சனி, 4 ஜனவரி, 2014

சிவபூஜை சுந்தரம் பிள்ளை - நிறைவளர் நெஞ்சினர்


இன்று (3-1-14) காலை அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த போது, அலைபேசியில், பேட்டை கண்ணனின் தவறிய அழைப்பு கண்ணில் பட்டது. அலுவலகத்திற்குச் சென்ற பின் பேசலாம் என்றெண்ணி, புறப்பட்டேன்.

அலுவலகம் சென்ற பின், வேலைகளில் மூழ்கினேன். பின், மதியத்திற்கு மேல் மீண்டும் அவரே அழைத்தார்.


`ஐயா! வணக்கம்'

`வணக்கம் கண்ணன்'

`ஐயா!சுந்தரம் பிள்ளை ஐயா காலமாயிட்டா'

..... என்னால் பேச முடியவில்லை. அதிர்ச்சி இல்லை என்றாலும், எதையோ இழந்து விட்ட உணர்வு பீடித்தது.

கடந்த டிசம்பர், திருவாதிரைத் திருவிழாவிற்கு பேட்டைக்குச் சென்றிருந்த போது, இடையில் எட்டாம் திருநாளன்று நானும், மணியும் செப்பறைக்குச் சென்றோம்.

இரண்டு காரணங்கள். அழகிய கூத்தரை பார்ப்பது ஒன்று. சுந்தரம் பிள்ளை ஐயாவைப் பார்‌த்து நலம் விசாரிப்பது ஒன்று. முதுமையின் காரணமாக, அவர் நடமாடியே ஓராண்டிற்கு மேல் ஆகியிருந்தது. இப்போது அவருக்கு 86க்கும் மேல் இருக்கும் என, நண்பர் ரத்தினம் சொன்னார்.

2011ல் நடந்த எழில் ஞான பூஜையில் பேசிய ஐயா
2007ல் சென்னைக்கு வந்தபின், ஐயாவைப் பார்ப்பது மிகக் கடினமாகி விட்டது. 2013 துவக்கத்தில் ஒருமுறை, டவுன், அப்பர் சுவாமிகள் மடத்தில் வைத்து ஐயாவைப் பார்த்து நலம் விசாரித்தேன். அப்போதே மிகவும் தளர்ந்து போயிருந்தார்.

இந்த முறை எப்படியாவது அவரைச் சந்தித்து, அவரது நினைவுகளில் இருந்து சிலவற்றைப் பெறலாம் என்ற நம்பிக்கையில்  தான் செப்பறை சென்றேன்.

தரிசனம் முடித்தபின், ஐயாவின் மகன் கனகசபாபதியிடம் கேட்ட போது,
`அவாள், துாக்கம் விழிப்புன்னு மாறிமாறி கஷ்டப்பட்டுக்கிட்டுருக்காளே! பாக்கறது கஷ்டம் தான்'  என்றார்.

என் மனம்  தளர்ந்தது. சரி. பொங்கல் சமயத்தில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன். இனி ஐயாவை எப்போதும் பார்க்க முடியாது.

1994ல் நான் பாலிடெக்னிக் படிக்க துவங்கியிருந்த போது தான், என் தாத்தா மூலம் பேட்டை சண்முகம் மாமா தலைமையிலான திருவாசக முற்றோதல் குழு அறிமுகமானது.

மாமா மூலம், டவுனில் செயல்பட்டு வரும், திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் அறிமுகம் கிடைத்தது.

1995 முதல், 2007 வரை, நானும் மாமாவும், ஆண்டுதோறும், நெல்லையப்பர் ஆனித் திருவிழாவின், திருவீதி பாராயணத்தில் கலந்து கொள்வோம்.

1995ல் முதன்முறையாக நான், மாமாவுடன் வீதி பாராயணத்தில் பங்கேற்றேன். அப்போதெல்லாம், சுவாமி புறப்பாடு ஆவதற்கே, இரவு 11 மணியைத் தாண்டி விடும்.

சுவாமி பின்னால், சுந்தரம் பிள்ளை ஐயா உட்பட மொத்தமே எட்டுப் பேர் இருந்தால் அதிகம். அவர்களில் நான் மட்டுமே அப்போது 16 வயது சிறுவன்.

அந்த ஆண்டின், எட்டு நாட்களிலும் தொடர்ந்து வீதியுலாவில் மாமாவுடன் கலந்து கொண்டேன்.

என்னைப் பார்த்த உடன், ஐயாவுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியிருக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கும் திருமுறை சென்று சேர வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் மிக உடையவர்.

எட்டாம் நாளன்று, கங்காள நாதர் வீதியுலா மாலை 4 மணிக்கே துவங்கி விடும். அது தான் திருநெல்வேலியின் சிறப்பான திருநாள் என்பதால், அன்று வழிபாட்டுக் குழுவினர் அனைவரும் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டோர், வீதியுலாவிற்கு வந்துவிடுவர்.

அன்று, இரவு மிக தாமதமாகத் தான், கங்காள நாதர் வீதியுலா முடியும் என்பதால், நான் சீக்கிரமாக வீடு திரும்பி  விட்டேன்.

அன்று விழா முடிவில், எனக்காக சுந்தரம் பிள்ளை ஐயா, தன் கையெழுத்திட்ட திருவாசக புத்தகம் ஒன்றினை அன்பளிப்பாக அளிப்பதாக அறிவித்தார். ஓரிரு  நாட்கள் கழித்து அதை நான் நேரில் அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.

அந்த புத்தகத்தில், `ஆனித் திருவிழாவில், பத்து நாட்களும் திருவீதியுலாவில் பங்கேற்றதைப் பாராட்டி இந்த புத்தகம் பரிசளிக்கப்படுகிறது'  எனக் குறிப்பிட்டு, ஐயா கையெழுத்திட்டிருந்தார்.

அன்றில் இருந்து ஐயா என் மீது தனிப்பட்ட முறையில் அன்பும், பாசமும் வைத்திருந்தார்.

ஊஞ்சல் மண்டபத்தில், ஆசிரியர் ரத்நவேலன்  சித்தாந்தப்  பாடம் நடத்திய போதெல்லாம், தவறாது பங்கேற்பார். நான் வகுப்பிற்கு வரும்போது, என்னிடம் ஆவலுடன் விசாரிப்பார்.


2010ல், காந்திமதி அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில், தருமபுரம் சுவாமிநாதன் உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய ஐயா. படத்தை திறந்து வைத்தார். உடன், வள்ளிநாயகம் ஐயா.
(மேற்கண்ட  மூன்று படங்கள் உதவி: ஜி.ஆதிமூலத்தின் பிளிக்கர் படத் தொகுப்பு)
பேட்டையில், 45 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக பாரிவேட்டை விழாவைத் துவக்கிய போது, ஐயாவையே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம்.

2004ம் ஆண்டிற்குப் பின், பக்தர் பேரவை எழுச்சியால், திருவீதியுலாவில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்‌று, நகரையே திரும்பிப் பார்க்க வைத்தபோது, ஐயா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். இளந்தலைமுறைக்கு திருமுறையை கொண்டு சேர்த்து விட்டதாக கருதினார்.

2006க்குப்பின், நெல்லையப்பர் சந்நிதியில் தினமும் அர்த்தசாம  பூஜைக்கு முன் நடக்கும், அடியார்களின் பாராயணத்தில், தவறாது கலந்து கொள்வார். நான் வந்தால், பல்வேறு பண்களில் அமைந்த தேவாரங்களைப் பாடும் படி, அறிவுறுத்துவார். பாடி  கேட்டு இன்புறுவார்.

செப்பறையில் உள்ள பொன்னம்பல தேசிகர் மடாலயம் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் ஆனபோது, என்னையும் அங்கு  அழைத்துச் சென்று, விழாவில் பேச வைத்தார்.
செப்பறை கோயில் அருகில் உள்ள பொன்னம்பல தேசிகர் மடாலயத்தின் கல்வெட்டு.  இதில் இறுதியில், ஐயாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

மடலாயம்

ஐயாவின் பேருழைப்பில் உருவான தேர்

செப்பறை அழகிய கூத்தர்

செப்பறை கோயில் முன்வாசல்
 செப்பறை அழகிய கூத்தர் மீது அளப்பரிய பக்தி கொண்டவர். அந்த கோயிலில், நடராஜருக்கு புதிய தேர் செய்து, அது ஓடி கண்ணால் கண்டு உள்ளம் குளிர வேண்டும் என, பெருவிருப்பம் கொண்டு, அதை நிறைவேற்றியும் விட்டார்.

இன்று அழகிய கூத்தர் அற்புதமான தேரில் எழுந்தருள்கிறார் என்றால், அதன் பின்னணியில், ஐயாவின் ஈடிணையற்ற உழைப்பும், பேரார்வமும் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

எப்போதும் சிரித்த முகம், நெற்றி நிறைய நீறு, கழுத்து நிறைய ருத்ராட்ச மாலை, கனிந்த தோற்றம், தவ முனிவர் போன்ற எளிமையான உருவம், கணீர் குரல், சிவபக்தியில் உறைப்பு, சிவபூஜையில் பேரன்பு, திருமுறைகளிலும், சாத்திரங்களிலும் தோய்வு, இளைஞர்களை அன்போடு ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை என, அவரது குணங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

எல்லாவற்றையும்விட, திருநெல்வேலியில் பல்வேறு காரணங்களால் பிரிந்து கொண்டே செல்லும் பல அடியார்  குழுவினரும் விரும்பும் ஒரே தலைவராகவும் அவர் இருந்தார்.

இன்று (4ம் தேதி), நெல்லை டவுன், வடக்கு ரத  வீதியில் உள்ள அவரது மகன் இல்லத்தில், அபரக் கிரியைகள் முடித்து, பின் ஐயாவின் பூத உடல், அவரது விருப்பப்படி, செப்பறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட உள்ளதாக கேள்விப்பட்டேன்.

வாழும்போது, ஒரு மனிதனை அவனது குறைகளை மட்டுமே சொல்லி புறக்கணிப்பது நம் மண்ணின் வழக்கம். அதற்கு ஐயாவும் விலக்கில்லை.

என்றாலும் இனி, அவரைப் போல எல்லாருக்கும் இனியாரை நாம் என்றும் பார்க்க முடியாது. நிறைவாழ்வு வாழ்ந்த ஐயாவின் நினைவுகள், நெல்லைவாசி ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் வழிகாட்டிக் கொண்டேயிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate