வெள்ளி, 31 ஜனவரி, 2014

சம்பந்தரும் சமணரும்


ஞானசம்பந்தர் தேவாரம், வரலாற்று தகவல்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். நான் அதைப் பாராயணம் செய்யும் போதெல்லாம், புதிய புதிய கருத்துக்கள் தோன்றும்.

அதை அவ்வப்போது குறிப்பதும் உண்டு. அப்படி குறித்தவற்றை, நான் திருஞானசம்பந்தர் தேவாரம் - சில குறிப்புகள்  என்ற தலைப்பில், இரண்டு பதிவுகளாக, இங்கே இட்டிருக்கிறேன்.


ஒருமுறை, பால்வண்ணநாதர் கோயிலில், பள்ளியறையை புதுப்பித்தோம். பள்ளியறைக்கு புதிய திண்டுகள் வாங்க வேண்டியிருந்தது.

அதற்காக, திருநெல்வேலி டவுன், மேல ரதவீதியில் ஒரு சேட் கடைக்கு சென்று, அளவு கொடுத்துக் கொண்டிருந்தோம்.

அந்த கடையின் உரிமையாளர், எங்களுடன் பேச்சுக் கொடுத்தார். சைவம், கோயில், சித்தாந்தம் என பேச்சு சென்ற உடன், அவர் இப்படி சொன்னார்:

இன்று நீங்கள் கொண்டாடும் சைவம், ஒரு காலத்தில் எங்களை அழித்தது. அதை நான் படித்திருக்கிறேன். நானும் சைவ  சித்தாந்தம் படித்து வருகிறேன்.

சைவம் பற்றியும், சித்தாந்தம் பற்றியும் முதன்முறையாக ஒரு விமர்சனத்தை நான் அப்போது தான் எதிர்கொண்டேன். அது என்னை உறுத்தியது.

சைவத்தின் பால் எவ்வித தவறும் இல்லை என நிலைநாட்ட என்னைத் துாண்டியது.

அதையடுத்து நான் பல்வேறு நுால்களை படித்து வந்தேன். எனினும் சென்னை அனுபவம் தான் என்னை விமர்சனங்களை ஏற்கவும், பார்க்கவும் பக்குவப்படுத்தியது.

அந்த சேட் சொன்னதன் விளைவாகவோ, தொடர்ந்த தேவார பாராயணத்தின் விளைவாகவோ, சம்பந்தர் தனது பாடல்களில், சமணரைப் பற்றி கூறுவனவற்றை எல்லாம் தொகுக்க வேண்டும் என, என்னுள் தோன்றிற்று.

திருநெல்வேலியில் நான் தேவார வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போதும், நண்பர்களுடன் விவாதிக்கும் போதும், சம்பந்தரின் பாடல்களைப் பற்றிய எனது கருத்துக்கள் மேலும் விரிவடைந்தன.

எனினும் அவற்றை தொகுக்கும் அறிவும், வாய்ப்பும் எனக்கு இப்போது வரை வரவில்லை.

இந்த நிலையில் தான், சமீபத்திய புத்தக கண்காட்சியில், சம்பந்தரும் சமணரும் என்ற தலைப்பில், அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் எழுதிய புத்தகத்தை, பாரி நிலையத்தில் கண்டேன். கண்ட உடன் அதை  எடுத்தேன்.


தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

கடந்த இரு நாட்களுக்கு முன் அதைப் படித்து முடித்தேன்.

முன்னுரையில், அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
இங்கு கூறுவன என் கருத்தென்று கொள்ளுதல் ஆகாது என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
யான் சமணன் அல்லன் ஆதலால் சிலபோது நடுநிலை தவறினேன் என எண்ணிவிட வேண்டா.
சம்பந்தர் பழிப்பது உண்மைச் சைனரை அன்று, குண்டரையே என்று காட்ட முனைந்துள்ளேன்.
இங்கு ஆராயப் பெறுவது சைவர் கொண்ட எரிவு மட்டுமன்று; சமணர் முதலியோர் கொண்ட எரிவுமே  ஆம்.
இவ்வாறு சொன்னவர்,
ஆனால், அந்நாளில் இந்த வெறுப்புக்குக் காரணம் சமயம் மட்டுமோ? பல அரசியல் சூழ்ச்சிகளும் இங்கே இடம் பெற்றிருக்கும். 
அவற்றை ஆராயத் தக்க குறிப்புகள் இன்னும் கைக்கு எட்டவில்லை.
என, கூறிச் செல்கிறார்.

இந்த நுாலில், அவர் எடுத்துக் கொண்ட முக்கிய கருப்பொருள், சம்பந்தர் ஒட்டுமொத்த சமணரையும் பழிக்கவில்லை என்பதும், கழுவேற்றிய கதை கற்பனையே என்பதும் தான்.

இதை அவர், கடவுட் பேராறு என்ற தலைப்பின் இறுதியில் எழுதிய,
புத்தரும்,மகாவீரரும் சீர்திருத்தம் செய்த செவ்வியோர் ஆவர். அவர்களை அழிக்க வந்தார்களாக்கிய பழி, அவர்களுக்குப் பின் வந்தாரைச் சாரும்.
சம்பந்தரைக் கொலையாளி ஆக்கிய பழி  அவர் பின்வந்த அடியாரைச் சாரும்.
என்ற வார்த்தைகள் காட்டுகின்றன.

கடவுட் பேராறு, சமணரும் கடவுளே, பேய்த் துறவு, போலித் துறவு, கழுவேற்றிய கதை, வெறுப்பின் விளக்கம் என ஆறு தலைப்புகளில் இந்த நுாலை உருவாக்கியுள்ளார் தெ.பொ.மீ.

வெறுப்பின் விளக்கம் என்ற தலைப்பு மட்டும், பெளத்தரும் சம்பந்தரும், ஆரம்பர், உண்டும் இல்லையும் எனல், புலவரைப் பழித்தல், கழிமீன் கவர்தல், ஆசீவகரும் சம்பந்தரும், குண்டர் என ஏழு உட்பிரிவுகளில் விரிவாக விளக்கப்படுகிறது.



இனி அவர் நுாலில் எடுத்துச் சொன்ன கருத்துகளின் சாராம்சம்:

  1. சமண கொள்கையும் இறைவனால் படைக்கப்பட்டதே. `அணைவில் சமண் சாக்கியம் ஈசன் ஆக்கியவாறே' என்ற இரும்பூளை தேவாரம் அதற்கு சாட்சி.
  2. அதனால் அவர்களோடு பிணக்கு நேரிடும் போது, அவர்களை வெல்ல, இறைவனின் அனுமதியை வேண்டுகிறார்.
  3. அவ்வாறு கேட்கும் போதே, அவர் அவர்களில் போலித் துறவியரை பழிக்கிறார். குறிப்பாக திகம்பரரை அவர் சாடுகிறார். எனினும் அவர் நோக்கம், புறத் துறவளவில் நின்றுவிடும் கடுந்துறவனைத்தையும் கடிவதே எனலாம். (பக்.21)
  4. கடுந்துறவு என்ற பெயரில்,குளிக்காமல் துாய்மையின்றி திரிந்ததும், எல்லாவற்றையும் துறந்தோம் என்ற பெயரில், பீலி, குண்டிகை, உறி, குடை, தடுக்கு சுமந்து திரிந்ததும், கொடுஞ்செயலாகிய தலைபறித்தலை உயர் சடங்காக மதித்ததும், தமிழும், வடமொழியும் கலந்து பேசியதும், அவர்களது போலித் துறவும் சம்பந்தரின் கண்டனத்துக்கு ஆளாகின.
  5. புலால் உண்ணுதல் குறித்த, சம்பந்தரின் `ஊனொடுண்டல் நன்றென, ஊனொடுண்டல் தீதென' என்ற வரியை தெ.பொ.மீ. பொருத்தமாகச் சுட்டிக் காட்டி விளக்குகிறார்.
  6. அவரது காலத்தில், தமிழரிடையே புலால் உணவு பெருவழக்காக இருந்தது; ஆனால் சமணர் அதை வெறுக்கின்றனர். இந்தப் போக்கு, சமுதாயத்தைப் பாதித்ததையே சம்பந்தரின் அந்த வாக்கு காட்டுவதாக தெ.பொ.மீ. சுட்டுகிறார்.
  7. வாது செய்யத் திருவுள்ளமே என்ற பதிகத்தில் வரும் சம்பந்தரின் கோரிக்கை அனைத்தும் வாது போருக்கானதே ஒழிய, அரசியல் போருக்கல்ல என, தெ.பொ.மீ. கூறுகிறார்.
  8. அழித்தல், முறியடித்தல், செண்டடித்துளறல், ஓட்டல், கரக்க வைத்தல், வெல்லுதல் முதலிய சொற்கள் போரில் வழங்குவனவே  ஆம். இவை உவமையாக வந்தவையே அன்றி, போரைக் குறிக்க வந்தவை அல்ல (பக்.53,54)
  9. சம்பந்தர் பாடிய பாடல்கள் அருள் வழியில் நிற்க, அவர் செயல் மருள் வழியில் நிற்குமோ? (பக்.55) என  வினவும்  தெ.பொ.மீ, நம்பியாண்டார்  நம்பி, பெரியபுராணம், திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வீமநாத பண்டிதரின் கடம்பவன புராணம், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம், ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி ஆகிய நுால்கள், கழுவேற்றிய கதையை எப்படி கூறுகின்றன என்பதை விரிவாக விளக்குகிறார்.
  10. முடிவில், பெரியபுராணம் தான், அதை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறது என கூறி, சம்பந்தர் கழுவேற்றத்தை செய்திருக்க மாட்டார் என்பதே சேக்கிழாரின் திருவுள்ளம் என விளக்குகிறார். பின்வந்த நுால்களின் அபிமானத்தையும் சுட்டிக் காட்டுகிறார். 
  11. நம்பியாண்டார் நம்பிகளின் அந்தாதி படி தான் நுால் செய்ததால், சேக்கிழார் கழுவேற்றத்தை குறிப்பிட்டாலும், அதை சம்பந்தர் செய்யவில்லை என்பதை நாசூக்காக காண்பிக்கிறார் என்கிறார் தெ.பொ.மீ.
  12. சமணர், பெளத்தர், ஆசீவகர் கொள்கைகளை சம்பந்தர் தம் பாடல்களில் சுட்டுவதை எடுத்துக் காட்டும் தெ.பொ.மீ, குண்டர் என்ற சொல், மூவரையும் சேர்த்தும், தனித்தும் குறிப்பதாக பொருள் கொள்கிறார். 
இந்த நுாலில் ஆய்வு செய்யப்பட்டிருக்கும் தளத்தை மேலும் விரிவாக, அப்பர், சுந்தரர், மணிவாசகர் வரை விரிவு செய்து கொண்டு செல்லலாம்.

சைவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.

இதைப் படித்த  பின், கழுவேற்றம் பற்றி சைவ அறிஞர்கள் இதுவரை எழுதியுள்ள கட்டுரை, நுால்களை தொகுக்கலாம் என, எனக்கு தோன்றிற்று. விரைவில் அதை செய்வேன் என, நினைக்கிறேன். 

நுால்: சம்பந்தரும் சமணரும்
ஆசிரியர்: தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்
பக்:128
விலை: ரூ.35
தொடர்புக்கு: சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 044-2536 1039, 2435 7832

3 கருத்துகள்:

  1. வணக்கம்...நான் இந்த வலைப்பூவை தவறாமல் படித்து வருபவன்.திருநெல்வேலிக்காரன்.பிறகு சென்னை-இப்போது பெங்களூரில். அடிக்கடி சென்னை வருவதுண்டு.உங்களிடம் ஒரு தகவல் உதவி வேண்டும். சைவசித்தாந்தம் கற்க மடங்கள் வகுப்புகள் நடத்துகின்றன என்று தெரியும்.சென்னையில் எப்போது எங்கே என்று ஏதாவது உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்.... - செல்வம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகம் முழுவதும் திருவாவடுதுறை ஆதீனம், சைவ சித்தாந்த வகுப்புகளை நடத்தி வருகிறது. சென்னையில், ஆதீனம் சார்பிலும், சைவ அறக்கட்டளை என்ற தனி அமைப்பின் சார்பிலும் வகுப்புகள் நடக்கின்றன. தொடர்பு எண்களை ஓரிரு நாட்களில் உங்களுக்கு தருகிறேன். பெங்களூருவிலேயே சிறந்த சைவ அன்பர்கள், நடத்தி வருகின்றனர். அதுகுறித்தும் விவரங்கள் தருகின்றேன்.
      உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்ப வேண்டுகிறேன்.

      நீக்கு
    2. ரொம்ப ரொம்ப நன்றி... ganapathyt@gmail.com

      நீக்கு

Translate