அஞ்சியோடி அரியோடு தேவர் அரணம் புகத்தன் அருளால்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும் அனல்பாய நீறு புரமாம்
மலைசிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவனா நமக்கொர் சரணே" -4-14-5
"வீரமும் பூண்பர்" -4-17-2
"ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி" -4-19-4
"பெரியன புரங்கள் மூன்றும் பேரழல் உண்ண வைத்தார்" -4-30-4
"மூவாதமேனி முக்கண்ணா போற்றி" -6-56-2
"சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கல்லால் நலமிலன்" -4-11-6
(சலமிலன் - கோபம் என்பது சிறிதும் இல்லாதவன்) (காண்க - திருவருட்பயன் - 9 ஆம் குறள்)
"எளியவர் அடியார்க் கென்றும்" -4-72-5
"கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்" -6-23-1
"எத்திசை புகினும் எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன்று எம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித்(து)
அத்தீ நிறத்தார் அரநெறியாரே" - 4-17-1
"திப்பிய சாந்தனாகி" -4-32-6என்றும் அருளிச் செய்துள்ளனர்.


"அதன் 136 ஆம் பதிகமானது, சடைமுடியோனான (கேசி) சிவபிரான் தீ மண்டிலம் நீர்மண்டிலம் இம்மை மறுமையுலகங்கள் எல்லாவற்றையுந் தாங்குவோன் என்பதூஉம், அவன் வெறுவெளியாய்ச் (சிற்றம்பலமாய்) நோக்கப்படுவோன், அவனே ஒளிவடிவினன் (கேசி இதம் ஜ்யோதிர்) என்பதூஉம், அவன் முனிவர்க்கெல்லாம் முனிவன் (தக்ஷிணாமூர்த்தி) ஆவான் என்பதூஉம், அவன்தன் உருத்திர கணத்திலுள்ள ஒருவரால் நஞ்சினை வருவித்து அதனைப் பருகினன் (கேசி விஷஸ்ய பாத்ரேணயத் ருத்ரேணாபிபத்ஸஹ) என்பதூஉம் தெரித்துரைத்தல் காண்க". 49


கோதில் மொழிக் கொற்றவனாராகிய அப்பரடிகளும்,


"பொறையவன் காண் பூமியேழ் தாங்கியோங்கும் புண்ணியன் காண்" -6-65-3 என்றும்,
"நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற மலையானை" -6-66-4 என்றும்,
"பற்றி உலகை விடாதாய் போற்றி" -6-55-6 என்றும்,
"பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை செய்வானை" -6-50-6 என்றும்,
"விட்டிலங்கு சடைமுடியர்" -6-35-6 என்றும்,
"முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினை கழித்தான்" -4-90-3 என்றும்,

"பருவரை யொன்று சுற்றி அரவங்கை விட்ட இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றி தற்கொர் பிதிகாரம் ஒன்றைஅருளாய் பிரானே எனலும்,
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர் அண்டர் அரசே" -4-14-1 என்றும்

"வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு,
கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டுபஃறேவர் அஞ்சி
அடைந்துநுஞ் சரணமென்ன அருள்பெரிதுடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினரே" -4-65-2 என்றும்
"கடல் நஞ்சினைப், பங்கி உண்டதோர் தெய்வம்
உண்டோ சொலாய்" -5-33-6 என்றும்
"சங்கை ஒன்றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே" - 6-99-2 என்றும்
"தக்கணா போற்றி" - 6-5-10 என்றும்

போற்றி அருளிச் செய்தனர்.


குறிப்புகள்:
46. மாணிக்கவாசகர் காலமும் வரலாறும் - பக்.554, 555.
47. மேலது - பக். 555.
48. மேலது - பக்.555.
49. மேலது - பக்.555.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate