வெள்ளி, 24 ஜனவரி, 2014

ஒரே இடத்தில் சைவ நுால்கள் கிடைக்குமா? – புத்தக கண்காட்சியை முன்னிட்டு ஒரு விவாதம்


தமிழில் மிகவும் இத்துப் போன துறை எது என்று கேட்டால் அது தத்துவம் தான்.

இன்று வேலைக்கு ஆகாத துறைகளுக்குள் போய், காலம் செலவழிக்க யாரும் தயாராக இல்லை.

அதனால், தத்துவம், சமயம், இலக்கியம், தமிழ் போன்றவை புறக்கணிக்கப்படுகின்றன.


தத்துவத் துறையைப் பொருத்தவரை, திருமடங்கள், தனி அமைப்புகள் மட்டுமே அதற்கு ஆதரவளித்து வருகின்றன.

பெரிய பதிப்பகங்கள், அரசு, பல்கலைக்கழங்கள் தத்துவம் தொடர்பாக, எவ்வித வெளியீடுகளையும் வெளியிட முன்வருவதில்லை. குறிப்பாக, பல்கலைக்கழகங்கள் மிகவும் மந்தமாக செயல்படுகின்றன.

சென்னை புத்தக கண்காட்சி, டில்லி, கல்கத்தாவைப் போல தற்போது சர்வதேச கவனத்திற்கு செல்லத் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், சில குறிப்பிட்ட துறை சார்ந்த நுால்கள் தமிழில் படைக்கப்படுவதில்லை; மொழிபெயர்க்கப்படுவதில்லை. குறைந்தபட்சம்  மறுபதிப்பு கூட இல்லை.

கண்டும்காணாமல் செல்லும் இந்தப் போக்கு நீடித்தால், தமிழில், வெறும் உணர்ச்சிக் குவியல் சார்ந்த நுால்கள் மட்டுமே படைக்கப்பட்டதாக, மாய வரலாறு படைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

மூன்று தத்துவங்கள்

2008 முதல், நான் தொடர்ந்து தேடுவது, தத்துவத் துறை சார்ந்த புத்தகங்களை. கி.லட்சுமணன் எழுதிய இந்திய தத்துவ ஞானம், சோ.ந. கந்தசாமி எழுதிய இந்திய தத்துவ களஞ்சியம், ஜெயமோகனின் ஆறு தரிசனங்கள் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

இவர்களை விட்டால், இடதுசாரிகள், இந்திய தத்துவங்களை எதிர்மறையாக அணுகி வெளியிட்ட புத்தகங்கள் இன்றும் மறுபதிப்பில் கிடைக்கின்றன.

கொழும்பு குமரன் இல்லம் பதிப்பகம் வெளியிட்ட, மேலைநாட்டு மெய்யியல் என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கது.

ஆனால், வித்யாரண்யர் எழுதிய, சர்வ தரிசன சங்கிரகம்– தமிழ் மொழிபெயர்ப்பு; ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகியவை, மறுபதிப்பாக, செம்பதிப்பாக கிடைக்கவில்லை.

சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்தை, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் மூன்று பாகங்களாக வெளியிட்டிருக்கின்றனர், பழைய மணிப்பிரவாள நடையில்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரு ராமகிருஷ்ண மடத்தில் இருந்து சங்கர பாஷ்யம், சுருக்க பதிப்பு ஒன்று வெளியானது.

ராமானுஜரின் பாஷ்யத்தை தமிழில் சுருக்கமாக மொழிபெயர்த்து ஒரு புத்தகம், சமீபத்தில் வந்ததாக நினைவு.

மத்வரின் துவைத பாஷ்யத்தை இதுவரை நான் பார்க்கவில்லை.

பிரதான தத்துவ ஆசிரியர்களின் கதி இப்படி.

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தத்தைப் பொருத்தவரை, திருமடங்களின் வெளியீடு தான், அதிகம். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக, அதுவும் நின்று போய்விட்டது.

திருவாவடுதுறை ஆதீனம், தனது சைவ சித்தாந்த மையத்திற்காக, சில புத்தகங்களை மறுபதிப்பு செய்து வருகிறது. அவையும், கு.வைத்தியநாதனின் பாடத் திட்டம் தான். அரிய உரைகள் அல்ல.

தருமபுர ஆதீனத்தில், அச்சுப் பணி கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. காசித் திருமடம், பன்னிரு திருமுறைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

தமிழ் – வடமொழி பிரச்னையின் போது, சில குறிப்பிட்ட வெளியீடுகளை அந்த திருமடம் வெளியிட்டது.

சைவ சித்தாந்தப் பெருமன்றம் சார்பில், 2008ல் அச்சிட்ட சிவஞானபோத மாபாடியம், 2006ல் அச்சிட்ட ஞானியாரடிகள் நினைவு மலர், சித்தாந்த சாத்திரம் – பழைய உரைகளுடன் (மறுபதிப்பு), சிவஞான போத சிற்றுரை – துாத்துக்குடி பொ.முத்தைய பிள்ளை விளக்கம் (மறுபதிப்பு), தேவி காலோத்தரம், சர்வ ஞானோத்தரம் –உரை ஆகியவை மட்டுமே வெளிவந்துள்ளன.

சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகத்தின் நிலை மிக மிக பரிதாபம். மறுபதிப்பு என்ற பெயரில், குப்பையைப் போல், நல்ல நுால்களை வெளியிட்டுள்ளனர்.

இவை தவிர, சங்கரன்கோயில் சைவ சித்தாந்த சபை போன்ற சைவ அமைப்புகள் ஆங்காங்கே, தங்களுக்காக தத்துவ நுால்களை அச்சிட்டால் மட்டுமே உண்டு.

தத்துவ நுால்களை தேடி ஒருவன், புத்தக கண்காட்சிக்கு சென்றால், அவன் பெரிதும் ஏமாற்றம் தான் அடைவான்.

என்ன செய்கின்றன?

இந்த ஆண்டு கண்காட்சியில், முதன் முறையாக, மயிலம் பொம்மபுரம் ஆதீனம், அரங்கு அமைத்திருந்தது. அங்கு, சித்தாந்தம் தொடர்பான நுால்கள் கிடைத்தன.


மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் அரங்கு
மேலும், காந்தளகம், சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழகம், பாரி நிலையம், பிரேமா பிரசுரம் ஆகியவற்றில், சைவம் தொடர்பான நுால்கள் கிடைத்தன.

பாரிநிலையம் 

பிரேமா பிரசுரம்
பிரேமா பிரசுரத்தில், அறுபத்து மூவர் வரலாறு, பெரியபுராண செய்யுள் வடிவத்தின் நேரடி உரைநடை என்பதால், சிறப்பு மிக்கது.

சிவமகா புராணம் என்ற பெயரில், எவ்வித முன்னுரைக் குறிப்பும் இல்லாமல், பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ள புத்தகம், அதே பெயரில், (நுாலாசிரியர் பெயர் மறந்து விட்டது) இருபதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில், செய்யுள் நடையில் வெளியானதன் உரைநடை. அதுவும் படிக்கத் தக்கதே.

கழகத்தைப் பொருத்தவரை, அது தற்போது, வெறும் புத்தகக் கடையாக மாறி விட்டது. பிற பதிப்பகங்களின் புத்தகங்கள் தான் 90 சதவீதம் அங்கு கிடைக்கின்றன. கழகத்தின் மறுபதிப்புகள், கண்கொண்டு பார்க்கும்படியாக இல்லை.

மோகன்லால் பனாரசிதாஸ் அரங்கில், ஆளே இல்லை. ஆனால் அங்கு வேதம், உபநிஷதம் தொடர்பான நுால்கள் இருந்தன.

வைணவத்தை பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை.

புத்தக கண்காட்சியை சாக்கிட்டாவது, சைவ திருமடங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒரு அரங்கினை அமைத்து, தங்கள் நுால்களை விற்க ஏற்பாடு செய்யலாம்.

அதன் மூலம் தான், திருமடங்கள், சமூகத்தோடு உறவாடமுடியும். ராமகிருஷ்ண மடம், சிருங்கேரி பீடம், ரமணாச்ரமம், நித்யானந்த பீடம் போன்றவை ஆண்டு தோறும் கண்காட்சியில் பங்கேற்கின்றன.

ஆனால், சைவ, வைணவ திருமடங்கள் அத்தகைய ஒரு கண்காட்சியை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

கடந்தாண்டில், இரா.செல்வக்கணபதி வெளியிட்ட, சைவ கலைக் களஞ்சியத்தின், ஏழாம் பாகத்தில், தமிழகத்தில் செயல்படும் சைவ அமைப்புகளின் பட்டியலை அளித்துள்ளார்.

அதன்படி பார்த்தால் கூட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்புகள் செயல்படுகின்றன.

ஆனால், அவை எதுவும், புத்தக கண்காட்சி மூலம், சமூகத்தை அணுகலாம் என்று கருதியதாகத் தெரியவில்லை.

சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் போன்ற தனிநபர்கள், ஓரிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பல அரிய நுால்களை மறுபதிப்பு செய்து வெளியிடுகின்றனர். அவற்றையும் கண்காட்சியில் காண முடிவதில்லை.

கோவையில், ர.வையாபுரி என்பவர் எழுதி வெளியிட்ட சில புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றனவா என, தெரியவில்லை.

இப்படி பல கூறலாம்.

சைவர்களும், திருமடங்களும் இனி செய்ய வேண்டியது, அடுத்தாண்டு கண்காட்சியிலாவது, அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட்டு, ஒரு அரங்கினை அமைத்து, அனைத்து சைவ நுால்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படியாக ஏற்பாடு செய்வது தான்.

சைவத்தைப் பொருத்தவரை, இது எப்போது நிறைவேறுகிறதோ அப்போது தான், சைவம் தொடர்பான தவறான புரிதல்களை, சமூகமும் திருத்திக் கொள்ளும்; மிகையான கற்பனை உணர்வில் இருந்து சைவர்களும் விடுபடுவர்.

அதைப் போலவே, தத்துவத் துறையில் ஆர்வம் கொண்டவர்களும், வைணவ, சமண, பௌத்த அமைப்பினரும், ஒரே இடத்தில், பல்வேறு அவரவர் சமய தத்துவ நுால்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யலாம்.

தொடர்புடைய பிற பதிவுகள்:

அள்ளித் தெளித்த கோலமிடும் பதிப்பகங்கள்

புத்தக கண்காட்சி – செய்ய வேண்டியது என்ன?

1 கருத்து:

Translate