வெள்ளி, 17 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 16

எண்குணத்தான்:

தன்வயத்தனாதல் - ஸ்வதந்திரத்வம்
தூய உடம்பினன் ஆதல் - விசுத்த தேகம்
இயற்கை உணர்வினன் ஆதல் - நிராமயான்மா
முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்
இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல் - அநாதி போதம்
பேரருள் உடைமை - அலுப்த சக்தி
முடிவிலாற்றல் உடைமை - அநந்த சக்தி
வரம்பில் இன்பம் உடைமை - திருப்தி


இந்த எண் குணங்களையும் உடையவன் சிவபிரான்.இத்தகைய குணங்களை உடையவனை `குணாதீதன் - நிர்க்குணன்' என்றால் பொருந்துமா? என்றால், பொருந்தும்.

எப்படியெனின்,

இறைவன் மாயையைக் கடந்து நிற்றல், சத்வாதி முக்குணங்களை கடந்த தன்மையைக் குறிக்கும். எனவே உயிர்க்குணங்களாகிய - மாயையின் வயப்பட்ட - முக்குணங்களைக் கடந்தவன் என்பதையே `குணாதீதன் - நிர்க்குணன்' என்பன குறிக்கும்.

1. ஏஷ ஆத்மாபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விே‹ாகோ
விஜிகிப்ஸோபிபாஸஸ் ஸத்யகாமஸ் ஸத்ய ஸங்கல்ப: I


- சாந்தோக்யோபநிஷத் (8.1.5)

இந்தப் பரமான்மாவானவர் பாவமிலராய், ஜரையிலராய், மரணமிலராய், சோகமிலராய், பசியிலராய், தாகமிலராய், சத்தியகாமராய், சத்தியசங்கற்பராய் உள்ளார்.

2. `எவர் சர்வக்ஞராய் எவற்றையும் அறிபவராய் இருக்கின்றாரோ, எவர்க்குத் தபஸ் ஞானமயமாயுள்ளதோ' என வரும் முண்ட கோபநிஷத் 1-1-9; 2-2-7; மைத்ரேயோபநிஷத் 7.1 வாக்கியங்களால் இறைவன் சர்வக்ஞத்வம் உடைமையும்,

3. `ஆனந்தம் பிரமம்' (தைத்ரீயம் 3.6); `அந்நியமாய் அந்தரமாயுள்ள ஆன்மா ஆனந்தமயம்' (தைத்ரீயம் 2.5.1) என்பதால் நித்ய திருப்தத்துவம் உடைமையும்,

4. `வித்தை அவித்தை (பசு, பாசம்) எனும் இரண்டையும் ஆளுபவர் மற்றொருவர் (ஸ்வேதாஸ் - 5.1); `பிறவாதவராகிய ஞனும் அஞ்ஞனுமாம் இருவரும் முறையே ஈசனும் அநீசனுமாம்' (ஸ்வே 1.9) என்பதால் ஸ்வதந்திரத்வம் உடைமையும்

5. `அவரது பராசக்தியானது ஸ்வபாவிகமாய் ஞானசக்தி, கிரியா சக்தி, இச்சாசக்தி எனப் பலவாறாகக் கேட்கப்படுகின்றது (ஸ்வே. 6.8) என்பதனால் அலுப்தசக்தி எனும் குணம் உடைமையும்,

6. `உருத்திரர் ஒருவருளர்; (அவர்) இரண்டாவதொன்றைக் கொள்வாரல்லர்; இந்த உலகம் அனைத்தையும் படைப்பனவும் காப்பனவுமாகிய சத்திகளினாலே ஆளுகின்றனர். (ஸ்வே.3.2) என்பதனால் அநந்தசக்தி உடைமையும் பெறப்படுகின்றன.52

இதனை,

"எட்டுக் கொலாமவர் ஈறில் பெருங்குணம்' - 4 - 18 - 8 எனவும்
"கலைஞானிகள் காதல் எண்குணவன் காண்' - 5 - 63 - 4 எனவும்
"எட்டுவான் குணத்து ஈசன் எம்மான்" - 5 - 89 - 8 எனவும்
"பரமர் போலும் எண்குணத்தார்" - 6 - 16 - 4 எனவும்

அப்பரடிகள் கூறுவர்.

அட்டமூர்த்தி:

பஞ்சபூதங்களும், சூரிய சந்திரரும், ஆன்மாவும் இறைவனுக்கு அஷ்டமூர்த்தங்களாம்.

இதனை,

`பவர், சர்வர், ஈசானர், பசுபதி, உருத்திரர், உக்ரர், பீமர், மகாதேவர் என்னும் அஷ்டமூர்த்தியாயிருக்கும் தேவர்க்கு ஸ்வாஹா' என யஜுர்வேத மந்த்ர ப்ரச்னம் கூறுகின்றது.

"அட்டமா உருவினானே" - 4-57-3 எனவும்
"அட்டமா மூர்த்தியாய ஆதியை" - 4-78-10 எனவும்
"அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ" - 5-5-6 எனவும்
"அட்டமூர்த்தியதாகிய அப்பரோ" - 5-10-3 எனவும்
"எட்டுமூர்த்தியர்" - 5-21-2 எனவும்
"அட்டமூர்த்தி அனாதி" - 5-54-10 எனவும்
"இருநான்கான மூர்த்தியே" - 6-98-6 எனவும்

அடிகள் அட்டமூர்த்தியைப் போற்றுகின்றார்.

பசுபதி:

1. `ய ஈசேஸ்ய த்விபத: சதுஷ்பத:I
-ரிக் (10.121.3)

எவர் இருகாலும் நாற்காலுமுடைய பசுக்களை ஆளுகின்றாரோ.

2. அஹமேவ பசூநாமதிபதி:I
- யஜுர் 6.2.3.2

நானே பசுக்களுக்கு அதிபதி.

3. ஏஷாமீசே பசுபதி: பசூநாஞ் சதுஷ்பதா முதசத்விபதாம்I
- யஜுர் 3.1.4.3

நாற்காலும் இருகாலுமுடைய பசுக்களைப் பசுபதியானவர் ஆளுகின்றார்.

4. உமாபதயே பசுபதயே நமோ நம:I

- தைத்ரீய ஆரண்யகம் (10.22.40)

உமாபதியார்க்கு பசுபதியார்க்கு நமஸ்காரம்.

பசுபதிப் பெயரின் தனித்தன்மையை உணர்த்துவான் வேண்டி, அப்பரடிகள், ஒவ்வோர் பாடலின் ஈற்றிலும் `எம்மை ஆளும் பசுபதியே' என முடியும் பதிகம் ஒன்றினை அருளியுள்ளனர். அதன் பெயரே `பசுபதித் திருவிருத்தம்' என்பது.

"பத்தர் மனத்துளேயும் பசுபதி பாசுபதன்" - 6-12-6 எனவும்
"பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றை" - 6-46-5 எனவும்

இன்னும் பல்வேறு பதிகங்களிலும் போற்றியுள்ளார்.

குறிப்புகள்:
52. சிவநேசன் - 7 ஆம் ஆண்டுத் தொகுதி - பக். 31


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate