வெள்ளி, 17 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 18


இறைவன் திருவுரு:


1. புத்திகுஹாயாம் ஸர்வாங்க ஸுந்தரம் புருஷரூபம் அந்தர்லக்ஷ்யம் மித்யபரெ!
சீர்ஷா sந்தர்கத மண்டல மத்யகம் பஞ்சவக்த்ரம்
உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அந்தர்லக்ஷ்யம் இதிகேசித்I
அங்குஷ்டமாத்ர: புருஷோந்தர்லக்ஷ்ய மித்யேகேII

- மண்டல பிராம்மணோபநிஷத்புத்தி குகையின் கண்ணே சர்வாங்க சுந்தரமுள்ள புருஷர் அந்தர்லட்சியமென அபரரும், சிரசின் உள்ளிடத்து மண்டல மத்தியில் ஐந்து முகங்களும், நீலகண்டமும், மிக்க சாந்தத் தன்மையுமுடைய உமாசகாயர் அந்தர்லட்சியமெனச் சிலரும், அங்குஷ்ட அளவினராய புருஷர் அந்தர்லட்சியமென ஒருசிலரும் உரைக்கின்றனர்.


2. நமோ ஹிரண்ய பாஹவே, ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய
ஹிரண்ய பதயேம்பிகாபதயே உமாபதயே பசுபதயே நமோநம:II

- தைத்ரீயாருண சாகை நாராயணம்


பொற்றோளருக்கு, பொன்வண்ணருக்கு, பொன்மேனியருக்கு, பொன்னுக்கிறைவருக்கு, அம்பிகாபதிக்கு, உமாபதிக்கு, பசுபதிக்கு நமஸ்காரம். நமஸ்காரம்.


3. அஸௌயோsவஸர்பதி நீலக்ரீவோ விலோஹித:
-தைத்ரீய சம்ஹிதை


(சூரிய மண்டலத்துள்ளிலிருந்து உதயாஸ்தமனஞ் செய்விக்கும் பொருட்டு சிவபிரான்) பிரவர்த்திக்கின்றனர். இவர் நீலகண்டரும் செந்நிறமும் உடையவர்.


4. உமாஸஹாயம் பரமேச்வரம் ப்ரபும் த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரசாந்தம்
-கைவல்யோபநிஷத்


உமாசகாயரும் பரமேசுவரரும் பிரபுவும் முக்கண்ணரும் நீலகண்டரும் பரமசாந்தரும்.


"ஓருடம்பிருவராகி" - 4-22-6
"சுரிபுரி குழலியோடும் துணையலால் இருக்கையில்லை" - 4-22-6
"உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண்" - 6-65-7

என உமாசகாய நிலையையும்,
"நீலமாமணி கண்டத்தர்" - 5-51-1
"நீலமுண்ட மிடற்றினன்" - 5-35-5

என நீலகண்டத்தையும்
"முக்கணா போற்றி" - 6-5-10
"கதிர்செய் நெற்றிநுதல் கண்டேன்" - 6-77-2
"நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய் போற்றி" - 6-32-3

என த்ரிலோசனத்தையும்
"பொன்வரையே போல்வான் தன்னை" - 6-69-2
"பொன்பொதிந்த மேனியனை" - 6-68-6
"பொன்னொத்த திருமேனிப் புனிதர்" - 6-53-5
"செம்பொனாற் செய்தழகு பெய்தாற்போலும்
செஞ்சடையெம் பெருமானே" - 6-4-9
"அணிகிளர் அன்னவண்ணம் அவள்வண்ண வண்ணம்
அவர் வண்ணம் அழலே" - 4-8-6

என பொன்போலும் திருமேனியையும் புகழ்ந்துள்ளார் அப்பரடிகள்.

மேலும், பாற்கடலில் பிறந்த நஞ்சுண்டு கண்டம் கறுத்தது, திரிபுரம் எரித்தது, பிரளயத்தில் பிரமவிஷ்ணுக்களின் சிரோரோமம், கபாலம் இவற்றை தரித்தது, வாமன அவதாரத்தை தண்டித்தது, பிரம்மவிஷ்ணுக்கள் அடிமுடி தேடியது என பல புராண செய்திகளை ரிக் வேதம், தைத்ரீய சம்ஹிதை, சரப உபநிஷத் ஆகியன எடுத்து இயம்புகின்றன.அப்பரடிகளும் இந்த புராணச் செய்திகளை தமது திருப்பதிகங்களில் பல்வேறு இடங்களில் குறித்து உள்ளார்.


முடிவுரை:


எனவே, இதுவரையினும் கூறியவாற்றான், வைதிக நெறியைப் புறந்தள்ளி சமண பௌத்தம் முதலிய அவைதிக நெறிகள் மேலோங்கிய காலத்தில் மீண்டும் வைதிக நெறியை புனருத்தாரணம் செய்வான் பொருட்டு சமயக்குரவர் அவதரித்தனர் என்பதும்,


அவர்களுள் அப்பரடிகள் வேத வேள்வியை நிந்தனை செய்துழன்ற சமணசமயத்தில் நெடுங்காலம் இருந்தமையால், அவ்வேத வேள்விகளின் அருமைபெருமைகளைப் பல்வகையாலும் எடுத்தருளியுள்ளனர் என்பதும்,


வேதோபநிஷதங்களும், திருமுறை சித்தாந்த சாத்திரங்களும் எவ்வகையானும் தம்முள் பொருள் ஒருமை உடையன, எனவே அவற்றுள் பேதமில்லை என்பதும்,


வேதம் சிவபிரான் வாக்கு, உலகர்க்கருளிய பொதுநூல், சிவபரத்வம் அதில் விளம்பப்பட்டிருக்கும் என்பதும்,


அப்பரடிகளின் திருவாக்கிலிருந்து அவர் கூறும் வேதம் வடமொழி வேதமே என்பதும் தெளிவுப்பட எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate