வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

குடம் குடமாக அபிஷேகம் தேவையா?


பக்தி, காலம்தோறும் வெவ்வேறு புரிதல்களுடன் மக்களால் எடுத்துச் செல்லப்படுகிறது.

நாயன்மார்கள் காலத்தில், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை அணுக உதவியாக இருந்த பக்தி, அதையடுத்து, தர்க்கத்தை கட்டியமைப்பதற்கும் உதவியாக இருந்தது.

அதனால் தான், `அன்பரொடு மரீஇ ஆலயந்தானும் அரனெனத் தொழுமே` என, பக்திக்கு, சாத்திரமும் முக்கியத்துவம் கொடுத்தது.


உலகம் நுகர்வு சந்தையாகி விட்ட இன்று, பக்தியும் மற்றொரு வணிகப் பொருளாக ஆக்கப்பட்டு வருகிறது.

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு, வீட்டில், ஆத்மார்த்த பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.

இரவு ஏழு மணிக்கு, நண்பர் முத்து அலுவலகத்தில் இருந்து வந்தார். பின் அவரும் நானும், வீட்டருகில் உள்ள மருந்தீசர் கோயிலுக்கு சென்றோம்.

நேற்று பிரதோஷம் வேறு. கொள்ளைக் கூட்டம். அவையெல்லாம் சென்ற பின் செல்லலாம் என கருதியதால்,  தாமதித்து  தான் சென்றோம்.

இருபது ரூபாய்க்கு சிறப்பு கட்டண வழி அமைத்து அறநிலையத் துறை தனது சேவையை செவ்வனே  செய்து கொண்டிருந்தது.

திரிபுரசுந்தரியின் திருமுகத்தை மட்டும் தரிசித்தோம். எப்படியும் இன்று முழுவதும் மருந்தீசர் `பிசி' யாக இருப்பார் என்பதால், அவரை நாளை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து, பிராகாரம் வலம் வந்தோம்.

கொடிமரம் அருகே ஏகப்பட்ட கூட்டம். ஒருவர் பக்தி வெறியில், கொடிமரத்தின் மேலேயே ஏறி, சுவாமியை பார்க்க தவம் செய்து கொண்டிருந்தார்.

கொடிமரத்தின் கீழே, பெரிய டவரா ஒன்றில், பால் நிரம்பி வழிந்தது. அனேகமாக அதுவே  ஐம்பது லிட்டருக்கு குறையாமல் இருக்கும்.

அதே அளவிலான மற்றொரு டவராவில், பால் பாக்கெட்டுகள் ததும்பி கொண்டிருந்தன.

அவற்றை வாங்கி தொகுக்கும் பணியில் மூவர் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண், பக்தர்கள் அன்போடு கொடுத்த, வில்வம் திணிக்கப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை, கொடிமரத்தின் வடபக்கத்தில் வீசி எறியும் பணியில் மும்முரமாக இருந்தார். தென்பக்கத்தில் தான் பல டவராக்கள் இருக்கின்றனவே, இடம் இல்லை.

மற்றொருவர் நந்தி மண்டபத்தில் முதுகுக்கு ஓய்வு கொடுத்து சாய்ந்திருந்தார். ஒரு பெண், பால் பாக்கெட்டுகளை வாங்கி கொண்டிருந்தார்.

அப்போதே முதல் காலம் துவங்குவதற்கான நேரம் நெருங்கி விட்டிருந்தது.

பால் டவராக்களைப் பார்த்ததும் என் நெஞ்சம் பதறியது. கேரி பேக்குகளின் குவியலைக் கண்டதும் தொண்டை விக்கியது.

வீட்டில், ஐந்து கால ஆத்மார்த்தத்தை முடித்து விட்டு, நான், சிவஞானம், ஜீவா மூன்று பேரும், இன்று அதிகாலை ஐந்து மணிக்கு மீண்டும் கோயிலுக்கு சென்றோம்.

கோபூஜை முடிந்து நடை திறக்கப்பட்டது. அப்போதும் மருந்தீசரை பார்க்க ஏகப்பட்ட கூட்டம். அதனால், மூவரும் தளர்நடையிட்டு, பிராகாரம் புகுந்தோம்.

நேற்று இரவு பார்த்த அதே மூன்று டவராக்கள், பால் நிரம்ப அப்படியே உறைந்து கிடந்தன. பால் திரைந்து, நுரைகளாக கொப்புளிக்க துவங்கி விட்டது. இனி, அதனால் என்ன பயன்?

அவ்வளவு லிட்டர் பால் வாங்கப்படாமல் இருந்தால், எத்தனையோ பேருக்கு உதவி இருக்கும். இன்று யாருக்கு உதவுகிறது?

கொடிமரம் உள்ள பகுதியில், நடந்து செல்ல முடியாத அளவுக்கு வில்வம், தரையில் இறைந்து கிடந்தது.

பக்தி என்ற பெயரில், பக்தர்கள் செய்யும் இந்த அத்துமீறலை, பகவான் மன்னிப்பானா?

எது பக்தி? குடம் குடமாக பால் உள்ளிட்டவற்றை கொட்டுவதா? இறைவனை தரிசிக்க எந்த பொது விதியையும் அனுசரிக்க முடியாது என முண்டுவதா?

திருவாலங்காட்டிலும், சிதம்பரத்திலும், இவ்வாறு குடம் குடமாக  அபிஷேகம் செய்யப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.

இவ்வளவு  விஸ்தாரமாக செய்ய வேண்டும் என எந்த ஆகமத்தில் சொல்லி இருக்கிறது?

பொதுவாக மூர்த்தியின் அளவைப் பொருத்தே, அவருக்கான அபிஷேகம், நைவேத்யம் எல்லாவற்றையும் தயாரிக்க வேண்டும் என்பது அகோர சிவாச்சாரியார் பத்ததி.

கடந்த வாரம், சென்னை வந்திருந்த எனது தீட்சா குரு, திருநெல்வேலி  டவுன் தெற்கு மடம், வித்யா சங்கர சிவாச்சாரியாரிடம் இதுபற்றி கேட்டபோது, அளவுக்கு அதிகமாக அபிஷேகம் செய்ய வேண்டும் என ஆகமங்களில் குறிப்பில்லை; பிம்ப சுத்திக்கு அப்பால், அபிஷேகத்திற்கு முக்கியத்துவமும் இல்லை என்றார்.

பெரியபுராணம் உள்ளிட்ட மூல நுால்களில், அபிஷேகம் உள்ளிட்டவை, இறைவன் மீது அன்பு வளர ஒரு கருவி என்று மட்டுமே  குறிப்பிடப்பட்டுள்ளது.

`அன்பே மஞ்சனநீர்' என தாயுமானவர் சொன்னதும் அதை பின்பற்றித் தான்.

அப்படியே குடம் குடமாக கொட்டுக என ஆகமம் சொன்னாலும், அதை காலத்தொடு பொருந்த  புரிந்து கொள்வது நம் கடமை அல்லவா?

கோயில்களில் எப்படி வழிபட வேண்டும் என்பதை நாம் மலையாளிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள  வேண்டும்.

இதுபோன்ற விஷயங்களில், விஷயம் அறிந்த சிவாச்சாரியார்கள், சித்தாந்த அறிஞர்கள், மக்களிடையே சந்தர்ப்பம் கிடைக்கும்தோறும், உண்மையை உரக்கச் சொல்ல  வேண்டும்.

ஆன்மீகம் என்ற பெயரில் மூடத்தனத்தை வளர்ப்பதை விட, சும்மா இருப்பதே மேல். கோயிலில் உள்ள சுவாமியாவது நிம்மதியாக இருப்பார்.

1 கருத்து:

  1. நீங்கள் சொல்வது போல் புரிந்துகொண்ட செயல்படும் மன நிலையில் இன்றைய நிலை இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்த முயலுவோம்.

    பதிலளிநீக்கு

Translate