வெள்ளி, 17 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 15

ஓங்காரத்து உட்பொருள்:

1. ஓமிதி ப்ரஹ்ம ஸதாசிவோம் - தைத்ரீயோபநிஷத்

ஓம் என்பது ப்ரஹ்மம். சதாசிவன் பிரணவம்.

2. அகாரம் ப்ரஹ்மாணம் நாபௌ உகாரம் விஷ்ணும் ஹ்ருதயே I
மகாரம் ருத்ரம் ப்ரூமத்யே ஓங்காரம் ஸர்வேச்வரம் த்வாதசாந்தே II


- ந்ருசிம்மதாபந்யோபநிஷத்





அகாரமென்னும் ஸ்தூலனாகிய பிரமனை நாபியிலும், உகாரமென்னும் சூக்ஷ்மனாகிய விஷ்ணுவை இருதயத்திலும், மகாரமென்னும் சூக்ஷ்மதரனாகிய உருத்திரனைப் புருவநடுவிலும் ஓங்காரமென்னும் சூக்ஷ்மதரனாகிய (துரீய) சர்வேசுவரனைத் துவாதசாந்தத்திலும் தியானிக்க வேண்டும்.

3. க்ருத்ஸ்நமோங்காரக திஞ்ச ஸர்வத்யாந யோகஜ்ஞாநாநாம்
யத்பலம் - ஓங்காரோ வேதபர ஈசோவா I


- அதர்வசிகோபநிஷத்

ஓங்காரத்தின் சொரூபமெல்லாவற்றையும், சர்வ விதமான தியானங்கள், யோகங்கள், ஞானங்கள் ஆகிய இவற்றின் பலன்களையும் பிரணவ சொரூபனான ஈசனே அறிவன்.

4. ஏகஸங்க்யா விஹீநோஸ்மி த்விஸங்க்யா வாநஹம்நச
அகோரோகார ரூபோஸ்மி மகாரோஸ்மி ஸநாதந:
ஹ்ருத்யக்ரந்தி ஹீநோஸ்மி ஹ்ருதயாம்புஜமத்யக:


- மைத்ரேயோபநிஷத்

நான் ஒன்று என்ற எண்ணும் அற்றவன். இரண்டு என்னும் எண்ணும் அற்றவன். அகார உகார ரூபமாயிருக்கிறேன். மகார ரூபமாயிருக்கிறேன். இருதய கிரந்தி அற்றவனாய் இருதய நடுவில் இருக்கிறேன். (இவ்வாக்கியம் சிவபெருமான் மைத்ரேயருக்கு அருளிச் செய்தது).

5. ஸ ஓங்காரோய ஓங்கார: ஸ ப்ரணவோய: ப்ரணவ:
ஸஸர்வவ்யாபீ யஸ்ஸர்வவ்யாபீ ஸோநந்தோ யோநந்த:
தத்தாரம் யத்தாரம் தத்ஸுக்ஷ்மம் யத்ஸுக்ஷ்மம்
தத்சுக்லம் யச்சுக்லம் தத்வைத்யுதம் யத் வைத்யுதம்
தத்பரம் ப்ரஹ்மேதி
யஏகஸ்ஸ ஏகோருத்ர: ஸ ஈசானஸ்ஸபகவாந்
ஸ மஹேச்வரஸ்ஸ மஹாதேவ:II


- அதர்வசிரோபநிஷத்

எவன் ஓங்காரன் அவன் ஓங்காரன்; எவன் பிரணவன் அவன் பிரணவன்; எவன் ஸர்வ வியாபீ அவன் ஸர்வ வியாபீ; எவன் அனந்தன் அவன் அனந்தன்; எது தாரம் அது தாரம்; எது சூக்ஷ்மம் அது சூக்ஷ்மம்; எது சுக்லம் அது சுக்லம்; எது வைத்யுதம் அது வைத்யுதம்; அது பரப்பிரமம் என்று, எவன் ஏகன் அவன் ஏகனான உருத்திரன். அவன் ஈசானன் - அவன் பகவான், அவன் மகேசுரன். அவன் மகாதேவன்.

6. ஓம் கம் ப்ரஹ்ம - யஜுர் (40-17)

ஓம் பரப்பிரம்மத்தின் பெயராகும். அது தான் பிரம்மம்.

7. ஓம் இத்யேதக்ஷரம் இதம் ஸர்வம் தஸ்யோப வ்யாக்யானம்.

- மாண்டூக்ய உபநிஷத்

ஓம் என்பது எதன் பெயரோ அது அழிவற்றது. ஒருபொழுதும் அழியாதது. சராசர ஜகத்தில், அசைவதும் அசைவற்றதுமாகிய உலகில் அது எங்கும் நிறைந்திருக்கிறது.

"ஓங்காரத்து ஒருவனாகும்" -4-25-9 எனவும்
"ஓங்காரன் காண்" - 6-24-2 எனவும்
"ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்" - 6 - 39 - 10 எனவும்
"ஓங்காரத்து ஒருவன் காண்" - 6 - 48 - 41; 6 - 65 - 1 எனவும்
"ஒங்காரத்து உட்பொருளை" - 6 - 63 - 3 - எனவும்
"ஓங்கார மெய்ப்பொருளை" - 6 - 86 - 3 எனவும்
"ஓங்காரத் துட்பொருள்தான் ஆயினானை" - 6 - 67 - 7 எனவும்
"பேரெழுத்து ஒன்று உடையானை" - 6 - 91 - 6 எனவும்

எனப் பலவாற்றானும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்தனர்.

இல்லான் உள்ளான்:

தேவர்கள் சுவர்க்க (சிவலோகத்தை) லோகத்தையடைந்து உருத்திரரை நோக்கி நீவிர் யார்? என்று வினாவினார்கள். (அதற்கு) நான் மாத்திரம் இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். எனக்கு வேறாக எதுவும் இல்லை; அந்தரத்தையும் அந்தராந்தரத்தையும் பிரவேசித்தார், திக்குகளையும் திக்கினிடைகளையும் பிரவேசித்தார்; அவர் நான், நான் நித்தியனும் அநித்தியனுமாகி இருக்கின்றேன் (என்று தொடங்கி) நான் பிரமா, நான் பிரமம், நான் கிழக்கும் மேற்கும் ஆயினேன், நான் தெற்காயினேன், வடக்காயினேன், நான் மேலும் ஆயினேன், கீழுள்ளேன், நான் பெருந்திசை நான்கும் சிறுதிசை நான்குமாகிறேன்; நான் ஆண், நான் பெண், நான் காயத்ரி, நான் சாவித்திரி, நான் திருஷ்டுப் ஜகதியும் அநுஷ்டுப்பும் ஆகின்றேன். சந்தஸ் நான், கார்கபத்யம் தக்ஷிணாக்னி ஆகவநீயம் நான், சத்யம் நான், பசு நான், கௌரி நான், ஜ்யேஷ்டன் நான், சிரேஷ்டன் நான், வரிஷ்டன் நான், நீர் நான், தேயு நான், குஹ்யம் நான், கோப்யம் நான், வனம் நான், புஷ்கரம் நான், பவித்ரம் நான், ஆதிமத்தியம் நான், புறம் நான், முன் நான், ஜ்யோதி நான், என்னை எல்லாமாக அறிபவன் எல்லாம் அறிகின்றான் என்றார்; உருத்திரர் எனப்படும் பகவானுக்கு, பிரமா எனப்படும் அவருக்கு நான் நமஸ்காரஞ் செய்கின்றேன்.

- அதர்வசிரோபநிஷத்

"மாலாகி நான்முகனாய் மாபூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வுமாகிப்
பாலாகி எண்டிசைக்கும் எல்லையாகிப் பரப்பாகிப் பரலோகந் தானேயாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப் பூதங்களாய்ப் புராணன்தானேயாகி
ஏலாதனவெல்லாம் ஏல்விப்பானாய் எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே."
- 6 - 94 - 7

மண்ணாகி விண்ணாகி மலையுமாகி...
பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகி...
அங்கமாய் ஆதியாய் வேதமாகி அருமறையோடு
ஐம்பூதம் தானேயாகி,
எங்குமாய் ஏறூர்ந்த செல்வனாகி... - 6 - 94 - 2

என நின்ற திருத்தாண்டகம் முழுமையும் சிவபிரானின் தடஸ்த லக்ஷணம் எனப்படும் ஒன்றாய் நிற்றலை அருளிச் செய்கின்றார் செந்தமிழ்ச் சதுரராகிய அப்பரடிகள்.

2. ஸ ஹோவாசைத்வை ததக்ஷரம் கார்க்கி ப்ராஹ்மணா
அபிவதந்த்யஸ்தூலமநண்வ ஹ்ரஸ்வதீர்க்கமலோஹிதமஸ்நேஹமச்சாய
மகமோ வாய்வநாகா‹ மங்கமரஸமகந்தமசக்ஷுஷ் கம‹்ரோத்ர
மவாகமநோதேஜஸ் கப்ராணமமுகமாத்ரமநந்தர பாஹ்யம் ந
தத‹்நாதி கிஞ்ச நநதத‹்நாதி க‹்சநI


- பிருகதாரண்ய உபநிஷத் (5.88)

யாக்ஞவல்க்யர் சொல்லும் பதிலாவது: கார்க்கியே! (ஆகாசமாகிய பராசக்திக்கு ஆதாரமாயுள்ள) இதனை அக்ஷரம் என்று பிரமவித்துக்கள் கூறுகின்றார்கள்; இது ஸ்தூலமாகாததும், அணுவாகாததும், குறுக்கமாகாததும், நீட்டமாகாததும், சிவப்பாகாததும், சிநேகமாகாததும், நிழலாகாததும், இருளாகாததும், வாயுவாகாததும், ஆகாசமாகாததும், சங்கமாகாததும், இரசமாகாததும், கந்தமாகாததும், கண்ணாகாததும், காதாகாததும், வாக்காகாததும், மனசாகாததும், தேயுவாகாததும், பிராணன் ஆகாததும், முகமாகாததும், அளவாகாததும், உள்ளாகாததும், வெளியாகாததுமாய் அந்த அக்ஷரம் ஒன்றையும் அயில்வதில்லை, ஒருவனும் அதனை அயில்வதில்லை.

3. அ‹ப்தமஸ்பர் ‹மரூபவ்யந்த தாரஸம் நித்யமகந்த
வச்சயதநாத்யநந்தம் மஹத: பரம் த்ருவம் நிசாய்யம்
ம்ருத்யுமுகாத் ப்ரமுச்யதே!


-கடோபநிஷத்(3.15)

எந்தப் பிரமமானது சப்தமாகாததாய், ஸ்பரிசமாகாததாய், ரூபமாகாததாய், இரசமாகாததாய், கந்தமாகாததாய், ஆதியந்தமிலாததாய், அழியாததாய், அசையாததாய், நித்தியமாய், மகத்துக்கு வேறாய் உள்ளதோ அதனைச் சாக்ஷாத்கரித்து மரணவாயினின்றும் வீடுறுகின்றான்.

உடன்பாட்டுக் குணங்களால் இறைவனைப் புகழ்ந்த வேதம் எதிர்மறைக் குணங்களாலும் புகழ்கிறது.

வாகீசர் அருளிச் செய்த தமிழ் வேதமும் அங்ஙனமே,

"விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணும் நிலனும்
திரிதரு வாயுவல்லர் செறுதீயுமல்லர் தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள்காரணத்தில் வருவார்" - 4-8-2 எனவும்


"ஆணலார் பெண்ணும் அல்லார்" -4-27-8 எனவும்


"மண்ணல்லை விண்ணல்லை வலயமல்லை மலையல்லை கடலல்லை வாயுவல்லை
எண்ணல்லை எழுத்தல்லை எரியுமல்லை இரவல்லை பகலல்லை யாவுமல்லை
பெண்ணல்லை ஆணல்லை பேடுமல்லை பிறிதல்லை ஆனாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயையல்லை உணர்வரிய ஒற்றியூருடைய கோவே." -6-45-9 எனவும்


எதிர்மறைக் குணங்களால் போற்றி சிவபிரான் யாவற்றையுங் கடந்தவர் என்பதை உணர்த்துகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate