திங்கள், 13 ஜூலை, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 12


சிவம் அழிவற்றது:


1. நாஸதாஸீந்நோ ஸதாஸீத் -ரிக் - 10-129-1
2. ததேகம் (ஆஸீத்) -ரிக் - 10-129-2
3. காமஸ்ததக்ரே ஸமவர்த்ததே -ரிக் - 10-129-4



"(மகாப்பிரளய காலத்திலே) அசத்தும் இல்லை; சத்தும் இல்லை; அந்த ஒன்று இருந்தது; அதனின்று முதற்கண்ணே காமம் எனப்படும் பராசக்தி உளதாயிற்று" 50



இறைவனொருவனே ஊழிகளைக் கடந்து நிற்கின்றான்; அவன் ஒருவனே எப்போதும் இருக்கின்றான் என்பதை வாகீச மூர்த்திகள்,


"பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின்று எம்மிறை நல்வீணை வாசிக்கும்மே" - 4-112-7 என்றும்,



"ஊழியளக்க வல்லானும்" - 4-4-5 என்றும்,
"அளவிலாப் பல்லூழி கண்டுநின்ற தீர்த்தனை ” - 6-19-11 என்றும்
"ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ" - 6-34-1 என்றும்
"மலையார் பொற்பாவையொடு மகிழ்ந்த நாளோ" - 6-34-2 என்றும்

"ஓதத்தொலி மடங்கி ஊருண்டேறி
ஒத்துலகமெல்லாம் ஒடுங்கிய பின்
வேதத்தொலி கொண்டு வீணைகேட்பார்" - 6-35-2 என்றும்



வியந்து அருளிச் செய்கின்றனர்.

1. சிவம் அக்ஷரம் அவ்யயம் - பஸ்ம ஜாபால உபநிஷத்.



சிவம் அழிவற்றது; முக்காலங்களாலும் அளவிடப்படாதது;


2. ஸதாசிவோக்ஷரம் விமலம் - திரிபுராதாபிநி உபநிஷத்.


சதாசிவன் அக்ஷரம்; மலமற்றவன்.


3. தத்ர சதுஷ் பாதம் ப்ரஹ்மவிபாதி
ஜாகரிதே ப்ரஹ்மா ஸ்வப்நே விஷ்ணு:
ஸுஷுப்தௌ ருத்ரஸ் துரீயம் அக்ஷரம்
- ப்ரஹ்ம உபநிஷத்.



அங்கு நான்கு பாதங்களுள்ள பிரமம் விளங்குகின்றது. ஜாக்ரத்தில் பிரமா, சொப்பனத்தில் விஷ்ணு, சுழுத்தியில் ருத்ரன், துரீயம் அக்ஷரம்.
(இங்கு நான்காவது பாதமாகிய துரீயம் அக்ஷரப் பிரம்மம் எனப்படுகிறது. எனவே மூவருக்கும் மேலான பொருளே பரம்பொருளென்பதும், அது முக்காலத்தும் அழிவின்றி, சிருஷ்டிக்கு முன்னும் பின்னும் திகழ்கின்ற பரப்பிரமம்.)



இக்கருத்துக்களை,


"ஏணிலார் இறப்புமில்லார் பிறப்புமில்லார்" -4-27-8 என்றும்
"ஈறிலாதவன் ஈசனொருவனே" - 5-100-3 என்றும்
"தந்தை தாய் இல்லாதாய் நீயே" -6-41-9 என்றும்
"பிறவாதும் இறவாதும் பெருகினான்" -6-74-6 என்றும்
"மூலமாகிய மூவர்க்கும் மூர்த்தியை" -5-57-5 என்றும்
"முன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை" -6-12-2 என்றும்
"மூவன்காண் மூவர்க்கும் முதலானான் காண்" -6-85-4 என்றும்

தாண்டக வேந்தர் மொழிந்துள்ளனர்.


குறிப்புகள்:
50. தேவாரம் வேதசாரம் - பக். 12.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate